Tuesday, April 9, 2024

Management & Shastras - HH Bharati teertha Maha Swamigal

*ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்*

*சாஸ்திரங்களும் நிர்வகிப்பும்*

ஒரு ஸம்ஸ்தையை நிர்வகிப்பவன் மிக சமர்த்தனாக இருக்கவேண்டும். சாமர்த்தியம் என்று சொன்னால் ஸம்ஸ்தையை முன்னுக்கு கொண்டு போகக் கூடிய சக்தி என்று பொருள். அதற்கு விசேஷமான உத்ஸாகமும் தைரியமும் வேண்டும். தன்னுடைய காரியத்தில் எத்தகைய வெற்றி கிடைத்தாலும் அதற்காக அகங்காரம் படக்கூடாது. 

அவன் மிகவும் தயாசாலியாக இருக்க வேண்டும். அவனுடைய ஸம்ஸ்தையில் வேலை செய்யும் ஆட்கள் அவன் விஷயத்தில் ரொம்பவும் ப்ரீதியுடன் இருக்க வேண்டும். 

அஜமஹாராஜா தன் ராஜ்ஜியத்தை பரிபாலனம் செய்யும் ரீதியாக வர்ணிப்பதாக மகாகவி காளிதாசர் ரகுவம்சத்தில் கூறியுள்ளார் 

அதாவது, அந்த ராஜ்யத்தில் பிரஜைகள் எல்லோரும் தான் ஒருவன் தான் ராஜாவின் பிரியத்துக்குரியவன் என்று நினைக்கும்படி அந்த ராஜாவின் சிறப்பு இருந்தது என்று பொருள். 

ஒரு நிர்வாகிக்கு இந்த குணம் இருந்தால், அந்த ஸம்ஸ்தை மிக நல்ல ரீதியில் நடக்கும். மேலும் நிர்வாகி தான் செய்ய வேண்டிய கடமையை ஒழுங்காக செய்தாலும் அதனால் வரும் பலன் ஈஸ்வரனுடைய சங்கல்பத்தை அனுசரித்தே ஏற்படும் என்று தீர்மானமான எண்ணம் நிர்வாகிக்கு இருக்கவேண்டும். 

மிக அழகாக பகவத்கீதை இந்த ஸ்லோகத்தில் சுருக்கமாகச் சொல்கிறது 

பற்றுகளிலிலிருந்து விடுபட்டவனும், "நான்" என்ற வார்த்தையையே அகற்றிவிட்டவனும், தொடர்வதற்கு உறுதியும் உற்சாகப்படுத்த சக்தியும் கொண்டவனும் வெற்றி தோல்வியால் சலனப்படாதவனுமான யஜமானனே ஸாத்விகன் என்று அழைக்கப்படுகிறான் 
 


நாம் புண்ணிய காரியங்களை மட்டும் செய்ய வேண்டும், பாபங்களை தவிர்க்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. இருந்தாலும் மனிதனுக்கு புண்ணிய காரியங்களை செய்வதை விட அதிகமாக பாவம் பண்ணுவது வழக்கம். தாங்கிக் கொள்ள மிக கஷ்டமான துயரங்களை பாபகாரியங்கள் கொண்டு வரும் என்று உறுதியான எண்ணம் மனதில் உதயம் ஆனவுடன் மனிதன் பாவங்களிடம் இருந்து விலகி விடுவான். 

இப்படிப்பட்ட எண்ணம் இருக்க வேண்டும் என்றால் ஒருவனுக்கு சாஸ்திரங்களில் நம்பிக்கை வேண்டும். இதுதான் சிரத்தை. தினசரி வாழ்க்கையில் கூட நாம் மற்றவருடைய அபிப்ராயத்தை ஒத்துக் கொள்ள வேண்டுமானால் அவருடைய வார்த்தைகளில் நம்பிக்கை வேண்டும். அதே மாதிரி சாஸ்திரங்களில் நம்பிக்கை இருந்தால்தான் நாம் பாவங்களை விட்டு விலக முடியும். 

நாம் நேரில் பார்த்திராத எதையும் நம்ப மாட்டோம் என்று பிடிவாதம் பிடிப்பது தவறு. உண்மையில் மற்றவர்களுடைய வார்த்தைகளில் நம்பிக்கை வைத்துக் கொண்டு நாம் பல காரியங்கள் செய்கிறோம் சாஸ்திரங்களின் கட்டளைகள் நம் நன்மைக்கே, ஒருபொழுதும் நம்மை ஏமாற்றுவதற்கு அல்ல. முக்காலத்தையும் பார்க்கக்கூடிய மகரிஷிகள் எது சரி எது தப்பு என்று நமக்கு உறுதியுடன் கூறுகிறார்கள். அவர்களுடைய வார்த்தைகளைப் பற்றி நாம் எவ்விதமான சந்தேகமும் கொள்ளக்கூடாது. 

இவ்வுலகத்தில் பாவ காரியங்களின் விளைவாக பெருந்துயரத்துள்ளாகும்பல மனிதர்களை நாம் பார்க்கிறோம். சாஸ்திரங்களில்  நம்பிக்கை வைக்காமல் நாம் பாவங்கள் செய்வோமானால் பெரும் கஷ்டங்களை வரவழைத்துக் கொள்கிறோம். 

ஆதலால் சாஸ்திரங்களின் சொற்களில் நம்பிக்கையை ஊன்றி வைத்து தன் வாழ்க்கையை நடத்துவது மனிதனுடைய முதன்மையான கடமை. 🌷🥀🌹🙏

No comments:

Post a Comment