கனகதாசர் - ஸ்ரீ கிருஷ்ணரின் 'தங்க' அடிமை
எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்புக்களுக்குப் பின் சிறிய அனுமார் கோயில் ஒன்று இருந்தது. அதைப் புதுப்பித்து அழகான பெரிய கோயிலாகக் கட்டினார்கள். கோவிட் ஓய்ந்த பின் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சில மாதங்களுக்கு முன் கோயிலுக்குப் பின்புறம் மண்டபம் ஒன்றைக் கட்ட ஆரம்பித்துக் காலியாக இருந்தது. இன்று அதைப் பற்றித் தெரிந்துகொண்டேன். கடைசியில் சொல்லுகிறேன். .
நவம்பர் 30ஆம் தேதி கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை. கனகதாசர் ஜெயந்தி. புரந்தரதாசருக்கு இணையாக கனகதாசரும் கன்னடத் தேசத்தில் போற்றப்படுகிறார்.
கனகதாசர் குறித்து நமக்கு அதிகம் தெரியாது. பத்து ஆண்டுகளுக்கு முன் (2013) உடுப்பி கிருஷ்ணரை சேவித்த பின் எல்லோரையும் போல் 'கனகன கிண்டி' துவாரத்தின் வழியாக கனகதாசர் கிருஷ்ணரை சேவித்தார் நானும் சேவித்தேன் என்று இரண்டு வரி எழுதிவிட்டு அவரைக் குறித்து மேலும் தெரிந்துகொள்ளாமல் கடந்து சென்றேன். கடந்த இரண்டு வாரமாக கனகதாசர் குறித்துத் தேடிய போது சில ஆச்சரியமான விஷயங்கள் அடியேனுக்குக் கிடைத்தது.
"பற்பம் எனத்திகழ்" என்று இராமானுஜர் வடிவழகை ஸ்ரீஎம்பார் பாடியது போல, கனகதாசர் "இராமானுஜரே நமோ நமோ ஸ்வாமி லஷ்மணன ரூப நமோ நமோ" என்று ஸ்ரீராமானுஜர் குறித்து ஒரு கீர்த்தனை பாடியுள்ளார் அதில் "தண்டத்தைப் பிடித்தவரே மெல்லிய வேட்டி அணிந்தவரே நீண்ட சடையையும், பூணூலையும் பெற்றவரே பன்னிரு திருநாமமும் பொலியும் சந்தனமும் அணிந்த இராமானுஜரே" என்று புகழ்ந்து கன்னடத்தில் பாடியதிலிருந்து ஆச்சரியம் தொடங்கியது. ( மதுரை டி.என்.சேஷகோபாலன் இதை அருமையாக பாடியிருக்கிறார் கடைசியில் கொடுத்திருக்கிறேன்)
பக்தி திராவிட நாட்டில் தோன்றி, கன்னட தேசத்தில் வளர்ந்தது என்கிறது பாகவதம். கனகதாசர் போன்ற மகான்களின் சரித்திரத்தைப் புரட்டினாலே இது புலப்படுகிறது. மிகச் சுருக்கமாக கனகதாசருடைய சரித்திரத்தை இங்கே தருகிறேன். கூடவே ஆங்காங்கே அடியேனுக்குத் தோன்றிய ஆழ்வார்கள், ஆசாரியர்களின் குறிப்புக்களை அதன் மேலே தூவிவிடுகிறேன்.
கர்நாடகா தேசத்தில் தார்வாரில் பங்காபுரம் என்ற ஊரின் அருகில் 'பாட' என்ற இடத்தில் அவதரித்தார். தாய் பச்சமா; தந்தை பீரேகௌடாவிற்கு விஜயநகரத்துச் சிற்றூர்களைக் கவனிக்கும் வேலை. இத்தம்பதிகளுக்குப் பல வருடங்களாகப் பிள்ளைப் பேறு இல்லை. திருப்பதி பெருமாளை வழிப்பட்டு அதன் பலனாக 1508ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் ஆண் குழந்தைப் பிறந்தது. ( ஸ்ரீ வேதாந்த தேசிகன் அவதாரத்தை இங்கே நினைவு கூறலாம்). திருப்பதி திம்மப்பனின் அருளால் பிறந்த குழந்தைக்கு 'திம்மப்பா' என்று பெயர் சூட்டினார்கள். இவரே கனகதாசர் என்று பின்னாளில் புகழ் பெற்றார்.
திம்மப்பா சிறு வயதிலேயே பெருமாளைக் குறித்துப் பாடல்கள் பாடி 'விளையும் பயிர்' என்ற பழமொழிக்கு ஏற்ப பக்தியில் சிறந்து விளங்கினார். தன் பதின்மூன்றாவது வயதில் தந்தையை இழந்தார். உள்ளூர்க்காரரின் சூழ்ச்சியால் சிற்றூர்களைக் கண்காணிக்கும் தன் தந்தையின் உரிமையும், செல்வத்தையும் இழந்து, தன் தாயுடன் ஊரைவிட்டு வெளியேறினார்.
மற்றொரு ஊரில் உறவினர்களின் ஆடுகளை மேய்த்துக்கொண்டு அவர்களுக்கு உதவி புரிந்து வந்தார். ஒரு முறை நிலத்தை அகழ்ந்தபோது புதையல் கிடைக்க அவற்றைக் கோயில் திருப்பணிகளுக்கும், ஏழைகளுக்கும், தானமாகக் கொடுத்தார். இதனால் அவருடைய பெயர் 'கனகா' (தங்கம்) என்று மாறியது.
ஒரு சமயம் கிருஷ்ண தேவராயருக்கு குருவாக விளங்கிய வியாசராயர் (கிருஷ்ணா நீ பேகனே பாரோ பாடியவர்) என்ற சந்நியாசி பல்லக்கில் வந்துகொண்டு இருந்தார். பல்லக்குச் சென்ற பாதையின் இருபுறமும் துளசி வனம் தெரிய 'அடடா கிருஷ்ணருக்கு மாலை கட்டி சமர்ப்பிக்கலாமே!' என்று நினைத்து மானசீகமாக அதைக் கொய்து, பெரிய மாலையாகக் கட்டி உடுப்பி கிருஷ்ணருக்கு சாற்றினார்.
வியாசராயர் சாற்றிய மாலையின் ஒரு பகுதி கண்ணனின் தோள் மீது விழ, மற்றொரு பகுதி உடுப்பி கண்ணன் வைத்துக்கொண்டு இருக்கும் மத்தின் மீது மாட்டிக்கொண்டு விட்டது. தன் பாவனையால் அதை எடுத்துச் சரி செய்ய முயன்றார். மீண்டும் மீண்டும் முயன்றார் ஆனால் முடியவில்லை.
சற்று தூரத்தில் இருந்த கனகதாசர் "சாமி" என்று கூப்பிட்டார்.
"நீ யாரப்பா?" என்றார் வியாசராயர்
"நான் தாழ்ந்த குலத்தில் பிறந்தவன். உபநயனம் போன்ற எந்தச் சடங்குகளும் எனக்குக் கிடையாது. அதனால் உங்களைப் போன்று நன்கு வேதம் படித்தவர்களிடம் பேசுவதற்கு கூச்சமாக இருக்கிறது. அதுவும் நீங்கள் ஒரு சந்நியாசி! அதனால் உங்களிடம் பயமாகவும் எப்படிப் பேசுவது என்று தெரியாமல் இருக்கிறேன். இருந்தாலும் ஒன்றை உங்களிடம் சொல்ல விரும்புகிறேன்! தான் தவறாக ஏதாவது சொன்னால் மன்னித்துவிடுங்கள். சரி என்று தோன்றினால் உங்கள் ஆசீர்வாதம் எனக்கு வேண்டும்" என்று ஸ்ரீ வைஷ்ணவனுக்கே உரிய 'நைச்சிய' குணத்துடன் பதில் அளித்தார் கனகதாசர்.
"சொல்லுப்பா" என்றார் வியாசராயர்
"சாமி, நீங்கள் சாற்றிய துளசி மாலையின் ஒரு பக்கம் கிருஷ்ணனின் தோளில் விழாமல் கண்ணனின் மத்தில் மாட்டிக்கொண்டிருக்கிறது. அதைச் சரி செய்துவிடுங்கள்" என்றார்
வியாசராயருக்கு மேனி சிலிர்த்தது. "வைஷ்ணவரே! உங்களுக்கு இது எப்படித் தெரிந்தது?" என்று கேட்க அதற்கு கனகதாசர்
ஆடு மேய்த்துக்கொண்டிருக்கும் போது மனோபாவனையில் என் உள்ளத்தில் இருக்கும் கிருஷ்ணருக்கு பூஜை செய்வதே என் பொழுதுபோக்கு. நான் துளசியால் பெருமாளின் திருப்பாதங்களுக்கு அர்ச்சனை செய்துகொண்டிருக்கும் போது நீங்கள் மாலை சாத்துவதைக் கவனித்தேன். நீங்கள் சாற்றிய மாலையை நீங்களே சரி செய்வீர்கள் என்று உங்களிடம் கூறினேன்" என்றார்.
வியாசராயருக்குக் குழப்பம் அதிகரித்தது "என் ஆத்ம அனுபவம் உங்களுக்கு எப்படித் தெரிந்தது?" என்றார்
இதில் என்ன ஆச்சரியம் "நமது லக்ஷணமும், நம் லட்சியமும் ஒன்றாக இருக்கிறதே!" என்று பதில் கூறினார் கனகதாசர்.
அதாவது நமது லட்சியம் பெருமாளுடைய ரூபம். லக்ஷணம் நாம் இரண்டு பேருக்கும் இருக்கும் ஹிருதயம். சாதுக்களின் ஹிருதயம் , நீரும் நீரும் கலந்தாற் போல் இதில் பேதம் இல்லை. சாதுக்களின் ஹிருதயம் ஒன்றாக இருக்கும் போது அதை அனுபவிக்க பெருமாள் அங்கே புகுந்துவிடுகிறார்.
இந்த இடத்தில் நமக்கு எல்லாம் தெரிந்த முதலாழ்வார்களின் கதையை மீண்டும் பார்க்கலாம்.
பொய்கையாழ்வார்
"வையம் தகளியா, வார் கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக – செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல் மாலை
இடர் – ஆழி நீங்குகவே
என்று ஆரம்பித்து 100 பாடல்களைப் பாடினார்.
[பூமியையே விளக்காக்கி, கடல் நீரை நெய்யாக்கி, சூரியனைச் சுடராக்கி, திருமாலுக்கு விளக்கேற்றினால் உலகே ஒளிமயமாகி, துன்பக் கடல் நீங்கும்.]
பொய்கையாழ்வாரைத் தொடர்ந்து பூதத்தாழ்வார்,
"அன்பே தகளியா, ஆர்வமே நெய்யாக
இன்பு உருகு சிந்தை இடு திரியா – நன்கு உருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன், நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்
என்று இவரும் 100 பாடல்களைப் பாடினார்.
[அன்பை அகலாக்கி, பொங்கி வருகின்ற ஆர்வத்தை நெய்யாக்கி, நல்ல சிந்தனையைக் கொண்ட மனதைத் திரியாக்கி, நாரணற்குச் சுடர் விளக்கேற்றினேன்.]
இவர் பாடி முடித்தபின் மூன்று ஆழ்வார்களுக்கும் பெருமாள் காட்சி கொடுத்தார். அந்தத் தரிசனத்தின் பரவசத்தால் பேயாழ்வார்,
திருக் கண்டேன்; பொன்மேனி கண்டேன்; திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன்; – செருக் கிளரும்
பொன் ஆழி கண்டேன், புரி சங்கம் கைக் கண்டேன்
என் ஆழி வண்ணன்பால் இன்று"
[திருமகளைக் கண்டேன்; பொன்னையொத்த மேனியைக் கண்டேன்; சூரியனின் ஒளி வெள்ளத்தைக் கண்டேன்; போர்க்களத்தில் பொன் போன்ற நெருப்பைக் கக்குகிற சக்ராயுதம் கண்டேன்; வலம்புரிச் சங்கு கண்டேன் கடல் வண்ணம் கொண்ட பெருமாளிடத்தில்.]
என்று இவரும் தன் பங்கிற்கு 100 பாடல்களைப் பாடினார்.
இங்கே முதலாழ்வார்கள் செய்தது மானசீக பூஜை! முதலாழ்வார்களின் லட்சியமும், லக்ஷணமும் 'பேசிற்றே பேசல் அல்லால்' என்று ஒன்றாக அமைந்ததால் 'சாது கோஷ்டியுள்' பெருமாள் உள் புகுந்தான். நம்மாழ்வாரின் இந்த ஒரு பாசுரத்தை அனுபவித்துவிட்டு 'சாது கோஷ்டி' பற்றி ஆராயலாம்.
பூசும் சாந்து என் நெஞ்சமே புனையும் கண்ணி எனதுடைய
வாசகம் செய் மாலையே வான் பட்டு ஆடையும் அஃதே
தேசம் ஆன அணிகலனும் என் கைகூப்பு செய்கையே
ஈசன் ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே
நம்மாழ்வார் பெருமாளுக்குப் பூசும் சந்தனம் என் நெஞ்சம் ; என் பாமாலை அவருக்கு மாலையும் பட்டாடையும்; நான் கைகூப்புவது அவனுக்கு அணிகலன் என்று செய்வதும் மானசீக பூஜை !
என்னுடைய அடியார்களே இன் இதயம். அவர்களது இதயம் நானே. என்னையன்றி வேறொன்றை அவர்கள் அறிய மாட்டார்கள். நானும் அவர்களையன்றி மற்றதைச் சிறிதும் அறியேன் என்கிறது ஸ்ரீமத் பாகவதம் ( 9.4.68 )
இந்த அடியார்களைத் தான் சாதுக்களின் கோஷ்டி என்கிறார் பெரியாழ்வார். பெரியாழ்வார் திருமொழி பலசுருதி பாசுரத்தில் இந்த பாசுரங்களைப் பாடினால் சாது கோஷ்டியுள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்கிறார் ஆழ்வார்!
"புதுவை கோன் விட்டுசித்தன் விரித்த தமிழ் வல்லார்
குழலை வென்ற குளிர் வாயினர் ஆகி சாது கோட்டியுள் கொள்ளப்படுவாரே"
லவகுசர்கள் ஸ்ரீமத் ராமாயணத்தைப் பாட எல்லோரும் மெய்மறந்து கேட்டுக்கொண்டு இருக்க, ஸ்ரீராமர் உயரமான சிங்காசனத்தை விட்டு மெள்ள கீழே இறங்கி பகவானுடைய குணங்களைக் கேட்டு ஆனந்தத்தால் வேறுபாடு இல்லாத சாதுக்களுடன் கூடி இருந்து அனுபவிக்கிறார். ஒரே லட்சியத்துடன் கூடியிருந்தால் அங்கே பெருமாள் ஆஜராகிவிடுகிறான்! அதைத் தான் ஆண்டாள் 'கூடியிருந்து குளிர்ந்தேலோர்' என்கிறாள்.
மீண்டும் கனகதாசரிடம் செல்வோம். கனதசாதரின் புகழ் கிருஷ்ண தேவராயருக்கு எட்டியது. தன் படைத் தலைவனாக்கினார். உயர் பதவியைப் பெற்று மக்களுக்காக உழைத்து நல்ல பெயர் வாங்கினார். கிருஷ்ண தேவராயர் மரணத்துக்குப் பின் விஜயநகரப் பேரரசு ஆட்டம் காணத் தொடங்கியது. இது கனகதாசரையும் பாதித்தது. அப்போது திருமலை திருவேங்கடவன் அவர் கனவில் தோன்றி 'தாசன் ஆவாய்' என்று கூறி மறைந்தார். என்ன என்று புரியாமல் இருக்க, கடும் போர் மூண்டது. அதில் கனகதாசர் அடிப்பட்டு மயங்கி விழுந்தார். இரண்டு நாள் மயங்கிய நிலையில் மீண்டும் திருவேங்கடவன் கனவில் தோன்றி "இப்போது என் தாசன் ஆவாய்" என்றார். இடுப்பில் ஒரு வேட்டியுடன், ஒரு கையில் ஒரு வீணை, மற்றொரு கையில் தாளக்கட்டைகளையும் ஏந்தி திருமலைக்குப் புறப்பட்டார் கனகதாசர். இரவில் மலையேறி திருவேங்கடவன் சந்நிதி வாசலில் 'படியாய்க் கிடந்து உன் பவளவாய்க் காண்பேனே' என்று வாயிலில் படுத்து உறங்கினார். காலை நந்தவனத்துக்கு அருகில் 'ரங்கதாசன்' என்ற அடியாரைக் கண்டார். அவரிடம் 'தாசன்' எப்படி ஆவது என்று கேட்க, அவருக்கு உபதேசம் செய்தார். அவரை தன் குருவாக வணங்கி கோயிலுக்குச் சென்றார். அங்கே தியானத்தில் இருந்த போது பெருமாள் அவர் தலையில் கைவைத்து 'மகனே நீ இப்போது பாடத்திற்குச் செல், ஆனால் அடிக்கடி என்னைக் காண வா!" என்றார். கனகதாசர் குருகுலத்துடன் பாடத்திற்குப் புறப்பட்டார்.
அங்கே அவருடைய தாய் பரமபதம் அடைந்திருந்தார். சில காலம் கழித்து சமயதத்துவங்களை அறிந்துகொள்ள ஆவல் பிறந்தது. இராமானுஜருடைய ஆசாரிய பரம்பரையில் வந்த தாத்தாசாரியாரிடம் உபதேசம் பெற்றார். பிறகு வியாசராயாரிடம் உபதேசம் பெற்று தன் குருவாக ஏற்றார்.
ஸ்ரீராமானுஜர் தாழ்ந்த குலத்தில் பிறந்த பிள்ளை உறங்காவில்லி தாசரைச் சிஷ்யனாக ஏற்ற போது மற்றவர்கள் விரும்பாததைப் போல வியாசராயர் கனகதாசரைச் சீடனாக ஏற்றதைப் பலர் விரும்பவில்லை. இதனை அறிந்த கனகதாசர் மடத்தின் வெளியே அமர்ந்து வியாசராயர் சொல்லும் உபதேசங்களைக் கேட்டார்.
இந்த இடத்தில் ஆளவந்தார், மாறனேரி நம்பி குறித்து ஒரு சம்பவத்தைப் பார்க்கலாம்.
தான் ஒரு தாழ்ந்த குலம் என்பதால் மாறனேரி நம்பி மற்றவர்களோடு சேர்ந்து உட்கார்ந்து கேட்க மாட்டார். ஆளவந்தார் திருமாளிகை வாசல் கதவுக்கு வெளியே நின்றுகொண்டு தான் ஆளவந்தாரின் நல் உபதேசங்களை மாறனேரி நம்பி கேட்பார்.
ஆளவந்தார் காலட்சேபம் சொல்லும் போது உரத்த குரலில் தொண்டை புண்படும்படி காலட்சேபம் செய்ய ஆரம்பித்தார். அருகில் இருந்த சிஷ்யர்கள் "நீங்கள் இப்படிச் சத்தமாகச் சொன்னால் உங்கள் தொண்டை புண்படுமே. மெதுவாகப் பேசினாலே எங்களுக்குக் கேட்டும். ஏன் கஷ்டப்படுகிறீர்கள் ?" என்றார்கள். அதற்கு ஆளவந்தார் "நம் மாறனேரி நம்பி வெளியே நின்று கொண்டு இருக்கிறானே!" என்றார்.
கனகதாசரின் பெருமையை மற்றவர்கள் அறிந்துகொள்ள வியாசராயர் சில விஷயங்களைச் செய்தார்.
ஒரு முறை வியாசராயர் யாரும் உங்களைப் பார்க்காத இடத்தில் சாப்பிடுங்கள் என்று எல்லோருக்கும் வாழைப்பழம் ஒன்றைக் கொடுத்தார். கனகதாசருக்கும் ஒன்றைக் கொடுத்தார். எல்லோரும் மறைவான இடம் சென்று சாப்பிட்டார்கள். கனகதாசர் மட்டும் சாப்பிடாமல் "யாரும் இல்லாத இடமே கிடைக்கவில்லை!" என்றார்.
"ஏன் அப்படிச் சொல்லுகிறாய்" என்று கேட்க அதற்கு கனகதாசர் "நான் செல்லும் இடத்தில் எல்லாம் பெருமாளும் இருக்கிறார்!" என்றார்.
இந்த இடத்தில் ஸ்ரீஎம்பார் பற்றி சில குறிப்புகளை உங்களுக்குச் சொல்லுகிறேன்
எம்பாருக்கு தாம்பத்திய வாழ்வில் அவ்வளவு நாட்டம் இல்லை. உடையவர் அவரைக் கூப்பிட்டு 'இருட்டும், தனிமையும் உள்ள போது மனைவியுடன் கூடியிரு' என்று அறிவுறுத்தினார். ஆனால் எம்பாரிடம் எந்த மாறுதலும் இல்லை. கூப்பிட்டு விசாரித்தார் உடையவர்.
"எப்போதும் பெருமாள் என்னுடன் இருக்கிறார் அதனால் தனியாக இருக்க முடியவில்லை. பெருமாள் என் கூடவே இருப்பதால் எப்போதும் வெளிச்சமாக இருக்கிறது" என்றார்.
இவருடைய பெருமையை மற்றவர்களுக்கு எடுத்துரைக்க உடையவர் சின்ன ஊசியை ஓர் இருட்டறையில் போட்டுவிட்டு அதனைத் தேடும் படி தன் சீடர்களை நியமித்தார். எல்லோரும் விளக்கை வைத்துக்கொண்டு தேடினார்கள். யாருக்கும் கண்டு பிடிக்க முடியவில்லை. பின்னர் கோவிந்தன் என்ற எம்பாரை அனுப்பினார் உடையவர். கோவிந்தன் கையில் விளக்கு ஏதும் இல்லாமல் உள்ளே சென்று நிமிஷத்தில் ஊசியை எடுத்து வந்து கொடுத்து எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
இன்னொரு முறை வியாசராயர் கையை மூடிக் கொண்டு வந்தார். தன் கையில் என்ன இருக்கிறது என்று கூறுபவர்களுக்கு முதல் தீர்த்தம் என்றார். யாரும் சரியான விடையைக் கூறவில்லை. கடைசியாக கனகதாசர் 'ஈதனிக வாசுதேவா' என்ற கீர்த்தனையைப் பாடி எங்கும் இருக்கும் வாசுதேவன் குருவின் கையில் இருக்கிறான் என்றார். வியாசராயர் கையை திறந்தார். அதில் வாசுதேவ சாலிக்கிராமம் இருந்தது. குருநாதர் கையில் பரமாத்மா இருக்கிறான். குரு நினைத்தால் அதை உங்களிடம் கொடுக்கலாம் என்பதையும் உணர்த்தினார்.
ஒரு நாள் அவையில் எல்லோரும் இருக்க வியாசராயர் "நீங்கள் எல்லோரும் நன்கு கற்ற பண்டிதர்கள். உங்களில் வைகுண்டம் செல்லும் தகுதி உடையவர் யார்?" என்றார்
என்ன பதில் கூறுவது என்று எல்லோரும் குழம்பிய நிலையில். கனகதாசர் "நான் போனால் போகலாம்" என்றார். இதைக் கேட்ட மற்றவர்கள் "என்ன ஆணவமான பதில்" என்று துணுக்குற்றார்கள். கனகதாசர் "நான்" என்றும் ஆணவம் அகன்றால் வைகுந்தம் செல்லலாம் என்பதைத் தான் அப்படிக் கூறினேன் என்றார்.
இந்த இடத்தில் நடாதூர் அம்மாள்.குறித்த ஒரு சம்பவத்தைப் பார்க்கலாம்.
ஸ்ரீராமானுஜர் நியமித்த முக்கியமான ஆசாரியர் நடாதூர் ஆழ்வான், ஸ்ரீபாஷ்யத்தை பலரிடம் கொண்டு சென்றவர். இவருடைய பேரன் நடாதூர் அம்மாள். தன் பேரனுக்கு ஸ்ரீபாஷ்யம் சொல்லித்தர ஆரம்பிக்க நடாதூர் அம்மாள் துடிப்புடன் பல சந்தேகங்கள் கேட்க ஆரம்பித்தார். "எனக்கு வயதாகிவிட்டது, அதனால் நீ எங்கள் ஆழ்வானிடம் கற்றுக்கொள் அவர் தான் உன் சந்தேகங்களுக்கு தக்க விளக்கம் சொல்லுவார்" என்று அனுப்பினார்.
காஞ்சியிலிருந்து புறப்பட்டு, நடாதூர் அம்மாள் எங்கள் ஆழ்வானின் வீட்டுக் கதவைத் தட்டிய போது உள்ளேயிருந்து யார் ? என்று கேட்க அதற்கு அம்மாள் "நான் தான்" என்று பதில் கூற அதற்கு உள்ளிருந்து "நான் செத்த பின் வரவும்" என்று பதிலுரைத்தார் எங்கள் ஆழ்வான்.
குழம்பிய நடாதூர் அம்மாள் தன் தாத்தாவிடம் வந்து கேட்க அவர் "நான்" என்ற சொல்லாமல், நான் என்ற மமதை இல்லாமல் "அடியேன்" என்று சொல்ல வேண்டும் என்று அறிவுரைத்தார்.
அம்மாளும் திரும்பச் சென்று "அடியேன் வந்திருக்கிறேன்" என்று சொல்ல எங்கள் ஆழ்வானுக்கு அபிமான சிஷ்யனாக விளங்கினார் நடாதூர் அம்மாள்.
ஒரு முறை தாம் போற்றி வணங்கும் கிருஷ்ணனை காண உடுப்பிக்குச் சென்ற கனகதாசர். இவர் தாழ்ந்த குலம் என்பதால் அவரை உள்ளே விடவில்லை. நான் கோயிலுக்குச் செல்லவில்லை என்றால் என்ன என் கீர்த்தனம் கிருஷ்ணருக்கு கேட்கும் என்று கோயிலுக்கு வெளியே நம்மாழ்வார் தன் திருவாய்மொழியில் கூறுவது போல "தலைகீழாகக் கூடி ஆடி மகிழ்ந்து ஆரவாரம் செய்து வணங்காதவர்கள் சாது ஜனங்களின் நடுவே இருந்து என்ன பயன்?" (3.5.4). பலன்களை நினையாமல் பெருமாளை மனதுள் வைத்து உள்ளம் உருகி ஆடிப்பாடி அகங்காரத்தையும், வெட்கத்தையும் தவிர்த்து அவன் குணங்களைப் பிதற்றுங்கள்(3.5.10)" என்பது போல மெய் மறந்து கையில் வீணை, தாளத்துடன் திருப்பாணாழ்வார், நம்பாடுவான் போல உடுப்பி கண்ணனை மனதில் நினைத்து தன் குருவின் கீர்த்தனமான "கிருஷ்ணா நீ பேகனே பாரோ" என்ற கீர்த்தனங்களைப் பாடிக் குதித்து ஆடிக்கொண்டு இருக்க,
பெருமாள் திருவாராதனத்துக்கு மடியாக வந்தவர்களை அவர் கவனிக்க வில்லை. இவர் தாழ்ந்த குலம் என்பதால் "தள்ளிப் போ!" என்று கூற கனகதாசர் ஆடிப் பாடிக்கொண்டு இருக்க, அவர்கள் கோபத்துடன் "நீ பாடும் பாட்டுக்குக் கண்ணன் வந்துவிடுவானா ? என்ன வேஷம் இது எல்லாம்?" என்று சத்தமாக அதட்ட, கனகதாசர் சுயநினைவுக்கு வந்தார். கண்ணனை நினைத்து அபசாரம் செய்துவிட்டோமே ? என்று, கோயிலுக்குப் பின் சென்று மனம் வெதும்பி சுவரில் முட்டிக்கொண்டு "தான் ஒரு தாழ்ந்த குலத்தில் பிறந்ததால் தான் இந்த அபசாரம் நிகழ்ந்தது. என்னை அவமதித்ததால் எனக்கு வருத்தம் இல்லை, ஆனால் உன் பாட்டுக்குக் கண்ணன் வந்துவிடுவானா என்று நாம சங்கீர்த்தனத்தைக் குறை கூறுகிறார்களே!
நதி கோணலாக இருப்பதால் அதில் செல்லும் நீர் கோணல் இல்லையே!
பசுமாடு கோணலாக இருக்கலாம், ஆனால் கொடுக்கும் பால் கோணல் இல்லையே !
கரும்பு கோணலாக இருக்கலாம் ஆனால் அதன் ருசி கோணல் இல்லையே!
பூக்கள் கோணலாக இருக்கலாம் ஆனால் அதன் வாசனை கோணல் இல்லையே!
அது போல நான் கோணலாக இருக்கலாம், ஆனால் உன் நாமம் கோணல் இல்லையே!
என்று அழுத போது சுவரில் கம்பால் அடிப்பது போலச் சத்தம் கேட்கக் கீழே கற்கள் சில விழுந்தன. கனகதாசரின் பக்திக்குக் கட்டுப்பட்டு உடுப்பி கிருஷ்ணர் முகத்தைத் துவாரத்தை நோக்கித் திருப்பினார் "கனகா! இங்கே பார்" என்று கிருஷ்ணர் அழைக்க கனகதாசருக்கு காட்சி கொடுத்தார்.
இதுவே இன்றும் 'கனகன கிண்டி' என்றழைக்கப்படுகிறது. இன்றும் இதன் வழியாகத் தான் மக்கள் கண்ணனை சேவிக்கிறார்கள்.
'கனகரின் வாசல்' என்பது சுவரில் ஓர் ஓட்டை அது வழியாக கனகதாசர் கண்ணனை பார்த்தார் என்பதைவிட, தன் பக்தி மூலம் பார்த்தார். அது கனகதாசரின் 'பக்தி வாசல் !'
என்னை எல்லா இடத்திலும் பார்க்கிறவனை நான் எப்போதும் பார்த்துக்கொண்டு இருக்கிறேன் என்று கீதையில் கண்ணன் சொன்னதை இங்கே அனுபவிக்கலாம்.
திருமங்கை ஆழ்வார் "வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்" என்பது போல கனகதாசரும் "அரியென்று கூறாமல் வருந்தினேன் நானே பிறப்பு என்னும் துன்பங்களில் வருந்தினேன். ஆதிகேசவன் திருவடியை என்றும் விடமாட்டேன்" என்று பாடியுள்ளார்.
பெரியாழ்வார் திருமொழியில்
நம்பனை நரசிங்கனை நவின்று
ஏத்துவார்களைக் கண்டக்கால்
எம்பிரான் தன சின்னங்கள் இவர்
இவர் என்று ஆசைகள் தீர்வனே.
ஸ்ரீவைஷ்ணவ அடியார்கள் நடந்து வருவதைக் கண்டால் சங்கம், சக்கரம் வருகிறது என்று நினைக்க வேண்டும் என்கிறார் பெரியாழ்வார். தொண்டரடிப்பொடி ஆழ்வார் "உன் அடியார்க்கு ஆட்படுத்தாய் பள்ளி எழுந்தருளாயே" என்று அரங்கனை எழுப்புகிறார்
.கனகதாசர் "தோளில் சக்கரம் கொண்ட அடியார்களின் திருவடி தொழும் அடியார்க் கடியனாக ஆக்குவாய் என்னை; பன்னிரு திருநாமம் ஸ்ரீ சூர்ணத் தரித்த அடியார்க் கடியனாக ஆக்குவாய்" என்று பாடுகிறார்.
இன்று இக்கட்டுரையை எழுதி முடித்துவிட்டு காலை துவாதசிக்கு பெருமாள் தீர்த்தம் துளசி வாங்கிக்கொண்டு வரலாம் என்று அனுமார் கோயிலுக்குச் சென்றேன்.
சேவித்துவிட்டு வரும் வழியில் கோயிலுக்குப் பின் மண்டபத்தில் கையில் வீணையுடன், தாளக் கட்டையுடன்… பக்கத்தில் பூவிற்கும் சிறுமியிடம்
"இது யார்" என்று கேட்டேன்
"கனகதாசரு"
-சுஜாதா தேசிகன்
18.11.2024
(சென்ற வருடம் எழுதிய கட்டுரை)
படங்களுடன் என் வலைப்பதிவில் படிக்கலாம்.
No comments:
Post a Comment