Thursday, August 27, 2015

Lakshmi residing places part1

Courtesy:Smt.Indra Srinivasan

பகவானுடைய அருள் பெற்றவனே பரலோகத்தில் மிக்க மேன்மையுடன் விளங்கி பல உயர்ந்த இன்பங்களைப் பெற்று ஸுகமாக வாழ்வான்.

இறைவனுடைய அருள் எவனிடத்தில் வரும் என்றால், பத்து விதமான நிந்திக்கத் தகுந்த செயல்களை விட்டவனிடத்தில் வரும். தேகத்தினால் செய்யப்படும் மூன்று வகைக் செயல்களை விட வேண்டும்;

வாக்கினால் செய்யப்படும் நான்கு வகைக் செயல்களை விட வேண்டும்; மனத்தினால் செய்யப்படும் மூவகைக் செயல்களையும் விட்டொழித்தல் வேண்டும்.

தேகத்தினால் செய்யப்படும் மூன்று வகைக் கர்மங்கள் பரஹிம்ஸை செய்வது, திருடுவது, பரதாரங்களை தொடுவது என்பவை.

வாக்கினால் செய்யப்படும் நான்கு வகை கர்மங்கள் - கெட்ட பேச்சு, கடுஞ்சொல், கோள் சொல்லல், பொய் சொல்லுவது என்பன.

மனத்தினால் செய்யப்படும் மூன்று வகைக் கர்மங்கள்-பிறர் பொருளை விரும்புவது, ஸகலப் பிராணிகளிடத்திலும் அன்பு செலுத்தாமலிருத்தல்,

புண்ய பாவங்களுக்குத் தகுந்தபடி, நமக்கு யஜமானனான எம்பெருமான் பலனைக் கொடுக்கிறான் என்ற எண்ணமில்லாமலிருத்தல் என்பவை.

ஆக இந்த பத்தும் பெரும் குற்றங்களில் சேர்ந்தவை; கொடிய பாவச் செயல்கள்.

எனவே ஒவ்வொருவனும் உடலாலும் வாக்காலும் மனத்தாலும் இந்த பாவங்களைச் செய்யாமலிருந்தால் எம்பெருமானுடைய அருள் அவனுக்கு கிட்டும்.

இப்படி இறைவனின் அருள் பெற்றவன் யாருடைய மனத்துக்கும் எட்டவொண்ணாமலிருக்கும் இடத்தைப் பெற்று, அளவிட முடியாத இன்பங்களை பெறுவான்.

பொருள் உடையவன், இவ்வுலகத்தில் சிற்றின்பங்களைப் பெறுவான்.

உலக வாழ்க்கையைப் பெற விரும்புகிறவன் பொருளைத்தான் முக்கியமாகக் கைப்பற்ற வேண்டும்.

பொருளுக்கு அதிஷ்டான தேவதை திருமகள்; மகாவிஷ்ணுவின் முக்கிய மஹிஷி. இவளுடைய கடாக்ஷத்தினால்தான் பொருளைப் பெற்றவனாகிறான்.

நாம் பொருளைப் பெற மகா லக்ஷ்மியின் அருளைப் பெற வேண்டும். நாம் மகாலக்ஷ்மியைப் பெற விரும்பின மாத்திரத்திலேயே அவள் கிட்டிவிடுவாள் என்று சொல்ல முடியாது;

அவளுடைய மனத்தில் 'இவனை நாம் அடைந்து எல்லாவிதமான ஐச்வர்யத்தையும் கொடுக்க வேண்டும்' என்ற நினைவு இருந்தால்தான் நமக்கு இவை கிட்டும். நமது விருப்பம் மாத்திரம் காரணமாகாது.

நாம் ஐச்வர்யத்தையே அடைய எண்ணி ஆகாசமார்க்கமாக விமானத்தில் சென்றாலும் பயனில்லை;

பாதாளத்திலுள் புகுந்தாலும் அவ்விதமே; பல தேசங்களுக்கு ஓரிடத்திலும் நிலையாக நில்லாமல் இரவு பகலின்றியே ஓடிக்கொண்டே இருந்தாலும் பலனில்லை.

நாம் முன் ஜன்மத்தில் பலருக்கு தான தர்மங்களைச் செய்திருந்தால்தான் திருமகள் திருவருள் புரிவாள்.

'கொடுத்து வைத்தது கிடைக்கும்' என்பது பழமொழி. நாம் ஒருவருக்கும் கொடுக்காமல் இருந்தால், நமக்கு மாத்திரம் யார் கொடுப்பார்கள்?

ஒருவன் ஒன்றுமே செய்யாமலிருக்கிறான். எங்கும் போவதில்லை.

பணம் திரட்ட ஆவலும் அடைவதில்லை. திடீரென்று அவனிடம் பணம் குவிந்து விடுகிறது.

மற்றொருவன் நாடெங்கும் ஓடியும் ஒரு சல்லிக்காசும் பெறுவதில்லை. 'ஐயோ! நான் பல இடங்களுக்குச் சென்றேன்.

பல பெரிய மனிதர்களையும் பார்த்தேன். ஆயினும் என்னிடத்தில் பொருள் சேரவே இல்லை.

இவனோ வீட்டில் இருந்து கொண்டே பெரிய தனிகனாகிவிட்டான்' என்று அஸூயைப்படுகிறான்.

இதற்கு யார் என்ன செய்வது? அவனவனுடைய அதிர்ஷ்டம்தான் அதற்குக் காரணம்.

எனவே லக்ஷ்மியின் அநுக்கிரகம் யாரிடத்தில் இருக்கிறதோ அவனுக்குத்தான் ஐச்வர்யம் கிடைக்கும்.

'திருமகள் யாரிடத்தில் திருப்தியுடன் வஸிப்பாள்?' என்றால் இதை தேவி தானே கூறுகிறாள்.

ஸ்ரீபீஷ்மாசார்யர், சரதல்பத்தில் படுத்திருந்தபோது, தம்பிமார்களுடன் தர்மபுத்திரர் பீஷ்மாசார்யரிடம் பல தர்மங்களைக் கேட்கிறார்.

அவற்றுடன், "ஸ்ரீ என்ற லக்ஷ்மி எத்தகைய ஆண்களிடத்திலும் எத்தகைய பெண்களிடத்திலும் எப்போது குடியிருப்பாள்? அதை எனக்கு சொல்ல வேண்டும்" என்று கேட்டார்.

ஸ்ரீபீஷ்மர் கூறுவதாவது :- தர்மபுத்திரனே, முன்பு ஒரு காலத்தில் இவ் விஷயத்தைப் பற்றிப் பெரியவர்களிடம் கேட்டிருப்பதை உன்னிடம் கூறுகிறேன்.

ருக்மிணி ப்ரத்யும்னனுடைய தாய், க்ருஷ்ணனுடைய பத்னி.

இவள் தன் கணவனான க்ருஷ்ணனுடன் இருந்த போது நாராயணனுடைய மடியில் அமர்ந்துகொண்டும், மின்னல் போல் பிரகாசித்துக்கொண்டும்,

தாமரை மலர்கள் போல் மலர்ந்த கண்களையுடையவளுமான ஸ்ரீதேவியைப் பார்த்து,

"எல்லா உலகுக்கும் தாயே! ப்ருகு மகரிஷியின் புதல்வியே!

உலகில் சிலர் மிக்க தனிகர்களாக இருக்கின்றனர்; பலரோ மிகவும் தரித்ரர்களாக இருக்கிறார்கள்.

ஸாதாரணமான உணவுக்கும் உடைக்குங்கூட கஷ்டப்படுகிறார்களே; எல்லா விதமான ஐச்வர்யத்துக்கும் உன் அருள்தான் காரணம் என்று எனக்குத் தெரியும்.

ஏழை மக்களிடத்தில் உன் அருள் இருப்பதில்லை; நீ அவர்களிடத்தில் வஸிப்பதில்லை என்பது நன்கு வெளியாகிறது.

அது ஏன்? நீ யாரிடத்தில் நிலையாக வஸிக்கிறாய்? நீ யாரை விரும்புவதில்லை? இதனுடைய உண்மையை விளக்கிக் கூற வேண்டும்" என்ற கேட்டாள்.


No comments:

Post a Comment