Friday, January 26, 2024

Mahabharatam in tamil 317

மஹாபாரதம்(முழுவதும்)-பாகம்-317
துரோண பர்வம்
….
கர்ண கடோத்கசக் கடும்போர்
...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கடோத்கசனானவன், சூதனின் மகனான கர்ணனைப் போரில் கொல்வதற்காக, அவனது தேரை நோக்கிச் செல்வதைக் கண்ட உமது மகன் துரியோதனன்,(1) {தன் தம்பியான} துச்சாசனனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்: "அந்த ராட்சசன் {கடோத்கசன்}, கர்ணனின் ஆற்றலைக் கண்டு அவனை எதிர்த்துப் போரிட வேகமாகச் செல்கிறான்.(2)

அந்த வலிமைமிக்கத் தேர்வீரனை {கடோத்கசனைத்} தடுப்பாயாக. விகர்த்தனன் {சூரியன்} மகனான வலிமைமிக்கக் கர்ணன், போரில் அந்த ராட்சசனுடன் எங்கே மோதுகிறானோ அந்த இடத்திற்குப் பெரும்படை சூழச் செல்வாயாக.(3) ஓ! கௌரவங்களை அளிப்பவனே {துச்சாசனா}, துருப்புகள் சூழ மூர்க்கமாக முயன்று, போரில் கர்ணனைக் காப்பாயாக.(4) நமது கவனக்குறைவால் அந்த ராட்சசன் {கடோத்கசன்}, கர்ணனைக் கொல்லாதிருக்கட்டும்" என்றான்.(5)


அதே வேளையில், தாக்குபவர்களில் முதன்மையான ஜடாசுரனின் வலிமைக்க மகன் {அலம்புசன் / அலம்பலன்}, துரியோதனனை அணுகி, அவனிடம், "ஓ! துரியோதனா, உன்னால் ஆணையிடப்படும் நான், போரில் எளிதில் வெல்லப்பட முடியாத போர்வீரர்களும், புகழ்பெற்ற உன் எதிரிகளுமான பாண்டவர்களையும், அவர்களைப் பின்தொடர்வோரையும் கொல்ல விரும்புகிறேன். ராட்சசர்களில் முதன்மையானவரும் வலிமைமிக்கவருமான ஜடாசுரரே என் தந்தையாவார். முன்பொரு சமயம்,(6,7) பிருதையின் {குந்தியின்} அற்ப மகன்கள், ராட்சசர்களைக் கொல்லும் சில மந்திரங்களைச் சொல்லி அவரைக் {ஜடாசுரரைக்} கொன்றனர் [1]. ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, இறந்து போன என் தந்தைக்கு {ஜடாசுரருக்கு}, அவரது எதிரிகளின் குருதியையும்,(8) இறைச்சியையும் காணிக்கையளித்து அவரை வழிபட விரும்புகிறேன். {என் தந்தையின் கொலைக்காக நான் பாண்டவர்களைப் பழி வாங்க விரும்புகிறேன்}. {இதற்கு} எனக்கு அனுமதி அளிப்பதே உனக்குத் தகும்" என்றான் {அலம்புசன்}.

[1] வன பர்வம் பகுதி 156ல் ஜடாசுரன் வதம் சொல்லப்பட்டிருக்கிறது.

இப்படிச் சொல்லப்பட்ட மன்னன் {துரியோதனன்}, மிகவும் மகிழ்ந்து, அவனிடம் {அந்த ஜடாசுரன் மகனான அலம்புசனிடம்}, "துரோணர், கர்ணன் மற்றும் பிறரின் துணையுடன் என் எதிரிகளை வெல்லத்தக்கவனாகவே நான் இருக்கிறேன். எனினும், ஓ! ராட்சசா {அலம்புசா}, என்னால் உத்தரவிடப்படும் நீ, மனிதனுக்குப் பிறந்தவனும், கடுஞ்செயல்களைச் செய்யும் ராட்சசனும், பாண்டவர்களின் நலனில் எப்போதும் அர்ப்பணிப்புள்ளவனும், எப்போதும் ஆகாயத்தில் நின்று கொண்டு, எங்கள் யானைகள், குதிரைகள் மற்றும் தேர்வீரர்களைப் போரில் கொல்பவனுமான கடோத்கசனிடம் போரிட்டு, அப்போரில் அவனைக் கொல்வாயாக.(10,11) ஓ! அவனை {கடோத்கசனை} யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்புவாயாக" என்றான் {துரியோதனன்}.

"அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி கடோத்கசனைப் போருக்கு அழைத்த(12) அந்த ஜடாசுரன் மகன் {அலம்புசன்}, பல்வேறு வகைகளிலான ஆயுதங்களால் அந்தப் பீமசேனன் மகனை {கடோத்கசனை} மறைத்தான். எனினும், அந்த ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்} தனியனாகவும், ஆதரவற்றவனாகவும் இருந்தாலும், மேகத்திரள்களை அழிக்கும் சூறாவளியைப் போல அலசம்புசனையும் [2], கர்ணனையும், பரந்த குரு படையையும் கலங்கடிக்கத் தொடங்கினான். (கடோத்கச) மாயையின் சக்தியைக் கண்ட அந்த ராட்சசன் அலம்புசன்,(13,14) பல்வேறு வகைகளிலான கணைமாரிகளால் கடோத்கசனை மறைத்தான். பீமசேனன் மகனை {கடோத்கசனைப்} பல கணைகளால் துளைத்த அலம்புசன்,(15) நேரம் எதையும் இழக்காமல், தன் கணைகளால் பாண்டவப் படையைப் பீடிக்கத் தொடங்கினான். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவனால் {அலம்புசனால்} இப்படிப் பீடிக்கப்பட்ட பாண்டவத் துருப்புகள்,(16) சூறாவளியால் விரட்டப்படும் மேகங்களைப் போல அந்த நள்ளிரவில் அணிபிளந்து தப்பி ஓடின. அதே போலவே, கடோத்கசனின் கணைகளால் சிதைக்கப்பட்ட உமது படையும்,(17) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த நள்ளிரவில் தங்கள் தீப்பந்தங்களைக் கீழே வீசிவிட்டு ஆயிரக்கணக்கில் தப்பி ஓடினர்.

[2] வேறொரு பதிப்பில் இவனது {இந்த அலம்புசனின்} பெயர் அலம்பலன் என்று சொல்லப்பட்டுள்ளது. துரோண பர்வம் பகுதி 108ல் அலம்புசன் என்ற பெயர் கொண்ட வேறொரு ராட்சசனையும் கடோத்கசன் கொன்றிருக்கிறான்.  துரோண பர்வம் பகுதி 139ல் அலம்புசன் என்ற பெயர் கொண்ட மன்னன் ஒருவனைச் சாத்யகி கொன்றான்.

அப்போது பெருங்கோபத்தால் தூண்டப்பட்ட அலம்புசன், யானையைத்தாக்கும் பாகனைப் போல, அந்தப் பயங்கரப் போரில் பீமசேனன் மகனை {கடோத்கசனைக்} கணைகள் பலவற்றால் தாக்கினான். பிறகு கடோத்கசன், தனது எதிரியின் {அலம்புசனின்} தேர், சாரதி, மற்றும் ஆயுதங்கள் அனைத்தையும் நுண்ணியத் துண்டுகளாக வெட்டி, அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் சிரித்தான். அப்போது கடோத்கசன், மேருவின் மலைகளில் மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போலக் கர்ணன், அலம்புசன் மற்றும் குருக்கள் {கௌரவர்கள்} அனைவரின் மீதும் கணைமாரிகளைப் பொழிந்தான். அந்த ராட்சசனால் பீடிக்கப்பட்ட குரு {கௌரவப்} படையானது மிகவும் கலங்கிப் போனது.(18-21) நால்வகைப்படையணிகளையும் கொண்ட உமது படையானது, ஒன்றையொன்று நெருக்கி நசுக்கத் தொடங்கியது. அப்போது தேரற்றவனாகவும், சாரதியற்றவனாகவும் இருந்த ஜடாசுரன் மகன் {அலம்புசன்},(22) கோபத்தால் நிறைந்து, அந்தப் போரில் தன் கைமுட்டிகளால் கடோத்கசனைத் தாக்கினான். இப்படித் தாக்கப்பட்ட கடோத்கசன்,(23) மரங்கள், கொடிகள், புற்களுடன் கூடிய மலையானது, நிலநடுக்கத்தின் போது நடுங்குவதைப் போல நடுங்கினான்.

பிறகு, சினத்தால் வெறிகொண்ட பீமசேனன் மகன் {கடோத்கசன்}, பரிகத்துக்கு {முட்களுடன் கூடிய கதாயுத்துக்கு} ஒப்பானதும், எதிரியைக் கொல்வதுமான தன் கரத்தை உயர்த்தி, அந்தச் ஜடாசுரன் மகனை {அலம்புசனைக்} கடுமையாகக் குத்தினான். சினத்தால் அவனை {அலம்புசனை} நசுக்கிய அந்த ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்}, விரைவாக அவனைக் கீழே தூக்கி எறிந்து,(24,25) இரண்டு கரங்களாலும் அவனைப் {அலம்புசனைப்} பற்றிக் கொண்டு, பெரும்பலத்துடன் அவனைப் பூமியில் அழுத்தத் தொடங்கினான். பிறகு, கடோத்கசனிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு எழுந்த அந்த ஜடாசுரன் மகன் {அலம்புசன்},(26) பெரும் மூர்க்கத்துடன் கடோத்கசனைத் தாக்கினான். அந்த அலம்புசனும், ராட்சசனான கடோத்கசனை அந்தப் போரில் இழுத்து கீழே வீசியெறிந்து, சினத்துடன் அவனைப் பூமியின் பரப்பில் நசுக்கத் தொடங்கினான்.

முழங்கிக் கொண்டிருந்தவர்களும், ராட்சசப் போர்வீரர்களுமான கடோத்கசன் மற்றும் அலசம்புசன் ஆகிய அந்த இருவருக்கிடையில் நடந்த போரானது மிகக் கடும் நிலையை அடைந்து, மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்தியது. தங்கள் மாய சக்திகளின் மூலம் ஒருவரையொருவர் விஞ்ச முயன்றவர்களும், செருக்குமிக்கவர்களுமான அந்தப் போர்வீரர்கள்,(27-29) இந்திரனையும் விரோசனன் மகனையும் போலப் பெரும் சக்தியுடன் ஒருவரோடு ஒருவர் போரிட்டனர். நெருப்பு மற்றும் கடலாகவும், மேலும், கருடன் மற்றும் தக்ஷகனாகவும்,(30) மேலும், மேகம் மற்றும் சூறாவளியாகவும், பிறகு இடி மற்றும் பெரும் மலையாகவும், மீண்டும் யானை மற்றும் புலியாகவும், பிறகு ராகு மற்றும் சூரியனாகவும்(31) மாறி மாறி, ஒருவரையொருவர் அழிக்க வேண்டி, இப்படியே நூறு வகைகளிலான மாயைகளை வெளிப்படுத்தினர். உண்மையில், அலம்புசனும், கடோத்கசனும், பரிகங்கள், கதாயுதங்கள், வேல்கள், உலக்கைகள், கோடரிகள், குறுகதைகள் {முத்கரங்கள்} மற்றும் மலைச்சிகரங்களைக் கொண்டு ஒருவரையொருவர் தாக்கி அற்புதமாகப் போரிட்டனர்.(32,33) பெரும் மாய சக்திகளைக் கொண்டவர்களான அந்த ராட்சசர்களில் முதன்மையானோர் இருவரும், குதிரையின் முதுகில் ஏறியோ, யானையிலோ, காலிலோ, தேரிலோ சென்று ஒருவரோடு ஒருவர் போரிட்டனர்.(34)

அப்போது அலம்புசனைக் கொல்ல விரும்பிய அந்தக் கடோத்கசன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சினத்துடன் உயரப் பறந்து, பிறகு ஒரு பருந்தைப் போலப் பெரும் வேகத்துடன் கீழே இறங்கினான்.(35) தன்னுடன் இப்படிப் போராடிக் கொண்டிருந்தவனும், பெரும் உடல் படைத்தவனுமான அந்த ராட்சச இளவரசனான அலம்புசனைப் பிடித்து, போரில் (அசுரன்) மயனைக் கொன்ற விஷ்ணுவைப் போல அவனைப் பூமியில் நசுக்கினான்.(36) அளவற்ற ஆற்றலைக் கொண்ட கடோத்கசன், அற்புதத் தோற்றத்துடன் கூடிய ஒரு கத்தியை எடுத்துக் கொண்டு, சீற்றமும், வலிமையும் கொண்டவனான தன் எதிரியினுடையதும், பயங்கரமாக அலறிக் கொண்டே இருந்ததுமான அவனுடைய {அலம்புசனின்} பயங்கரத் தலையை அவனது உடலில் இருந்து அறுத்தான்.(37,38) குருதியில் நனைந்த அந்தத் தலையை மயிரோடு பற்றிக் கொண்ட கடோத்கசன், விரைவாகத் துரியோதனனின் தேரை நோக்கிச் சென்றான். (குரு மன்னனை) அணுகிய அந்த வலிமைமிக்க ராட்சசன் {கடோத்கசன்} சிரித்துக் கொண்டே, பயங்கர முகமும், மயிரும் கொண்ட அந்தத் தலையைத் துரியோதனனின் தேரில் வீசினான்.(40)

அப்போது, மழைக்கால மேகங்களைப் போல ஆழமான கடும் முழக்கம் செய்த அவன் {கடோத்கசன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தத் துரியோதனனிடம்,(41) "நீர் எவனுடைய ஆற்றலைப் பார்த்துக் கொண்டிருந்தீரோ அந்த உமது கூட்டாளி {அலம்புசன் [அலம்பலன்]} இப்போது கொல்லப்பட்டான். மேலும் கர்ணன் மற்றும் உமது கொலையையும் நீர் காண்பீர்.(42) அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகிய இம்மூன்றையும் நோற்பவன் எவனும், மன்னன் ஒருவனையோ, பிராமணன் ஒருவனையோ, பெண் ஒருத்தியையோ வெறுங்கையுடன் காண {செல்லக்} கூடாது[3].(43) கர்ணனை நான் கொல்லும் வரையில் மகிழ்ச்சியாக வாழ்வீராக" என்றான். இவ்வார்த்தைகளைச் சொன்ன அவன் {கடோத்கசன்} நூற்றுக்கணக்கான கூரிய கணைகளைக் கர்ணனின் தலையில் ஏவியபடியே அந்தக் கர்ணனை நோக்கிச் சென்றான்.(44) அதன் பிறகு, அந்த மனிதப் போர்வீரனுக்கும் {கர்ணனுக்கும்}, அந்த ராட்சசனுக்கும் {கடோத்கசனுக்கும்} இடையில் நடைபெற்ற போரானது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கடுமையானதாகவும், பயங்கரமானதாகவும், மிக அற்புதமானதாகவும் இருந்தது" {என்றான் சஞ்சயன்}.(45)

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "உண்மையில், அந்த நள்ளிரவில், விகர்த்தனன் மகன் கர்ணனும், ராட்சசன் கடோத்கசனும் ஒருவரோடொருவர் மோதிக்கொண்ட அந்தப் போர் எவ்வாறு நடந்தது?(1) அப்போது அந்தக் கடும் ராட்சசன் {கடோத்கசன்} என்ன தன்மையைப் பெற்றிருந்தான்? என்ன வகைத் தேரில் அவன் ஏறி வந்தான்? மேலும் அவனது குதிரைகள் மற்றும் ஆயுதங்களின் இயல்பு யாவை?(2) அவனது குதிரைகள், அவனது தேரின் கொடிமரம் மற்றும் அவனது வில்லின் அளவுகள் யாவை? என்ன வகைக் கவசத்தை அவன் அணிந்திருந்தான்? மேலும் அவன் என்ன வகையில் தலைப்பாகையை அணிந்திருந்தான்? ஓ! சஞ்சயா, உரைப்பதில் திறனுள்ள நீ, நான் கேட்கும் இவை யாவற்றையும் விரிவாகச் சொல்வாயாக" என்றான் {திருதராஷ்டிரன்}.(3)


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "இரத்தச் சிவப்பான கண்களைக் கொண்ட கடோத்கசன், மிகப் பெரிய வடிவத்தைக் கொண்டிருந்தான். அவனது {கடோத்கசனது} முகம் தாமிரத்தின் நிறத்தைக் கொண்டிருந்தது. அவனது வயிறு ஒட்டி சரிந்திருந்தது. அவன் உடலின் மயிர்கள் அனைத்தும் மேல் நோக்கி விறைத்துக் கொண்டிருந்தன. அவனது தலை பச்சையாக இருந்தது [1] அவனது காதுகள் அம்புகளைப் போல இருந்தன. அவனது தாடை எலும்புகள் {மோவாய்} பருத்திருந்தன.(4) அவனது வாயானது, காதிலிருந்து {மற்றொரு} காதுவரை விரிந்திருந்தது. அவனது {கடோத்கசனது}  பற்கள் கூர்மையாக இருந்தன, மேலும் அதில் நான்கு {பற்கள்} கூர்மையுடன் உயர்ந்திருந்தன. அவனது நாவும் உதடுகளும் மிக நீளமாகவும், தாமிர வண்ணத்திலும் இருந்தன. அவனது {கடோத்கசனது}  புருவங்கள் நீண்டு பரந்திருந்தன. அவனது மூக்கு பருத்திருந்தது.(5) அவனது {கடோத்கசனது}  உடல் நீலமாகவும், கழுத்து சிவப்பாகவும் இருந்தது. மலைபோல உயரமாக இருந்த அவன் {கடோத்கசன்} பார்ப்பதற்குப் பயங்கரமானவனாக இருந்தான். பெரும் உடற்கட்டு, பெரும் கரங்கள், பெரும் தலை ஆகியவற்றுடன் கூடிய அவன் பெரும் வலிமையைக் கொண்டிருந்தான்.(6)

[1] வேறொரு பதிப்பில் இங்கே "அவனது மீசை பசுமையாக இருந்தது" என்றிருக்கிறது.

அழகற்றவனும், {தீண்டுவற்குக்} கடும் அங்கங்கள் கொண்டவனுமான அவனது {கடோத்கசனது}  தலையில் இருந்த மயிர் பயங்கர வடிவில் மேல்நோக்கிக் கட்டப்பட்டிருந்தது. அவனது இடை பெருத்திருந்தது, அவனது நாபி ஒடுங்கியிருந்தது. பெரும் உடற்கட்டைக் கொண்டிருந்தாலும் அவனது {கடோத்கசனது} உடலின் சுற்றளவு பெரிதாக {அவன் பருமனாக} இல்லை.(7) அவனது {கடோத்கசனது}  கரங்களின் ஆபரணங்கள் சரியான அளவுகளில் இருந்தன. பெரும் மாயாசக்திகளைக் கொண்டிருந்த அவன் அங்கதங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தான். மலையின் சாரலில் ஒரு நெருப்புக் கோளத்தைப் போல, தன் மார்பில் அவன் மார்புக் கவசத்தை அணிந்திருந்தான்.(8) அவனது {கடோத்கசனது}  தலையில், தங்கத்தாலானதும், பிரகாசமானதும், அழகானதும், அனைத்துப் பகுதிகளிலும் சரியான அளவுகளைக் கொண்டதும், ஒரு வளைவைப் போன்றதுமான ஓர் அழகிய கிரீடம் இருந்தது.(9) அவனது {கடோத்கசனது}  காது குண்டலங்கள் காலைச் சூரியனைப் போலப் பிரகாசமாக இருந்தன, அவனது மாலையானது, தங்கத்தாலானதும், மிகப் பிரகாசமானதாகவும் இருந்தது. அவன் {கடோத்கசன்}, தனது உடலில் பெரும் பிரகாசமுடையதும், பெரிய அளவு உடையதுமான ஒரு வெண்கலக் கவசத்தைக் கொண்டிருந்தான்.(10)

அவனது {கடோத்கசனது}  தேரானது, நூறு கிங்கிணி மணிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இரத்தச் சிவப்புடைய எண்ணற்ற கொடிகள் அவனது கொடிமரத்தில் அசைந்து கொண்டிருந்தன. பிரம்மாண்ட அளவீடுகளைக் கொண்டதும், ஒரு நல்வம் {நானூறு சதுர முழம்} பரப்பளவு கொண்டதுமான அந்தத் தேர் கரடித் தோல்களால் மூடப்பட்டிருந்தது.(11) வலிமைமிக்க அனைத்து ஆயுதங்களையும் கொண்டிருந்த அது, மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, ஓர் உயரமான கொடிமரத்தையும், எட்டு சக்கரங்களையும் கொண்டிருந்தது. அதன் சடசடப்பொலி மேகங்களின் கர்ஜனைக்கு ஒப்பாக இருந்தது.(12) சிவந்த கண்களைக் கொண்ட அவனது {கடோத்கசனது}  குதிரைகள், மத யானைகளைப் போல இருந்தன. மேலும் பயங்கரத் தன்மை கொண்டு பல்வேறு வண்ணங்களில் இருந்த அவை பெரும் வேகமும் வலிமையும் கொண்டவையாக இருந்தன.(13) களைப்பு அனைத்துக்கும் மேம்பட்டு, நீண்ட பிடரிமயிர்களால் அலங்கரிக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் கனைத்துக் கொண்டே இருந்த அவை அந்த வீரனைப் {கடோத்கசனைப்} போருக்குச் சுமந்து சென்றன.(14) அவனது {கடோத்கசனது}  சாரதியாகச் செயல்பட்ட ஒரு ராட்சசன், பயங்கரமான கண்கள், நெருப்பு போன்ற வாய், சுடர்மிக்கக் காதுகுண்டலங்கள் ஆகியவற்றைக் கொண்டு, அந்தப் போரில் சூரியனின் கதிர்களுக்கு ஒப்பான தனது குதிரைகளின் கடிவாளங்களைப் பிடித்துக் கொண்டு அவற்றை {குதிரைகளைச்} செலுத்தினான்.(15) அருணனைச் சாரதியாகக் கொண்ட சூரியனைப் போல, அந்தச் சாரதியுடன் அவன் {கடோத்கசன்} போருக்கு வந்தான். பெரும் மேகங்களால் சூழப்பட்ட உயர்ந்த மலையைப் போலத் தெரிந்ததும், வானத்தைத் தொட்டுக் கொண்டிருந்ததுமான மிக உயரமான கொடிமரம் ஒன்று அவனது {கடோத்கசனது}  தேரில் நிறுவப்பட்டிருந்தது.(16) இரத்தச் சிவப்பிலானதும், ஊனுண்ணுவதுமான பயங்கரக் கழுகொன்று அதில் அமர்ந்திருந்தது.(17)

இந்திரனின் வஜ்ரத்திற்கு ஒப்பான நாணொலி கொண்டதும், மிகக் கடினமான நாணைக் கொண்டதும் நீளத்தில் பனிரெண்டு முழங்களும்[2], அகலத்தில் ஒரு முழமும் கொண்டதுமான தன் வில்லைப் பலமாக வளைத்தபடியே அவன் {கடோத்கசன்} வந்தான்.(18) ஒரு தேருடைய அக்ஷத்தின் {ஏர்க்காலின்} அளவுடைய கணைகளால் திசைப்புள்ளிகள் அனைத்தையும் நிறைத்த அந்த ராட்சசன் {கடோத்கசன்}, வீரர்களுக்குப் பெரும் அழிவை உண்டாக்கியபடியே அந்த இரவில் கர்ணனை எதிர்த்து விரைந்தான்.(19) தன் தேரில் செருக்குடன் நின்று கொண்டிருந்த அவன் {கடோத்கசன்}, தனது வில்லை வளைத்த போது, அந்த நாணொலியானது இடியின் முழக்கத்திற்கு ஒப்பாக இருந்தது.(20) அவனால் அச்சத்திற்குள்ளான துருப்புகள் அனைத்தும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பொங்கும் கடலின் அலைகளைப் போல நடுக்கத்தை அடைந்தன.(21) பயங்கரக் கண்களை உடையவனும், அச்சத்தை ஏற்படுத்துபவனுமான அந்த ராட்சசன் {கடோத்கசன்} தன்னை எதிர்த்து வருவதைக் கண்ட அந்த ராதையின் மகன் {கர்ணன்}, சிரித்துக் கொண்டே அவனைத் தடுத்து எதிர்த்து நின்றான்.(22)

[2] "இங்கே குறிப்பிடப்படும் அரத்னி என்பது கை முட்டில் இருந்து சுண்டு விரல் நீளமுள்ள ஒரு முழ கொண்ட ஓர் அளவாகும்" என இங்கே விளக்குகிறார் கங்குலி.

அந்த ராட்சசனை எதிர்த்துச் சென்ற கர்ணன், யானையை எதிர்க்கும் மற்றொரு யானை போலவோ, காளையை எதிர்க்கும் மற்றொரு காளையைப் போலவோ அவனை மிக அருகில் இருந்து பதிலுக்குத் தாக்கினான்.(23) கர்ணனுக்கும், அந்த ராட்சசனுக்கும் {கடோத்கசனுக்கும்} இடையில் நடந்த மோதலானது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இந்திரனுக்கும் சம்பரனுக்கும் இடையில் நடந்த மோதலைப் போலப் பயங்கரத்தை அடைந்தது.(24) அவர்கள் ஒவ்வொருவரும் உரக்க நாணொலியெழுப்பும், உறுதி மிக்க விற்களை எடுத்துக் கொண்டு {தங்களில்} மற்றவனைப் பலமிக்கக் கணைகளால் மறைத்தனர்.(25) முற்று முழுதாக வளைக்கப்பட்ட விற்களில் இருந்து நேரான கணைகளை ஏவிய அவர்கள், வெண்கலத்தால் ஆன அவர்களது கவசங்களைத் துளைத்து ஒருவரையொருவர் சிதைத்துக் கொண்டனர்.(26) தங்கள் பற்களைக் கொண்டோ, தந்தங்களைக் கொண்டோ சிதைத்த இரு புலிகளைப் போலவோ, வலிமைமிக்க யானைகளைப் போலவோ அவர்கள் அக்ஷங்களின் அளவைக் கொண்ட ஈட்டிகளாலும் கணைகளாலும் ஒருவரையொருவர் சிதைத்துக் கொள்வதைத் தொடர்ந்தனர்.(27)

ஒருவரையொருவர் கணைகளால் குறிபார்த்து, தங்கள் ஒவ்வொருவரின் உடல்களையும் சிதைத்துக் கொண்டும், கணை மேகங்களால் ஒருவரையொருவர் எரித்துக் கொண்டும் இருந்த அவர்கள், பார்க்கப்பட இயலாதவர்களானார்கள்.(28) கணைகளால் துளைத்துச் சிதைக்கப்பட்ட அங்கங்களுடன், குருதியோடையில் குளித்த அவர்கள், தங்கள் சாரல்களில் செஞ்சுண்ண சிற்றாறுகள் ஓடிக் கொண்டிருக்கும் இரு மலைகளைப் போலத் தெரிந்தனர்.(29) இந்த இரு வலிமைமிக்கத் தேர்வீரர்களும் மூர்க்கமாகப் போராடினாலும், கூர்முனை கணைகளால் அங்கங்களைத் துளைத்தாலும், ஒருவரையொருவர் நடுங்கச் செய்வதில் தோல்வியே கண்டனர்.(30) உயிரையே பணயம் வைத்து ஆடப்படும் விளையாட்டாகத் தெரிந்ததும், கர்ணனுக்கும், ராட்சனுக்கும் {கடோத்கசனுக்கும்} இடையிலானதுமான அந்த இரவு போரானது, நெடுநேரத்திற்குச் சமமாகவே தொடர்ந்து கொண்டிருந்தது. கூரிய கணைகளைக் குறிபார்த்து, அவற்றைத் தன் முற்று முழுதான பலத்துடன் ஏவிய கடோத்கசனுடைய வில்லின் நாணொலியானது நண்பர்கள் மற்றும் எதிரிகள் ஆகிய இருவரையும் அச்சத்திற்குள்ளாக்கியது.(32)

அந்நேரத்தில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கர்ணனால் கடோத்கசனை விஞ்ச முடியவில்லை. ஆயுதங்களை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையான அவன் {கர்ணன்}, இதைக் கண்டு, தெய்வீக ஆயுதங்களை இருப்புக்கு அழைத்தான்.(33) கர்ணனால் தன் மீது குறிபார்க்கப்படும் தெய்வீக ஆயுதத்தைக் கண்டவனும், ராட்சசர்களில் முதன்மையானவனுமான கடோத்கசன், தன் ராட்சச மாயையை இருப்புக்கு அழைத்தான்.(34) வேல்கள், பெரும்பாறைகள், மலைகள், தண்டங்கள் ஆகியவற்றைக் கொண்டிருந்தவர்களும், பயங்கரத் தோற்றங்களைக் கொண்டவர்களுமான ராட்சசர்களின் பெரும்படையால் சூழப்பட்டவனாக அவன் {கடோத்கசன்} தெரிந்தான்.(35) கடுமையான தன் மரணத்தண்டத்தை ஏந்திவருபவனும், உயிரினங்கள் அனைத்தையும் அழிப்பவனான காலனைப் போலத் (தன் கரங்களில்) உயர்த்திப் பிடிக்கப்பட்ட வலிமைமிக்க ஆயுதத்துடன் முன்னேறி வருபவனுமான கடோத்கசனைக் கண்ட மன்னர்கள் அனைவரும் அச்சத்தால் தாக்கப்பட்டனர்.(36) கடோத்கசனால் செய்யப்பட்ட சிங்க முழக்கங்களால் அச்சமடைந்த யானைகள் சிறுநீரைக் கழித்தன; போராளிகள் அனைவரும் அச்சத்தால் நடுங்கினர்.(37)

அப்போது, அந்த நள்ளிரவின் விளைவால் பெரும் பலத்தை அடைந்த அந்த ராட்சசர்களால் இடையறாமல் பொழியப்பட்ட பாறைகள் மற்றும் கற்களின் அடர்த்தியான மழையானது அனைத்துப் பக்கங்களிலும் விழுந்தது[3].(38) இரும்புச் சக்கரங்கள், புசுண்டிகள், ஈட்டிகள், வேல்கள், சூலங்கள், சதக்னிகள், கோடரிகள் ஆகியனவும் இடையறாமல் தொடர்ச்சியாக விழுத்தொடங்கின.(39). கடுமையானதும், பயங்கரமானதுமான அந்தப் போரைக் கண்ட மன்னர்கள் அனைவரும், உமது மகன்களும், பிற போராளிகளும் அச்சத்தால் தப்பி ஓடினர்.(40) அவர்களில், தன் ஆயுத சக்தியில் செருக்குடையவனும், உன்னதமான பெருமையை உணர்ந்தவனுமான கர்ணன் மட்டுமே நடுங்காதிருந்தான். உண்மையில் அவன் {கர்ணன்}, கடோத்சகசனால் இருப்புக்கு அழைக்கப்பட்ட அந்த மாயையைத் தன் கணைகளால் அழித்தான்.(41) தன் மாயை அகற்றப்பட்டதைக் கண்ட கடோத்கசன், சினத்தால் நிறைந்து, அந்தச் சூதன் மகனை {கர்ணனைக்} கொல்ல விரும்பி, மரணக் கணைகளை ஏவத் தொடங்கினான்.(42) குருதியில் குளித்த அந்தக் கணைகள், அந்தப் பயங்கரப் போரில் கர்ணனின் உடலின் ஊடாகத் துளைத்துச் சென்று, கோபக்காரப் பாம்புகளைப் போலப் பூமிக்குள் நுழைந்தன.(43)

[3] "குறிப்பிட்ட நேரங்களில் ராட்சசர்கள் பெரும்பலத்தை அடைவதாக நம்பப்படுகிறது" என இங்கே கங்குலி விளக்குகிறார்.

பிறகு, சினத்தால் நிறைந்தவனும், பெரும் கரநளினத்தைக் கொண்டவனுமான அந்த வீரச் சூதமகன் {கர்ணன்}, கடோத்கசனை விஞ்சி, பத்து கணைகளால் பின்னவனை {கடோத்கசனைத்} துளைத்தான்.(44) அப்போது கடோத்கசன், இப்படிச் சூதன் மகனால் {கர்ணனால்} முக்கிய அங்கங்கள் துளைக்கப்பட்டு, ஆயிரம் ஆரங்களைக் கொண்ட ஒரு தெய்வீகச் சக்கரத்தை எடுத்துக் கொண்டான்.(45) அந்தச் சக்கரத்தின் முனையானது கத்தியைப் போலக் கூர்மையாக இருந்தது. காலைச் சூரியனின் காந்தியைக் கொண்டவனும், ஆபரணங்கள் மற்றும் ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டவனுமான அந்தப் பீமசேனன் மகன் {கடோத்கசன்}, அதிரதன் மகனுக்கு {கர்ணனுக்கு} ஒரு முடிவை ஏற்படுத்த விரும்பி அஃதை அவன் மீது வீசினான்.(46) அந்தச் சக்கரம் பெரும் சக்தி கொண்டதாக இருப்பினும், அது பெரும் வலிமையுடன் வீசப்பட்டு இருப்பினும், பேறில்லா மனிதனின் நம்பிக்கைகளையும், காரியங்களையும் போல நோக்கங்கள் கலங்கடிக்கப்பட்டு, கர்ணனின் கணைகளால் துண்டுகளாக வெட்டப்பட்டுக் கீழே விழுந்தது.(47) தன் சக்கரம் கலங்கடிக்கப்பட்டதைக் கண்டு சினத்தால் நிறைந்த கடோத்கசன், சூரியனை மறைக்கும் ராகுவைப் போலக் கணைமாரியால் கர்ணனை மறைத்தான்.(48) எனினும், ருத்ரன், அல்லது இந்திரனின் தம்பி {விஷ்ணு}, அல்லது இந்திரனின் ஆற்றலைக் கொண்ட அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, சிறகுபடைத்த கணைகளால் கடோத்கசனின் தேரை அச்சமில்லாமல் ஒரு கணத்தில் மறைத்தான்.(49)

அப்போது தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட ஒரு கதாயுதத்தைச் சுழற்றிய கடோத்கசன், அதைக் கர்ணனின் மீது வீசினான். எனினும் கர்ணன், தன் கணைகளால் வெட்டி அதைக் கீழே விழச் செய்தான்.(50) பிறகு வானத்திற்குப் பறந்து சென்று, மேகத்திரள்களைப் போல ஆழ முழங்கியவனும், பெரும் உடல் படைத்தவனுமான அந்த ராட்சசன் {கடோத்கசன்}, ஆகாயத்தில் இருந்து மரங்களின் மழையைச் சரியாகப் பொழிந்தான்.(51) பிறகு கர்ணன், மேகத்திரள்களைத் தன் கதிர்களால் துளைக்கும் சூரியனைப் போல, மாயைகளை அறிந்தவனும், வானத்தில் இருந்தவனும், பீமசேனனின் மகனுமான கடோத்கசனைத் தன் கணைகளால் துளைத்தான்.(52) பிறகு கடோத்கசனின் குதிரைகள் அனைத்தையும் கொன்று, அவனது தேரையும் நூறு துண்டுகளாக வெட்டிய கர்ணன், மழைத்தாரைகளைப் பொழியும் மேகத்தைப் போலத் தன் கணைகளைப் பொழியத் தொடங்கினான்.(53) கர்ணனின் கணைகளால் துளைக்கப்படாத இடம் எனக் கடோத்கசனின் உடலில் இரண்டு விரல்கட்டை அகலம் கூட {இடம்} இல்லை. விரைவில் அந்த ராட்சசன் {கடோத்கசன்}, தன் உடலில் முட்கள் விறைத்து நிற்கும் முள்ளம்பன்றி ஒன்றைப் போலத் தெரிந்தான்.(54) கடோத்கசனின் குதிரைகளோ, தேரோ, கொடிமரமோ, ஏன் கடோத்கசனோ கூட எங்களுக்குத் தெரியாத அளவுக்கு அவன் முழுமையாகக் கணைகளால் மறைக்கப்பட்டிருந்தான்.(55)

அப்போது, மாய சக்திகளைக் கொண்ட கடோத்கசன் தன் ஆயுதத்தால் கர்ணனின் தெய்வீக ஆயுதத்தை அழித்து, தன் மாயா சக்திகளின் துணையுடன், அந்தச் சூதன் மகனுடன் {கர்ணனுடன்} போரிடத் தொடங்கினான்.(56) உண்மையில், மாயா சக்தியின் துணையுடனும், பெரும் சுறுசுறுப்பை வெளிப்படுத்திக் கொண்டும் அவன் {கடோத்கசன்} கர்ணனோடு போரிடத் தொடங்கினான். ஆகாயத்தில் கண் காணா இடத்திலிருந்து கணைமாரி பொழிந்தது.(57) பிறகு, பெரும் மாயா சக்திகளைக் கொண்ட அந்தப் பீமசேனன் மகன் {கடோத்கசன்}, ஓ! குருக்களில் முதன்மையானவரே {திருதராஷ்டிரரே}, அந்தச் சக்திகளின் துணையோடு, கடும் வடிவை ஏற்று, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கௌரவர்களை மலைப்படையச் செய்யத் தொடங்கினான்.(58) அந்த வீர ராட்சசன் {கடோத்கசன்}, உக்கிரமான கடும் தலைகள் பலவற்றை ஏற்று {பல தலைகளுடையவனாக மாறி}, சூதன் மகனின் {கர்ணனின்} தெய்வீக ஆயுதங்களை விழுங்கத் தொடங்கினான்.(59) மீண்டும் விரைவில், அந்தப் பெரும் உடல் படைத்த ராட்சசன் {கடோத்கசன்}, தன் உடலில் நூற்றுக்கணக்கான காயங்களுடன், உற்சாகமற்றுக் கிடப்பவனைப் போலவும், களத்தில் இறந்து கிடப்பவனைப் போலவும் தெரிந்தான்.(60)

அப்போது கடோத்கசன் இறந்துவிட்டான் என்று கருதிய கௌரவக் காளையர், (மகிழ்ச்சியால்) உரக்க முழங்கினர். எனினும், விரைவில் அவன் {கடோத்கசன்}, புதிய வடிவங்களை ஏற்று, அனைத்துப் பக்கங்களிலும் திரிவது காணப்பட்டது.(61) பிறகு மீண்டும் அவன் நூறு தலைகளுடனும், நூறு வயிறுகளுடனும் கூடிய மகத்தான வடிவத்தை ஏற்று, மைநாக மலையைப் போலத் தெரிந்தான்[4].(62) மீண்டும் அவன் ஒரு கட்டை விரலின் அளவுக்குச் சிறிய வடிவத்தை எடுத்துப் பொங்கும் கடலின் அலைகளைப் போல முன்னும் பின்னும் நகரவும், உயரப் பறக்கவும் செய்தான்.(64) பிறகு ஆகாயத்தில் இருந்து கீழே இறங்கிய அவன், தன் மாயா சக்திகளின் துணையுடன் திசைகளின் அனைத்துப் புள்ளிகளிலும், வானத்திலும், பூமியிலும் திரிந்து, {பிறகு} கவசம் தரித்து, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தேரில் நிற்பவனாகத் தெரிந்தான்.(65)

[4] "ஹிமவானின் {இமயத்தின்} மகன் மைநாகன் நூறு தலைகளைக் கொண்டவனாவான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

பிறகு தன் காது குண்டலங்கள் அங்கும் இங்கும் ஆடக் கர்ணனின் தேரை அணுகிய கடோத்கசன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தச் சூதன் மகனிடம் {கர்ணனிடம்} அச்சமற்ற வகையில்,(66) "ஓ! சூதனின் மகனே {கர்ணரே} சற்றும் பொறுப்பீராக. என்னைத் தவிர்த்துவிட்டு, உம்மால் உயிருடன் எங்கே செல்ல முடியும்? உமது போரிடும் ஆசையை நான் இன்று இந்தப் போர்க்களத்தில் தணிப்பேன்" என்றான்.(67) இவ்வார்த்தைகளைச் சொன்னவனும், கொடூர ஆற்றலைக் கொண்டவனும், கோபத்தால் தாமிரமாகக் கண்கள் சிவந்தவனுமான அந்த ராட்சசன் {கடோத்கசன்}, வானத்தில் பறந்து சென்று உரக்கச் சிரித்தான்.(68) ஒரு சிங்கமானது, யானைகளின் இளவரசனைத் தாக்குவதைப் போல அவன் {கடோத்கசன்} ஒரு தேருடைய அக்ஷத்தின் அளவிலான தன் கணைகளின் மழையைப் பொழிந்து கர்ணனைத் தாக்கத் தொடங்கினான்.(69) உண்மையில் அவன், மலையின் மீது மழைத்தாரைகளைப் பொழியும் மேகத்தைப் போலத் தேர்வீரர்களில் காளையான அந்தக் கர்ணனின் மீது கணை மாரியைப் பொழிந்தான். கர்ணனோ அந்தக் கணைமாரியைத் தொலைவிலிருந்தே அழித்தான்.(70)

கர்ணனால் தன் மாயை அழிக்கப்பட்டதைக் கண்ட கடோத்கசன், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, மீண்டும் ஒரு மாயையை உண்டாக்கி காணப்பட முடியாதவனாக மறைந்தான்.(71) பிறகு, நெடுமரங்கள் நிறைந்ததும், பல சிகரங்களைக் கொண்டதுமான ஓர் உயரமான மலையாக ஆனான். அந்த மலையில் இருந்து, வேல்கள், சூலங்கள், வாள்கள் மற்றும் கதாயுதங்களின் ஓடையானது இடையறாமல் பாய்ந்து கொண்டிருந்தது.(72) ஆகாயத்தில், கடும் ஆயுதங்களின் ஓடையுடன் கூடிய கரிய மை-குவியலுக்கு ஒப்பான அந்த மலையைக் கண்ட கர்ணன், அதனால் சற்றும் கலக்கமடையவில்லை.(73) சிரித்துக் கொண்டே இருந்த கர்ணன், ஒரு தெய்வீக ஆயுதத்தை இருப்புக்கு அழைத்தான். அந்த ஆயுதத்தால் வெட்டப்பட்ட அந்தப் பெரும் மலை அழிக்கப்பட்டது.(74) பிறகு சீற்றமிக்கக் கடோத்கசன், வானவில்லுடன் கூடிய ஒரு நீல மேகமாகி, அந்தச் சூதனின் மகன் {கர்ணனின்} மீது கற்களின் மழையைப் பொழியத் தொடங்கினான்.(75) 

விருஷன் என்றும் அழைக்கப்பட்டவனும், ஆயுதங்களை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான அந்த விகர்த்தனன் மகன் கர்ணன், ஒரு வாயவ்ய ஆயுதத்தைக் குறி பார்த்து, அந்தக் காளமேகத்தை அழித்தான்.(76) பிறகு திசைகளின் புள்ளிகள் அனைத்தையும் எண்ணற்ற கணைகளால் மறைத்த அவன் {கர்ணன்}, கடோத்கசனால் தன் மீது குறிபார்க்கப்பட்ட ஓர் ஆயுதத்தை அழித்தான்.(77) அப்போது பீமசேனனின் வலிமைமிக்க மகன் {கடோத்கசன்}, அந்தப் போரில் சிரித்துக் கொண்டே, வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணனுக்கு எதிராக மிகச் சக்தி வாய்ந்த ஒரு மாயையை மீண்டும் இருப்புக்கு அழைத்தான்.(78) சிங்கங்கள், புலிகள், மதங்கொண்ட யானைகள் ஆகியவற்றின் ஆற்றலுக்கு ஒப்பான ஆற்றலைக் கொண்டவர்களும், யானைகளில் ஏறிய சிலரும், தேர்களில் சிலரும், குதிரைகளின் முதுகில் சிலரும்(79-80) எனப் பல்வேறு ஆயுதங்களையும், கவசங்களையும், பல்வேறு வகைகளிலான ஆபரணங்களையும் தரித்து வந்தவர்களுமான அந்தப் பெரும் எண்ணிக்கையிலான ராட்சசர்கள் சூழ, மருத்தர்களால் சூழப்பட்ட வாசவனை {இந்திரனைப்} போலத் தன்னை அச்சமில்லாமல் அணுகுபவனும், போர்வீரர்களில் முதன்மையானவனுமான அந்தக் கடோத்கசனை மீண்டும் கண்டவனும், வலிமைமிக்க வில்லாளியுமான கர்ணன் அவனுடன் {கடோத்கசனுடன்} மூர்க்கமாகப் போரிடத் தொடங்கினான்.(81) அப்போது கடோத்கசன், ஐந்து கணைகளால் கர்ணனைத் துளைத்து, மன்னர்கள் அனைவரையும் அச்சத்திற்குள்ளாக்கும் வகையில் உரக்க முழங்கினான்.(82)

மீண்டும் ஓர் அஞ்சலிகாயுதத்தை ஏவிய கடோத்கசன், கர்ணனால் ஏவப்பட்ட கணைமாரியுடன் சேர்த்து, பின்னவனின் {கர்ணனின்} கையில் இருந்த வில்லையும் விரைவாக அறுத்தான். பிறகு உறுதிமிக்கதும், பெரும் கடினத்தைத் தாங்கவல்லதும், இந்திரனின் வில்லைப் போன்று பெரிதாக இருப்பதுமான மற்றொரு வில்லை எடுத்த கர்ணன் அதைப் பெரும் பலத்துடன் வளைத்தான். அப்போது கர்ணன், தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், எதிரியைக் கொல்பவையுமான சில கணைகளை அந்த வானுலாவும் ராட்சசர்களின் மீது ஏவினான். அந்தக் கணைகளால் பீடிக்கப்பட்டவர்களும், அகன்ற மார்புகளை உடையவர்களுமான அந்த ராட்சசர்களின் பெரும்படையானது, சிங்கத்தால் பீடிக்கப்படும் காட்டுயானைகளின் கூட்டத்தைப் போலக் கலக்கமடைவதாகத் தெரிந்தது.(83-86) குதிரைகள், சாரதிகள், யானைகள் ஆகியவற்றுடன் கூடிய அந்த ராட்சசர்களைத் தன் கணைகளால் அழித்த பலமிக்கக் கர்ணன், அண்ட அழிவின் போது உயிரினங்கள் அனைத்தையும் எரிக்கும் தெய்வீக அக்னியைப் போலத் தெரிந்தான்.(87) அந்த ராட்சசப் படையை அழித்த சூதன் மகன் {கர்ணன்}, (அசுரர்களின்) முந்நகரத்தை {திரிப்புரத்தை} எரித்து விட்டு, சொர்க்கத்தில் இருக்கும் தேவன் மகேஸ்வரனைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(88)

பாண்டவத் தரப்பைச் சேர்ந்த அந்த ஆயிரக்கணக்கான மன்னர்களில், ஓ! ஐயா, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே},(89) பயங்கர சக்தியும், பலமும் கொண்டவனும், சினத்தால் தூண்டப்பட்டு யமனைப் போலத் தெரிந்தவனும், ராட்சசர்களின் இளவரசனுமான அந்த வலிமைமிக்கக் கடோத்கசனைத் தவிர வேறு எவராலும் கர்ணனைக் {கண்ணால்} காணவும் முடியவில்லை. கோபத்தால் தூண்டப்பட்ட அவனது விழிகள், இரண்டு தீப்பந்தங்களில் இருந்து விழும் சுடர்மிக்க எண்ணெய்யைப் போல, நெருப்பின் தழல்களை வெளியிடுவதாகத் தெரிந்தது.(90,91) உள்ளங்கையால் உள்ளங்கையைத் தட்டி, தன் கீழ் உதட்டைக் கடித்துக் கொண்டிருந்த அந்த ராட்சசன் {கடோத்கசன்},(92) யானைகளைப் போலத் தெரிபவையும், பிசாசங்களின் முகத்தைக் கொண்டவையுமான எண்ணற்ற {கோவேறு} கழுதைகள் பூட்டப்பட்டதும், தன் மாயையால் உண்டாக்கப்பட்டதுமான அந்தத் தேரில் மீண்டும் காணப்பட்டான்.(93) கோபத்தால் தூண்டப்பட்ட அவன் {கடோத்கசன்} தன் சாரதியிடம், "சூதன் மகனிடம் {கர்ணனிடம்} என்னை அழைத்துச் செல்வாயாக" என்றான். பிறகு அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவன் {கடோத்கசன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சூதன் மகனுடன் {கர்ணனுடன்} மீண்டும் தனிப்போரில் ஈடுபடுவதற்காகப் பயங்கரமாகத் தெரிந்த அந்தத் தேரில் சென்றான்.(94)

அந்த ராட்சசன் {கடோத்கசன்}, சினத்தால் தூண்டப்பட்டு, ருத்ரனின் கைவண்ணத்தில் ஆனதும், பயங்கரமானதும், எட்டுச் சக்கரங்களைக் கொண்டதுமான அசனி ஒன்றை அந்தச் சூதனின் மகன் {கர்ணன்} மீது வீசினான்.(95) தன் வில்லைத் தன் தேரில் கிடத்திய கர்ணன், பூமியில் கீழே குதித்து அந்த அசனியைப் பிடித்து மீண்டும் அதைக் கடோத்கசனின் மீதே வீசினான்.(96) எனினும் பின்னவன் {கடோத்கசன்}, (அவ்வாயுதம் தன்னை அடையும் முன்பே) தன் தேரில் இருந்து வேகமாகக் குதித்தான். அதே வேளையில் பெரும் பிரகாசமுடைய அந்த அசனியானது, குதிரைகள், சாரதி மற்றும் கொடிமரத்துடன் கூடிய அந்த ராட்சசனின் தேரைச் சாம்பலாக்கி,(97) தேவர்களும் ஆச்சரியத்தால் நிறையும்படி பூமியின் குடல்களுக்குள் {ஆழத்திற்குள்} சென்று மறைந்தது. தன் தேரில் இருந்து குதித்து அந்த அசனியைப் பிடித்த கர்ணனை அனைத்து உயிரினங்களும் பாராட்டின. அந்தச் சாதனையை அடைந்த கர்ணன் மீண்டும் தனது தேரில் ஏறினான்.(98,99) பிறகு, எதிரிகளை எரிப்பவனான அந்தச் சூதன் மகன் {கர்ணன்} தன் கணைகளை ஏவத் தொடங்கினான். உண்மையில், ஓ! கௌரவங்களை அளிப்பவரே {திருதராஷ்டிரரே}, அந்தப் பயங்கரப் போரில் கர்ணனால் சாதிக்கப்பட்ட சாதனையானது உயிரினங்கள் அனைத்திலும் எவராலும் சாதிக்க முடியாததாக இருந்தது.

மழைத்தாரைகளால் தாக்கப்படும் மலையைப் போலக் கர்ணனின் கணைகளால் தாக்கப்பட்ட அந்தக் கடோத்கசன்,(100,101) வானத்தில் உருகும் ஆவி வடிவங்களைப் போலக் காட்சியில் இருந்து மீண்டும் மறைந்தான். இம்முறையில் போரிட்டவனும், பெரும் உடல்படைத்தவனும், எதிரிகளைக் கொல்பவனுமான அந்த ராட்சசன் {கடோத்கசன்}, தன் சுறுசுறுப்பின் மூலமாகவும், மாயா சக்திகளின் மூலமும், கர்ணனின் தெய்வீக ஆயுதங்களை அழித்தான். மாயா சக்திகளின் துணையுடன் அந்த ராட்சசனால் தன் ஆயுதங்கள் அழிக்கப்படுவதைக் கண்ட கர்ணன்,(102,103) அச்சத்தையடையாமல் அந்த மனித ஊனுண்ணியிடம் {கடோத்கசனிடம்} தொடர்ந்து போரிட்டான். பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்ட வலிமைமிக்க அந்தப் பீமசேனன் மகன் {கடோத்கசன்},(104) தன்னையே பல பகுதிகளாப் பிரித்து (குரு படையின்) வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அனைவரையும் அச்சுறுத்தினான். பிறகு அந்தப் போர்க்களத்தில் சிங்கங்களும், புலிகளும், கழுதைப்புலிகளும், {சிறுத்தைகளும்},(105) தீநாவுகளைக் கொண்ட பாம்புகளும், இரும்பு அலகுகளைக் கொண்ட பறவைகளும் வந்து சேர்ந்தன. கடோத்கசனைப் பொறுத்தவரை, கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட அந்தக் கணைகளால் தாக்கப்பட்டவனும்,(106) மலைகளின் இளவரசனை (இமயத்தைப்) போலத் தெரிந்தவனுமான அந்தப் பெருவடிவ ராட்சசன் {கடோத்கசன்} அங்கேயே அப்போதே மறைந்து போனான்.(107)

பிறகு பல ராட்சசர்கள், பிசாசங்கள், யாதுதானர்களும்[5], பயங்கர முகங்களைக் கொண்டவையும் பெரும் எண்ணிக்கையிலானவையுமான நரிகளும், சிறுத்தைகளும் கர்ணனை விழுங்குவதற்காக அவனை நோக்கி விரைந்தன.(108) இவையாவும் சூதனின் மகனை {கர்ணனை} அச்சுறுத்துவதற்காகப் பயங்கரமாக அலறிக் கொண்டே அவனை {கர்ணனை} அணுகின. அந்தப் பயங்கரமானவைகள் ஒவ்வொன்றையும், அவற்றின் குருதியைக் குடிப்பவையும், வேகமாகச் செல்ல உதவும் இறகுகளைக் கொண்டவையுமான பயங்கரமான கணைகள் பலவற்றால் துளைத்தான். இறுதியாக அவன் {கர்ணன்} ஒரு தெய்வீக ஆயுதத்தைப் பயன்படுத்தி அந்த ராட்சசனின் மாயையை அழித்தான்.(109,110) பிறகு அவன் {கர்ணன்} நேரானவையும், கடுமையானவையுமான சில கணைகளால் கடோத்கசனின் குதிரைகளைத் தாக்கினான். உடைந்த சிதைந்த அங்கங்களுடன் கூடிய அவை {குதிரைகள்}, அந்தக் கணைகளால் தங்கள் முதுகுகள் வெட்டப்பட்டு,(111) கடோத்கசன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கீழே பூமியில் விழுந்தன. அந்த ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்} தன் மாயை அகற்றப்பட்டதைக் கண்டு, மீண்டும் தன்னைக் காண முடியாதவனாக்கிக் கொண்டு, விகர்த்தனன் மகனான கர்ணனிடம், "நான் இப்போது உம்மை அழிக்கப் போகிறேன்" என்று சொன்னான்"{என்றான் சஞ்சயன்}.(112)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "கர்ணனுக்கும், ராட்சனுக்கும் {கடோத்கசனுக்கும்} இடையிலான போர் நடந்து கொண்டிருந்தபோது, ராட்சசர்களின் இளவரசனான வீர அலாயுதன் (களத்தில்) அங்கே தோன்றினான்.(1) ஒரு பெரும் படையின் துணையுடன் அவன் {அந்த அலாயுதன்} துரியோதனனை அணுகினான். உண்மையில், பல்வேறு வடிவங்களையும், பெரும் வீரத்தையும் கொண்ட ஆயிரக்கணக்கான பயங்கர ராட்சசர்கள் பலரால் சூழப்பட்ட அவன் {அலாயுதன்}, (பாண்டவர்களுடனான) பழைய சச்சரவை நினைவு கூர்ந்து (அந்தக் களத்தில்) தோன்றினான்.(2) {முன்பொரு காலத்தில்} அவனது {அலாயுதனின்} உறவினனும், பிராமணர்களை உண்டுவந்தவனுமான {ராட்சசன்} வீர பகன், பெரும் சக்தி படைத்த கிர்மீரன், அவனது நண்பன் ஹிடிம்பன் ஆகியோர் {பீமனால்} கொல்லப்பட்டனர்[1]. அவன் {அந்த அலாயுதன்}, தன் பழைய சச்சரவை அடைகாத்தபடியே நீண்ட காலம் காத்திருந்தான்.(3,4) இரவு போரொன்று இப்போது நடைபெறுவதை அறிந்த அவன் {அலாயுதன்}, பீமனைக் கொல்லும் விருப்பத்தால் உந்தப்பட்டு, மதங்கொண்ட ஒரு யானையைப் போலவோ, கோபக்காரப் பாம்பைப் போலவோ அங்கே வந்தான்.(5)


[1] ஆதிபர்வம் 156ல் ஹிடிம்ப வதத்தையும், ஆதிபர்வம் பகுதி 165ல் பகன் வதத்தையும், வன பர்வம் பகுதி 11ல் கிர்மீரன் வதத்தையும் காணலாம்.

போரை விரும்பிய அவன் {அலாயுதன்}, துரியோதனனிடம், "ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, என் உறவினர்களான பகன், கிர்மீரன் மற்றும் ஹிடிம்பன் ஆகிய ராட்சசர்கள் பீமனால் கொல்லப்பட்டனர் என்பது நீ அறிந்ததே. முன்பு எங்களையும், பிற ராட்சசர்களையும் அலட்சியம் செய்த அவனால் {பீமனால்}, கன்னிப்பெண்ணான ஹிடிம்பை கற்பழிக்கப்பட்டாள்[2] எனும்போது இன்னும் நான் வேறு என்ன சொல்ல வேண்டும்?(6,7) ஓ! மன்னா {துரியோதனா} அந்தப் பீமனைப் பின்தொடர்பவர்கள் அனைவரையும், அவனது குதிரைகள், தேர்கள், யானைகள் ஆகியவற்றோடு சேர்த்து அவனையும் {பீமனையும்}, அந்த ஹிடிம்பையின் மகனையும் {கடோத்கசனையும்}, அவனது நண்பர்களையும் கொல்லவே நான் இங்கே வந்தேன். நான் இன்று குந்தியின் மகன்கள் அனைவரையும், வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்}, அவர்களுக்கு முன்பு நடந்து வருபவர்களையும் கொல்வேன், அவர்களைப் பின்தொடர்ந்து வருவோர் அனைவருடன் சேர்த்து அவர்களை நான் விழுங்கப் போகிறேன். உன் துருப்புகள் அனைத்தையும் போரில் இருந்து விலகிக் கொள்ள ஆணையிடுவாயாக. பாண்டவர்களோடு நாங்கள் போரிடப் போகிறோம்" என்றான் {அலாயுதன்}.(8-10)

[2] வேறொரு பதிப்பில், "அந்தப் பீமன் மற்ற ராட்சசர்களையும், எங்களையும் அலட்சியம் செய்து கன்னிகையாயிருந்த ஹிடிம்பையையும் முன்பு அனுபவித்தான்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், "கடந்து போன நாட்களில் அவன் எங்கள் மகள் ஹிடிம்பையைக் கற்பழித்தான்" என்றிருக்கிறது. கங்குலியில் "Deflowered" என்ற வார்த்தையும், மன்மதநாததத்தரின் பதிப்பில், "Ravished" என்ற வார்த்தையும் கையாளப்பட்டிருக்கிறது. அலாயுதனின் இந்தக் குற்றச்சாட்டு, ஆதிபர்வம் பகுதி 157க்கு முரணாக உள்ளது.

அவனது இவ்வார்த்தைகளைக் கேட்ட துரியோதனன் மிகுந்த மகிழ்ச்சியை அடைந்தான். தன் தம்பியர்கள் அனைவரும் சூழ இருந்த அந்த மன்னன் {துரியோதனன்}, ராட்சசனின் {அந்த அலாயுதனின்} வார்த்தைகளை ஏற்றுக் கொண்டு,(11) "உன்னை முன்னிலையில் நிறுத்திக் கொண்டு, நாங்களும் எதிரியோடு போர்புரிவோம். எனது துருப்புகளின் பகை உணர்ச்சி இன்னும் தணியாததால், அவர்கள் அக்கறையில்லாத பார்வையாளர்களாக நிற்க மாட்டார்கள்" என்றான்.(12) அந்த ராட்சசக் காளை {அலாயுதன்}, "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி, மனித ஊனுண்ணும் தன் படையின் துணையுடன் பீமனை எதிர்த்து வேகமாக விரைந்தான்.(13)


சுடர்மிக்க வடிவம் கொண்ட அந்த அலாயுதன், சூரியப் பிரகாசம் கொண்ட தேரில் ஏறி வந்தான். உண்மையில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தத் தேரானது, கடோத்கசனின் தேரைப் போன்றே இருந்தது.(14) அலாயுதனுடைய தேரின் சடசடப்பொலியும் கடோத்கசனுடையதைப் போலவே ஆழமானதாக இருந்தது; மேலும் அது பல வளைவுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அந்தப் பெரிய தேர் கரடித் தோல்களால் மறைக்கப்பட்டிருந்தது; மேலும் அஃது {அந்த தேர்} ஒரு நல்வம் {நானூறு முழம்} அளவைக் கொண்டிருந்தது.(15) அவனது குதிரைகள், கடோத்கசனுடையவையைப் போன்றே, பெரும் வேகம் கொண்டவையாகவும், வடிவில் யானைகளுக்கு, குரலில் கழுதைகளுக்கு ஒப்பானவையாகவும் இருந்தன. இறைச்சியும், குருதியும் உண்டு வாழ்பவையும் பெரும் வடிவைக் கொண்டவையுமான அவைகளைப் போன்ற நூறு உயிரினங்கள் அவனது {அலாயுதனின்} வாகனத்தில் பூட்டப்பட்டிருந்தன.(16) உண்மையில் அந்தத் தேரின் சடசடப்பொலியானது, கடோத்கசனுடையதைப் போலவே பெருமேகத்தின் ஆழமான முழக்கத்தைக் கொண்டிருந்தது.

அவனது வில்லும், அவனது எதிராளியுடையதை {கடோத்கசனுடையதைப்} போலவே பெரியதாகவும், வலிமையானதாகவும் இருந்தது, மேலும் அதனுடைய நாண்கயிறும் கடினமானதாக இருந்தது.(17) தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான அவனது கணைகளும், கடோத்கசனுடையவையைப் போன்றே பெரிதானவையாகவும், {தேர்களுடைய} அக்ஷங்களின் அளவுள்ளவையாகவும் இருந்தன. வீர அலாயுதன், கடோத்கசன் அளவுக்கு வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனாக இருந்தான்;(18) சூரியன் அல்லது நெருப்பின் காந்தியைக் கொண்ட அவனது தேரின் கொடிமரத்தில், கடோத்கசனுடையதைப் போலவே கழுகுகளும், அண்டங்காங்ககைகளும் அமர்ந்திருந்தன[3]. வடிவில் அவன் கடோத்கசனைவிட அழகாக இருந்தான்; (கோபத்தில்) கலங்கியிருந்த அவனது முகமானது சுடர்மிக்கதாகத் தெரிந்தது.(19) சுடர்மிக்க அங்கதங்கள், சுடர்மிக்கக் கிரீடம், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மாலைகள், தலைப்பாகை, வாள் ஆகியவற்றோடு, கதாயுதம், புசுண்டிகள், குறுங்கதாயுதங்கள் {உலக்கைகள்}, கலப்பைகள், வில், கணைகள் ஆகியவற்றைத் தரித்துக் கொண்டு, யானையைப் போன்ற கடினமான கருந்தோலுடன்,(20) நெருப்பின் காந்தி கொண்ட தேரில் ஏறி வந்த அவன் {அலாயுதன்}, பாண்டவப் படையைப் பீடித்து முறியடித்துக் கொண்டிருந்த போது, மின்னலின் கீற்றுகளால் அலங்கரிக்கப்பட்டு வானத்தில் திரியும் மேகத்தைப் போலத் தெரிந்தான்.(21) (அந்த அலாயுதன் போரிட வந்த போது), பெரும் வலிமை கொண்டவர்களும், (வாள் மற்றும்) கேடயம் தரித்துக் கவசம் பூண்டவர்களுமான பாண்டவப் படையின் முக்கிய மன்னர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் போரில் ஈடுபட்டனர்" {என்றான் சஞ்சயன்}.(22)
….
தொடரும்..
..
மகாபாரதம் தொடர் முழுவதும் படிக்க இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைந்திருங்கள்  

No comments:

Post a Comment