Tuesday, February 25, 2025

Guru's upadesha - HH Bharati teertha Mahaswamigal

*ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்* 
"குருவினால் உபதேசிக்கப்பட்ட ஞானம்தான் பிரயோஜனத்திற்கு வரும்;  ஸபலமாகும்" என்று உபநிஷத் கூறுகிறது.  குரு உபதேசம் இல்லாது வந்திருக்கக்கூடிய ஞானம் ஸபலமாகாது.  பகவான் கீதையிலே சொல்கின்ற போது, 
இமம் விவஸ்வதே  யோகம் ப்ரோக்தவானஹமவ்யயம்  I 
விவஸ்வான் மனவே  ப்ராஹ  மனுரிக்ஷ்வாகவேsப்ரவீத்  II 
என்றார்.  அதாவது, "இதை நான் சிருஷ்டியாதியிலேயே சூரியனுக்கு உபதேசம் பண்ணினேன்"  என்று சொல்கிறார்.  அப்போது, இந்த குரு சிஷ்ய பரம்பரை சிருஷ்டியாதியிலேயிருந்து வந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.  குரு இல்லாமல் நாம் நம்முடைய வாழ்க்கையை நடத்தவே முடியாது.  ஆகையால் குரு-சிஷ்ய சம்பிரதாயம் மூலமாக சாஸ்திரத்தின் தத்துவத்தைத் தெரிந்து கொண்டவன்தான்  திரும்ப குரு ஆக முடியும்.  அது மட்டுமல்ல, சாஸ்திரத்தில் சொன்ன ரீதியிலே ஆசரணம் செய்யக்கூடியவனாயும் ஆகியிருக்க வேண்டும்.  நாம் புத்தகம் படித்தோம்.  நன்றாக பாடம் சொல்லுவோம்.  ஆனால், நடைமுறையில் அவற்றை ஒழுகுவது கிடையாது என்றால் நாம் எப்படி அவனை குரு என்று சொல்ல முடியும்?  முதலில் நாம் சரியாக,  சாஸ்த்ரோக்த ரீதியிலே,  ஆசாரத்திலே இருக்க வேண்டும்.  நாம் இன்னொருவனுக்கு இந்த மாதிரி நடக்க வேண்டும் என்று சொல்ல வேண்டி இருந்தால்,  முதலில் அந்த மாதிரி நடக்கக்கூடிய யோக்யதாம்சம் நமக்கு இருக்க வேண்டும். 
முதலில் தான் ஸதாசாரத்திலே இருந்துகொண்டு,  அப்புறம் இன்னொருவனுக்கு தர்மத்தை உபதேசம் பண்ண வேண்டியது குருவினுடைய கடமை.  பிரதியொருவரும் குரு சம்பிரதாய பூர்வகமாக சாஸ்திரத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்.  சாஸ்திரோக்த ரீதியிலே ஆசரணம் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment