Thursday, September 5, 2024

End of Koorathaazhvar - Spiritual story

*ஹஸ்தம் - கூரத்தாழ்வான்*

கூரத்தாழ்வான், நம்பெருமாளிடத்து ஒருநாள் ஸ்தோத்ரம் செய்து, தயங்கியவாறு அவன் திருமுன்னே நிற்கிறார்..

உடன் அரங்கன், "உமக்கு வேண்டியதை தருகிறோம், வேண்டிக்கொள்ளும்" என்று திருவாய் மலர்ந்தருள்கிறான்!

ஆழ்வான், நாயன்தே! அடியேனுக்குப் பண்டே எல்லாந் தந்தருளிற்றே! *(நீர் தான் எனக்கு வேண்டியவற்றை எல்லாம் ஏற்கனவே அருளிச் செய்தாயிற்றே)* என்கிறார்..

அரங்கன் விடவில்லை.. "அப்படியன்று! இப்போதும் வேண்டிக்கொள்ளும்! நம் ராமாநுசன் மீது ஆணை!! தருகிறோம்"  *(அரங்கனே ஆணையிட்டு அருளியது ஆழ்வான் ஒருவருக்குத்தான்)*

அப்போது, கூரத்தாழ்வானுக்கு உடையவர் நன்றாயிருக்கும் போதே, தாம் தமது இப்பூதவுடலை நீக்கிப் பரமபதம் செல்ல சித்தம் உண்டாயிற்று.

*த்வதநுபவ வ்ரோதியான இந்த சரீரத்தை விடுவித்து, த்வதநுபவத்தை  தந்தருள வேணும்* என்று அரங்கனிடம் பிரார்த்திக்கிறார். (அதாவது, அரங்கன் அனுபவத்தினை பூர்ணமாகப் பெறவிடாமல் செய்கின்ற இச்சரீரம் மறைந்து, பரமபதத்தை தந்தருள வேணும்)

அதற்கு அரங்கன், "அத்தையொழியச் சொல்லும்" (இதைத் தவிர வேறு ஏதேனும் கேளும்) என்கிறார்.

ஆழ்வான், "அடியேன் அபேக்ஷித்ததையே ப்ரஸாதிக்க வேணும்" என்கிறார்.

அரங்கன், "ஆகில், உமக்கும் உம்முடைய ஸம்பந்தமுடையோர்க்கும் பரமபதந் தந்தோம்" என்றருளி, கடைசியாக திருப்பரிவட்டம், தீர்த்தம், ப்ரஸாதம், பூந்தண்மாலை, திருத்துழாய் அனைத்தும் சாதித்து, சிறப்பித்து விடை கொடுக்கின்றார்.

நடந்ததையறிந்த உடையவர், ஆழ்வான் திருமாளிகை விரைகின்றார்... ஆழ்வான்! நீர் இப்படி செய்தருளலாமா? என்கிறார் சோகமாக!

"நீர் பரமபதம் ஏளும்போது, உம்மையங்கு எதிர் கொள்ளவே இங்ஙனம் ஆயிற்று! என்கிறார் ஆழ்வான்.

ஆழ்வான்! என்னுயிர் இணையான உம்மை இழந்து எங்ஙனே தரிப்பேன்? என்னையும் உடன் கொண்டுபோகத் திருவுள்ளம் பெற்றிலீர்! 

பரமபதநாதனும் அங்குள்ள நித்யசூரிகளும் என்ன பாக்யம் பண்ணினார்களோ உம்மை அங்கு அடைய!

ஒருவாறு தேற்றியபின், ஆழ்வானின் திருமுதுகினை பரிவாகத் தடவி, த்வய மந்திரத்தை அவருக்கு அருளிச்செய்கிறார் உடையவர்.. பிறகு அஞ்சலித்து விடை கொடுக்கின்றார்.

அக்கணமே, ஆழ்வான் தம் ஆசார்யரான உடையவரின் திருப்பாதங்களில் வேரறுந்த மரம் போன்று விழுகின்றார்.

ஆழ்வான் திருவடிகளே சரணம்!!
🙏🙏

No comments:

Post a Comment