Wednesday, April 10, 2024

Excerpts from purusha vadam - Balakumaran novel

"எழுத்துச் சித்தர், ஞானி, மஹான்  பாலகுமாரன்" அவர்களால் எழுதி வெளிடப்பட்ட    "புருஷவதம்" என்ற அற்புதமான நாவலில் உள்ள கீழ்க்கண்ட இந்த கருத்துக்கள் என் சிந்தை கவர்ந்தவை. ( பக்கம் 215 - 217) 

கங்கைக் கரை மிக நுண்ணிய அதிரலைகள் கொண்டது. சூட்சும ரூபத்தில் அங்கே வசிப்பவர்கள் அதிகம். அந்த நதியின் மீது ப்ரேமை வந்தது.

அதை விட்டு ஒருநாள் கூட பிரியாமல், எத்தனை காசு கொடுத்தாலும் கங்கை இல்லாத இடத்துக்குப் போகாமல் கங்கையின் குளுமையில் நடந்து கொண்டே தன் உடம்பையும், மனதையும் ஆற்றிக் கொண்டவர்கள், இறந்து போன பிறகும் அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தார்கள்.

இந்த உலகம் உடல் ரூபம் கொண்டவர்களது மட்டுமல்ல. உடலில்லாது சூட்சும சரீரம் உடையவர்களும் இங்கே உண்டு. 

அவர்கள் பிரபஞ்சத்தின் வேறு பகுதிக்குப் போகாமல், வாழ்ந்தபோது உண்டான வாசனை விடமுடியாது, எண்ணங்களை அகற்றமுடியாது, மனம் என்பதை விடமுடியாது, ஆசைகளோடு வாழ்ந்திருப்பார்கள். 

ஆசைகளை அனுபவிக்க உடல் வேண்டும், அவர்களிடம் உடல் இல்லை. அவர்களுக்கு கங்கையில் குளிக்க ஆசை. ஆனால் குளிக்க முடியாது. கங்கை நீரைக் குடிக்க ஆசை. ஆனால் குடிக்க முடியாது.

ஒரு நாளைக்கு மூன்று நான்கு முறை குளித்தும், குடித்தும் பழக்கப்பட்டவர்கள். கங்கா மாதா கீ ஜெய்... என்று கூவி நூறு வயது வாழ்ந்தவர்கள். மேலேயும் போகமுடியாமல், கீழேயும் வரமுடியாமல் தத்தளிப்பார்கள்.

கங்கைக்குப் புதிதாகக் குளிக்க வருபவர்களை அவர்கள் ஆவலோடு பார்த்து ஆசீர்வதிப்பார்கள். தர்ப்பணம் செய் என்று மனதுக்குள் தூண்டுவார்கள். தர்ப்பணம் செய்பவர்களுக்கு அருகே உட்கார்ந்து கொள்வார்கள். யாருக்குத் தர்ப்பணம் என்பதை நொடியில் கண்டுபிடித்து விடுவார்கள்.

"விஷ்ணுவே இவன் பெற்றோரின் பொருட்டு இவன் செய்யும் தர்ப்பணத்தை துளசிதளத்தோடு ஏற்றுக் கொண்டு இவன் பெற்றோர்களுக்கு விடுதலை கொடு."

அவர்களும் பிரார்த்திப்பார்கள். ரிஷிகளுக்கும், முனிகளுக்கும், சாதுக்களுக்கும் முழங்கை வழியே தர்ப்பணம் செய்யப்படும்போது அந்தத் தர்ப்பண ஜலத்தை ஆவலாக ஏந்தி அந்த நீரில் ததும்பி இருக்கும் அன்புச் சக்தியைப் பருகுவார்கள்.

மன ஒருமையோடு செய்யப்படும் தர்ப்பணத்தில் அன்புச் சக்தி பொங்கி ததும்பியிருக்கும். அந்த அன்புச் சக்தி அந்த சூட்சும சக்திகளின் மனதை ஒருமைப்படுத்தும். அந்த மன ஒருமை அவர்களை அமைதிப்படுத்தும் அல்லது விடுதலை வாங்கித்தரும்.

உடல் காணாது போவது அதாவது ஒரு விடுதலை என்பது போல மனம் காணாமல் போவதும் ஒரு விடுதலை. அதுவும் ஒருவகை மரணம்.

உடல் இல்லை. ஆனால் உடலால் வாழ்ந்த மனம் இன்னும் இயங்குகிறது. உடம்பு இருப்பது போலவே நினைத்துக் கொண்டு மயங்குகிறது என்பது ஒரு வேதனையான விஷயம். ஒரு தத்தளிப்பு.

சூட்சும வாழ்க்கை, அதாவது பித்ருலோகம் ஒன்றும் நிறைவானது அல்ல. பிரபஞ்சம் பற்றிய அறிவு பித்ருலோகத்தாருக்கு அதிகம் தெரியும்.

உலகமெங்கும் வேகமாய் அலைய முடியும். இன்னொரு சூட்சும சக்தியோடு தொடர்பு இன்னும் வேகமாய் ஏற்படுத்திக் கொள்ள முடியும். சும்மாவும் இருக்க முடியும்.

ஆனால் நிறைய சூட்சும சக்திகள் சும்மா இருப்பதில்லை. பிரபஞ்ச அறிவு ஏற்பட்டு விட்டதால் மனிதர்களை நோக்கிக் கதறுகிறார்கள். 'செய்.. இதைச் செய்... இதைச் செய்ய வேண்டாம்' என்று ஆவேசத்தோடு கதறுகிறார்கள்.

சில மனிதர்களுக்கு உள்ளுணர்வாய் இது புரிகிறது. சிலருக்கு இது புரிவதில்லை. தான் என்கிற கர்வம் மனிதனுக்குச் சொல்லப்படும் காரணங்களின் முதன்மையானது, சூட்சும ரூபங்களைப் புரிந்து கொள்ளுதல் நல்லது என்பதற்காகத்தான்.

கர்வம் உள்ளவருக்கு சூட்சுமமும் தெரியாது, ஸ்தூலமும் தெரியாது. அவர்களுக்கு எதிரே உள்ள மனிதர்கள் பேசுவதும் தெரியாது. தலைக்கு மேலே உள்ள பித்ருக்கள் பேசுவதும் கேட்காது.

(இந்தப் பதிவினை வாசித்த பிறகு ஏற்படும் கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் முழுவதும் உரித்தானவர் இதை எழுத்தாக்கி படைப்பித்த ஆசிரியர் எழுத்துச் சித்தர் ஞானி, மஹான் பாலகுமாரன் அவர்களே.) 

நன்றி.
குருவே துணை.

ஹர ஹர கங்கே. ஒம் நமோ நாராயணாய...

Thanks : Vadavalli Ravichandran மற்றும் Swami Hyrudhayanandha

No comments:

Post a Comment