Sunday, January 12, 2025

Which one for abhishekam?

எதை அபிஷேகம் செய்வது?- நங்கநல்லூர் J.K. SIVAN

'' என்ன ஸார் உங்களுக்குள்ளே சிரித்துக் கொண்டிருக்கிறீர்கள்? என்ன ஆச்சு? வெயில் அதிகமில்லையே! - ரிட்டயர்டு போஸ்ட்மாஸ்டர் சுப்ரமணிய அய்யர் குசும்பு என்பார்களே அது பிடித்தவர். எப்போதாவது என்னை பார்க்க வருபவர்.

'' போஸ்ட்மாஸ்டர், நான் ஒரு வினோத லோகத்தில் இருந்தேன். சந்தோஷமாக இருந்தது''
''எனக்கும் அது பற்றி சொல்லுங்களேன்?''
''அதற்கென்ன. தாராளமாக. உட்கார சொல்கிறேன்'' என்றேன்.

''இது ஒரு சிவ பக்தன் பற்றிய விஷயம். தெலுங்கில் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா பாடிய ஒரு அருமையான பாட்டு கேட்டேன். அது என்ன அர்த்தம் என்று பார்த்தேன் அது தான் சிரிக்க வைத்தது.... ரொம்ப சின்ன பாட்டு. ரொம்ப ஆலாபனை ஸ்வரப் ப்ரஸ்தாரம், ராகம் தானம் பல்லவி, தனி ஆவர்த்தனம் எதுவும் இல்லையப்பா. பாவம் (bhava) மட்டுமே நெஞ்சை தொடுகிறது.''
''சொல்லுங்க சார் என்ன பாட்டு அது?'' யார் எழுதினது ?
15ம் நூற்றாண்டு ஒரு தெலுங்கு பெண் பக்தை, கவிதாயினி மொல்லா சுத்தம்மா என்று ஒரு ஸ்த்ரீ எழுதினது. 

''ஏமி சேதுரா லிங்கா. ஏமி சேதுரா?.
கங்க உதகமு தெச்சி நீக்கு,
லிங்க பூஜலு சேதமண்டே
கங்கநுன்னா சாப கப்பா
என்கிலந்துன்னாதி லிங்கா
மஹானுபாவா , மாலிங்க மூர்த்தி, மாதேவ சம்போ (ஏமி )
  அக்ஷயாவுல பாடி தெச்சி
அரிப்பித்தமு சேதமண்டே
அக்ஷயாவுல லேகா தூதா
என்கிலந்துன்னாதி லிங்கா
மஹானுபாவா , மாலிங்க மூர்த்தி, மாதேவ சம்போ (ஏமி )  
தும்மி பூவுளு தெச்சி நீக்கு
துஷ்டுகா பூ சேதமண்டே
கொம்ம கொம்மகு கோடி தும்மேத
எங்கிலாந்துன்னாதி லிங்கா
மஹானுபாவா , மாலிங்க மூர்த்தி, மாதேவ சம்போ (ஏமி )  

இதுக்கு என்ன அர்த்தம்?
'' ஹே மஹா லிங்கா, மஹாதேவ சம்போ, மஹானுபாவா... நீ அபிஷேகப் ப்ரியனாச்சே. நான் என்னடா செய்வேன்? சொல்லு. நான் என்ன செய்வேன்?''
 உனக்கு குளிர குளிர கங்கை நீரால் அபிஷேகம் பண்ணலாம் என்று ஆசையோடு கங்கை நீர் கொண்டு வரப்போன இடத்தில் ஒரு குட்டித்தவளை என்னைப் பார்த்து கேட்டது.
''சாமி எதுக்கு இந்த தண்ணியை எடுத்துக் போறீங்க?''
'' என் இஷ்ட தெய்வம் சிவலிங்கத்துக்கு பூஜை பண்ண?
தவளைக்குட்டி சிரிச்சுது.'
''ஏன் சிரிக்கிறே? இந்த கங்கை தண்ணிக்கு என்ன?''
''ஒண்ணுமில்லே, எங்களை மாதிரி தவளைங்க, மீனுங்க மத்த ஜீவராசிங்க எல்லாம் இதிலேயே குளிக்கிறோம், எச்சமிடறோம், துப்புறோம். மலஜலம் கழிக்கிறோம்..... அதைப் போய் சாமிக்கு கொடுக்கிறேன் என்கிறியேன்னு
 சிரிச்சேன்''. 
மஹானுபாவா, மஹா லிங்கமே, மஹாதேவ சம்போ, நான் என்ன செய்வேன். சொல்லு நான் என்ன செய்வேன்?''
''சரி கங்கை நீரும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்னுட்டு அதோ தெரிகிறதே அந்த பசுவின் பாலை கறந்து அதில் அபிஷேகம் பண்ணினால் ஆஹா அதற்கு ஈடு ஏதேனும் உண்டா? என்று பசுவினருகே சென்று பாலைக் கறந்தேனா, அங்கேயும் ஒரு சிரிப்பு சத்தம்.. இதென்னடா வம்பாபோச்சு. இப்போ யாரு சிரிக்கிறதுன்னு பார்த்தா, பசு வுடைய
 கன்றுக்குட்டி.''
''ஏன் சிரிக்கிறாய், என் சிவலிங்கத்துக்கு அபிஷேகம் பண்ண பால் கறப்பதில் என்ன ஜோக்?''
''இல்லை தாத்தா, சிவலிங்கத்துக்கு கோ மாதாவின் பால் அபிஷேகம் என்று நீங்கள் சொன்னது காதில் விழுந்தது. இதைப் போய் யாராவது அபிஷேகம் பண்ணுவார்களா? அது என் எச்சில், நான் குடிச்ச மீதி! என் வாய் எச்சில் பட்டதை பரமேஸ்வ ரனுக்கு அபிஷேகம் பண்ணுகிறேன் என்கிறீர்களே என்று சிரிப்பு வந்தது''
''ஓஹோ இது எனக்கு தோன்றவில்லையே. இதைப்போய் உனக்கு அபிஷேகமா? மஹானுபாவா, மஹா லிங்கமே, மஹாதேவ சம்போ, நான் என்ன செய்வேன். சொல்லு நான் என்ன செய்வேன்?''
 பாலை அங்கேயே பாத்திரத்தோடு வைத்துவிட்டு திரும்பி வேறே என்ன செய்யலாம் என் கதி இப்படியாகி விட்டதே, என்று சுற்றி பார்க்கும்போது தான் கண்ணெதிரே இருக்கும் தோட்டத்தில் சில வெண்மையான தும்பைப் பூக்களை பார்த்தேன். அதையாவது சிலது பறித்துக் கொண்டு வந்து என் உள்ளங்கவர் கள்வன் உனக்கு சாற்றினால் என்ன என்று தோன்றியது. தும்பைப் பூக்களை பறிக்கும்போது 'ரோய்ங் ''என்று கத்திக்கொண்டே சில தேன் வண்டுகள் என்னிடம் பேசினதை இப்போது சொல்கிறேன் கேளு :

''உனக்கு இந்த தும்பை பூ வேண்டாம் யா. இது எங்கள் எச்சில் பட்டது. இதை சிவனுக்கு அபிஷேகம் பண்ணினா அந்த பாவம் எங்களை சேரவேண்டாம் '' என்று வண்டுகள் தடுத்துவிட்டது.

அப்பனே உனக்கு எந்த விதத்தில் அபிஷேகம் செய்வது? என்று புரியவில்லையே. பேசாமல் என் இதயத்தை எடுத்துக் கொள். அதுவும் சீக்கிரம் ஏதாவது தப்பு பண்ணி கெட்டுப் போவதற்குள்'' என்று சொல்கிறான் அந்த பக்தன் ''

இந்த பாடலை ஸ்ரீ பாலமுரளி கிருஷ்ணா பாடியதை நானும் பாடிப்பார்த்தேன். கேளுங்கள். தவளைக்குஞ்சு, கன்றுக்குட்டி, வண்டுகள் போல் நீங்களும் சிரிக்கவேண்டாமா? நான் பாடுவதைக் கேட்டு.... https://youtu.be/mUqpK5FdmdU

No comments:

Post a Comment