இதற்கு ஸ்ரீதேவி கூறுகிறாள்: "உலகமெல்லாவற்றுக்கும் யஜமானன் ஸ்ரீமகாவிஷ்ணு. அவன்தான் நாராயணன்.
அவன் எனக்குப் பர்த்தா.
எல்லா உலகங்களையும் படைத்துப் பிரளய பாலத்தில் அசேதன வஸ்துக்கள் போல் சிறிதேனும் அறிவில்லாமல் இருக்கும் ஜீவராசிகளுக்குச் சரீரம் இந்திரியம் முதலியவற்றையும், புத்தியையும்,
வேதம் முதலிய நல்ல நூல்களையும் கொடுக்கிறான்.
'இந்த வேதம் முதலிய நூல்களைக் கொண்டு நல்ல வழியில் நடந்து நல்ல கதியைப் பெறுவார்கள் மக்கள்' என்று எண்ணுகிறான்.
அப்படி யார் நடக்கிறார்களோ அவர்களிடத்தில் அதிக அன்பைப் பாராட்டுவான்.
என் கணவனான எம்பெருமான் யாரை விரும்புகிறானோ அவனைத்தான் நானும் விரும்புவேன்.
அவனிடத்தில் நித்தியவாஸம் செய்வேன். அவனுக்கு எல்லாவித ஐச்வர்யத்தையும் கொடுப்பேன்.
"ருக்மிணி தேவியே! நீ உயர்ந்த விஷயத்தைக் கேட்டு விட்டாய்.
நான் சொல்லும் பதிலிலிருந்து எல்லா ஜனங்களும் நல்ல மார்க்கத்தில் இருந்து என் அருளைப் பெற விரும்பியே இவ் விஷயத்தைக் கேட்டாய் போலும்.
முக்கியமாகச் சில விஷயங்களை கூறுகிறேன்.
"எவன் ஆஸ்திக்யத்தில் தைரியத்தை அடைந்திருக்கிறானோ, அதன்படி நல்ல வேலைகளைச் செய்கிறானோ,
பிறர் தன்னைத் தூஷிக்கும் போது மனத்தில் கோபமடையாமல் இருக்கிறானோ,
தெய்வத்தினிடத்தில் அதிக பக்தியை செலுத்துகிறானோ,
செய்நன்றியை மறவாமல் இருக்கிறானோ,
எல்லா புலன்களையும் அடக்கி ஸன்மார்க்கத்தில் செல்கிறானோ,
அவனிடத்தில் நான் வஸிப்பேன்.
"ரஜோகுணத்தையும் தமோ குணத்தையும் அடக்கி ஸத்வகுணம் மேல் நோக்கியிருக்கும்படி எவன் நடந்து கொள்கிறானோ அவனிடத்திலும் வாஸம் செய்வேன்.
"தர்மம் என்பது க்ஷேமத்தை கொடுக்க கூடியது; நம்மால் அது காப்பாற்றப்பட்டு, நம்மை அது காப்பாற்றுகிறது.
அதை நன்கு செய்கிறவனிடத்திலும், தர்மங்களை அறிந்த பெரியோர்களை வணங்கி அவர்களிடத்தில் அடக்கமுடையவர்களிடத்திலும்,
பகவான் கொடுத்துள்ள இரவு பகல் என்ற காலங்களில் வீணேபேச்சு முதலிய அநாவசியமான வேலைகளில் ஈடுபடாமல் காலத்தை வீணாக்காமல்
பகவத் விஷயத்தில் பொழுது போக்குகிறவர்களிடத்திலும் நான் வஸிப்பேன்.
"தானம் செய்வதிலும், தனக்குப் பொருள் இல்லாமலிருந்தாலும் இதை எப்படியாவது தானம் செய்வது நல்லது என்பதிலும் நினைவு இருக்கிறவர்களிடத்திலும்,
தன்னையும் தன்னைச் சேர்ந்த வீடு முதலிய பொருள்களையும் சுத்தமாக வைத்துக் கொண்டிருப்பவர்களிடத்திலும்,
பசு, பிராம்மணன் இவர்களிடத்தில் அதிக ஆவலைக் காண்பிக்கிறவர்களிடத்திலும் எப்போதும் வஸிப்பேன். அவர்களை ஒரு கணமும் விட்டுப் பிரியேன்.
'அழகு, அடக்கம், கற்பு, புருஷனிடத்தில் பணிவிடை, அயல் வீட்டுக்குச் செல்லாமை, குழந்தைகளிடத்தில் அன்பு, மாமியார் மாமனார்களிடத்தில் பக்தி, பணிவிடை,
ஸ்நானம் செய்யும்போது லெளகிக வஸ்துக்களை உபயோகித்தாலும் பசுமஞ்சளை நன்றாக தேய்த்து உடம்பு முழுவதும் பூசிக் கொள்வது
முதலிய நற்செயல்களைச் செய்யும் பெண்களிடத்தில் நான் ஸ்திரமாகவே வஸிப்பேன்
"பசு பாத்திரம் தானியம் இவற்றினிடத்தில் ஊக்கமுடைய பெண்களிடத்தில் எப்போதும் வஸிப்பேன்.
"பாண்டங்களில் ஆதரவில்லாமல் 'தடார் மடார்' என்று கீழே தள்ளி உடைக்கிற பெண்களிடத்திலும்,
எதையும் ஆராயாமல் திடீரென்று கோபமடைந்து எதிர்வார்த்தை சொல்லும் மாதர்களிடத்திலும்,
எப்போதும் கணவனுக்கு முரணாகப் பேசுகிறவர்களிடத்திலும், தன் வீட்டில் தங்காமல் அண்டை வீட்டில் நோக்கமுள்ளவர்களிடத்திலும்,
நாணமில்லாதவர்களிடத்திலும் நான் வஸிக்கவே மாட்டேன்.
"நெற்றியில் அடையாளமில்லாதவர்களிடத்திலும், அலங்காரம் செய்துகொள்ளாதவர்களிடத்திலும்,
'பவதி பிக்ஷாம் தேஹி' என்று தன் வீட்டை அடைந்தவர்களுக்குப் பிச்சை போடாதவர்களிடத்திலும் நான் வஸிக்கவே மாட்டேன்.
"நாஸ்திகனிடத்திலும் ஜாதிஸங்கரம் செய்பவனிடத்திலும், ஒழுக்கம் தவறி நடக்கிறவனிடத்திலும், நன்றி செலுத்தாதவனிடத்திலும்,
கொடுஞ்செயலைச் செய்பவனிடத்திலும், பொறாமைப்படுகிறவனிடத்திலும்,
எப்போதும் தூங்குகிறவனிடத்திலும்,
கிடைத்ததைக்கொண்டு ஸந்தோஷப்பட்டு, 'இதுவே போதும். இனிமேல் ஸம்பாதிக்க முயல வேண்டாம்' என்பவனிடத்திலும் நான் வஸிக்கமாட்டேன்.
No comments:
Post a Comment