பாகவதத்தில் குறிப்பிடப்படும் முதல் விவாஹம்
ஸ்ருஷ்டி நடந்து, ஸ்வாயம்புவ மனு தோன்றிய பின்னர் ஒரு விவாஹ நிகழ்ச்சி குறிப்பிடப் படுகிறது. அது கர்தமருடைய (कर्दमः) விவாஹம்.
ஶ்ரீஸூக்தம் சொல்லுபவர்களுக்கு கர்தமரைத் தெரிந்திருக்கும்
'கர்த3மேன ப்ரஜா பூ4தா மயி ஸம்ப4வ கர்த3ம ' என்று பெண்குழந்தையை வேண்டுகிற வரி கர்தமருடைய பெண்ணாக உள்ள லக்ஷ்மி ஸ்வருபமாக வேண்டும் என்பதாக வருகிறது.
கர்தமர் ப்ரஜாபதிகளில் ஒருவர். அவர் ப்ரஹ்மனின் ஆணைப்படி ப்ரஜைகளை ஸ்ருஷ்டிக்க ஆற்றலை விழைந்து பத்தாயிரம் ஆண்டுகள் ஸரஸ்வதி நதிக்கரையில் தவமிருக்கிறார். பகவான் ப்ரத்யக்ஷமாகி அவரிடம் ஸ்வாயம்புவ மனு கர்தமரைத் தேடி வந்து தன் பெண்ணை அளிப்பார் எனக் கூறிச் சென்று விடுகிறார். சொன்னது போல மனு பிந்துஸரஸ் என்ற இடத்தில் தன் பார்யா ஶதரூபாவுடன், பெண் தேவஹூதியுடன் வந்து சந்திக்கிறார். மனுவின் பெருமைகளை கர்தமர் கூறி மரியாதை செய்கிறார். இவையெல்லாம் மூன்றாம் ஸ்கந்தம் இருபத்தியோராவது அத்யாயத்தில் வருகிறது.
இருபத்திரண்டாவது அத்யாயத்தில் கவலை தோய்ந்த முகத்தினராக மனு கர்தமரிடம் கூறுகிறார்.
स भवान्दुहितृस्नेहपरिक्लिष्टात्मनो मम ।
श्रोतुमर्हसि दीनस्य श्रावितं कृपया मुने ॥ 8
प्रियव्रतोत्तानपदो: स्वसेयं दुहिता मम ।
अन्विच्छति पतिं युक्तं वय: शीलगुणादिभि: ॥ 9
यदा तु भवत: शीलश्रुतरूपवयोगुणान् ।
अशृणोन्नारदादेषा त्वय्यासीत्कृतनिश्चया ॥ 10
तत्प्रतीच्छ द्विजाग्र्येमां श्रद्धयोपहृतां मया ।
सर्वात्मनानुरूपां ते गृहमेधिषु कर्मसु ॥11
"தாங்கள் பெண்ணின் மேல் உள்ள ஸ்நேகத்தினால் க்லேசமுற்றிருக்கும் தீனனான என்னுடைய விஷயத்தை க்ருபையுடன் கேட்கத்தகுவீர். ப்ரியவ்ரதன்- உத்தானபாதன் இவர்களுடைய சகோதரியான இவள் என் மகள். வயது- ஶீலம்- குணங்கள் முதலியன கூடிய பதியைத் தேடுகிறாள். இவள் நாரதரிடமிருந்து எப்போது தங்களுடைய ஶீலம், ரூபம் (அழகு), கேள்வி, வயது (இளமை), குணங்களைக் கேட்டாளோ, அதிலிருந்து உம்மிடத்தில் நிஶ்சயம் செய்தவளாக இருக்கிறாள். த்விஜர்களின் முதல்வரே! அதனால் என்னால் ஶ்ரத்தையுடன் அழைத்துவரப்பட்ட, க்ருஹமேதங்களான கர்மாக்களில் (இல்லறக்கடமைகளில்) உமக்குப் பொருத்தமான இவளை ஏற்பீர். "
இவற்றைக்கூறி மேலும் விருப்பு எழுந்தவனின் யஶஸ் பற்றியெல்லாம் கூறுகிறார். அதை ஏற்றுக்கொண்டு கர்தமர் பின்வருமாறு கூறுகிறார்.
बाढमुद्वोढुकामोऽहमप्रत्ता च तवात्मजा ।
आवयोरनुरूपोऽसावाद्यो वैवाहिको विधि: ॥ 15
काम: स भूयान्नरदेव तेऽस्या: पुत्र्या: समाम्नायविधौ प्रतीत: ।
क एव ते तनयां नाद्रियेत स्वयैव कान्त्या क्षिपतीमिव श्रियम् ॥ 16
यां हर्म्यपृष्ठे क्वणदङ्घ्रिशोभां विक्रीडतीं कन्दुकविह्वलाक्षीम् ।
विश्वावसुर्न्यपतत्स्वाद्विमानाद्विलोक्य सम्मोहविमूढचेता: ॥ 17
तां प्रार्थयन्तीं ललनाललाममसेवितश्रीचरणैरदृष्टाम् ।
वत्सां मनोरुच्चपद: स्वसारं को नानुमन्येत बुधोऽभियाताम् ॥18
"உறுதியாக. நான் விருப்புற்றவனாகவும், உமது பெண் யாருக்கும் அளிக்கப்படாதவளாகவும் என நாங்களிருவரும் பொருத்தமுடையவர்களாக உள்ளோம். முதலில் வைவாஹிகமான (விவாஹம்) விதி நிகழட்டும். நரதேவரே! நல்வழியான அந்த விதிப்படி உமது புத்ரியான இவளுடைய விருப்பம் அளிக்கப்படலாகும். தனது காந்தியினால் லக்ஷ்மியை மீறுபவளாக உள்ள உமது பெண்ணை எவன் ஆராதிக்காமல் இருப்பான்?
உப்பரிகையின் பின்புறத்தில் கொலுசு ஒலியுடன் பந்து விளையாடிக்கொண்டு அதன் பின்னே கண்களை அலையவிட்டு சோபிக்கின்றவளைக் கண்டு விஶ்வாவஸு (கந்தர்வ அரசன்) மதிமயங்கிய சித்தத்தினனாக தன் விமானத்தினின்று விழுந்தான். அவ்வாறான பெண்டிருக்கு அணியாகத் திகழ்கின்ற திருவின் பாதங்களை வணங்காதவர்களால் காணமுடியாதவளான மனுவின் வத்ஸாவை, உத்தானபாதனின் சகோதரியை, என்னை வேண்டுபவளை அறிவாளியான எவன் தொடர்ந்து நினைக்காமலிருப்பான்? "
என தன் விழைவைத் தெரிவித்து மணமுடிக்க சம்மதத்தைத் தெரிவிக்கிறார். அரவிந்தநாபனை புத்தியால் பற்றி நினைத்துக்கொண்டு அமைதியாகிறார்.
புன்னகை தழுவிய முகத்தின் அழகால் தேவஹூதியுடைய எண்ணத்தைப் பேராவல் கொள்ளச் செய்கிறார். - स्मितशोभितेन मुखेन चेतो लुलुभे देवहूत्या: ॥
सोऽनुज्ञात्वा व्यवसितं महिष्या दुहितु: स्फुटम् ।
तस्मै गुणगणाढ्याय ददौ तुल्यां प्रहर्षित: ॥22
शतरूपा महाराज्ञी पारिबर्हान्महाधनान् ।
दम्पत्यो: पर्यदात्प्रीत्या भूषावास: परिच्छदान् ॥23
प्रत्तां दुहितरं सम्राट् सदृक्षाय गतव्यथ: ।
उपगुह्य च बाहुभ्यामौत्कण्ठ्योन्मथिताशय: ॥24
अशक्नुवंस्तद्विरहं मुञ्चन् बाष्पकलां मुहु: ।
आसिञ्चदम्ब वत्सेति नेत्रोदैर्दुहितु: शिखा: ॥25
மனுவானவர் மனைவி, மகள் இவர்களின் நிலையைத் தெளிவாக அறிந்துகொண்டு தனக்குத் துல்லியமான குணகணங்கள் நிறைந்த கர்தமருக்கு மனமகிழ்வுற்றவராக பெண்ணைக் கொடுத்தார். மஹாராணி ஶதரூபா பெருஞ்செல்வங்களையும், உடைகளையும், அணிகலன்களையும், விரிப்புகளையும் பரிசாக தம்பதிகளுக்கு ப்ரீதியுடன் தந்தாள். ஸாம்ராட் (மனு) பொருத்தமானவருக்கு மகளை ஈந்து கவலை நீங்கியவரானார். ஆசைகொண்டவராகக் கரங்களால் பெண்ணை ஆரத்தழுவி மனம் பதற்றம் அடைந்தார்.
அந்தப் பிரிவைத் தாங்கவியலாமல் 'அம்பா, வத்ஸா' என கண்ணீரை விடுத்தார். கண்களில் உதித்த கண்ணீரால் பெண்ணின் தலைமுடியை நனைத்தார்.
இப்படியாக விவாஹம் நிறைவுறுகிறது.
சில குறிப்புகள் -
1. இது காதல் திருமணம், தேவஹூதி நாரதரிடமிருந்து கர்தமரைப் பற்றி அறிந்து அவரையே வரிக்கிறாள் - இது தேவஹூதியின் காதல். கர்தமர் பகவானிடமிருந்து மனுவின் பெண்ணைப் பற்றி அறிகிறார். மனுவிடமே மேலே கண்டுள்ளபடி தன் விருப்பத்தையும் தெரிவிக்கிறார் - இது கர்தமரின் காதல்.
2. சாதாரண தந்தை போலவே மனு பெண்ணுக்குத் திருமணமாக வேண்டுமே எனக் கவலையுறுகிறார். திருமணமானதும் பிரிவினால் கலங்குகிறார்
3. இது ஒரு கலப்புத் திருமணமும் கூட. 21 ஆம் அத்யாயத்தில் மனு க்ஷத்ரியராகவும், கர்தமர் ப்ராஹ்மணராகவும் தெரிவிக்கப்படுகின்றனர். அனுலோம விவாஹம்.
ஆக பாகவதத்தில் வரும் முதல் திருமணக்காட்சி காதல் மணம் மட்டுமல்லாது, கலப்பு மணமும் கூட.
#ஶ்ரீமத்பாகவதீவார்த்தா
No comments:
Post a Comment