Wednesday, August 14, 2024

Story of Kili chozhan - Srirangam temple

*கிளி காட்டிய ரங்கன்!*

ஸ்ரீரங்கநாதருக்கு மாலையைப்போல சுற்றி ஓடும் நதி காவிரி! ஒருசமயம், காவிரியில் பெரும் வெள்ளம் வந்து ஸ்ரீரங்கம் மூழ்கியது.

அந்த காலத்தில் ரங்கநாதர் ஆலயம் இப்போது போல பெரிய கோவில் அல்ல. கர்ப்பகிரஹமும், முன்னால் ஒரு சிறிய காயத்ரி மண்டபம் மட்டுமே கொண்டிருந்த கோவில். வெள்ளத்தில் அது  மூழ்கி, மண்மேட்டின் கீழ்ப்புறம் அகப்பட்டுக் கொண்டு அதன் மேல் மரம், செடி, கொடிகள் பரந்து உருத்தெரியாமல் இருந்தது.

சோழநாட்டை ஆண்ட "தர்மவர்மன்" என்ற மன்னன்  கோவிலைக் கண்டுபிடிக்க   அப்பகுதிகளில் பல காலம் அலைந்து திரிந்தான்.

வெள்ளம் வருவதற்கு முன் கோவிலில் ஒரு கிளி இருந்தது. அது தினந்தோறும் பெருமாள் திருவாராதனைகளை உன்னிப்பாக பார்ப்பது/கேட்பது வழக்கம்.

வெள்ளம் வந்தது, கோவிலை மண் மூடியது அனைத்தையும் அந்தக் கிளி கவனித்துக் கொண்டிருந்தது. சொன்னதை திரும்பச் சொல்லும் கிளிப்பிள்ளையாதலால், அங்கே ஒரு மரக்கிளையில் அமர்ந்து, முன்னால் தாம் திருவாராதனத்தின் போது கேட்ட ஸ்லோகங்களை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருந்தது அந்தக் கிளி!

ஒருநாள் கோவிலைக் கண்டுபிடிக்க தர்மவர்மன் அங்கு வர, வந்த களைப்பில் அந்த மரத்தடியில் சற்றே ஓய்வெடுத்தான். மேலே கிளையில் அமர்ந்திருந்த கிளி ஒரு ஸ்லோகத்தை திரும்ப திரும்ப சொல்வதைக் கேட்டு ஆச்சரியப்பட்டான்.     

*வைகுண்டத்திற்கு எப்படி விரஜை என்ற நதியோ, அப்படியே ஸ்ரீரங்கத்துக்குக் காவிரி!* 
*ஸ்ரீரங்கமே பரமபதமான வைகுண்டம்!*
*தேவர்களே இங்கு பிரணவாஹார விமானமாக வீற்றிருக்கிறார்கள்!*
*அதன் கலசங்களே வேதங்கள்!*
*ஸ்ரீரங்கநாதனே இங்கு பிரணவ தத்துவங்களை வெளிப்படுத்தும் பரம்பொருள்!*
-என்பதே கிளி சொன்ன ஸ்லோகத்தின் பொருள்!

"காவேரி  விருஜா ஸேயம்
வைகுண்டம் ரங்கமந்திரம்;
ஸ வாஸுதேவோ ரெங்கேசஹா
ப்ரத்யக்ஷம் பரமம்பதம்;
விமானம் ப்ரணவாஹாரம்
வேதஷ்ருங்கம் மஹாத்புதம்;
ஸ்ரீரங்கசாயி! பகவான் ப்ரணவார்த்த ப்ராகாசக:|
-என்பது அந்த ஸ்லோகம்!

பல காலமாக கோவிலைத் தேடிக்கொண்டிருந்த மன்னன், கிளி சொன்ன ஸ்லோகத்தைக் கேட்டவுடன் அந்த இடத்தில் கோவில் இருப்பதை அறிந்து கொண்டான். உடனடியாக ஆட்களை வரவழைத்து அங்கே தோண்ட "ஸ்ரீரங்கநாதர்" வெளிப்பட்டார்!

இதனால் அந்தச் சோழன் "கிளிச் சோழன்" என்று பெயர் பெற்றான்!
🙏🙏

No comments:

Post a Comment