Saturday, August 10, 2024

Nadha munigal

"நம: அசிந்த்ய அற்புத அக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராசயே|
நாதாய முநயே அகாதய பகவத் பக்திஸிந்தவே||"

*(எப்போதும் பகவத் தியானத்தில் ஆழ்ந்து, பக்திக்கு கடலானவரும்,* *அளப்பரிய ஞானம், பரம வைராக்யம் ஆகியவை நிறைந்தவருமான*
*ஶ்ரீமந் நாதமுனிகளை நமஸ்கரிக்கிறேன்!*)

ஆனி மாதம், அனுஷ நக்ஷத்திரத்தில், கடலூர் மாவட்டம், வீரநாராயணபுரம் (இன்றைய காட்டுமன்னார் கோவில்) என்ற சிற்றூரில் ஈஸ்வர பட்டருக்கு குமாரராக ரங்கநாதன் என்ற இயற்பெயருடன் அவதரித்தவர்!

ஆசார்ய குருபரம்பரையில், பெருமாள்-தாயார்-ஆழ்வாருக்கு பிறகு முதன்மையானவர் ஶ்ரீமந் நாதமுனிகள்!

இவர் முனிவர் போன்று யோக மார்க்கத்தில் திகழ்ந்ததால் *முனி* என்று அழைக்க, அதுவே நாளடைவில் *நாதமுனி* ஆனது. இவர் அங்குள்ள வீரநாராயணப் பெருமாள் கோயிலில் கைங்கர்யம் செய்து வந்தார்.  

ஒரு நாள் கோவிலுக்கு சேவிக்க வந்த சில ஸ்ரீவைஷ்ணவர்கள், பெருமாள் முன்பாக "ஆராவமுதே அடியேனுடலம், நின்பாலன்பாயே" என்று தொடங்கி ...
"குருகூர் சடகோபன் குழலின் மலியச் சொன்ன ஓராயிரத்து இப்பத்தும்" 
என்று முடியும் பத்து பாசுரங்களை சேவித்தனர்! 

இதைக் கேட்ட  நாதமுனிகள், ஆயிரத்துள் பத்து பாசுரங்களை கேட்டு உகந்தேன். மற்ற பாசுரங்களையும் சேவிக்குமாறு அவர்களை பிரார்த்திக்க, அதற்கு அவர்கள் எங்களுக்கு இந்த பத்து பாசுரங்கள் தவிர, மற்ற பாசுரங்கள் எதுவும் தெரியாது என்றனர்.

ஆர்வத்தால் உந்தப்பட்ட நாதமுனிகள், பாசுரத்தில் 'குருகூர்' என்றிருந்ததால், குருகூரை (ஆழ்வார் திருநகரி) அலைந்து தேடிச் சென்றார். அங்கும் யாருக்கும் ஒன்றும் தெரியாததால், மதுரகவி வம்சத்தில் வந்த வயதானவர் ஒருவர் திருக்கோலூரில் இருப்பதைக் கண்டு, அவரை விசாரிக்க அங்கு சென்றார்!

அங்கு அவரைக் கேட்டபோது, *மதுரகவி ஆழ்வாரின் "கண்ணிநுண் சிறுத்தாம்பு" பாசுரங்களை குருகூர் திருப்புளிய மரத்தடியில் சேவை சாதிக்கும் நம்மாழ்வார் முன் 12000 முறை அனுஷ்டித்தால், ஆழ்வார் பிரத்யட்சமாவார் என்றார்!*

உடனே நாதமுனிகள் அங்கு சென்று பக்தியுடன் நம்மாழ்வார் முன் 12000 முறை அதை சேவிக்க, இவருடைய வைராக்யத்தில் நெகிழ்ந்த ஆழ்வார் பிரத்யட்சமாகி, *அவரது பாசுரங்கள் தவிர மற்ற ஆழ்வார்கள் அருளிய பாசுரங்களையும் சேர்த்து அருளினார்!*

அதுமட்டுமின்றி, நாதமுனிகளுக்கு ஆழ்வார், "பொலிக! பொலிக!",
"கண்டோம்; கண்ணுக்கினியன கண்டோம்"
என்ற திருவாய்மொழி பாசரங்களை சேவிக்கும்போது, *இவை பின்னாளில் அவதரிக்கப் போகும் "பவிஷ்யதாசார்யர்"*
*(ஸ்ரீராமாநுஜர்) - அவதரிப்பதைக் கொண்டாடும் பாசுரங்கள் என்று அருளினார்!*
 
பெருவியப்பும் உவகையும் அடைந்த நாதமுனிகள், ஆழ்வாரிடம் பவிஷ்யதாசார்யர் விக்ரஹம் பிரஸாதிக்கும்படி வேண்டி, தன்னுடன் அந்த விக்ரஹத்தையும், நாலாயிரம் பாசுரங்களையும், காட்டுமன்னார் கோவிலுக்கு எடுத்து சென்று அங்கு தினமும் திருவாராதனம் செய்து வந்தார். பவிஷ்யதாசார்யரின் அந்த திருமேனியே *தன்னை உயர்த்திய திருமேனி* என்று அருள்பாலிக்கப்பட்டது!

*பிறகு இந்த 4000 பாசுரங்களையும், ஆயிரம் ஆயிரமாய் தொகுத்து அதை தாளத்துடன் சேவிக்க தனது மருமாக்களுக்கு கற்ப்பித்தார்! இவர்களின் வழித்தோன்றல்களே இன்றைய "அரையர் ஸ்வாமிகள்"!*

*ஶ்ரீமந் நாதமுனிகள் இல்லையேல், இன்று நாலாயிர திவ்யபிரபந்தம் நமக்கு கிடைத்திருக்க வாய்ப்பில்லை!*

No comments:

Post a Comment