Saturday, October 12, 2024

Dadhipanda moksham

ததிபாண்டனின் மோக்ஷம்  

ததிபாண்டன் ஒருமுறை ஒருவரின் இறந்த வீட்டுக்கு சென்று வந்த பிறகு யோசித்தான்,

"நாமும் இறந்தால் இவ்வுலகம் விட்டு சென்று விடுவோமா?உயிர் போனால் போகுது. ஆனால் கண்ணன் இல்லாமல் இருக்க முடியாதே" என்று கண்ணீர் மல்காத குறையாக நினைத்து கொண்டு இருந்தான். 

அந்த நேரம் ததிபாண்டன் ஒரு ரிஷியை எதேச்சையாக பார்த்தான். அவரின் கால்களில் விழுந்தான். 
"சாமி என்னை ஆசீர்வதியுங்கள்"
"ஆசிர்வதித்தேன். சொல் மகனே, உனக்கு என்ன வேண்டும்"
"எனக்கு ஒரே ஒரு ஆசைதான் சுவாமி"
"கேள் மகனே"
"எப்போதும் கண்ணனுடன் இருக்கனும். நான் இறந்த பிறகும் அவனிடம் எப்பவும் இருக்கனும்"
"அட மோக்ஷத்தை இவ்வளவு எளிதாக கேட்டு விட்டாயே"
"அப்படினா"
"மோக்ஷம் என்றால்...இறைவன்.. திருவடி.. சரணடைதல்.. கருணை" என்று வேதாந்த தத்துவங்களை  விளக்கி கொண்டே போனார். உடனே ததிபாண்டன்,
"சாமி, எனக்கு எதுவுமே புரியல. மோக்ஷத்தை அடைந்தால் எப்போதும் கண்ணனுடன் இருக்க முடியுமா?"
"கண்டிப்பா. அதுவே நித்யம்"
"அது எங்கே கிடைக்கும். உங்களால் கொடுக்க முடியுமா"
ரிஷி சிரித்து கொண்டே, "என்னால் முடியாது தம்பி."
"அப்படினா இதை யார்ட்ட கேக்குறது"
"பரப்பிரமத்தை பக்கத்தில் வைத்து கொண்டே என்னிடம் கேட்கிறாயே"
"புரியல சாமி"
ரிஷி அவன் வெகுளித்தனத்தை ரசித்தார். 
 "நீ யாரிடம் எப்போதும் இருக்க ஆசை படுகிறாயோ அவனிடமே கேள். உனக்கு கிடைக்கும்."
"அட நம்ம கண்ணனா. இத முதல்லயே சொல்ல கூடாதா"
"அவ்வளவு எளிதில் அவன் கொடுக்க மாட்டான் தம்பி"
"அத நான் பாத்துக்கிறேன் சாமி. அவன் என் கண்ணன். என் நண்பன். எனக்காக எதுனாலும் செய்வான்"

ரிஷி அவனை கண்டு வியந்த படியே அங்கிருந்து சென்றார். 

அன்று கண்ணன் ததிபாண்டன் வீட்டிற்குள் ஓடினான் . அப்போது ததிபாண்டன் அதை பார்த்து,

"கண்ணா, எங்கே இந்த பக்கம்"
"அட ததிபாண்டா . நண்பனே என்னை காப்பாற்று"
"நானா. உன்னையா. நீதான் பெரிய வித்தை காரன் ஆயிற்றே"
"அடேய் ததிபாண்டா. இப்போது பேச நேரம் இல்லை"
"என்ன நடக்குதுன்னு சொல்லு கண்ணா. தலையும் புரியல வாலும் புரியல"
"அடேய் வழக்கம் போல வெண்ணை திருடி மாட்டிகிட்டேன். அம்மா துரத்திட்டு வராங்க" 
"சரி"
"நான் இந்த பானைக்குள ஒளிஞ்சிக்கிறேன். நீ அம்மா வந்தா நான் இங்க இல்லன்னு சொல்லிடு"
"சரிடா கண்ணா. போய் ஒளிஞ்சிக்கோ"
"அடேய் நான் ஒளியிறேன். கண்ணன் பானைக்குள இருக்கான். அவன் இங்க இல்லைன்னு சொல்ல சொன்னான்னு மதுமங்கள் மாதிரி உளறி கொட்டிடாதே. சரியா "
"சரி சரி. நீ போய் ஒளிஞ்சிக்கோ"
கண்ணன் பானைக்குள் போய் ஒளிந்து கொள்ள, ததிபாண்டன் ஒரு தட்டை வைத்து மூடினான்.

யசோதா பிரம்புடன் வந்து ததிபாண்டனிடம்,
"கண்ணனை பாத்தியா"
"இல்லம்மா"

யசோதா சென்ற பின் ததிபாண்டன் அந்த பானையின் மேல் உட்கார்ந்து விட்டான். 
கண்ணன்,
"அடேய் ததிபாண்டா, என்ன செய்யுற. மூச்சு மூட்டுது பானையை திறந்து விடு"
"மாட்டேன்"
"ஏன்டா"
"நான் உன்னிடம் ஒன்னு கேப்பேன். அது தரணும். உன்னால் மட்டும்தான் தர முடியுமாம். ஒரு சாமி சொன்னார்"
"சரிடா. தரேன். என்னன்னு சொல்லு  "
"மோக்ஷம் தா"
"அடேய் மோக்ஷமா. அது என்னனு தெரியுமா? எளிதாக கேட்டுட்டியே"
"அதெல்லாம் எனக்கு தெரியாது. எனக்கு மோக்ஷம் குடுத்தா உன்ன அம்மாட்ட காட்டி குடுக்க மாட்டேன்"
"சரி சரி. குடுக்கிறேன்."
"அப்படியே இந்த பானைக்கும் மோக்ஷம் குடு. உன்ன காப்பாத்தி இருக்குல்ல"
"சரிடா ததிபான்டா. வெளிய விடு"

கண்ணன் வெளிய வர, ததிபாண்டன் அவனை கட்டி கொண்டு,
"கண்ணா, இனிமே எப்போதும் உன்னுடன்தான் இருப்பேன்." என்று சந்தோசமா சொல்லி கொண்டே ஓடினான். கண்ணன் கண்களில் நீர் கொட்டியது.

கண்ணனுக்கு அனைத்தும் தெரியும். அவனால் பானையை விட்டு வெளியே வர முடியாதா?. இருந்தும் தன் பக்தன் ததிபாண்டனின் வெகுளித்தனத்தை ரசித்தான். அவன் பக்திக்கு மெச்சி அவனுக்கு உயர்ந்த மோக்ஷத்தை அருளினான்.

No comments:

Post a Comment