Wednesday, September 18, 2024

Best citizen - positive story

சிறந்த பிரஜை       நங்கநல்லூர்  J.K. SIVAN

ஒரு குட்டி கதை சொல்லட்டுமா. ராஜா ராணி கதை கேட்காத குழந்தைகளே கிடையாது அப்போதெல்லாம்.
அவன்  ஒரு விசித்திரமான ராஜா. தனது ராஜ்யத்தில்  யார் சிறந்த ஆசாமி என்று ஒருவனை கண்டுபிடித்து அவனை  கௌரவிக்க வேண்டும் என்று ராஜாவுக்கு தோன்றியது. ஒருநாள்  அவனுடைய  குட்டி ராஜ்யத்தில் இருந்த எல்லோரையும்  ஒரு  விசாலமான மைதானத்துக்கு வரவழைத்தான். 
குறிப்பிட்ட அந்த நாளில்  எங்கு  பார்த்தாலும் தலைகள். ராஜாவின் மந்திரிகள்  அவர்களை எல்லாம் தனித்தனியாக சந்தித்து தேர்ந்தெடுத்து, வடிகட்டி கடைசியில் நாலே   நாலு பேரைக்  கொண்டு வந்து  ராஜாமுன்னால் நிறுத்தினார்கள். 
 இவர்களில் யார் நமது ராஜ்யத்திலேயே  சிறந்தவர்?  ராஜா நன்றாக  யோசித்து விட்டு தேர்வு நடத்தினான் ராஜா. முதலாம் ஆள்  பெரும் பணக்காரன் மட்டுமில்லை. தர்மிஷ்டனும் கூட. நிறைய தான தர்மம் செய்தவன்.

ரெண்டாவதாக ஒரு பிரபல மருத்துவன். ரொம்ப காசு எதிர்பார்க்காமல் நிறைய பேருக்கு நோய் தீர வைத்தியம் பண்ணியவன்.   பல  உயிர்களில் சில உயிர்களை காசு வாங்கமலேயே காப்பாற்றினவன்.

மூன்றாவதாக ஒரு நீதிபதி. வயதான. ரொம்ப நீதி  நேர்மை  நியாயமான ஜட்ஜ்.  அவர் நீதிகள் எல்லோராலும் பாராட்டப்பட்டவை. 

சரி யார் அந்த நாலாவது ஆசாமி?    என்று ராஜா கூர்ந்து பார்த்தபோது அவன் கண்ணில் பட்டது  ஆண்  இல்லை. ஒரு கிழவி. கிழிசல் புடவை. ஆபரணம் ஒன்றும் இல்லை. இவளையா நமது தேசத்தின் சிறந்த பிரஜை என்று தேர்வு செய்வது? அப்படி என்ன சிறப்பு இவளிடம் மற்ற மூன்று பிரமாதமான ஆட்களை விட.? அவள் கண்களில் தயை, கருணை, புன்சிரிப்பு. பாசம் பொங்கி வழிந்தது. ஏதோ ஒரு தன்னம்பிக்கை !
ராஜா தீர விசாரித்து என்ன தெரிந்து கொண்டான் தெரியுமா?அந்த கிழவி தான் முதல் மூன்றுபேரின்  பள்ளிக்கூட  டீச்சர். ஆசிரியையாக அவர்களை நல்ல முறையில் வளர்ச்சி செய்தவள். காரணமாக இருந்தவள். இந்த  கதை  5ம் தேதி செப்டம்பர்  ஆசிரியர் தினம் அன்று எனக்கு எழுத தோன்றியது. ஆனால்  அன்று வெளியே எங்கோ சென்று இரவு நேரம் கழித்து திரும்பினேன். இன்று எழுதுகிறேன். ஆசிரியர்களுக்கு  ஒரு நாள் மட்டும் எப்படி போதும்? ஒவ்வொருநாளும்  நாம் நினைத்து  வணங்க தக்கவர்களாச்சே!

No comments:

Post a Comment