Wednesday, April 10, 2024

laksha bhojanam- Periyavaa

சங்கராம்ருதம் - 833

 ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம்

 ஸ்ரீ பெரியவாளிடம் அபார பக்தி கொண்டிருந்தாள் அந்த ஏழைப் பாட்டி. கையிலிருந்த சொற்ப பணத்தைக் கொண்டு மிகவும் சிக்கனமாக வாழ்க்கை நடத்தி வந்தாள். மடி ஆசாரம் இவைகளை மிகவும் சிரத்தையோடு கடைபிடிப்பவள்.
தினமும் ஈஸ்வரரான பெரியவா குடிகொள்ளும் இடத்தை சுத்தம் செய்து கோலம் போடுவதும், தீபம் ஏற்றுவதும் தனக்குக் கிட்டிய பெரும்பாக்யமாக கருதி செய்துக் கொண்டிருந்தாள் அந்த மூதாட்டி.

இரண்டு புடவைக்குமேல் அந்த பாட்டியிடம் பொருள் ஒன்றுமில்லை.

ஒரு முறை ஸ்ரீ பெரியவாளை தரிசிக்க வந்த பக்தர் ஒருவர் அரிசிக் குறுணையும், வெல்லத்தையும் மகானுக்கு சமர்பித்துவிட்டு சென்றுவிட்டார். அவற்றை பயனுள்ளதாக விநியோகம் செய்ய வேண்டுமல்லவா! பாட்டிக்கு ஸ்ரீ பெரியவாளின் உத்தரவு கிட்டியது.

"இந்த குறுணையை எடுத்துண்டு போய் காஞ்சிபுரத்திலே உனக்கு கண்ணிலே படற எல்லா எறும்புப் புத்துக்களிலும் கொஞ்சம் கொஞ்சமா போட்டுட்டு வா. அரை ஆழாக்கு வீதமா போடு" என்று மாமுனிவரின் திருவாக்கு.

பாட்டியின் பக்தி சிரத்தை எல்லோரும் அறிந்ததே. காஞ்சிபுரம் முழுவதும் அலைந்து பல எறும்பு புற்றுகளை கண்டு பிடித்து அரிசிக் குறுணையும் வெல்லத்தையும் போட்டுவிட்டு வந்தாள். இதை மிக எளிதாக எழுத முடிகிறதென்றாலும், எறும்பு புற்று என்பது வீட்டில் எப்போதேனும் திடுதிப்பென்று தோன்றி மறையுமேயன்றி நாம் தேடி போனால் லகுவில் தென்படுமென்று சொல்லிவிட முடியாது.

ஸ்ரீ பெரியவாளின் அருளால் பாட்டி இந்த காரியத்தை முடித்து விட்டு வந்தபோது ஒரு பெரிய மாலைப் போல இருந்த திரிநூலையும், ஒரு டின் நிறைய எண்ணையையும் ஸ்ரீ பெரியவா பாட்டியிடம் காட்டி,"திரிநூலை நறுக்கி ஒவ்வொரு கோயிலுக்கா போய், எத்தனை விளக்குக்கு போட முடியுமோ, அத்தனை விளக்குக்கும் போடு. ஒவ்வொரு நாளும் ரெண்டு, மூணு கோயிலுக்குபோய் விளக்கேற்றினாலும் போதும்".

இப்படி ஒரு கட்டளை மறுபடியும் போட்டார்கள். பாட்டிக்கோ இதில் பரம சந்தோஷம். மிக சிரத்தையுடன் நாள்தோறும் சில கோயில்களென்று சென்று பரமேஸ்வரரின் கட்டளைப்படி சில நாட்களில் இந்த திருப்பணியை நிறைவேற்றினாள். இந்த செய்தியையும் ஸ்ரீ பெரியவாளிடம் சொன்னதில் பாட்டிக்கு பெருமகிழ்ச்சி.

நடமாடும் தெய்வமான ஸ்ரீ பெரியவாளின் ஒவ்வொரு திரு செயலுக்கும் ஏதோ ஒரு அர்த்தம் இருந்துள்ளதை அனைவரும் அறிந்திருக்க, பாட்டிக்கு பெரியவா இட்ட இந்த கட்டளைக்கு காரணம் இல்லாமல் போகுமா என்ன!

ஒரு நாள் ஒரு பெரிய பணக்கார மனுஷர் மடத்திற்கு படு ஆடம்பரமாக வந்தார். அவர் வந்த தோரணையும் அமர்களமான அவருடைய அகங்காரத்தை வெளிப்படையாக காட்டுவதாக இருந்தது.

தற்பெருமை மேலோங்கி தொனிக்க "நான் சகஸ்ர போஜனம் செஞ்சிட்டு வந்திருக்கேன். அதோடு லட்சதீபமும் போட்டுருக்கேன்" என்றார்.

ஸ்ரீ பெரியவாளுக்கு இவருடைய அகம்பாவம் தெரியாமல் போகவில்லை போலும். தர்ம கார்யங்கள் செய்துவிட்டு அவைகளை வெளியே பேசி கொள்வதே இரண்டாம் பட்சம் என்பதோடு அதை பெருமையாக சொல்லிக் கொள்வதில் புண்ணிய பலன்கள் வீணாகிவிடுகிறதல்லவா.

இதையே பவ்ய பாவத்தோடு, தாழ்மையோடு ஸ்ரீ பெரியவா திருசெவியில் விழவேண்டுமே என்ற ஆதங்கத்தோடு தெரிவிக்கப்பட்டிருந்தால் அதை அந்த பரம கருணாதயாளன் ஏற்று சிலாகிக்கும் காருண்யமே அலாதியாக இருக்கும்.

அகம்பாவமே மொத்த உருவமாக நின்ற அந்த தனவந்தரிடம் ஸ்ரீ பெரியவா ஏதோ பேச்சை மாற்றி பேசுவது போல ஆரம்பித்தார்.

"இங்கேயும் ஒரு பாட்டியிருக்கா. அந்த அம்மாளும் லட்சபோஜனம் செய்திருக்காள். பல லட்சதீபம் போட்டிருக்கா" என்றார் ஸ்ரீ பெரியவா அந்த பெரிய மனிதரிடம்.

வந்தவருக்கோ ஒரு மாதிரியாகிவிட்டது. தான் பெருமையாக சொல்வதை காதில் போட்டுக் கொள்ளாமல் ஸ்ரீ பெரியவா இன்னொரு பாட்டி இதே போல் செய்திருப்பதோ சொல்கிறாரே…அந்த பாட்டி தன்னைவிட ரொம்ப பணக்காரியோ என்றெல்லாம் எண்ணத் தொடங்கினார். கூடவே அப்படிப்பட்ட பாட்டி யார் என்பதை அறியும் ஆவலும் மனதில் தோன்றியது.

எதிரே நிற்கும் பக்தரின் மனதை படித்துவிட்ட பெருமான் அந்த பாட்டியை அழைத்து வருமாறு கூறினார்.

"இவள்தான் அந்த உத்தமமான காரியத்தை செய்தவள்" என்று ஏழை பாட்டியை ஸ்ரீ பெரியவா காட்டியபோது தனவந்தர் அயர்ந்து போனார். அழுக்கான கிழிசல் புடவையோடு நின்று கொண்டிருந்த பாட்டியை அந்த பெரிய மனிதர் ஆச்சரியமும் சந்தேகமுமாக நோக்கிக் கொண்டிருக்க, ஸ்ரீ பெரியவா சொல்லத் தொடங்கினார்.

"ஸர்வ ஜீவனிடத்திலும் பகவான் வியாபித்திருக்கார். பிரம்மாவில் ஆரம்பித்து பிபீலிகம் (எறும்பு) வரை பகவான் வாசம் செஞ்சுண்டிருக்கார். மனுஷ்யாளிடத்தும் இருக்கார்.

நீ ஆயிரம் பேருக்கு அன்னம் போட்டிருக்கிறாய், ஆனால் இந்த பாட்டியோ பல லட்சம் ஜீவன்களுக்கு ஆகாரம் போட்டிருக்காள்.

ஏதோ ஒரே ஒரு கோயிலுக்கு லட்சதீபம் போட நீ திரவியம் கொடுத்திருப்பே, லட்சம் தீபத்துக்கும் நீயே எண்ணெய் விட்டு திரி போட்டு தீபம் ஏற்ற உன்னால முடிஞ்சிருக்காது. இந்த பாட்டி பல கோயில்களுக்கு போய் பக்தி சிரத்தையாய் அகல் வாங்கி, எண்ணெய் ஊற்றி, திரி போட்டு தன் கையாலேயே தீபம் ஏற்றியிருக்காள்".

ஸ்ரீ பெரியவா இப்படி சொல்லி முடித்த போது பிரமுகர் தன தவறை உணர்ந்து விட்டவராய் தலை குனிந்து நின்றார். உலகெலாம் காத்து ரட்சிக்கும் கிருபாகரராய் ஸ்ரீ பெரியவா அருள, அந்த நடமாடும் தெய்வத்திடம் நாம் அகந்தை உணர்வோடு தற்பெருமையாக பேசிவிட்டது எத்தனை குற்றமென அவருக்கு உறுத்தியது.

தெளிந்து விட்டவராய் எல்லோரையும் மறைத்துக் கொண்டு நின்றவர் சற்றே விலகி மற்ற பக்தர்களுக்கு வழிவிட்டு நின்றார்.

ஆனாலும் தாயினும் சிறந்த பரிவுடன் ஸ்ரீ பெரியவா உடனே தன்னை உணர்ந்து கொண்ட பக்தரை உடனே அரவணைக்கும் விதமாக, இதமாக உட்கார வைத்து சிறிது நேரம் பேசி பிரசாதங்களையும் கொடுத்தனுப்பினார்.

அடக்கம் கற்றுக் கொண்ட ஆனந்தத்தோடு அந்த பிரமுகருக்கு எந்த கைங்கர்யத்திலும் தனக்கு ஏற்ற தகுதியில் செய்வதோடு சிரத்தை எத்தனை முக்கியமென்பதை பாடமும் புரிந்தது.

அபார கருணா சிந்தும் ஞானதம் சாந்த ரூபிணம் 
ஸ்ரீ சந்திரசேகர குரும் ப்ரணமாமி முதான்வஹம்

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
Thanks: Madambakkam Shankar FB

No comments:

Post a Comment