Tuesday, September 17, 2024

On samsaara - HH Bharati Teertha Mahaswamigal

ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

"புனரபி மரணம் புனரபி ஜனனம் புனரபி ஜனனீ ஜடரே சயனம்" என்று கூறப்பட்டிருப்பதுபோல்  நாம் பிறப்பு இறப்பு என்னும் சக்கரத்தில் சுற்றுக் கொண்டிருக்கிறோம்.  இப்போது மனிதப் பிறவி எடுத்து பல சுகங்களையும் துக்கங்களையும் அனுபவித்துக் கொண்டு வருகிறோம்.  ஏதோ ஒரு நாள் இந்த சரீரத்தை விடப் போகிறோம்.  மீண்டும் வேறொரு சரீரம் வரும்.  அதுவும் அழிந்து விடும்.  இப்படியாக நாம் ஒரு பிரவாகத்தில் போய்க் கொண்டிருக்கிறோம்.  இந்தப் பிரவாகத்தில் நாம் இப்படியே போய்க் கொண்டிருக்க வேண்டியதுதானா?  அல்லது இதற்கு ஏதாவது முடிவு உண்டா?  என்ற கேள்விகளுக்கு பகவத்பாதாள்,
ஸம்ஸார   காராக்ருஹ  மோக்ஷமிச்சோ:
அயோமயம்  பாதநிபத்தச்ருங்கலம் I
வதந்தி தஞ்ஞா:  படுவாஸனாத்ரயம்
யோஸ்மாத்விமுக்த:  ஸமுபைதி  முக்திம்  II
ஸம்சாரம் என்னும் இந்தப் பிறப்பு-இறப்பு பிரவாகம் ஒரு சிறை ஆகும்.  இந்த சிறையில் நாம் அடைபட்டிருக்கிறோம்.  நம்முடைய கைகால்களுக்கு இரும்புச் சங்கிலிகள் இடப்பட்டிருக்கின்றன.  இந்தச் சங்கிலிகளிலிருந்து  விடுதலை பெற்றாலன்றி நாம் வெளியில் வர முடியாது.  சங்கிலிகள் மிகவும் உறுதியாய் இருக்கின்றன.  அதனால் நம்முடைய முயற்சிகளும் உறுதியாக இருக்க வேண்டியுள்ளது.
அயோமயம்  பாதநிபத்த  ச்ருங்கலம்
அந்த இரும்புச் சங்கிலிகள்தான் மூன்று விதமான வாஸனைகள்,  அவற்றைப் பற்றிக் கூறும் போது பகவத்பாதாள்,
லோகவாஸனயா  ஐந்தோ:  சாஸ்த்ரவாஸனயாபி  ச  I
தேஹவாஸனயா  ஞானம்  யதாவந்நேவ  ஜாயதே   II
என்று கூறுகிறார்.  லோக வாஸனை, சாஸ்திர வாஸனை மற்றும் தேஹ வாஸனை ஆகிய இம்மூன்று வாஸனைகளும் மூன்று சங்கிலிகளைப் போல் இருக்கின்றன.

No comments:

Post a Comment