Thursday, April 18, 2024

Surrender - saranagati

சரணாகதி அப்படிங்கறதுக்கு ஸ்ரீ வைஷ்ணவத்துல ஒரு ஒசந்த இடம் இருக்கு. சரணாகதி பல வகைப்படறது. ஆ்சார்ய முகேன அநுக்ரஹம் ஆகற சரணாகதிக்கு வலு ஜாஸ்தி. ஏன்னா அவர் எந்த ஜீவன் சரணாகதி ப்ராப்த்தமாறதுக்காக அவரிடம் போய் நிக்கறதோ, அந்த ஜீவாத்மாவுக்கு,  பெருமாள் கிட்டே போராடி அதை வாங்கித் தர்றார். சில பேர் ஸ்வயம் ஆ்சார்யாளா இருப்பா. 

ஆபத் சரணாகதின்னு ஒரு வகை உண்டு. வாழற காலம் முழுக்க ஒரு ஆ்சார்யனை ஆச்ரயித்து சரணாகதி பண்ணிக்கனும்னு தோணலேன்னு வெச்சுப்போம். திடீர்னு உடம்புக்கு முடியாம போயிடறது. தேஹஸ்திதி மோசமாறது. நினைவு நீச்சு இல்லாம போயிடறது. இன்னும் கொஞ்ச நேரம் தான் தாங்கும்னு மருத்துவர்கள் சொல்லிடறா. விஷயம் தெரிஞ்சவா இல்லே ஆத்துக்கு பெரியவா அங்கே இருந்தா மொதல்ல கேக்கற கேள்வி 'ப்ரபத்தி ஆயிடுத்தா?' அப்படிங்கறது தான். சுத்தி வர இருக்கறவா இல்லேன்னு சொன்னாலோ தெரியலேன்னு சொன்னாலோ, முதல் வேலையா ஆசார்யனை தொடர்பு கொண்டு (அது நடு ராத்ரியா இருந்தாலும்) விஷயத்தை சொல்லி, இவாளோட பேர் கோத்ரத்தை எல்லாம் சொல்லி, சரணாகதி அநுக்ரஹம் ஆகப் பண்ணுவா. இப்படி அவசர காலங்கள்ல பண்ற சரணாகதிக்கு பேர் தான் ஆபத் சரணாகதி. எவ்ளோ கருணை அந்தப் பரமனுக்கு. சுய புத்தியோட பிரபத்தி (சரணாகதி) பண்ணிக்கலேன்னா கூட, அவனுக்கும் தன்னோட திருவடி ப்ராப்தமாகி அவன் கரை சேரணும்னு என்னவெல்லாம் ஏற்பாடு பண்ணியிருக்கான். (Relaxing the rules to the maximum possible  extent).  

அவன் திருவடிகளை அடைஞ்சு திரும்பி இங்கே வந்து விழாம இருக்க சரணாகதி ஒண்ணு தான் மார்க்கம். இதை ராமாயணத்துல ஆரம்பம் முதல் கடைசி வரை ஸேவிக்கலாம். சரணாகதி (ப்ரபத்தி) பண்ணிக்கறதுனால ஏற்படற லாபங்கள் என்னன்னு ராமாயணத்து சரணாகதிகள் மூலமா பாப்போம். 

ஒண்ணு - முதல்ல பாலகாண்டம். இதுல தேவர்கள் எல்லாரும் பெருமாளண்ட சரணாகதின்னு வர்றா. நம்மளால முடியாத ஒண்ணையும் நடத்தித் தர்றவன் அந்த ஸ்ரீமன் நாராயணன். இந்த வாழ்க்கைல நம்மளால ஸ்வதந்த்ரமா செய்யக் கூடியதுன்னு ஏதாவது ஒண்ணு இருக்கா? 

ரெண்டு - அடுத்ததா, த்ரிசங்கு விஷ்வாமித்ரரிடம் சரணடைதல். எப்பேற்பட்டவாளும் சரணடையலாம். அதற்கான ஒசந்த பலனை அடையலாம் அப்டிங்கறதுக்கு இந்த சரணாகதி உதாரணம். இந்தச் சரணாகதியானது த்ரிசங்குவிற்கு தனியா ஒரு ஸ்வர்கத்தையே அநுக்ரஹம் பண்ணித்து. 

மூணு - அயோத்யா காண்டத்தும் போது, இளைய பெருமாளான லக்ஷ்மணன் ராமன் சீதையிடத்தே சரணாகதி அடைந்தது. இது அவனுக்கு அவன் ஆசைப்பட்ட கைங்கர்ய பலனை (வனவாசத்தின் போது) அநுக்ரஹம் பண்ணித்து 

நாலு - பரதனோட சரணாகதி. பெருமாளையே திரும்பி கூப்பிட்டுண்டு வந்து ராஜ்ய பரிபாலனம் பண்ண வைக்கணும்னு சரணாகதி பண்ணின்டான். நடந்தது வேற ஒண்ணு. அவனோட சரணாகதிக்கு எவ்ளோ வலுவு இருந்துதுன்னா, அதுலே எவ்ளோ ஸத்யமும் த்ருடமும் இருந்ததுன்னா, பெருமாள் ராஜ்ய பரிபாலனத்துக்காக திரும்பி வரல்லே. அவன் கேட்டது கிடைக்கல்லே. ஆனா அவன் கேட்டதை விட ஒசத்தியான பாக்யம் அவனுக்கு ஆப்டது. பெருமாளோட பாதுகைகளை தன்னோட சிரஸ்ஸுல ஏந்திண்டு வர பாக்யம். எத்தனைப் பேருக்கு இது ஆப்டும். இது தான் சரணாகதியோட மகிமை. அவனுக்குத் தெரியும் நம்மளுக்கு என்ன தேவை. எது நம்மளுக்கு ஒசத்தின்னு. நம்மளுக்கு தெரியாததும் அவனுக்குத் தெரியும். எப்போ தரணுமோ அப்போ அதை அவன் நமக்கு அநுக்ரஹம் பண்ணுவான். அந்த த்ருடம் நம்மளுக்கு இருக்கணும். அப்படி இருக்கற அந்த த்ருடத்துக்குப் பேர் தான் சரணாகதி. 

அஞ்சு - முனிவர்கள் எல்லாரும் அரக்கர்கள் படுத்தின கொடுமைகள்லேர்ந்து தம்மை ரக்ஷிக்க வேண்டி ஆரண்ய காண்டத்தில் ராமனிடத்தே பண்ணின சரணாகதி. அவன் திருவடிகள்ல "எங்களுக்கு வேறொரு புகல் இல்லை" அப்படின்னு அவா விழுந்தா. அந்த சரணாகத வத்சலன் அரக்கர்களை வதம் பண்ணி அவாளைக் காப்பாத்தினான். "எங்களுக்கு வேறொரு புகல் இல்லை" அப்படின்னு உணர்றதை "அநந்யரக்ஷதை"  அப்படின்னு சொல்லுவா. குழந்தை ஒண்ணு அதோட அம்மாவோட இடுப்புல உக்காந்துண்டிருக்கு. அது அதோட அம்மாவை அழுத்திப் பிடிக்கற அந்தப் பிடிலேர்ந்தே அம்மாவானவள் அந்தக் குழந்தையின் பயத்தைப் புரிஞ்சிப்பா.  "பயப்படாதே. அம்மா இருக்கேன்" அப்படின்னு சொல்ற விதமா தானும் குழந்தையை அழுத்திப் பிடிச்சுப்பா. அவள் தான் இதைப் பிடிச்சுக்கணும் வேறாருமில்லே அப்படின்னு குழந்தை தன்னோட செய்கை மூலமா அவளுக்குக் காட்றதுனால அவளும் அந்தக் குழந்தையை கெட்டியா பிடிச்சுப்பா. இது தான் "அநந்யரக்ஷதை". நாமெல்லாரும் அவனோட குழந்தைகள். அவன் தான் நம்ம எல்லார்க்கும் தாயும் தகப்பனுமானவன். இதை உணர்றது தான் சரணாகதி - ப்ரபத்தி - பரந்யாசம். 

ஆறு - சுக்ரீவன் கிஷ்கிந்தா காண்டத்திலே இளைய பெறுமானாம் லக்ஷ்மணனிடத்தே பண்ணிண்ட சரணாகதி. ராமனிடத்தில் சுக்ரீவன் அபச்சாரப்பட்டுட்டான். அதை உணர்ந்துடறான். லக்ஷ்மணனிடத்தே போய் அபயம்னு சரணாகதி பண்ணின்டுன்றான். ராமனும் அவனை மன்னிச்சு அபயப்ரதானம்  பண்றான். பெருமாளிடம் நேரே சென்று சரணாகதி பண்ணிக்கற அளவுக்கு நம்மளுக்கெல்லாம் ஞானம் இல்லே. சில சமயங்களில் 'பெருமாளண்ட நியம நிஷ்ட்டைகள் தப்பு தப்பா பண்ணி அபச்சார பட்டுடுவமோன்னு பயம் உண்டாறது. அப்போல்லாம் நம்மளை கரை சேக்கற தோணியா ப்ரத்யக்ஷமா நம்மளோட கண்ணு முன்னாலே வர்றது ஆசார்யன் தான். ஆ்சார்ய முகேன பண்ணிக்கற ப்ரபத்திக்கு அவ்ளோ ஏத்தம் உண்டு. அதை அந்த பரமன் பரிபூர்ணமா ஏத்துக்கறான். இதனால தான் பகவானிடம் அபச்சாரப்பட்டாலும்  பாகவதாளிடத்தே அபச்சாரப்படக் கூடாதுன்னுவா. 

ஏழு - சுந்தர காண்டத்தில் திரிசடை தாயாரிடத்தே (சீதாப் பிரட்டி) பண்ணிண்ட சரணாகதி. திரிசடை எவ்ளோ ஒசத்தியானவள் அப்படின்னா, அவள் தாயாரிடத்தே தனக்கு மட்டும் சரணாகதி பண்ணிக்கலை. அங்கே இருந்த அரக்கியர் அனைவருக்கும் சேத்து தான் பண்ணிண்டா. அவள் அப்படி அனைவருக்கும் சேத்து சரணாகதி பண்ணிண்டப்போ கூட, சரணாகதியோட ஒசத்தியை அறியாத அந்த அரக்கிகள், "உம்" கூட கொட்டவில்லையாம். சரணாகதி தங்களுக்கு வேணாம்னு அவா சொல்லாததை கருத்தில் கொண்ட தாயாரானவள், அந்த ஒரு விஷயத்துக்காக எல்லாருக்கும் சேத்து அபயம் அநுக்ரஹம் பண்ணினாளாம். அதனால தான் ஹனுமன் லங்கையையே அக்னிக்கு இரையாக்கினப்போ அந்த அரக்கியருக்கு ஒண்ணும் ஆகலை. தாயாரோட கருணையினால. 

எட்டு - விபீஷண சரணாகதி யுத்த காண்டத்திலே. ரொம்ப ஒசத்தியான சரணாகதி. நம்மளோட ஆசார்யாள் நெறய்ய பேர் விபீஷண சரணாகதியை ரொம்ப ஒசத்தியா கொண்டாடியிருக்கா. சரணாகதியோட லக்ஷணங்கள் என்ன. யார் யாரிடத்தே சரணாகதி அடையலாம் அப்படின்னு ஒரு ஸமுத்ரமா பேசப்படறது விபீஷண சரணாகதி. 

இங்கே நாமோ ஸேவிச்சிருக்க சரணாகதிகள் இந்த எட்டு தான் அப்படின்னாலும், ராமாயணத்துலே இன்னும் நெறய்ய சரணாகதி ப்ரகரணங்கள் (situations) இருக்கு. 

ந்ருசிம்மாவதாரம். ஒரே ஒரு சரணாகதி தான். ப்ரஹ்லாதனோட சரணாகதி.  த்ருடமான, எந்த விதமான ஸம்ஸயங்களும் (doubts) இல்லாத பரிபூர்ணமான சரணாகதி. ஸ்ரீமன் நாராயணன் தான் ஸ
ஶ்ருஷ்டிச்சான். தான் ஶ்ருஷ்டிச்ச எல்லாத்தயும் ஸ்ரீமன் நாராயணன் தான் போஷிக்கறான். திரும்பி நாமெல்லாம் சென்றடைய வேண்டிய இடம் ஸ்ரீமன் நாராயணனோட திருவடிகள் ஒண்ணு மட்டும் தான் அப்டிங்கறதுலே வைராக்யத்தோட நின்னான் ப்ரஹ்லாதன். இந்தத் தெளிஞ்ச ஞானம் தந்த ப்ரஹ்லாதனோட உறுதி அந்த ஸ்ரீமன் நாராயணனை கட்டுண்ணப் பண்ணித்து. மாயம் பண்ணி பெரு மாயவியான அவனையே இழுத்துண்டு வந்தது. வேஷம் போட வெச்சது. திருப்பாற்கடல்ல சாந்த சொரூபியா ஸயனிச்சின்றுக்க அவனை உக்ரம் கொள்ளப் பண்ணித்து. த்வம்சம் பண்ண வெச்சது. அப்போ ப்ரஹ்லாதாழ்வான் பண்ணின சரணாகதி எவ்ளோ ஒசத்தியானதா இருக்கணும். அப்போ சரணாகதிங்கற விஷயம் எவ்ளோ ஒசத்தியானதா இருக்கணும். 

என்னப்பனே ந்ருஸிம்ஹா... ந்ருஸிம்ஹா... உன் தாள் கண்டு கொண்டு என் சிரம் மேல் சூடிக் கொண்டேன். சரணாகதோஸ்மி. காப்பாத்து

No comments:

Post a Comment