Tuesday, October 1, 2024

Thiruvasagam

மணி வாசகம் -  நங்கநல்லூர்  J K  SIVAN 

தமிழில் தான் எத்தனை  ஞானிகள், மஹான்களின்  பக்திப்  பரவச எழுத்துகள் இருக்கிறது. ஆழ்வார்களைச்  சொல்வதா, நாயன்மார்களை சொல்வதா, சித்தர்களை சொல்வதா, புலவர்களை சொல்வதா..கேட்கும்போதே  நெஞ்சத்தை  அனலில் இட்ட மெழுகு மாதிரி உருகச் செய்யும்  எழுத்துகள் அளித்த  மணிவாசகர் நினைவில் வருகிறார்.  இறைவன் வைத்த பேர்  திருவாசகன்.அவன் இன்னொருவருக்கு வைத்த பெயர்  நாவரசு.  

மணிவாசகர்  பரமேஸ்வரனின்   அருளை நாடி  பாடிய எத்தனையோ பாட்டுகளில் ஒன்று திருப்புலம்பல்.  திருவாசகத்தில் ஒரு அத்யாயம்.  அதில் ஒரு பாடல் சொல்கிறேன். 

''உற்றாரை யான் வேண்டேன்,ஊர் வேண்டேன், பேர் வேண்டேன்,
கற்றாரை யான் வேண்டேன்,கற்பனவும் இனி அமையும்,
குற்றாலத்து அமர்ந்து உறையும்கூத்தா, உன் குரை கழற்கே
கற்று ஆவின் மனம்போலக்கசிந்து உருக வேண்டுவனே!''

எனக்கு  இந்த உலகில் எந்த சொந்தமும் பந்தமும் வேண்டாம்.  எந்த சொந்தத்தின் உதவியும் எனக்கு தேவை இல்லை. 

எனக்கு இது   என் ஊர்.  ,நான்  இந்த ஊர்க்காரன்  என்று சொல்லி பெருமைப் பட்டுக்கொள்ள  எந்த ஊரும்,  க்ராமமும் வேண்டாமடா ஈஸா. 

இவன் நல்லவன் , படித்தவன்,பாடுவான்,பேசுவான் ,நடிப்பான்,என்றெல்லாம் எந்த பேருமே எனக்கு வேண்டாம். யாருக்கும் தெரியாதவனாக  இருப்பது தான் எனக்கு சுகம்.   ஒருத்தர் ரெகமெண்டஷனும், அங்கீகாரமும்  எனக்கு வேண்டாம் .  

புலவர்கள், சிறந்த  மேதாவிகள், நன்றாக படித்தவர்கள்  தயவோ, உதவியோ,  அறிவுரையோ  எதுவுமே எனக்கு தேவையே இல்லை. நான்  கற்றுக் கொள்ளவோ  பெற்றுக் கொள்ளவோ  வேண்டியது  எதுவும் உன்னைத் தவிர  மற்றவர்களிடம் இல்லையப்பா. 

உனக்கு  பிடித்த, நீ சந்தோஷமாக  ஆடும்  சபைகள்  ஐந்து.  அதில்  ஐந்தாவது  சித்ரசபை எனும் திருக்குற் றால மலையில் அமைந்தது. ஆஹா  குற்றாலம் என்று சொல்லும்போதே  உடலும் உள்ளமும் சில்லிட்டு  சுகமளிக்கிறது. சென்னை வெயில் மறந்து போகிறதே. 

குற்றாலேஸ்வரா,  ஆடும்போது கலீர் கலீர்  என  ஒலிக்கும்  சதங்கைகள் அணிந்த  இடது பதம் தூக்கி ஆடும் நடேசா,  உன் திருவடி நிழல் ஒன்றே போதும்.  

''அம்மா''  என்ற கன்றுக்குட்டியின் குரல் கேட்டதும்  மடியில் பால்  சுரக்க அதனைத் தேடி ஓடி வரும் தாய்ப் பசு நீ எனக்கு. அம்மையப்பா என்று உன்னை நினைக் கும்போதே  ஓடி வந்து என் மனதில் இருக்கை  கொண்டு என்னை ஆட்கொள்ளும்  ஈசனே  நீயும்  உன் கருணை யும் இருந்தால் போதும்,  வேறு என்ன வேண்டும்?

No comments:

Post a Comment