Monday, September 9, 2024

Sri Sri Krishna premi Anna & his books

புண்யானிமான் பரம பாகவதான்
                          ஸ்மராமி
                       **************

பக்தர்களாலும் பாகவதர்களாலும் அன்புடனும் பெருமையுடனும் 
              ஸ்ரீ ஸ்ரீ அண்ணா 
என்று அழைக்கப்படும் மகாத்மா ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி ஸ்வாமிகள் கோலோகம் எழுந்து இன்றுடன் ஒரு வருடம் முடிவடைகிறது. நாளை அவரது நினைவு தினம் பக்தர்களால் பாகவதர்களால் போற்றப்படுகிறது

ஸ்ரீ ஸ்ரீ அண்ணாவின் பெருமைகளை என்ன கூறியும் என்ன வார்த்தைகள் கொண்டும் நிறைவு செய்ய முடியாது .அவர் ஒரு ஞானக்கடல் .மற்றொரு வியாஸபகவான் என்று தான் அவரது க்ரந்தங்களை கொண்டு அனுமானிக்க முடிகிறது.

அவரது பெருமைகளையும் ஞானத்தையும்  நம்முடைய அறிவு கொண்டு அனுமானிக்க  முடியாது. மகான்களை மகான்களே அறிவார்கள். ஸ்ரீ ஸ்ரீ பெருமை பற்றி இரண்டு மகான்கள் கூறியதை  இங்கே நினைவு கொண்டு அவரது பெருமைகளை நாம் ஓரளவுக்கு புரிந்து கொள்ளலாம்.

1983 ம் ஆண்டு ஸ்ரீ ஸ்ரீ அவர்கள் தன்னுடைய குடும்பத்துடனும் தன்னுடைய ஆராதனை தெய்வமான பக்த கோலாகலனுடனும் பாரத திக்விஜய யாத்திரை துவங்கினார் .ஒரு வருடம் பாரதத்தின் அனைத்து க்ஷேத்திரங்களையும் தரிசனம் செய்து திரும்பினார் .அந்த க்ஷேத்திர யாத்திரையில் டெல்லியில் ஒரு மாதம் பக்தர்கள் அபிமானத்திற்காக தங்கினார். ஸத்சங்கம் நடந்தது. எனக்கு அங்கிருந்து தன் கைப்பட ஓர் போஸ்ட் கார்டில் கடையநல்லூர் பக்தர்களை அழைத்துக் கொண்டு டில்லி ஸத்ஸங்கத்தில் கலந்து கொள்ளும்படி ஆஞ்யாபித்திருந்தார். நாங்கள இருபத்தி ஒன்று ஶ்ரீஶ்ரீயின் பக்தர்கள் டெல்லி சென்று ஸ்ரீஸ்ரீயின் அகில பாரத ஸாதுஸங்க பாகவத மேளாவில் கலந்து கொள்ளும் பாக்யம் கிடைத்தது.

இந்த ஸத்ஸங்கத்தில் பல ஸாதுக்களும் மஹான்களும் கலந்து கொண்டு உரையாற்றினர். இதில் முக்கியமாக இரு மஹான்கள் ஶ்ரீஶ்ரீபற்றி கூறியதை இங்கு நினைவுகூறல் பொருத்தமாய் இருக்கும். ஒருவர் ப்ரபுதத்த ப்ரம்மச்சாரி என்ற மஹான். இவர் த்ரிவேணி ஸங்கமத்தின் நடுவில் ஓர் உயரமான குடில் அமைத்து பல வருடங்கள் தவமிருந்தவர். மற்றொரு மகான் மஹாப்ரபு ஸம்ப்ரதாயத்தின் ப்ருந்தாவன ஆஸ்ரமத்தின் தலைமை ஸாது. புருஷோத்தம கோஸ்வாமி.  இந்த இரண்டு மஹான்களின் புற தோற்றமே எங்களைப் போன்றோரை மெய்சிலிர்க்க வைத்தது.

ப்ரபுதத்த ப்ரும்மச்சாரி ஶ்ரீஶ்ரீ அண்ணாவைபற்றி கூறும் பொழுது :-

ஸ்வாமிகள் இப்பொழுதுதான் முதன்முறையாக திருப்பதி தாண்டி வட இந்திய யாத்திரை செய்கிறார். இவரது ப்ருந்தாவன மஹாத்ம்யம் என்ற க்ரந்தத்தை கடந்த இரண்டு நாட்களாக காணும் பாக்கியம் கிடைத்தது. அதில் ஸ்ரீப்ருந்தாவனம் பற்றியும் யமுனை பற்றியும் க்ருஷ்ணலீலா ஸ்தலங்கள் பற்றியும் ஸ்வாமிகள் விவரித்திருக்கும் அழகு கண்டு ப்ரமித்து போய்விட்டேன். பிறவியிலிருந்தே நாங்கள் ஸ்ரீப்ருந்தாவனத்தை எங்கள் உயிரினும் மேலாக பாவித்து அனுபவித்து வருகிறோம். ஆயின் எங்களுக்கு பிடிபடாத நாங்கள் புரிந்து கொள்ளாத இந்த ஸ்ரீப்ருந்தாவன க்ஷேத்ர லீலாஸ்தலங்களையும் இதுவரை ப்ருந்தாவனமே வராமல் பாரத தென்கோடியில் அமர்ந்து கொண்டு வட கோடியில் உள்ள க்ஷேத்திரத்தை அனுபவித்த ஸ்வாமிகளின் அனுபவம் எங்களை மெய்சிலிக்க வைத்துவிட்டது. திவ்யக் ஞானம் அருளப்பெறாத ஒருவரால் இது சாத்யமே இல்லை..

ஸ்ரீ புருஷோத்தமகோஸ்வாமி தனது உரையில் :
         அடியேன் இப்பொழுதுதான் ஸ்வாமிகளை பற்றி தெரிந்து கொண்டேன். இதற்கு முன் ஸ்வாமிகளைப் பற்றி கேள்விப்பட்டது கூட இல்லை. கடந்த மூன்று நாட்களாக ஸ்வாமியின் ஸத்ஸங்கம் அனுபவித்து வருகிறேன். அவரை பற்றி சொல்வதற்கு எனக்கு தகுதி இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆயினும் இந்த மூன்று நாள் ஸத்ஸங்கத்தில் நான் புரிந்து கொண்ட ஒன்றை இங்கே தெரிவிக்க ஆசைப்படுகிறேன்.

மஹான்கள் அவர்கள் எவ்வளவு பெரியவர்களாயினும் ஓர் விஷயம் பற்றி பேச வருமுன் தங்கள் மனத்தினுள் பேச வேண்டிய விஷயம் பற்றிய ஓர் குறிப்பினை உருவாக்கிக் கொண்டு தான் பேச வருவார்கள். இது எல்லோருக்கும் யான் உட்பட பொருந்தும் விஷயம். ஆயின் ஸ்வாமிகள் அப்படி அல்ல. பேச வருமுன் எந்த முன்யோசனையும் கிடையாது. மேடையில் அமர்ந்து கண்களை மூடி த்யான ஸ்லோகங்கள் சொல்ல ஆரம்பிக்கிறார். இதை நாம் பார்க்கிறோம். ஆயின் ஸ்வாமிகளின் மூடிய கண்களுக்கு முன் பலர் தோன்றுகிறார்கள். யார் எனில் நான்கு வேதங்கள் உபநிஷத்துக்கள் இரண்டு இதிகாசங்கள் பதினெட்டு புராணங்கள் இவைகளுக்கு உரை எழுதிய பல ஆச்சார்யர்கள் அனைத்து மொழிகளிலும் பகவானை புகழ்ந்து பாடி அனுபவித்த மஹான்கள் இவர்கள் ஸ்ரீ ஶ்ரீயிடம் இன்றைய உபந்யாஸத்தில் என்னையும் கொஞ்சம் உதாஹரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கிறார்கள். அத்தகைய மஹானாகிய ஸ்ரீஸ்ரீ க்ருஷ்ணப்ரேமி ஸ்வாமிகளுக்கு எனது அனந்த கோடி நமஸ்காரம். மொத்தத்தில் ஸ்வாமிகள் ஸ்ரீமத் பாகவதத்தின் மனித தோற்றம் என்றுதான் நான் உறுதியிட்டு கூறுகிறேன்.

இந்த இரண்டு மஹான்களின் புகழுரைக்கும் மேல் ஸ்ரீ ஸ்ரீயை யாரால்தான் புரிந்து புகழ்ந்து விட முடியும்.

இந்த இனிய நினைவுகளுடன் ஸ்ரீஸ்ரீயை மலர் குவியலில் மூழ்கடித்து நாமும் கொண்டாடுவோம். ராதேக்ருஷ்ண

No comments:

Post a Comment