மஹாபாரதம்(முழுவதும்)-பாகம்-315
துரோண பர்வம்
….
சகாதேவனை வென்ற கர்ணன்
..
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் பூரி என்பவன், நீர் நிறைந்த தடாகத்தை நோக்கி முன்னேறிச் செல்லும் யானையைப் போல முன்னேறியவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனுமான சிநியின் பேரனை {சாத்யகியைத்} தடுத்தான்.(1) அப்போது கோபத்தால் தூண்டப்பட்ட சாத்யகி, ஐந்து கூரிய கணைகளால் தன் எதிரியின் {பூரியின்} மார்பைத் துளைத்தான். இதனால் பின்னவனுக்கு {பூரிக்கு} குருதி வழியத் தொடங்கியது.(2) அதே போல அம்மோதலில் அந்தக் குரு போர் வீரனும் {பூரியும்}, போரில் வீழ்த்தக் கடினமான வீரனான சிநியின் பேரனைப் பத்து கணைகளால் பெரும் வேகத்துடன் அவனது மார்பில் துளைத்தான்.(3) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் விற்களை முழு அளவுக்கு வளைத்த அந்த வீரர்கள், கோபத்தால் கண்கள் சிவந்து, அம்மோதலில் ஒருவரையொருவர் சிதைக்கத் தொடங்கினர்.(4) சினத்தால் தூண்டப்பட்ட அந்த இருவீரர்களின் கணைமாரிகள், யமனுக்கோ, கதிர்களை இறைக்கும் சூரியனுக்கோ ஒப்பாக மிகப் பயங்கரமாக இருந்தன.(5)
தங்கள் கணைகளால் ஒருவரையொருவர் மறைத்தபடியே அந்தப் போரில் அவ்விருவரும் ஒருவரையொருவர் எதிர்த்து நின்றனர். சிறிது நேரத்திற்கு அந்தப் போர் சமமாகவே நடந்தது. பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சினத்தால் தூண்டப்பட்ட சிநியின் பேரன் {சாத்யகி}, சிரித்துக் கொண்டே சிறப்புமிக்க அந்தக் குரு வீரனின் {பூரியின்} வில்லை அந்தப் போரில் அறுத்தான்.(7) அவனது வில்லை அறுத்ததும், ஒன்பது கூரிய கணைகளால் அவனது {பூரியின்} மார்பைத் துளைத்த சாத்யகி, அவனிடம் {பூரியிடம்}, "நில், நிற்பாயாக" என்றான்.(8) வலிமைமிக்கத் தன் எதிரியால் {சாத்யகியால்} ஆழத் துளைக்கப்பட்ட அந்த எதிரிகளை எரிப்பவன் {பூரி}, விரைவாக மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு அந்தச் சாத்வத வீரனை {சாத்யகியைப்} பதிலுக்குத் துளைத்தான்.(9) மூன்று கணைகளால் சாத்வத வீரனைத் துளைத்த பூரி, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சிரித்துக் கொண்டே, கூரிய பல்லம் ஒன்றைக் கொண்டு தன் எதிரியின் {சாத்யகியின்} வில்லை அறுத்தான்.(10) தன் வில் அறுபட்டதும், சினத்தால் வெறிபிடித்த சாத்யகி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மூர்க்கமான ஈட்டியொன்றை பூரியின் அகலமான மார்பின் மீது வீசினான்.(11) அந்த ஈட்டியால் துளைக்கப்பட்ட பூரி, ஆகாயத்தில் இருந்து விழும் சூரியனைப் போலக் குருதியால் நனைந்தபடியே தன் சிறந்த தேரில் இருந்து கீழே விழுந்தான்.(12)
இப்படி அவன் {பூரி} கொல்லப்பட்டதைக் கண்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அஸ்வத்தாமன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சிநியின் பேரனை {சாத்யகியை} எதிர்த்து மூர்க்கத்துடன் விரைந்தான்.(13) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சாத்யகியிடம் "நில், நிற்பாயாக" என்று சொன்ன அவன் {அஸ்வத்தாமன்}, மேருவின் மார்பில் {சாரலில்} மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போல, கணை மாரிகளால் அவனை {சாத்யகியை} மறைத்தான்.(14) சிநியின் பேரனுடைய தேரை நோக்கி அவன் {அஸ்வத்தாமன்} விரைவதைக் கண்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான கடோத்கசன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உரக்க முழங்கிய படியே அவனிடம் {அஸ்வத்தாமனிடம்}, "ஓ! துரோணரின் மகனே {அஸ்வத்தாமரே}, நிற்பீர், நிற்பீராக. என்னிடம் இருந்து நீர் உயிருடன் தப்ப இயலாது. (அசுரன்) மஹிஷனைக் கொன்ற ஆறுமுகத்தோனை (கார்த்திகேயனைப்) போல நான் இப்போது உம்மைக் கொல்வேன்.(16) போருக்கான ஆசைகள் அனைத்தையும் நான் இன்று உமது இதயத்தில் இருந்து அகற்றுவேன்" என்றான் {கடோத்கசன்}.
இவ்வார்த்தைகளைச் சொன்னவனும், பகை வீரர்களைக் கொல்பவனுமான அந்த ராட்சசன் (கடோத்கசன்), கோபத்தால் தாமிரமாகச் சிவந்த கண்களுடன்,(17) யானைகளின் இளவரசனை எதிர்த்து விரையும் சிங்கம் ஒன்றைப் போல, துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} எதிர்த்துச் சீற்றத்துடன் விரைந்தான். கடோத்கசன், தன் எதிரியின் மீது ஒரு தேருடைய அக்ஷத்தின் {அச்சின்} அளவுடைய கணைகளை ஏவி,(18) அதைக் கொண்டு, மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போலத் தேர்வீரர்களில் காளையான அவனை {அஸ்வத்தாமனை} மறைத்தான். எனினும், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, அந்தக் கணைமழை தன்னை அடையும் முன்பே அந்தப் போரில், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போன்ற தன் கணைகளைக் கொண்டு அவற்றை விலக்கினான். பிறகு அவன் {அஸ்வத்தாமன்}, எதிரிகளைத் தண்டிப்பவனும், ராட்சசர்களின் இளவரசனுமான கடோத்கசனை, வேகமாகச் செல்பவையும் முக்கிய அங்கங்கள் அனைத்தையும் ஊடுருவ-வல்லவையுமான நூற்றுக்கணக்கான கூரிய கணைகளால் துளைத்தான். அஸ்வத்தாமனின் அந்தக் கணைகளால் இப்படித் துளைகப்பட்ட அந்த ராட்சசன் {கடோத்கசன்}, அந்தப் போர்க்களத்தில்,(19-21) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தன் உடலில் முட்கள் விறைத்திருந்த முள்ளம்பன்றியைப் போல மிக அழகாகத் தெரிந்தான்.
பிறகு, பீமசேனனின் வீரமகன் {கடோத்கசன்}, சினத்தால் நிறைந்து,(22) இடியின் முழக்கத்துடன் காற்றில் "விஸ்" எனச் செல்லும் கடுங்கணைகள் பலவற்றால் துரோணரின் மகனை {அஸ்வத்தாமனைச்} சிதைத்தான். மேலும் அவன் {கடோத்கசன்}, கத்தி போன்ற தலை கொண்ட {க்ஷுரப்ரங்கள்} சிலவும், பிறை போன்ற தலை கொண்ட {அர்த்தச்சந்திர பாணங்கள்} சிலவும், நீளமாகவும், கூர்மையாகவும் {நாராசங்கள்} சிலவும், தவளை முகம் போன்ற தலை கொண்ட சிலவும், பன்றியின் காதுகளுக்கு ஒப்பான {வராஹகர்ணங்கள்} சிலவும், முள்கொண்ட {விகர்ணங்கள்} சிலவும், வேறு வகையைச் சேர்ந்த {நாளீகங்கள்} சிலவும் [1] எனப் பல்வேறு வகைகளிலான துல்லியமான கணை மாரிகளை அஸ்வத்தாமன் மீது பொழிந்தான். பெரும் மேகத் திரள்களை விலக்கும் காற்றைப் போல, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் உணர்வுகள் கலங்காத துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கடுமையானவையும், தாங்கிக் கொள்ள முடியாதவையும், இடியின் முழக்கத்திற்கு ஒப்பான ஒலியைக் கொண்டவையும், தன் மீது தொடர்ச்சியாகப் பாய்ந்தவையுமான அந்த ஒப்பற்ற ஆயுதமழையை மந்திரங்களால் தெய்வீக ஆயுதங்களின் சக்திகளை ஈர்த்திருந்த தனது பயங்கரக் கணைகளால் அழித்தான்.
[1] "நாளீகங்கள் என்று இங்கே பயன்படுத்தப்பட்டிருப்பது கணைகளில் ஏதோவொரு வகை என்று தோன்றுகிறது. வேறு வல்லுனர்களைச் சார்ந்து முன்பொரு குறிப்பில், இதையே நான் துப்பாக்கிகளில் ஒருவகையாகச் சொல்லியிருக்கிறேன்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பயங்கரமானதும், போர்வீரர்களைப் பிரமிப்பில் நிரப்புவதுமான மற்றொரு மோதலொன்று (ஆயுதங்களே போராளிகளாக) ஆயுதங்களுக்கிடையில் ஆகாயத்தில் நடப்பதாகத் தெரிந்தது.(23-26) அவ்விரு போர்வீரர்களால் ஏவப்பட்ட ஆயுதங்களின் மோதலால் சுற்றிலும் உண்டான தீப்பொறிகளுடன்(27) கூடிய ஆகாயமானது, மாலைவேளையில் விட்டிற்பூச்சிகளின் கூட்டத்தால் ஒளியூட்டப்பட்டது போல அழகாகத் தெரிந்தது. அப்போது துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, உமது மகன்களுக்கு ஏற்புடையதைச் செய்வதற்காகத் தன் கணைகளால் திசைப்புள்ளிகள் அனைத்தையும் நிறைத்து அந்த ராட்சசனை {கடோத்கசனை} மறைத்தான்.(28) அப்போது அடர்த்தியான இருள் கொண்ட அந்த இரவில், சக்ரனுக்கும் {இந்திரனுக்கும்}, பிரகலாதனுக்கும் இடையில் நடந்த மோதலுக்கு ஒப்பாகத் துரோணரின் மகனுக்கும் {அஸ்வத்தாமனுக்கும்}, அந்த ராட்சசனுக்கும் {கடோத்கசனுக்கும்} இடையில் மீண்டும் ஒரு போர் தொடங்கியது.(29)
அப்போது, சினத்தால் நிறைந்த கடோத்கசன், அந்தப் போரில், யுக நெருப்புக்கு ஒப்பான பத்து கணைகளால் துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} மார்பில் தாக்கினான். ராட்சசனால் {கடோத்கசனால்} ஆழத் துளைக்கப்பட்ட அந்த வலிமைமிக்கத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, காற்றால் அசைக்கப்படும் நெடிய மரம் ஒன்றைப் போல அந்தப் போரில் நடுங்கத் தொடங்கினான். தன்னைத் தாங்கிக் கொள்வதற்காகக் கொடிக்கம்பத்தைப் பிடித்த அவன் {அஸ்வத்தாமன்} அப்படியே மயங்கிப் போனான்.(30-32) அப்போது உமது துருப்புகள் அனைத்தும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, "ஓ!" என்றும், "ஐயோ!" என்றும் கதறின. உண்மையில், ஓ! ஏகாதிபதி, உமது போர்வீரர்கள் அனைவரும், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} கொல்லப்பட்டதாகவே கருதினர்.(33) அஸ்வத்தாமனை அந்த அவல நிலையில் கண்ட பாஞ்சாலர்களும், சிருஞ்சயர்களும் அந்தப் போரில் உரத்த சிங்க முழக்கங்களைச் செய்தனர்.(34)
பிறகு, எதிரிகளை நொறுக்குபவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அஸ்வத்தாமன் தன் உணர்வுகள் மீண்டு, தன் இடது கையால் வில்லை வலிமையாக வளைத்து, தன் காது வரை வில்லின் நாணை இழுத்துக் கடோத்கசனைக் குறி பார்த்து, யமனுக்கு ஒப்பான பயங்கரக் கணை ஒன்றை விரைவாக ஏவினான்.(35,36) கடுமையானதும், நல்ல சிறகுகளைக் கொண்ட அந்தச் சிறந்த கணையானது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} அந்த ராட்சசனின் {கடோத்கசனின்} மார்பைத் துளைத்து கடந்து சென்று பூமிக்குள் நுழைந்தது.(37) போரில் தன் ஆற்றலில் செருக்குடைய துரோணரின் மகனால் {அஸ்வத்தாமனால்} ஆழத் துளைக்கபட்டவனும், பெரும் பலத்தைக் கொண்டவனுமான அந்த ராட்சசர்களின் இளவரசன் {கடோத்கசன்}, தன் தேர்த்தட்டில் கீழே அமர்ந்தான்.(38) ஹிடிம்பையின் மகன் தன் உணர்வுகளை இழந்ததைக் கண்டு அச்சமடைந்த அவனது {கடோத்கஜனது} தேரோட்டி, துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} முன்னிலையில் இருந்து அவனை {கடோத்கசனை} சுமந்து சென்று, அவனைக் களத்தைவிட்டே விரைவாக அகற்றினான்.(39) இப்படி அந்த மோதலில் ராட்சசர்களின் இளவரசனான கடோத்கசனைத் துளைத்தவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்} உரக்க முழங்கினான்.(40) உமது மகன்களாலும், உமது போர்வீரர்களாலும் வழிபடப்பட்ட அஸ்வத்தாமனின் உடலானது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, நடுப்பகல் சூரியனைப் போலச் சுடர்விட்டெரிந்தது.(41)
துரோணரின் தேர் முன்பு போரிட்டுக் கொண்டிருந்த பீமசேனனைப் பொறுத்தவரை, மன்னன் துரியோதனன், கூர் தீட்டப்பட்ட கணைகள் பலவற்றால் தானே அவனைத் {பீமனைத்} துளைத்தான்.(42) எனினும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பீமசேனன், அவனை {துரியோதனனைப்} ஒன்பது கணைகளால் பதிலுக்குத் துளைத்தான். பிறகு துரியோதனன், இருபத்தைந்து கணைகளால் பீமசேனனைத் துளைத்தான்.(43) அந்தப் போர்க்களத்தில் கணைகளால் ஒருவரையொருவர் மறைத்த அந்தப் போர்வீரர்கள் இருவரும், ஆகாயத்தில் மேகத்தால் மறைக்கப்பட்ட சூரியனையும், சந்திரனையும் போலத் தெரிந்தனர்.(44) அப்போது மன்னன் துரியோதனன், ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, சிறகுபடைத்த ஐந்து கணைகளால் பீமனைத் துளைத்து, "நில், நிற்பாயாக" என்றான்.(45) பிறகு பீமன், கூரிய கணைகளால் குரு மன்னனுடைய {துரியோதனனுடைய} வில்லையும், அவனது கொடிமரத்தையும் அறுத்து, மேலும் நேரான தொண்ணூறு கணைகளால் அவனையும் {துரியோதனனையும்} துளைத்தான்.(46)
அப்போது சினத்தால் நிறைந்த துரியோதனன், ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, உறுதிமிக்க மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, வில்லாளிகள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, போரின் முன்னணியில் நின்று கொண்டிருந்த பீமசேனனைக் கூர் தீட்டப்பட்ட கணைகள் பலவற்றால் பீடித்தான். துரியோதனனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட அந்தக் கணைகளைக் கலங்கடித்த பீமன், இருபத்தைந்து குறுங்கணைகளால் {க்ஷுத்ரகங்களால்} குருமன்னனை {துரியோதனனைத்} துளைத்தான்.(47,48) பிறகு கோபத்தால் தூண்டப்பட்ட துரியோதனன், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, கத்தி முகக் கணை {க்ஷுரப்ரம்} ஒன்றால் பீமசேனனின் வில்லை அறுத்து, பத்து கணைகளால் பீமனைப் பதிலுக்குத் துளைத்தான். அப்போது மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட பீமசேனன், ஏழு கூரிய கணைகளால் மன்னனை வேகமாகத் துளைத்தான்.(49,50) பெரும் கரநளினத்தை வெளிக்காட்டிய துரியோதனன், அவனது அந்த வில்லையும் அறுத்தான்.(51) இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது எனப் பீமன் எடுத்த விற்களும் அதே போலவே வெட்டப்பட்டன. உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வெற்றியை விரும்பியவனும், தன் ஆற்றலில் செருக்குடையவனுமான உமது மகன் {துரியோதனன்}, பீமன் ஒரு வில்லை எடுத்ததுமே அதை வெட்டினான்.
தன் விற்கள் மீண்டும் மீண்டும் வெட்டப்படுவதைக் கண்ட பீமன், முழுக்க இரும்பாலானதும், வஜ்ரத்தைப் போன்ற கடினமானதுமான ஈட்டி ஒன்றை அந்தப் போரில் வீசினான்.(52,53) நெருப்பின் தழலைப் போலச் சுடர்விட்ட அந்த ஈட்டி, மிருத்யுவின் சகோதரிக்கு ஒப்பானதாக இருந்தது.(54) எனினும் அந்தக் குரு மன்னன் {துரியோதனன்}, போர்வீரர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, பீமனின் கண்களுக்கு முன்பாகவே, பெண்ணின் குழலைப் பிரிக்கும் வகுட்டைப் போல நேரான கோடாக நெருப்பின் காந்தியுடன் தன்னை நோக்கி ஆகாயத்தினூடாக வந்து கொண்டிருந்த அந்த ஈட்டியை மூன்று துண்டுகளாக வெட்டினான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அப்போது பீமன், கனமானதும், சுடர்விட்டெரிவதுமான கதாயுதம் ஒன்றைச் சுழற்றி, அதைத் துரியோதனனின் தேர் மீது பெரும் பலத்தோடு எறிந்தான். அந்தக் கனமான கதாயுதமானது, அம்மோதலில் உமது மகனின் குதிரைகள், சாரதி மற்றும் தேரையும் விரைவாக நொறுக்கியது. பிறகு உமது மகன் {துரியோதனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பீமனிடம் அச்சங்கொண்டு, மிகக் குறுகலான இடத்தில் தன்னை ஒளித்துக் கொண்டு, சிறப்புமிக்க நந்தகனின் வேறொரு தேரில் ஏறிக் கொண்டான்.(55-58) அப்போது அந்த இருண்ட இரவுக்கு மத்தியில் சுயோதனன் {துரியோதனன்} கொல்லப்பட்டதாகக் கருதிய பீமன், கௌரவர்களை அறைகூவியழைத்து உரக்க சிங்க முழக்கம் செய்தான்.
உமது போர்வீரர்களும் மன்னன் {துரியோதனன்} கொல்லப்பட்டதாகவே கருதினர்.(59) அவர்கள் அனைவரும், "ஓ" என்றும், "ஐயோ" என்று உரக்கக் கதறினார். அச்சமடைந்த அந்தப் போர்வீரர்களின் ஓலங்களையும், உயர் ஆன்ம பீமனின் முழக்கங்களையும் கேட்ட மன்னன் யுதிஷ்டிரனும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சுயோதனன் கொல்லப்பட்டதாகவே கருதினான்.(61,62) மேலும் பாண்டுவின் அந்த மூத்த மகன் {யுதிஷ்டிரன்}, பிருதையின் மகனான விருகோதரன் {பீமன்} இருந்த இடத்திற்கு வேகமாக விரைந்து சென்றான். பாஞ்சாலர்கள், சிருஞ்சயர்கள், மத்ஸ்யர்கள், கைகேயர்கள், சேதிகள் ஆகியோரும் தங்கள் பலம் அனைத்தையும் {திரட்டிக்} கொண்டு, துரோணரைக் கொல்லும் விருப்பதால் வேகமாக முன்னேறினர்.(63) அங்கே துரோணருக்கும் எதிரிக்கும் இடையில் ஒரு பயங்கரப் போர் நடந்தது. இரு தரப்பின் போராளிகளும் அடர்த்தியான இருளில் மறைக்கப்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொன்றனர்" {என்றான் சஞ்சயன்}.(64)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "விகர்த்தனன் மகனான கர்ணன் {வைகர்த்தனன்} [1], ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் துரோணரை அடையும் விருப்பத்தில் முன்னேறிக் கொண்டிருந்தவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான சகாதேவனைத் தடுத்தான்.(1) ராதையின் மகனை {கர்ணனை} ஒன்பது கணைகளால் துளைத்த சகாதேவன், மீண்டும் அந்தப் போர்வீரனை {கர்ணனை} ஒன்பது நேரான கணைகளால் துளைத்தான்.(2) பிறகு கர்ணன், ஒரு நூறு கணைகளால் சகாதேவனைப் பதிலுக்குத் துளைத்துத் தன் கர நளினத்தை வெளிக்காட்டியபடியே, நாண்பொருத்தப்பட்ட பின்னவனின் {சகாதேவனின்} வில்லை வெட்டினான்.(3) பிறகு மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட மாத்ரியின் வீர மகன் {சகாதேவன்}, கர்ணனை இருபது கணைகளால் துளைத்தான். அவனது {சகாதேவனின்} இந்தச் சாதனை மிக அற்புதமானதாகத் தெரிந்தது.(4)
[1] "வைகர்த்தனன் என்பதற்கு, தன் தோலையோ, இயற்கையான கவசத்தையோ உரித்துக் கொண்டவன் என்றும் பொருள் கொள்ளலாம். சூரியதேவனின் மகனே கர்ணன் என்பது அவனது மரணத்திற்குப் பிறகே அறியப்பட்டது என்றாலும், நாடகத் தன்மையைப் பாதுகாப்பதற்காக இந்து உரையாசிரியர்கள் இத்தகு பத்திகளில் எல்லாம் இப்படியே {சூரியனின் மகன் என்ற பொருளிலேயே} விளக்குகின்றனர்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அப்போது கர்ணன், நேரான கணைகள் பலவற்றால், சகாதேவனின் குதிரைகளைக் கொன்று, ஒரு பல்லத்தால் பின்னவனின் {சகாதேவனின்} சாரதியையும் விரைவாக யமனுலகுக்கு அனுப்பினான்.(5) தேரற்றவனான சகாதேவன் ஒரு வாளையும், ஒரு கேடயத்தையும் எடுத்துக் கொண்டான். சிரித்துக் கொண்டேயிருந்த கர்ணனால் அந்த ஆயுதங்களும் வெட்டப்பட்டன.(6) அப்போது வலிமைமிக்கச் சகாதேவன், அம்மோதலில், கனமானதும், பயங்கரமானதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான கதாயுதம் ஒன்றை விகர்த்தனன் மகனின் {கர்ணனின்} தேரை நோக்கி வீசினான்.(7) பிறகு கர்ணன், தன்னை நோக்கி மூர்க்கமாக வந்து கொண்டிருந்ததும், சகாதேவனால் வீசப்பட்டதுமான அந்தக் கதாயுதத்தைத் தன் கணைகளால் விரைவாக வெட்டி, அதைப் பூமியில் விழச் செய்தான்.(8) தன் கதாயுதம் வெட்டப்படதைக் கண்ட சகாதேவன், கர்ணனின் மீது ஈட்டி ஒன்றை வீசினான். அந்த ஈட்டியும் கர்ணனால் வெட்டப்பட்டது.(9)
அப்போது தன் சிறந்த தேரில் இருந்து வேகமாகக் கீழே குதித்த அந்த மாத்ரியின் மகன் {சகாதேவன்}, ஒரு தேர்ச்சக்கரத்தை எடுத்துத் தன் எதிரே இருந்த அதிரதன் மகன் {கர்ணன்} மீது வீசினான்.(10) எனினும், அந்தச் சூதனின் மகன் {கர்ணன்}, உயர்த்தப்பட்ட காலச் சக்கரம் போலத் தன்னை நோக்கி வந்த அந்தச் சக்கரத்தைப் பல்லாயிரம் கணைகளால் வெட்டினான். அந்தச் சக்கரம் வெட்டப்பட்ட போது, கர்ணனைக் குறி பார்த்த சகாதேவன், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, தன் தேரின் அச்சு {ஏர்க்கால்}, தன் குதிரைகளின் கடிவாளங்கள், தேர்களின் நுகத்தடிகள் ஆகியவற்றையும், யானைகள், குதிரைகள் மற்றும் இறந்து கிடந்த மனித உடல்களின் அங்கங்கள் ஆகியவற்றையும் அவன் {கர்ணன்} மீது வீசினான்.(11,12) கர்ணன் அவையாவையும் தன் கணைகளால் வெட்டினான். ஆயுதங்கள் அனைத்தையும் தான் இழந்துவிட்டதைக் கண்ட மாத்ரியின் மகனான சகாதேவன், கணைகள் பலவற்றால் கர்ணனால் தாக்கப்பட்டுப் போரை விட்டகன்றான்.(13,14)
சிறிது நேரம் அவனை {சகாதேவனைப்} பின்தொடர்ந்த அந்த ராதையின் மகன் {கர்ணன்}, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே},(15) சகாதேவனிடம் சிரித்துக் கொண்டே இந்தக் கொடூர வார்த்தைகளைச் சொன்னான்: "ஓ! வீரா {சகாதேவா}, போர்க்களத்தில் உன்னைவிட மேம்பட்டவர்களுடன் போரிடாதே.(16) ஓ! மாத்ரியின் மகனே {சகாதேவா}, {உனக்கு} இணையானவர்களுடன் போரிடுவாயாக. என் வார்த்தைகளில் ஐயங்கொள்ளாதே" என்றான். பிறகு தன் வில்லின் நுனியால் அவனை {சகாதேவனைத்} தொட்ட அவன் {கர்ணன்}, மீண்டும் {சகாதேவனிடம்}(17) "அதோ அர்ஜுனன், போரில் உறுதியான தீர்மானத்தோடு குருக்களுடன் போரிடுகிறான். ஓ! மாத்ரியின் மகனே {சகாதேவா}, அங்கே செல்வாயாக, அல்லது நீ விரும்பினால் வீட்டுக்குத் திரும்புவாயாக" என்றான்.(18) அந்த வார்த்தைகளைச் சொன்னவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனுமான கர்ணன், சிரித்துக் கொண்டே, பாஞ்சாலர்களின் மன்னனுடைய துருப்புகளை எதிர்த்துச் சென்றான்.(19)
வலிமைமிக்கத் தேர்வீரனும், உண்மைக்கு அர்ப்பணிப்புள்ளவனுமான அந்த எதிரிகளைக் கொல்பவன் {கர்ணன்}, மாத்ரியின் மகனை {சகாதேவனைக்} கொல்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தும், குந்தியின் வார்த்தைகளை நினைவில் கொண்டு அவனைக் {சகாதேவனைக்} கொல்லாமல் விட்டான்.(20) பிறகு இதயம் நொந்த சகாதேவன், கணைகளால் பீடிக்கப்பட்டும், கர்ணனின் வார்த்தைகளெனும் ஈட்டிகளால் துளைக்கப்பட்டும், தன் உயிரின் மீதான ஆசையைக் கைவிட்டான்.(21) பிறகு அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {சகாதேவன்}, பாஞ்சாலர்களின் சிறப்புமிக்க இளவரசனனான ஜனமேஜயனின் தேரில் வேகமாக ஏறிக் கொண்டான்" {என்றான் சஞ்சயன்}.(22)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, துரோணரை அடைய வேகமாகச் சென்று கொண்டிருந்த விராடனையும், அவனது துருப்புகளையும் அனைத்துப் பக்கங்களிலும் கணைமேகங்களால் மறைத்தான்.(1) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் வில்லாளிகளான அவ்விருவருக்கும் இடையில் நடைற்ற போரானது, பழங்காலத்தில் பலிக்கும் {மகாபலி}, வாசவனுக்கும் {இந்திரனுக்கு} இடையில் நடந்த போருக்கு ஒப்பானதாக இருந்தது.(2) பெரும் சுறுசுறுப்புடைய மத்ர ஆட்சியாளன் {சல்லியன்}, ஒரு பெரும்படையின் தலைவனான விராடனை நூறு{100} நேரான கணைகளால் தாக்கினான்.(3) பதிலுக்கு மன்னன் விராடன், ஒன்பது{9} கூரிய கணைகளால் மத்ர ஆட்சியாளனை {சல்லியனைத்} துளைத்து, மீண்டும் எழுபத்து மூன்றாலும் {73}, அதற்கு மேலும் ஒரு நூறாலும் {100} அவனைத் {சல்லியனைத்} துளைத்தான்.(4)
பிறகு, அந்த மத்ர ஆட்சியாளன் {சல்லியன்}, விராடனின் தேரில் பூட்டப்பட்டிருந்த நான்கு குதிரைகளைக் கொன்று, பின்னவனின் {விராடனின்} குடையையும், கொடிமரத்தையும் இரண்டு கணைகளால் வெட்டி வீழ்த்தினான்.(5) அந்தக் குதிரைகளற்ற தேரில் இருந்து வேகமாகக் கீழே குதித்த அந்த மன்னன் {விராடன்}, தன் வில்லை வளைத்துக் கூரிய கணைகளை ஏவியபடியே நின்றான்.(6) தன் அண்ணன் குதிரைகளை இழந்ததைக் கண்ட {விராடனின் தம்பியான} சதாநீகன், துருப்புகள் அனைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தன் தேரில் ஏறிச் சென்று அவனை {சல்லியனை} விரைவாக அணுகினான்.(7) எனினும் மத்ர ஆட்சியாளன் {சல்லியன்}, முன்னேறி வரும் சதாநீகனைப் பல கணைகளால் துளைத்து, அவனை {சதாநீகனை} யமனுலகுக்கு அனுப்பி வைத்தான்.(8)
வீரச் சதாநீகன் வீழ்ந்ததும், பெரும்படை ஒன்றின் தலைவனான அந்த விராடன், கொடிமரம் மற்றும் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டதும், வீழ்ந்த வீரனுடையதுமான {சதாநீகனுடையதுமான} அந்தத் தேரில் ஏறிக் கொண்டான்.(9) தன் கண்களை அகல விரித்து, கோபத்தால் ஆற்றல் இரட்டிப்படைந்த விராடன், சிறகுகள் படைத்த கணைகளால் மத்ர ஆட்சியாளனின் {சல்லியனின்} தேரை வேகமாக மறைத்தான்.(10) அப்போது சினத்தால் தூண்டப்பட்ட மத்ர ஆட்சியாளன் {சல்லியன்}, பெரும்படையொன்றின் தலைவனான விராடனை ஒரு நூறு நேரான கணைகளால் {அவனது} மார்பில் ஆழத் துளைத்தான்.(11) மத்ரர்களின் வலிமைமிக்க ஆட்சியாளனால் {சல்லியனால்} ஆழத்துளைக்கப்பட்டவனும், பெரும் தேர்வீரனுமான விராடன், தன் தேர்த்தட்டில் அமர்ந்தவாறே மயங்கிப் போனான்.(12) அம்மோதலில் கணைகளால் சிதைக்கப்பட்ட அவனைக் {விராடனைக்} கண்ட அவனது சாரதி {போர்க்களத்திற்கு} வெளியே கொண்டு சென்றான். பிறகு அந்தப் பரந்த படையானது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, போர்க்கள ரத்தினமான அந்தச் சல்லியனின் நூற்றுக்கணக்கான கணைகளால் கொல்லப்பட்டு அந்த இரவில் தப்பி ஓடின.(13)
துருப்புகள் ஓடிப்போவதைக் கண்ட வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சல்லியன் இருந்த அந்த இடத்திற்கு வேகமாக வந்தனர்.(14) அப்போது ராட்சசர்களின் இளவரசனான அலம்புசன் [1], ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எட்டுக் குதிரைகளுடன் கூடியதும், குதிரை முகங்களைக் கொண்ட பயங்கரத் தோற்றமுடைய பிசாசங்கள் பூட்டப்பட்டதும், இரத்தச் சிவப்பான கொடிகளைக் கொண்டதும், உருக்கால் ஆனதும், மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டதும், கரடித் தோலால் மறைக்கப்பட்டதும், புள்ளிகளுடன் கூடிய சிறகுகளையும், அகல விரித்த கண்களையும் கொண்டு, இடையறாமல் கூச்சலிட்ட பயங்கரமான, கடுந்தோற்றமுடைய கழுகு அமர்ந்திருந்த நெடிய கொடிமரத்தைக் கொண்டதுமான முதன்மையான தேரில் ஏறிக்கொண்டு, {சல்லியனை எதிர்த்து} முன்னேறி வரும் அந்த வீரர்களை {கிருஷ்ணனையும், அர்ஜுனனையும்} எதிர்த்துச் சென்றான்.(15-18) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கரிய மைக்குவியலைப் போலத் தெரிந்த அந்த ராட்சசன் {அலம்புசன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அர்ஜுனனின் தலைமீது கணைமாரிகளை இறைத்தபடி, சூறாவளியை எதிர்த்து நிற்கும் மேருவைப் போல, முன்னேறி வரும் அர்ஜுனனை எதிர்த்து நின்றான்.(19)
[1] வேறொரு பதிப்பில் இவனது பெயர் அலாயுதன் என்று சொல்லப்பட்டிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே அலம்புசன் என்றே இவன் சொல்லப்பட்டிருக்கிறான். இவன் கடோத்கசனால் கொல்லப்பட்ட அலம்புசன் கிடையாது.
அந்த ராட்சசனுக்கும் {அலம்புசனுக்கும்}, அந்த மனிதப் போர்வீரனுக்கும் {அர்ஜுனனுக்கும்} இடையில் நடந்த அந்தப் போரானது மிகக் கடுமையானதாக இருந்தது.(20) மேலும் அஃது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} அங்கே இருந்த பார்வையாளர்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் நிரப்பியது. மேலும் அது, கழுகுகள், காக்கைகள், அண்டங்காக்கைகள், ஆந்தைகள் {கோட்டான்கள்}, கனகங்கள் {கங்கங்கள்}, நரிகள் ஆகியவற்றையும் மகிழ்ச்சியடையச் செய்தது.(21) அர்ஜுனன் ஆறு கணைகளால் அலம்புசனைத் தாக்கி, பத்து கூரிய கணைகளால் அவனது கொடிமரத்தை அறுத்தான்.(22) மேலும் வேறு சில கணைகளால் அவன் {அர்ஜுனன்}, அவனது சாரதியையும், வேறு சிலவற்றால் அவனது திரிவேணுவையும், மேலும் ஒன்றால் அவனது வில்லையும், வேறு நான்கால் அவனது நான்கு குதிரைகளையும் வெட்டி வீழ்த்தினான்.(23)
அலம்புசன் மற்றொரு வில்லில் நாண்பூட்டினாலும், அர்ஜுனன் அதையும் இரண்டு துண்டுகளாக வெட்டினான். அப்போது, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பார்த்தன் {அர்ஜுனன்}, நான்கு கூரிய கணைகளால் அந்த ராட்சசர்களின் இளவரசனை {அலம்புசனைத்} துளைத்தான். இப்படித் துளைக்கப்பட்ட அந்த ராட்சசன் {அலம்புசன்} அச்சத்தால் {அங்கிருந்து} தப்பி ஓடினான். அவனை வீழ்த்திய அர்ஜுனன், வேகமாகத் துரோணர் இருக்கும் இடத்தை நோக்கிச் சென்றபடியே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மனிதர்கள், யானைகள் மற்றும் குதிரைகளின் மீது பல கணைகளை ஏவினான்.(24,25) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சிறப்புமிக்கப் பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்ட போராளிகள், சூறாவளியால் கீழே விழும் மரங்களைப் போலக் கீழே தரையில் விழுந்தனர்.(26) பாண்டுவின் சிறப்புமிக்க மகனால் {அர்ஜுனனால்} இப்படிக் கொல்லப்பட்ட போது, அச்சமடைந்த மான் கூட்டத்தைப் போல அவர்கள் அனைவரும் {அங்கிருந்து} தப்பி ஓடினர்" {என்றான் சஞ்சயன்}.(27)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "உமது மகனான சித்திரசேனன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது படையைத் தன் கணைகளால் எரித்துக் கொண்டிருந்தவனான (நகுலன் மகன்) சதாநீகனைத் தடுத்தான்.(1) நகுலனின் மகன் {சதாநீகன்} ஐந்து கணைகளால் சித்திரசேனனைத் துளைத்தான். பின்னவன் {சித்திரசேனன்} கூர்த்தீட்டப்பட்ட பத்து கணைகளால் முன்னவனை {சதாநீகனைப்} பதிலுக்குத் துளைத்தான்.(2) மீண்டும் சித்தரசேனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில், ஒன்பது கூரிய கணைகளால் சதானீகனை மார்பில் துளைத்தான்.(3) பிறகு நகுலனின் மகன் {சதாநீகன்}, நேரான கணைகளால் பலவற்றால் சித்திரசேனனின் உடலில் இருந்து அவனது கவசத்தை அறுத்தான். அவனது இந்தச் சாதனை மிக அற்புதமானதாகத் தெரிந்தது.(4) தன் கவசத்தை இழந்த உமது மகன் {சித்திரசேனன்}, உரிய காலத்தில் சட்டையை உதிர்த்த பாம்பொன்றைப் போல மிக அழகாகத் தெரிந்தான்.(5)
பிறகு அந்த நகுலனின் மகன் {சதாநீகன்}, அம்மோதலில் போராடிக் கொண்டிருந்த சித்திரசேனனின் கொடிமரத்தையும், அவனது வில்லையும் கூரிய கணைகள் பலவற்றால் வெட்டினான்.(6) அம்மோதலில் வில் அறுபட்டு, தன் கவசத்தையும் இழந்த அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {சித்திரசேனன்}, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அனைத்து எதிரிகளையும் துளைக்கவல்ல மற்றொரு வில்லை எடுத்தான்.(7) பிறகு பாரதர்களில் வலிமைமிக்கத் தேர்வீரனான அந்தச் சித்திரசேனன், நேரான கணைகள் பலவற்றால் நகுலனின் மகனை {சதாநீகனை} வேகமாகத் துளைத்தான்.(8) சினத்தால் தூண்டப்பட்டவனும், வலிமைமிக்கவனுமான சதாநீகன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சித்திரசேனனின் நான்கு குதிரைகளையும், பிறகு அவனது சாரதியையும் கொன்றான்.(9) பெரும் பலம் கொண்ட சிறப்புமிக்கச் சித்திரசேனன், அந்தத் தேரில் இருந்து கீழே குதித்து, இருபத்தைந்து கணைகளால் நகுலனின் மகனை {சதாநீகனைப்} பீடித்தான். பிறகு நகுலனின் மகன் {சதாநீகன்}, அம்மோதலில் இப்படித் தன்னைத் தாக்கிக் கொண்டிருந்த சித்திரசேனனின், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட வில்லை அர்த்தச்சந்திரக் கணையொன்றால் வெட்டினான்.(11) வில்லற்று, தேரற்று, குதிரைகளற்று, சாரதியற்றுப் போன சித்திரசேனன் விரைவாக ஹிருதிகனின் சிறப்புமிக்க மகனுடைய {கிருதவர்மனின்} தேரில் ஏறிக் கொண்டான்.(12)
விருஷசேனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் துருப்புகளின் முன்னணியில் நின்று துரோணரை எதிர்த்துச் சென்ற வலிமைமிக்கத் தேர்வீரனான துருபதனை எதிர்த்து நூற்றுக்கணக்கான கணைகளை இறைத்தபடியே பெரும் வேகத்துடன் விரைந்தான்.(13) அம்மோதலில் யக்ஞசேனன் {துருபதன்}, ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரனான அந்தக் கர்ணன் மகனுடைய {விருஷசேனனின்} கரங்களையும், மார்பையும் அறுபது கணைகளால் துளைத்தான்.(14) பிறகு சினத்தால் தூண்டப்பட்ட விருஷசேனன், தன் தேரில் நின்று கொண்டிருந்த யக்ஞசேனனின் {துருபதனின்} நடு மார்பைப் பல கணைகளால் துளைத்தான்.(15) அந்தக் கணைகளாலும், தங்கள் உடல்களில் ஒட்டிக் கொண்டிருந்த கணைகளாலும் சிதைக்கப்பட்ட அவ்விரு போர்வீரர்களும், முள்விறைத்த இரண்டு முள்ளம்பன்றிகளைப் போல மிக அழகாகத் தெரிந்தனர்.(16) கூரிய முனைகளையும், தங்கச் சிறகுகளையும் கொண்ட அந்த நேரான கணைகளால் உண்டான காயங்களின் விளைவால் குருதியில் குளித்த அவர்கள், அந்தப் பயங்கர மோதலில் மிக அழகாகவே தெரிந்தனர்.(17) உண்மையில் அவர்கள் வழங்கிய காட்சியானது, அழகும், பிரகாசமும் கொண்ட கல்ப மரங்கள் இரண்டைப் போன்றோ, மலர்க்கொத்துகளால் செழித்திருக்கும் கின்சுகங்கள் {பலாச மரங்கள்} இரண்டைப் போன்றோ இருந்தது.(18)
அப்போது விருஷசேனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} ஒன்பது கணைகளால் துருபதனைத் துளைத்து, மீண்டும் எழுபதாலும், பிறகு மேலும் மூன்று பிற கணைகளாலும் அவனை {துருபதனைத்} துளைத்தான்.(19) பிறகு ஆயிரக்கணக்கான கணைகளை ஏவிய அந்தக் கர்ணன் மகன் {விருஷசேனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மழைத்தாரைகளைப் பொழியும் மேகம் ஒன்றைப் போல அந்தப் போரில் மிக அழகாகத் தெரிந்தான். பிறகு சினத்தால் எரிந்த துருபதன், கூரியதும், நன்கு கடினமாக்கப்பட்டதுமான ஒரு பல்லத்தைக் கொண்டு விருஷசேனனின் வில்லை இரண்டு துண்டுகளாக வெட்டினான்.(21) பிறகு புதியதும், பலமானதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான மற்றொரு வில்லை எடுத்து, பலமானதும், கூராக்கப்பட்டதும், நன்கு கடினமாக்கப்பட்டதும் கூரியதுமான ஒரு பல்லத்தைத் தன் அம்பறாத்தூணியில் இருந்து எடுத்து, அதைத் தன் நாணில் பொருத்திய அவன் {விருஷசேனன்}, துருபதனை நோக்கிக் கவனமாகக் குறிபார்த்து, சோமகர்கள் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியபடி பெரும் சக்தியுடன் அதை {அந்த பல்லத்தை} விடுத்தான்.(22,23) துருபதனின் மார்பைத் துளைத்துக் கடந்த அந்தக் கணை {பல்லம்} பூமியின் பரப்பில் விழுந்தது. பிறகு அந்த (பாஞ்சாலர்களின்) மன்னன் {துருபதன்}, விருஷசேனனின் கணையால் இப்படித் துளைக்கப்பட்டு மயக்கமடைந்தான்.(24) தன் கடமையை நினைவு கூர்ந்த அவனது சாரதி, களத்தை விட்டு வெளியே அவனை {துருபதனைக்} கொண்டு சென்றான்.
பாஞ்சாலர்களின் அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {துருபதன்} பின்வாங்கியதும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் பயங்கர இரவில் அந்த (கௌரவப்) படையானது, எதிரியின் கணைகளால் கவசங்கள் வெட்டப்பட்ட துருபதனின் துருப்புகளை எதிர்த்து மூர்க்கமாக விரைந்து சென்றது.(25,26) போராளிகள் அனைவராலும் சுற்றிலும் போடப்பட்ட சுடர்மிக்க நெருப்புகளின் விளைவால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மேகங்களற்று, கோள்கள் மற்றும் நட்சத்திரங்களால் மின்னிக்கொண்டிருந்த ஆகாயத்துடன் கூடிய அந்தப் பூமியானது மிக அழகாகத் தெரிந்தது.(27) போராளிகளிடம் இருந்து விழுந்த அங்கதங்களால் பூமியானது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மின்னலின் கீற்றுகளுடன் கூடிய மழைக்காலத்து மேகத்திரள்களைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தது.(28) கர்ணனின் மகன் {விருஷசேனன்} மீது கொண்ட அச்சத்தால் பீடிக்கப்பட்ட பாஞ்சாலர்கள், பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடந்த பெரும்போரில் இந்திரனைக் கண்ட தானவர்களைப் போல அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர்.(29)
போரில் இப்படி விருஷசேனனால் பீடிக்கப்பட்ட பாஞ்சாலர்களும், சோமகர்களும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, விளக்குகளால் ஒளியூட்டப்பட்டு மிக அழகாகத் தெரிந்தனர்.(30) போரில் அவர்களை வென்ற கர்ணனின் மகன் {விருஷசேனன்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, நடுவானத்தை அடைந்த சூரியனைப் போல அழகாகத் தெரிந்தான்.(31) கிட்டத்தட்ட உமது தரப்பையும், அவர்களது தரப்பையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான மன்னர்கள் அனைவருக்கு மத்தியில், ஒரே பிரகாசமான ஒளிக்கோளைப் போல வீர விருஷசேனன் தெரிந்தான்.(32) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வீரர்கள் பலரையும், சோமகர்களில் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அனைவரையும் வீழ்த்திய அவன் {விருஷசேனன்}, மன்னன் யுதிஷ்டிரன் இருந்த இடத்திற்கு வேகமாக விரைந்தான்.(33)
உமது மகன் துச்சாசனன், போரில் தன் எதிரிகளை எரித்தபடியே (துரோணரை எதிர்த்து) முன்னேறிக் கொண்டிருந்தவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான பிரதிவிந்தியனை எதிர்த்துச் சென்றான்.(34) அவர்களுக்கிடையில் நடைபெற்ற அம்மோதலானது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மேகமற்ற ஆகாயத்தில் புதனுக்கும், வெள்ளிக்கும் இடையில் நடக்கும் மோதலைப் போல மிக அழகாகத் தெரிந்தது.(35) துச்சாசனன், போரில் கடுஞ்சாதனைகளைச் செய்துவந்த பிரதிவிந்தியனின் நெற்றியில் மூன்று கணைகளால் துளைத்தான்.(36) வலிமைமிக்க வில்லாளியான அந்த உமது மகனால் {துச்சாசனனால்} ஆழத் துளைக்கப்பட்ட பிரதிவிந்தியன், ஓ! ஏகாதிபதி, சிகரத்தைக் கொண்ட ஒரு மலையைப் போல அழகாகத் தெரிந்தான்.(37) பிறகு அந்த வலிமைமிக்கத் தேர்வீரனான பிரதிவிந்தியன், மூன்று கணைகளால் துச்சாசனனைத் துளைத்து, மேலும் ஏழால் மீண்டும் அவனைத் துளைத்தான்.(38) அப்போது உமது மகனோ {துச்சாசனனோ}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கணைகள் பலவற்றால் பிரதிவிந்தியனின் குதிரைகளை வீழ்த்தியதால் மிகக் கடினமான சாதனை ஒன்றை அடைந்தான்.(39) மேலும் அவன் {துச்சாசனன்} ஒரு பல்லத்தைக் கொண்டு, பின்னவனின் {பிரதிவிந்தியனின்} சாரதியையும், பிறகு அவனது கொடிமரத்தையும் வீழ்த்தினான். பிறகு அவன் {துச்சாசனன்} வில் தாங்கிய பிரதிவிந்தியனின் தேரை ஆயிரம் துண்டுகளாக வெட்டினான்.(40) சினத்தால் தூண்டப்பட்ட உமது மகன் {துச்சாசனன்}, ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, (தன் எதிராளியின் தேருடைய} கொடி, அம்பறாத்தூணிகள், நாண்கயிறுகள், கடிவாளங்கள் ஆகியவற்றைத் தன் நேரான கணைகளால் எண்ணற்ற துண்டுகளாக வெட்டினான்.(41)
தன் தேரை இழந்தவனும், நற்குணம் கொண்டவனுமான பிரதிவிந்தியன், கையில் வில்லுடன், எண்ணற்ற கணைகளை இறைத்தபடி, உமது மகனுடன் {துச்சாசனனுடன்} மோதினான்.(42) பிறகு தன் கரநளினத்தை வெளிக்காட்டிய துச்சாசனன், பிரதிவிந்தியனின் வில்லை அறுத்தான். மேலும் அவன் {துச்சாசனன்} வில்லற்ற தன் எதிராளியை {பிரதிவிந்தியனைப்} பத்து கணைகளால் பீடித்தான்.(43) தங்கள் அண்ணனின் (பிரதிவிந்தியனின்} அந்த அவல நிலையைக் கண்டவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான அவனது சகோதரர்கள் அனைவரும், ஒரு பெரும்படையுடன் அந்த இடத்திற்கு மூர்க்கமாக விரைந்தனர்.(44) பிறகு அவன் {பிரதிவிந்தியன்}, {பீமனின் மகனான} சுதசோமனின் பிரகாசமிக்கத் தேரில் ஏறினான். மேலும் அவன் {பிரதிவிந்தியன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு உமது மகனைத் துளைப்பதைத் தொடர்ந்தான்.(45) பிறகு உமது தரப்பைச் சேர்ந்த போர்வீரர்கள் பலர் ஒரு பெரும் படையின் துணையோடு மூர்க்கமாக விரைந்து உமது மகனை (அவனை மீட்பதற்காகச்} சூழ்ந்தனர். அப்போது, அந்த நடு இரவின் பயங்கர வேளையில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, யம அரசின் மக்கள் தொகையை அதிகரிக்கும் வகையில், உமது துருப்புகளுக்கும் அவர்களது துருப்புகளுக்கும் இடையில் கடும்போரொன்று தொடங்கியது" {என்றான் சஞ்சயன்}.(47)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "உமது படையைத் தாக்கிக் கொண்டிருந்த நகுலனை எதிர்த்து, கோபத்துடனும், பெரும் மூர்க்கத்துடனும் விரைந்து சென்ற சுபலனின் மகன் (சகுனி), அவனிடம் {நகுலனிடம்}, "நில், நிற்பாயாக" என்றான்.(1) ஒருவர் மேல் ஒருவர் சினங்கொண்டவர்களும், ஒருவரையொருவர் கொல்ல விரும்பியவர்களுமான அவ்விரு வீரர்களும், தங்கள் விற்களை முழுமையாக வளைத்து, கணைகளை ஏவி, ஒருவரையொருவர் தாக்கினர்.(2) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சுபலனின் மகன் {சகுனி}, கணைமாரி ஏவுவதில் நகுலன் வெளிப்படுத்திய அதே அளவு திறனை அம்மோதலில் வெளிப்படுத்தினான்.(3) அந்தப்போரில் கணைகளால் துளைத்துக் கொண்ட அவ்விருவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்களது உடலில் முட்கள் விறைத்த இரு முள்ளம்பன்றிகளைப் போல அழகாகத் தெரிந்தனர்.(4)
நேரானமுனைகளையும், தங்கச் சிறகுகளையும் கொண்ட கணைகளால் கவசங்கள் வெட்டப்பட்டவர்களும், குருதியில் குளித்தவர்களுமான அந்தப் போர்வீரர்கள் இருவரும், அந்தப் பயங்கரப் போரில், அழகான, பிரகாசமான இரண்டு கல்ப மரங்களைப் போலவோ, அந்தப் போர்க்களத்தில் மலர்ந்திருக்கும் இரு கின்சுகங்களை {பலாச மரங்களைப்} போலவோ பிரகாசமாகத் தெரிந்தனர்.(5,6) உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அம்மோதலில் கணைகளால் துளைத்த அவ்விரு வீரர்களும், முள் கொண்ட சால்மலி {இலவ} மரங்கள் இரண்டைப் போல அழகாகத் தெரிந்தனர்.(7) கண்கள் சினத்தால் விரிந்து, கடைக்கண் சிவந்து, ஒருவர் மேல் ஒருவர் சரிந்த பார்வைகளை வீசிய அவர்கள், அந்தப் பார்வையாலேயே ஒருவரையொருவர் எரிக்கப் போவதைப் போலத் தெரிந்தது.(8)
அப்போது உமது மைத்துனன் {சகுனி}, கோபத்தால் தூண்டப்பட்டு, சிரித்துக் கொண்டே, கூர்முனைகொண்ட முள்கணை {கர்ணி} ஒன்றால் மாத்ரியின் மகனுடைய {நகுலனின்} மார்பைத் துளைத்தான்.(9) பெரும் வில்லாளியான உமது மைத்துனனால் {சகுனியால்} ஆழத்துளைக்கப்பட்ட நகுலன், தன் தேர்த்தட்டில் அமர்ந்தபடியே மயங்கிப் போனான்.(10) செருக்குமிக்கத் தன் எதிரியின் {நகுலனின்} அந்த அவல நிலையைக் கண்ட சகுனி, கோடை முடிவின் மேகங்களைப் போல உரக்க முழங்கினான்.(11) சுயநினைவு மீண்டவனான பாண்டுவின் மகன் நகுலன், வாயை அகல விரித்த காலனைப் போலவே மீண்டும் சுபலனின் மகனை {சகுனியை} எதிர்த்து விரைந்தான்.(12) சினத்தால் எரிந்த அவன் {நகுலன்}, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அறுபது {60} கணைகளால் சகுனியைத் துளைத்து, மீண்டும் ஒரு நூறு நீண்ட கணைகளால் {நாராசங்களால்} அவனை {சகுனியை} மார்பில் துளைத்தான்.(13) பிறகு அவன் {நகுலன்}, கணை பொருத்தப்பட்ட சகுனியின் வில்லைக் கைப்பிடியில் அறுத்து, இரண்டு துண்டுகளாக்கினான். கணப்பொழுதில் அவன் {நகுலன்}, சகுனியின் கொடிமரத்தையும் வெட்டி, அதைக் கீழே பூமியில் விழச் செய்தான்.(14)
பாண்டுவின் மகனான நகுலன், அடுத்ததாக, கூர்முனை கொண்டதும், நன்கு கடினமாக்கப்பட்டதுமான கணை ஒன்றால் சகுனியின் தொடையைத் துளைத்து, வேடன் ஒருவன், சிறகு படைத்த பருந்தொன்றை பூமியில் விழச் செய்வதைப் போல, அவனை {சகுனியை} அவனது தேரில் கீழே விழச் செய்தான்.(15) ஆழத்துளைக்கப்பட்ட சகுனி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, காமவயப்பட்ட ஒரு மனிதன் {காமுகன் ஒருவன்} தன் தலைவியை {காமுகியைத்} தழுவிக் கொள்வதைப் போலக் கொடிக்கம்பத்தைத் தழுவி கொண்டு, தன் தேர்த்தட்டில் அமர்ந்தான்.(16) கீழே விழுந்து, சுயநினைவை இழந்த உமது மைத்துனனை {சகுனியைக்} கண்ட அவனது சாரதி, ஓ! பாவமற்றவரே {திருதராஷ்டிரரே}, விரைவாக அவனைப் போர் முகப்பை விட்டு வெளியே கொண்டு சென்றான்.(17) அப்போது, பார்த்தர்களும், அவர்களைப் பின்தொடர்பவர்கள் அனைவரும் உரக்க முழங்கினர்.(18) தன் எதிரிகளை வென்றவனும், எதிரிகளை எரிப்பவனுமான நகுலன், தன் சாரதியிடம், "துரோணரால் நடத்தப்படும் படைக்கு என்னைக் கொண்டு செல்வாயாக" என்று சொன்னான்.(19) மாத்ரி மகனின் {நகுலனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட அவனது சாரதி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணர் இருந்த இடத்திற்குச் சென்றான்.(20)
துரோணரை நோக்கிச் சென்று கொண்டிருந்த வலிமைமிக்கச் சிகண்டியை எதிர்த்து, சரத்வானின் மகனான கிருபர், உறுதியான தீர்மானத்துடனும், பெரும் மூர்க்கத்துடனும் முன்னேறிச் சென்றார்.(21) எதிரிகளைத் தண்டிப்பவனான சிகண்டி, சிரித்துக் கொண்டே, துரோணரின் அருகாமையை நோக்கிச் செல்லும் தன்னை, இப்படி எதிர்த்து வரும் கௌதமர் மகனை {கிருபரை} ஒன்பது கணைகளால் துளைத்தான்.(22) உமது மகன்களுக்கு நன்மை செய்பவரான அந்த ஆசான் (கிருபர்), முதலில் சிகண்டியை ஐந்து கணைகளால் துளைத்து, மீண்டும் அவனை இருபதால் துளைத்தார்.(23) அவர்களுக்கிடையில் நடந்த அந்த மோதலானது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடந்த போரில் {அசுரன்} சம்பரனுக்கும், தேவர்கள் தலைவனுக்கும் {இந்திரனுக்கும்} இடையில் நடந்த மோதலைப் போல மிகப் பயங்கரமாக இருந்தது.(24) வீரர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களும், போரில் வெல்லப்பட முடியாதவர்களுமான அவர்கள் இருவரும், கோடையின் முடிவில் ஆகாயத்தை மறைக்கும் மேகங்களைப் போலத் தங்கள் கணைகளால் ஆகாயத்தை மறைத்தனர்.(25) பயங்கரமான அந்த இரவு, ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, போரிட்டுக் கொண்டிருந்த வீரப் போராளிகளால் மேலும் பயங்கரமடைந்தது.(26) உண்மையில், அனைத்து வகை அச்சங்களையும் தூண்டும் பயங்கரத்தன்மைகளைக் கொண்ட அந்த இரவு, (அனைத்து உயிரினங்களுக்குமான) மரண இரவாக {காலராத்திரி} ஆனது.
அப்போது சிகண்டி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அர்த்தச்சந்திரக் கணையொன்றால் கௌதமர் மகனின் {கிருபரின்} பெரிய வில்லை அறுத்து, கூர்த்தீட்டப்பட்ட கணைகளைப் பின்னவர் {கிருபரின்} மீது ஏவினான். கோபத்தால் எரிந்த கிருபர், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கொல்லன் கரங்களால் பளபளப்பாக்கப்பட்டதும், கூர்முனையையும், தங்கக் கைப்பிடியையும் கொண்டதுமான கடுமையான ஓர் ஈட்டியைத் தன் எதிராளியின் {சிகண்டியின்} மீது ஏவினார். எனினும் சிகண்டி, தன்னை நோக்கி வந்த அதை {அந்த ஈட்டியை}, பத்து கணைகளால் வெட்டினான்.(27-29) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட அந்த ஈட்டி (இப்படி வெட்டப்பட்டு) கீழே பூமியில் விழுந்தது. அப்போது மனிதர்களில் முதன்மையான கௌதமர் {கிருபர்}, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கூர்த்தீட்டப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான கணைகளால் சிகண்டியை மறைத்தார்.(30) இப்படி அந்தப் போரில் கௌதமரின் சிறப்புமிக்க மகனால் {கிருபரால்} மறைக்கப்பட்டவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனுமான சிகண்டி தன் தேர்தட்டில் பலவீனமடைந்தான்.(31) சரத்வானின் மகனான கிருபர் அவன் பலவீனமடைந்ததைக் கண்டு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவனைக் {சிகண்டியைக்} கொல்லும் விருப்பத்தால் பல கணைகளால் அவனைத் துளைத்தார்.(32) (பிறகு சிகண்டி தன் சாரதியால் வெளியே கொண்டு செல்லப்பட்டான்). வலிமைமிக்கத் தேர்வீரனான அந்த யக்ஞசேனன் மகன் {துருபதன் மகனான சிகண்டி} போரில் பின்வாங்குவதைக் கண்ட பாஞ்சாலர்களும், சோமகர்களும் (அவனைக் காப்பதற்காக) அனைத்துப் பக்கங்களிலும் அவனைச் சூழ்ந்து கொண்டனர்.(33) அதே போல உமது மகன்களும், பெரும்படையுடன் அந்தப் பிராமணர்களில் முதன்மையானவரை (கிருபரைச்) சூழ்ந்து கொண்டனர்.(34) அப்போது ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட தேர்வீரர்களுக்கு இடையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} மீண்டும் ஒரு போர் தொடங்கியது.(35)
ஒருவரையொருவர் தாக்கி வீழ்த்தி விரைந்து செல்லும் குதிரைவீரர்கள், யானைகள் ஆகியவற்றின் காரணமாக எழுந்த ஆரவாரமானது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மேகங்களின் முழக்கத்தைப் போலப் பேரொலி கொண்டதாக இருந்தது.(36) அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போர்க்களமானது மிகவும் கடுமையானதாகத் தெரிந்தது. விரைந்து சென்ற காலாட்படையின் நடையால், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே} அச்சத்தால் நடுங்கும் ஒரு பெண்ணைப் போலப் பூமியானவள் நடுங்கத் தொடங்கினாள்.(37) தேர்வீர்கள் தங்கள் தேர்களில் ஏறி மூர்க்கமாக விரைந்து, சிறகு படைத்த பூச்சிகளைப் பிடிக்கும் காக்கைகளைப் போல, ஆயிரக்கணக்கான எதிராளிகளைத் தாக்கினர்.(38) அதே போல, தங்கள் உடல்களில் மதநீர் வழிந்த யானைகள், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அதே போன்ற யானைகளைப் பின்தொடர்ந்து அவற்றோடு சீற்றத்துடன் மோதின. அதே போலவே, குதிரைவீரர்கள், குதிரைவீரர்களோடும், காலாட் படை வீரர்கள், காலாட்படை வீரர்களோடும் கோபத்துடன் அந்தப் போரில் மோதிக் கொண்டனர்.(39,40)
அந்த நள்ளிரவில், பின்வாங்குபவை, விரைபவை மற்றும் மீண்டும் மோதலுக்கு வருபவை ஆகிய துருப்புகளின் ஒலி செவிடாக்குவதாக இருந்தது. தேர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றில் வைக்கப்பட்ட சுடர்மிக்க விளக்குகளும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஆகாயத்தில் இருந்து விழும் பெரிய விண்கற்களைப் போலத் தெரிந்தன.(41,42) ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, விளக்குகளால் ஒளியூட்டப்பட்ட அந்த இரவானது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போர்க்களத்தில் பகலைப் போலவே இருந்தது.(43) அடர்த்தியான இருளுடன் மோதி, அதை முற்றாக அழிக்கும் சூரியனைப் போலவே, அந்தப் போர்க்களத்தின் அடர்த்தியான இருளானது, அந்தச் சுடர்மிக்க விளக்குகளால் அழிக்கப்பட்டது.(44) உண்மையில், புழுதியாலும், இருளாலும் மறைக்கப்பட்டிருந்த ஆகாயம், பூமி, முக்கிய மற்றும் துணைத் திசைகள் ஆகியவை மீண்டும் அந்த வெளிச்சத்தால் ஒளியூட்டப்பட்டன.(45) ஆயுதங்கள், கவசங்கள், சிறப்புமிக்க வீரர்களின் ஆபரணங்கள் ஆகியவற்றின் ஒளி சுடர்மிக்க அந்த விளக்குகளின் மேலான வெளிச்சத்தில் மறைந்தது.
இரவில் அந்தக் கடும்போர் நடந்து கொண்டிருந்தபோது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, போராளிகளில் எவராலும் தங்கள் தரப்பின் போர்வீரர்களையே அறிந்து கொள்ள முடியவில்லை.(46,47) ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, அறியாமையால், தந்தை மகனையும், மகன் தந்தையையும், நண்பன் நண்பனையும் கொன்றனர்.(48) உறவினர்கள், உறவினர்களையும், தாய்மாமன்கள் தங்கள் சகோதரிகளின் மகன்களையும், போர்வீரர்கள் தங்கள் தரப்பின் போர்வீரர்களையும் கொன்றனர், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, எதிரிகளும் கூடத் தங்கள் ஆட்களையே கொன்றனர்.(49) அந்தப் பயங்கர இரவு மோதலில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருவரையொருவர் கருதிப்பாராமல் அனைவரும் சீற்றத்துடன் போரிட்டனர்" {என்றான் சஞ்சயன்}.(50)
….
தொடரும்..
..
மகாபாரதம் தொடர் முழுவதும் படிக்க இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைந்திருங்கள்
No comments:
Post a Comment