Tuesday, September 24, 2024

Kulachirai nayanar spiritual story

அறுபத்து மூவர்  -    நங்கநல்லூர்  J K  SIVAN
குலச்சிறையார்

சைவ சமயத்தில்  அறுபத்து மூன்று  சிவ  பக்தர்களை  நாயன்மார்கள் என்று  சிலை வைத்து  சிவாலயங்களில்  வழிபடுகிறோம். ஆனால்  எண்ணற்றோர்  இன்னும் சிலையாகாமல், அறியப்படாமல் இருக்கிறார்களோ  என்று தோன்றுகிறது.  ஏனென்றால்  அறுபத்து மூவர்  வாழ்க்கையை படிக்கும்போது அவர்களை போலவே  சிவ  சிந்தனையோடு பக்தி கலந்து மற்றோருக்கு உள்ளும்  புறமும் அன்போடு  சேவை செய்பவர்களை இன்றும் பார்க்கிறோம்.

இன்று நாம் அறியப்போவது  அறுபத்து மூவர்களில் ஒருவரான குலச்சிறையார்  பற்றி. அதற்கு முன் அவர் பிறந்து வாழ்ந்த  அவர் ஊர் பற்றி அறியவேண்டாமா? அது தான்  மணல்மேல்குடி.  புதுக்கோட்டை மாவட்டத்தில், பட்டுக்கோட்டை -ராமநாதபுரம் வழியில்  ஒரு அழகிய சிறு கிராமம்.   அறந்தாங்கியிலிருந்து 30 கிமீ.    கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ளது. பட்டுக்கோட்டை மற்றும் அறந்தாங்கியிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன  பாண்டி நாட்டில் வளமை மிகுந்த செழிப்பான  ஊர்.அதில் ஒரு பழைய சிவன் கோவில். சிவன் பெயர்  ஜெகதீஸ்வரர். அம்பாள்  உலகை காக்கும் நாயகி. ஜெகத்ரக்ஷகி. இந்த கோயிலைக் காட்டியவர்  மாணிக்க வாசகர்  என்கிறார்கள்.
இந்த ஊரில்  பிறந்த  குலச்சிறையாரை  சுந்தர மூர்த்தி  நாயனார்   பெரு நம்பி எனப்  போற்றுகிறார். சிவபக்தியில் இணையற்றவர்.  எத்தனை பேர் வந்தாலும் எப்படியாவது அவர்களை அழைத்து உபசரித்து பாதத்தில்  விழுந்து நமஸ்கரித்து  தம்மால் ஆன  சேவைகளை செய்பவர்.   அந்த ஊரில்  யாரவது  உடம்பு பூரா  விபூதி பூசிக்கொண்டு உடல் நிறைய ருத்ராக்ஷம் அணிந்து கொண்டு காணப்பட்டால்  ''உங்கள் பெயர் தானே குலச்சிறையார்?''  என்று தாராளமாக கேட்கலாம்.
பாண்டிய ராஜா  நின்றசீர் நெடுமாறன் சைவ சமயத்திலிருந்து  சமண மதத்திற்கு தாவி அதில் ஈடுபாடுடையவனானதில்  அரசி  மங்கையற்கரசிக்கும்  மந்திரி  குலச்சிறையாருக்கும்  வருத்தம். பாண்டியன்  குலச்சிறையாரை முதலமைச்சராக நியமித்திருந்தான்.. 
ஒரு நாள்  குலச்சிறையாருக்கு  ஒரு அருமையான செய்தி காதில் விழுந்தது.  அருகே வேதாரண்யம்  எனும் திருமறைக் காட்டு சிவன்கோவிலுக்கு  ஞான சம்பந்தர் வருகிறார் என்ற சேதி தான் அது.  ராஜாவின் மனைவி பாண்டிமாதேவிக்கு சிவபக்தி அதிகம்.   அவளோடு கலந்து ஆலோசித்து  ராணி  மங்கியர்க்கரசி  குலச்சிறையாரோடும் சிவபக்தர்களோடும்  திருஞானசம்பந்தரை  வரவேற்க சென்றார்.    சம்பந்தர் வரும் முன்பே  பாண்டி நாட்டில் சுப சகுனங்கள்  தோன்ற ஆரம்பித்தன. 
பாண்டிமா தேவியுடன் சென்ற குலச்சிறையார்,   எதிரே  அடியவர் சூழ வரும் ஆளுடைய பிள்ளையினைக் கண்டார்.  ஓம் நமசிவாய சப்தம் செவிக்கினிமையாக  எங்கும் எதிரொலித்தது.   இறு கரம் சிரமேற் கூப்பி  அங்கேயே  குலச்சிறையார் தரையில்  வீழ்ந்து வணங்கினார். 
ஞான சம்பந்தர் முத்துப் பல்லக்கிலிருந்து இறங்கி வந்து தம் கைமலர்களால்  குலச்சிறையாரை வாரி  அணைத்தெடுத்தார். கண்களில் கண்ணீர் மல்க  குலச்சிறையார்  அவரைக்  கை  தொழுது  நின்றார்.   உணர்ச்சி மேலீட்டால்  நா  தழு தழுத்தது.
எங்கும் சமணரது ஆதிக்கம் காணப்பட்ட காலம். ஏதேனும் தீங்கு வருமோ  சிவனடியார்க்கு என்று குலச்சிறையார்  அஞ்சினார். அப்படி ஏதேனும் நீரினால் தனது உயிரைக் கொடுத்தாவது  சம்பந்தரையும் மற்ற சிவனடியார்களையும்  காப்பது என்ற முடிவெடுத்தார். 
அவர் பயப்பட்டது பொய்யாக வில்லை.  சமணர்கள்  சம்பந்தர்  தங்கியிருந்த மடத்துக்கு  ஒரு இரவு  தீவைத்து கொளுத்தி னார்கள். ஞான சம்பந்தர்  இதை அறிந்ததும்   சொக்கேசனை வேண்டிப்  பாடினார்.   அத்தனை தீயும் அணைந்து உஷ்ணமான  வெப்பு நோயாக மாறி  சமணரை ஆதரித்த மதுரை பாண்டியன் வயிற்றில் குடி புகுந்தது.  வலியால் துடித்த பாண்டியன் தான் மதித்து வணங்கிய  சமண முனிவர்களை அழைத்து  வியாதியை குணப்படுத்த வேண்டினான். எவ்வளவோ செய்து பார்த்தும் சமணர்களின்  மணி மந்திர ஒளஷதம்  மன்னன் குறையை தீர்க்க முடியவில்லை.  குலச்சிறையாரும்  பாண்டிமாதேவியும்  அரசனிடம் எடுத்துக் கூறி  மதுரை வந்திருக்கும்  சம்பந்தரை சென்று வணங்கினால் குணமாகும்  என்று சொல்ல அவர்கள்  ஆலோசனைப்படி திருஞானசம்பந்தரை அழைத்து வருமாறு பாண்டிமாதேவியாரையும் குலச்சிறையாரையும் அனுப்பினான்  பாண்டியன். 
பாண்டிமாதேவி  பல்லக்கில்  வர குதிரை மீதேறி சென்ற்  குலச்சிறையார் சம்பந்தப்பிள்ளையார் திருமடத்தை அடைந்தார். அங்கே ஞானத்தின் திருவுருவாய் நின்ற ஞானசம்பந்தரைக் கண்டார். ஆனந்தம் கொண்டார். சம்பந்தர்  திருவடியில் விழுந்து  வணங்கினார் . மன்னனின்  நோய் உபாதையைப் பற்றி  சொன்னார்.
சம்பந்தர்  பயப்படவேண்டாம் என்று ஆறுதல் அளித்தார்.  பல்லக்கில் ஏறி  ராஜா அரண்மனைக்கு வந்தார். படுக்கை
யில்  துடித்துக்கொண்டிருந்த பாண்டியன் தலைமாட்டில் ஒரு ஆசனத்தில் அமர்ந்தார். இறைவன் பரமேஸ்வரன் மேல் பாடியவாறு பாண்டியனின் வயிற்றில்   விபூதி பூசி வேண்டினார்.   அடுத்த கணமே  பாண்டியன் வியாதி நீங்கியது. பாண்டியன் மீண்டும் சைவனானான். 
திருநீறணிந்த பாண்டிய மன்னன் பாண்டிமாதேவியாருடனும் குலச்சிறையாருடனும்  சம்பந்தரை அழைத்துச்சென்று மதுரை சொக்கேசனை சென்று வணங்கினான்.சம்பந்தர்  மதுரை எனும்  ஆலவாயில் அமர்ந்திருந்த நாளெல்லாம் நாடொறும் சென்று அவரைப் போற்றி வேண்டும் பணியெல்லாம் செய்தார்.
குலச்சிறையார் பிறந்து  வாழ்ந்த  மணல்மேல் குடி கிராமத்தை  ராமாயணம் குறிப்பிடுகிறது.  மணல்மேல்குடி சிவாலயம்   மூன்று நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி உள்ளது. ஜெகதீஸ்வரர்  கிழக்கு நோக்கி  லிங்க வடிவில் வீற்றிருக்கிறார்.அம்பாள்  தெற்கு நோக்கிய தனி சன்னதியில் வீற்றிருக்கிறாள். கோவில் வளாகத்தில் விநாயகர், முருகன், நவகிரகங்கள், தட்சிணாமூர்த்தி மற்றும் குலச்சிறை நாயனார் சன்னதிகள் உள்ளன.   கோயிலில் மகிழம்பூ மரம், அரச மரம், வில்வ மரம் ஆகிய மரங்கள் உள்ளன. சிவனுக்கு பிரதோஷ விழா சிறப்பாக இங்கு நடைபெறுகிறது. இங்கு வழிபடும்போது திருமணத்தடை நீங்கும் என்றும், குழந்தை வரம் கிட்டும் என்றும் கூறுகின்றனர்.  இங்கு குலச்சிறை நாயனார், திருஞானசம்பந்தர், நின்றசீர் நெடுமாறர், மங்கையர்க்கரசியார் ஆகியோர் தனிச் சன்னதிகளில் கொடிக் கம்பத்திற்கு அருகில் உள்ளனர்.
குலச்சிறையார்  ஞானசம்பந்தரை  பல  ஆலயங்களுக்கு அழைத்துச் சென்றதுடன்  தமது ஊரான மணமேற்குடிக்கும் விஜயம் செய்ய வைத்தார். பலகாலம் சிவத்தொண்டில் ஈடுபட்டு  வயது முதிர்ந்து  குலச்சிறையார் கைலாச பதவி அடைந்தார்.

No comments:

Post a Comment