Friday, March 14, 2025

Naa jeevadhara Thyagaraja kriti

தியாகராஜ ஸ்வாமிகள் -   நங்கநல்லூர்  J K  SIVAN 

ஒரு அதிசயம் 

நமது பாரத தேசத்தில் எண்ணற்ற மஹான்கள் அநேகர்  தோன்றி பல உயிர்களை காப்பாற்றி இருக்கிறார்கள் என்பது மட்டும் இல்லை.  பல இறந்த  ஜீவன்களுக்கும் புத்துயிர் அளித்திருக்கிறார்கள்.  வெளியே தெரிவதில்லை. மஹா பெரியவா தன்னுடைய நூறு வயதில் எத்தனையோ பேருக்கு வாழ்வு, உயிர் அளித்திருக்கிறார்கள் என்பது சம்பந்தப்பட்ட மனிதர்களுக்கும் குடும்பத்துக்கும், மஹா பெரியவாளை நிழலாக தொடர்ந்து சேவை கைங்கர்யம் செய்த புண்யவான்களுக்கும் மட்டுமே தெரியும்.  தெய்வீகத்தை, ஆன்மீகத்தை, வியாபாரமாக கருதாத மஹநீயர்கள்  அவர்கள்.

 இதோ உங்களில் பலருக்கு தெரியாத ஒரு அற்புத விஷயம் சொல்கிறேன். கேளுங்கள்.  

தியாகராஜ ஸ்வாமிகள் ஒவ்வொரு நாளும்  ஒரு லக்ஷத்து முப்பதாயிரத்துக்கு மேல்  ராம நாமம் உச்சரித்து ராமனே மூச்சாக வாழ்ந்தவர்.  திருப்பதிக்கு தரிசனத்துக்கு சென்று கொண்டிருக்கிறார்.  அந்தக்காலத்தில் நடந்து தான் திருப்பதிக்கு செல்லவேண்டும். காட்டுப்பிரதேசங்கள் வழியில் கடக்க நேரிடும். கள்வர் பயம் உண்டு.  ஸ்வாமிகள் ஆந்திராவில் புத்தூர் பக்கம் வந்துவிட்டார். அங்கே ஒரு கோவில் வாசலில் ஒரு கூட்டம். சிலர் கூட்டமாக நின்று அழுது கொண்டிருக்கிறார்கள்.  ஸ்வாமிகள்  அருகில் இருந்தவர்களை '' ஏன் இவர்கள் அழுகிறார்கள்?'' என்று மனம் நொந்து கேட்கிறார். சிஷ்யன் கூட்டத்தில்  சிலரிடம் காரணம் கேட்டு வருகிறான்.

''சுவாமி,  ஒரு பிராமணன், தனது மனைவியோடு திருப்பதி தரிசனத்துக்கு நடந்து வந்திருக்கிறான். இரவில் திசை தெரியாமல் புத்தூர் பக்கம் வந்திருக்கிறான். இரவில் காட்டு மிருகங்களிடம் சிக்காமல் எங்காவது ஒரு வீட்டில் இரவு தங்க முயற்சித்து எல்லா கதவுகளும் சாத்தி இருப்பதால் இந்த கோவில் அருகே வந்தவன் மனைவியிடம் இந்த கோவில் மதில்  சுவரை தாவி ஏறி உள்ளே சென்று  கதவை திறக்கிறேன். இரவு இங்கே தங்கலாம் என்று  யோசனை சொன்னவன் மதில் சுவர் மேல் ஏறி கோவில் உள்பக்கம்  குதித்திருக்கிறான் . அவன் குதித்த இடத்தில் பெரிய கிணறு ஒன்று இருந்தது அவனுக்கு எப்படி தெரியும்? அதில் விழுந்து இறந்து விட்டான்.  மனைவி அவனைக் காணாமல் அழ சத்தம் கேட்டு  சிலர் வந்து கோவிலைத் திறந்து உள்ளே சென்று பார்த்தால் அவன் கிணற்றில் விழுந்து கிடப்பது  தெரிந்து அவன் உடலை வெளியே எடுத்து போட்டு அதற்கு கிரியைகளை செய்ய காத்திருக்கிறார்கள்''

தியாகராஜ ஸ்வாமிகள்  ''ராம ராமா'' என்று கண்ணீர் விட்டார். அருகே சென்று அந்த பிராமணன் உடலைப் பார்க்கிறார். அவன் கழுத்தில் துளசி மாலை  அணிந்து நெற்றியில் நாமத்தோடு இறந்து கிடந்துள்ளான் என்று தெரிகிறது.  
தியாகராஜ ஸ்வாமிகள் மனம் உருகுகிறது. கண்ணீர் பெருகுகிறது. 

'' ஹே ராமா, இவனைப் பார்த்தால்  உன் பக்தன் மாதிரி அல்லவா தெரிகிறது. இவன் திருப்பதியில் உன்னை ஸ்ரீனிவாசனாக காண அல்லவா  விரும்பியவன். அவனுக்கு இந்த கதி நேரலாமா?

தானாகவே  '' நா ஜீவாதார''  என்ற ஒரு கீர்த்தனை  பிலஹரி ராகத்தில் அவர் நாவில் இருந்து புறப்படுகிறது.
பக்தி பூர்வமாக  ஸ்வாமிகள் இந்த கீர்த்தனையை ராமன் மேல் பாடிவிட்டு கையிலிருந்த செம்பில் இருக்கும் துளசி ஜலத்தை அந்த இறந்த பிராமணன் உடலின் மேல் தெளிக்கிறார்.  ஆஹா, என்ன ஒரு ஆச்சர்யம், அந்த இறந்த பிராமணன் ஏதோ தூங்கி எழுந்தவன் போல் துள்ளி எழுந்து ஸ்வாமிகளை நமஸ்கரிக்கிறான். அவன் மனைவி ஆச்சர்யத்தில் பேச்சற்று சிலையாக நிற்கிறாள். இருவரும் திருப்பதி தரிசனம் செய்து ஊர் திரும்புகிறார்கள்.  
ஸ்வாமிகள் பாடிய கீர்த்தனையை  அர்த்தத்தோடு கொடுக்கிறேன். 

நா  ஜீவாதார  நா நோமு  பலமா    nA jIv(A)dhAra nA nOmu phalamA

அனுபல்லவி
ராஜீவ லோசனா  ராஜ ராஜ சிரோமணி, (நா நீவதார)      rAjIva lOcana rAja rAja SirO-maNi (nA)

சரணம்
நா சூபு  ப்ரகாச மா நா  நாசிகா பரிமளமா   நா ஜப வர்ணா ரூபமா  நாடு  பூஜா சுமமா  
தியாகராஜனுத   (நா ஜீவாதார)

நா nA cUpu prakASamA nA nAsikA parimaLamA  nA 1japa varNa rUpamA nAdu pUjA sumamA tyAgarAja nuta (nA)

''என் வாழ்வின் உயிர்நாடியே, ஜீவாதாரமே,  என்  பக்தி  பூர்வ  விரதங்கள், உபவாசங்களின் பலனே, நீல வண்ணா, தாமரைக் கண்ணா,  ராஜாதி ராஜர்களின் க்ரீட ரத்னமே ,  என் பார்வைக்கு இனிய  அற்புத ஒளி விருந்தே,   நான் சுவாசிக்கும், முகரும்  நறுமண வாசமே,  நான் பூஜிக்கும்,  உச்சரிக்கும்  ராமநாம அக்ஷரங்களின் மொத்த உருவே, இந்த தியாகராஜன் அனுதினமும் போற்றிப் பாடும்  ராமா....

 மகாராஜபுரம் சந்தானம் அவர்கள்  பிலஹரியில் அற்புதமாக பாடிய  இந்த கீர்த்தனையை இணைத்துள்ளேன்  ரசியுங்கள் 

No comments:

Post a Comment