கி.வா.ஜ விடம்,"தமிழ் மொழிக்கு ஏன் தமிழ் என்று பெயர் வந்தது?"
பெரியாவாளே பதில் சொல்கிறார்
"தம்மிடம் இப்படி இனிய தன்மை கொண்ட 'ழ'வை உடையது என்பதால் தமிழ் என்று வந்துவிட்ட தோ" என்று கேட்கவும் கி.வா.ஜ.விடம் பிரமிப்பு.
கட்டுரை ஆசிரியர்-இந்திரா சௌந்தர்ராஜன்.
புத்தகம் மகாபெரியவர் பாகம்-1 ..(44)
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
பெரியவர் பெரும் அருளாளர் மட்டுமல்ல; பெரும் கல்விமான்! மாபெரும் சிந்தனையாளர்.தன் அந்திமக் காலத்தில் கிட்டத்தட்ட 96 வயது வரை அவர் படிக்காத நாளே இல்லைஇவ்வளவுக்கும் முதுமை காரணமாக அவருக்கு ஒரு கண் பழுதாகி சரியாக தெரியாத நிலை. ஆனால் அதைப்பற்றி கவலையே படாமல் ஒரு கண்ணை வைத்துக்கொண்டே அவர் நிறைய படித்தார்.
பெரும்பாலும் இரவு தூங்கச் செல்லும் சமயங்களில் தான் அவர் படிப்பார். பெரிதாக விளக்கு போட்டுக் கொண்டு படிப்பது ஒரு ரகம். தோளுக்கும் கழுத்துக்கும் இடையே டார்ச் லைட்டை வைத்துக் கொண்டு அதன் வட்டமான வெளிச்சம் கைவசம் திறந்திருக்கும் புத்தகத்தின் மேல் விழும் நிலையில் அதை வாசிப்பது ஒரு விதம்.பெரியவர் அடுத்தவருக்கு தொந்தரவு தராமல் டார்ச் லைட் உதவியோடுதான் வாசிப்பார்.
சமஸ்கிருதம்,ஆங்கிலம்,தமிழ் என்று மூன்றிலும் பெரியவர் மிகுந்த புலமை உடையவராக திகழ்ந்தார். எனவே அறிஞர்கள் பெரியவரை சந்திக்கும் போது அவர்களிடம் அவர்கள்மலைத்துப் போகும் அளவு பெரியவரால் பேச முடிந்தது. இந்த மூன்று மொழிகள் அல்லது மற்ற மொழி அறிவும் பெரியவருக்கு நிறையவே இருந்தது. அதே போல சரித்திர ஞானம் விஞ்ஞான ஞானம்,தமிழ் இலக்கிய ஞானம், ஆங்கிலத்தில் இலக்கண ஞானம் என்று அவரது ஆற்றலுக்கு அவர் வாழ்வில் ஏராளமான சான்றுகள் உண்டு. குறிப்பாக தமிழ் இலக்கியத்தில் பெரியவர் பெரிதும் ஆழங்கால்பட்டவராக திகழ்ந்தார்.'கலைமகள்' என்று ஒரு மாத இதழ் வெளியாகி வருவதை நாம் அறிவோம்.இப்போதும் அது வெளியாகி வருகிறது.
அந்த நாளில் அந்த இதழுக்கு ஆசிரியராக இருந்தவர் கி.வா.ஜகன்னாதன்.தமிழ் உலகம் அவரை கி.வா.ஜ. என்று மூன்றெழுத்தில் அழைக்கும். கி.வா.ஜ.நல்ல மேடைப் பேச்சாளர் குறிப்பாக சிலேடையாக பேசுவதில் அவர் வித்தகர்.
-கி.வா.ஜ விடம்,"தமிழ் மொழிக்கு ஏன் தமிழ் என்று பெயர் வந்தது?" என்று பெரியவர் கேட்டார்.
இந்தக் கேள்வியை கி.வா.ஜ. எதிர்பார்க்கவில்லை என்ன பதில் கூறுவது என்றும் தெரியவில்லை.
'தமிழின் சிறப்பைச் சொல் என்றால் ஒரு மணி நேரம் கூட பேசலாம். அவ்வளவு செய்திகள் உள்ளன. தமிழுக்கு தமிழ் என்று ஏன் பெயர் வந்தது என்றால் அதை என்னவென்று சொல்வது?'
உண்மையில் கி.வா.ஜவுக்கு விடை தெரியவில்லை. அதற்கு உள்ளபடியே ஒரு விடை இருப்பதாகவும் தெரியவில்லை. "எனக்கு தெரியவில்லை.நீங்களே சொல்லிவிடுங்கள்" என்றார் மிகுந்த தன்னடகத்தோடு.
பெரியவரும் கூறத்தொடங்கினார்.
"நான் சொல்லப் போற பதில் என்னுடைய கருத்துதானே ஒழிய இதை தமிழ்ப் புலவர்களோ, அறிஞர்களோ யாரும் சொல்லலை.என் கருத்தை எல்லாரும் ஏத்துக்கணும்கிற கட்டாயமும் கிடையாது.எனக்கு தோன்றியதைச் சொல்கிறேன்" என்கிற பீடிகையோடு பெரியவர் சொல்லத் தொடங்கினார்.
"தமிழின் சிறப்பே 'ழ' கரம்தானே! வேறு எந்த பாஷையிலும் இது கிடையாது. 'ழ'கரம் வரும் சொற்கள் எல்லாமே பெரும்பாலும் இனியது. நல்ல பொருள் உடையது. 'மழலை,குழவி, வாழை,யாழ்,பொழிவு, வியாழன்,சூழல்,ஆழி, மேழி, ஊழி...' இப்படி ழ,ழி, வரும் சொற்களை வரிசையாக சொல்லிக் கொண்டே வந்த பெரியவா,"தம்மிடம் இப்படி இனிய தன்மை கொண்ட 'ழ'வை உடையது என்பதால் தமிழ் என்று வந்துவிட்டதோ" என்று கேட்கவும் கி.வா.ஜ.விடம் பிரமிப்பு.
எவ்வளவு ஆழமான பார்வை.கருத்திலும் அசைக்க முடியாத வலிமையல்லவா? கி.வா.ஜ. அந்த கருத்தை ஏற்றுக் கொண்டதோடு, இனி நான் பேசும் தமிழ்க் கூட்டங்களில் இதை எடுத்துச் சொல்வேன் என்றும் கூறினார்
Thanks: Varagooran Narayanan FB
No comments:
Post a Comment