Wednesday, January 17, 2024

Mahabharatam in tamil 311

மஹாபாரதம்(முழுவதும்)-பாகம்-311
துரோண பர்வம்
….
இரவுநேரப் போர்க்களம்
கடோத்கசன் அஸ்வத்தாமன் மோதல்
..
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "என் ஆணைகளுக்கு எப்போதும் கீழ்ப்படியாதவனான என் மகன் துரியோதனனிடம் இவ்வார்த்தைகள் அனைத்தையும் சொல்லிவிட்டு, பெரும் பலம் கொண்டவரும், வலிமைமிக்க வில்லாளியும் ஆசானுமான அந்த வீரத் துரோணர், கோபத்துடன் பாண்டவப் படைக்குள் ஊடுருவியபடி களத்தில் தன் தேரில் திரிந்து கொண்டிருந்த போது, அவரது  பாதையைப் பாண்டவர்கள் எவ்வாறு தடுத்தனர்?(1, 2) அந்தப் பயங்கரப் போரில் ஆசானுடைய {துரோணருடைய} தேரின் வலது சக்கரத்தைப் பாதுகாத்தது யார்? எதிரியை அவர் {துரோணர்} கடுமையாகக் கொன்ற போது, அவரது இடது சக்கரத்தைப் பாதுகாத்தது யார்?(3) போரிட்டுக் கொண்டிருந்த அந்த வீரரின் {துரோணரின்} பின்புறத்தில், அவரைத் தொடர்ந்து சென்ற துணிவுமிக்கப் போர்வீரர்கள் யாவர்? அந்தத் தேர்வீரருக்கு முன்பு நின்றவர்கள் யாவர்?(4) வெல்லப்படாத பெரும் வில்லாளியும், ஆயுதங்கள் தாங்குவோர் அனைவரிலும் முதன்மையானவருமான அவர், தன் தேரில் செல்லும் வழியெங்கும் நர்த்தனம் செய்தபடியே பாண்டவப்படைக்குள் நுழைந்த போது, பருவகாலமற்ற மிதமிஞ்சிய குளிரை அவரது எதிரிகள் உணர்ந்திருப்பார்கள் என நான் நினைக்கிறேன். குளிர்கால வெடிப்புகளுக்கு வெளிப்பட்ட பசுவைப் போல அவர்கள் நடுங்கியிருப்பார்கள் என நான் நினைக்கிறேன்.(5, 6) பரவும் காட்டுத் தீயைப் போலப் பாஞ்சாலர்களின் துருப்புகள் அனைத்தையும் எரித்தவரும், தேர்வீரர்களில் காளையுமான அவர் {துரோணர்} தன் மரணத்தை எப்படிச் சந்தித்தார்?" என்று கேட்டான்.(7]


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "மாலைப் பொழுதில் சிந்துக்களின் ஆட்சியாளனைக் {ஜெயத்ரதனைக்} கொன்ற பார்த்தன் {அர்ஜுனன்}, யுதிஷ்டிரனையும், பெரும் வில்லாளியான அந்தச் சாத்யகியையும் சந்தித்த பிறகு, அந்த இருவரும் துரோணரை நோக்கிச் சென்றனர்.(8) அப்போது யுதிஷ்டிரன் மற்றும் பாண்டுவின் மகனான பீமசேனன் ஆகியோர் ஒரு தனிப் படைப்பிரிவுடன், துரோணரை எதிர்த்து வேகமாக விரைந்தனர்.(9) அதே போல, நுண்ணறிவு கொண்ட நகுலன், வெல்லப்பட முடியாத சகாதேவன், தன் சொந்தப் படைப்பிரிவுடன் கூடிய திருஷ்டத்யும்னன், விராடன், ஒரு பெரும்படையுடன் கூடிய சால்வர்களின் ஆட்சியாளன் ஆகியோர் போரில் துரோணரை எதிர்த்துச் சென்றனர். அதே போல, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாஞ்சாலர்களால் பாதுகாக்கப்பட்டவனும், திருஷ்டத்யும்னனின் தந்தையுமான மன்னன் துருபதனும், துரோணரை எதிர்த்துச் சென்றான். திரௌபதியின் மகன்கள், ராட்சசன் கடோத்கசன் ஆகியோரும் தங்கள் படைகளுடன் சேர்ந்து பெரும் பிரகாசம் கொண்ட துரோணரை எதிர்த்துச் சென்றனர்.(10, 12) திறனுடன் தாக்குபவர்களும், பலம் நிறைந்தவர்களுமான ஆறாயிரம் பிரபத்ரகப் பாஞ்சாலர்களும், சிகண்டியைத் தங்கள் தலைமையில் நிறுத்திக் கொண்டு துரோணரை எதிர்த்துச் சென்றனர்.(13) மனிதர்களில் முதன்மையான பிறரும், ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களில் வலிமைமிக்கத் தேர்வீரர்களும் ஒன்றாகச் சேர்ந்து துரோணரை எதிர்த்துச் சென்றனர்.(14)

ஓ! பாரதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, வீரமிக்க அந்தப் போர்வீரர்கள் போரிடச் சென்ற போது, மருண்டோரின் அச்சங்களை அதிகரிக்கும் வகையில் அந்த இரவானது மிகுந்த இருளடைந்தது.(15) அந்த இருண்ட நேரத்தில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உயிரைவிட்ட போர் வீரர்கள் பலராவர்.(16) அந்த இரவில், பல யானைகள், குதிரைகள், மற்றும் காலாட்படை வீரர்கள் கொல்லப்பட்டனர். கும்மிருட்டான அவ்விரவில் ஒளிரும் வாய்களுடன் கூடிய நரிகள் பெரும் அச்சத்தைத் தூண்டும் வகையில் எங்கும் ஊளையிட்டுக் கொண்டிருந்தன. கௌரவர்களின் கொடிமரங்களை அடைந்த ஆந்தைகள் {கோட்டான்கள்} அங்கிருந்து அலறி அச்சங்களை {ஆபத்துகளை} முன்னறிவித்தன. அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துருப்புகளுக்கு மத்தியில் ஒரு கடும் ஆரவாரம் எழுந்தது.(17-19) பேரிகைகள், மிருதங்கங்கள் ஆகியவற்றின் உரத்த ஒலியுடன் யானைகளின் பிளிறல்கள், குதிரைகளின் கனைப்பொலிகள், குதிரைலாடங்களின் தடவொலிகள் ஆகியவையும் கலந்த அந்த ஆரவாரம் எங்கும் பரவியது.(20)

பிறகு, அந்த மாலை {இரவு} வேளையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணருக்கும், சிருஞ்சயர்கள் அனைவருக்கும் இடையில் கடும்போரொன்று நடைபெற்றது.(21) உலகமே இருளில் மூழ்கியிருந்ததால் எதையும் பார்க்க முடியவில்லை.(22) போராளிகளால் எழுப்பப்பட்ட புழுதியால் ஆகாயம் மறைக்கப்பட்டது. மனிதன், குதிரை மற்றும் யானைகளின் குருதிகள் ஒன்றாகக் கலந்தன.(23) அப்போது பூமியின் புழுதி மறைந்து போனது. நாங்கள் அனைவரும் முற்றிலும் உற்சாகமற்றவர்களாக ஆனோம். மலையில் மூங்கில் காடு ஒன்று எரியும் ஒலியைப் போல, ஆயுத மோதல்களின் பயங்கர ஒலிகள் அந்த இரவு பொழுதில் கேட்கப்பட்டன.(24) ஓ! தலைவா {திருதராஷ்டிரரே} மிருதங்கங்கள், அனகங்கள், வல்லகிகள், படகங்கள் [1] ஆகியவற்றின் ஒலிகளோடு, (மனிதர்களின்) கூச்சல்களும், (குதிரைகளின்) கனைப்பொலிகளும் கலந்து எங்கும் பயங்கரக் குழப்பத்தை உண்டாக்கின.(25)

[1] பல்வேறு வகைகளிலும், அளவுகளிலுமான பேரிகைகள். எ.கா. மேளம், மத்தளம், முரசு, துந்துபி முதலியன.

அந்தக் களம் இருளில் மூழ்கியிருந்த போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நண்பர்களுக்கும் எதிரிகளுக்கும் இடையில் எந்த வேறுபாட்டையும் காண முடியவில்லை.(26) அந்த இரவின் மதத்தையே {வெறியையே} அனைவரும் பூண்டு கொண்டனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அங்கே எழும்பிய பூமியின் புழுதி இரத்த மழையால் தணிக்கப்பட்டது.(27) பிறகு தங்கக் கவசங்கள் மற்றும் போர்வீரர்களின் பிரகாசமான ஆபரணங்களின் விளைவால் அந்த இருள் அகன்றது. அப்போது தங்கத்தாலும் ரத்தினங்களாலும் அலங்கரிக்கப் பட்டிருந்ததும், ஈட்டிகளும் கொடிமரங்களும் நிறைந்ததுமான அந்தப் பாரதப் படை, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, நட்சத்திரங்கள் சிதறிக்கிடக்கும் இரவு வானத்தைப் போலத் தெரிந்தது. அப்போது அந்தப் போர்க்களம் நரிகளின் ஊளைகளையும், காகங்களின் கரைதல்களையும், யானைகளின் பிளிறல்களையும், போர்வீரர்களின் கூக்குரல்கள் மற்றும் கதறல்களையும் எதிரொலித்துக் கொண்டிருந்தது. அந்த ஒலிகள் யாவும் ஒன்றாகக் கலந்து மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் ஒரு பெரும் ஆரவாரத்தை உண்டாக்கியது.(28-30) இந்திரனின் வஜ்ரத்தைப் போல அந்தப் பேராரவாரம் அனைத்துத் திசைப்புள்ளிகளையும் நிறைத்தது.

அந்த நடு இரவில், அந்தப் பாரதப் படையானது, போராளிகளின் அங்கதங்கள், காது குண்டலங்கள், மார்புக் கவசங்கள் மற்றும் ஆயுதங்களால் ஒளிர்வதாகத் தெரிந்தது. தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட யானைகளும், தேர்களும் மின்னலின் சக்தியூட்டப்பட்ட மேகங்களைப் போல அந்த இரவில் தெரிந்தன. வாள்கள், ஈட்டிகள், கதாயுதங்கள், கத்திகள், தண்டாயுதங்கள், வேல்கள், கோடரிகள் ஆகியன விழுகையில், திகைப்பூட்டும் நெருப்புக் கீற்றுகளைப் போலத் தெரிந்தன. முன்னோடியாக இருந்த துரியோதனனே அதன் (புயல் போன்ற படையின்) பலமான காற்றாக இருந்தான். தேர்களும் யானைகளும் அதன் உலர்மேகங்களாகின.(31-34) பேரிகைகள் மற்றும் பிற கருவிகளின் உரத்த ஒலிகள் அதன் பெருத்த இடிமுழக்கங்களாகின. கொடிமரங்களும், விற்களும் அதன் மின்னல் கீற்றுகளாகின. துரோணரும், பாண்டவர்களும் அதன் {அந்தப் புயல் போன்ற படையின்} பொழியும் மேகங்களாகினர். வாள்கள், ஈட்டிகள், கதாயுதங்கள் அதன் இடிகளாகின.(35) கணைகள் அதன் மழைப்பொழிவாகின, (பிற வகைகளிலான) ஆயுதங்கள் அதன் வன்காற்றுகளாகின. மேலும் அங்கே வீசிய காற்றுகள் மிக வெப்பமாகவும், மிகக் குளிர்ந்ததாகவும் இருந்தன.

பயங்கரமானதும், அதிர்ச்சியளிப்பதும், கடுமையானதுமான அது {புயல் போன்ற அந்தப் பாரதப் படை} உயிரை அழிப்பதாக இருந்தது. {பாதுகாப்பான} உறைவிடமாகக் கொள்ள அதில் {அந்தப் படையில்} ஏதும் இல்லை.(36) மருண்டோரின் அச்சங்களை அதிகப்படுத்துவதும், வீரர்களை மகிழ்ச்சிப்படுத்துவதும், பயங்கரமான ஒலிகளை எதிரொலிப்பதுமான அந்தப் பயங்கர இரவில் போரை விரும்பிய போராளிகள் அச்சந்தரும் அந்தப் படைக்குள் {பாரதப் படைக்குள்} நுழைந்தனர்.(37) இரவில் அந்தக் கடுமையான, பயங்கரமான போர் நடந்து கொண்டிருந்த போது, பாண்டுக்களும், சிருஞ்சயர்களும் ஒன்றாகச் சேர்ந்து துரோணரை எதிர்த்து கோபத்துடன் விரைந்தனர்.(38) எனினும், சிறப்புமிக்கத் துரோணரை எதிர்த்துச் சென்ற அவர்கள் அனைவரும், ஒன்று புறமுதுகிடச்செய்யப்பட்டனர், அல்லது யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பபட்டனர்.(39) உண்மையில், அந்த இரவில், துரோணர் மட்டுமே தனியாகத் தன் கணைகளால், ஆயிரம் {1000} யானைகளையும், பத்தாயிரம் {10,000} தேர்களையும், பத்து லட்சம் {10,00,000} காலாட்படை வீரர்கள் மற்றும் குதிரைகளையும் துளைத்தார்" {என்றான் சஞ்சயன்}.(40, 41)

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "வெல்லப்பட முடியாதவரும், அளவிலா சக்தி கொண்டவரும், (ஜெயத்ரதன் கொலையைப்} பொறுத்துக் கொள்ள முடியாதவருமான துரோணர், கோபத்துடன் சிருஞ்சயர்களுக்கு மத்தியில் நுழைந்த போது நீங்கள் யாவரும் என்ன நினைத்தீர்கள்?(1) அளவற்ற ஆன்மா கொண்ட அந்தப் போர்வீரர் {துரோணர்}, கீழ்ப்படியாதவனான என் மகன் துரியோதனனிடம் இவ்வார்த்தைகளைச் சொல்லி விட்டு, (பகைவரின் படையணிகளுக்குள்) நுழைந்த போது, பார்த்தன் {அர்ஜுனன்} என்ன நடவடிக்கைகளை எடுத்தான்?(2) வீர ஜெயத்ரதன் மற்றும் பூரிஸ்ரவஸ் ஆகியோரின் வீழ்ச்சிக்குப் பின்னர், பெரும் சக்தி கொண்டவரும், வெல்லப்படாத போர்வீரரும், எதிர்களை எரிப்பவரும், வெற்றிகொள்ளப்பட முடியாதவருமான துரோணர் பாஞ்சாலர்களை எதிர்த்துச் சென்ற போது, அர்ஜுனன் என்ன நினைத்தான்? சந்தர்ப்பத்திற்குத் தக்க தான் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் என்று துரியோதனனும் எவற்றை நினைத்தான்?(3, 4)


வரமளிக்கும் வீரரும், மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவருமான அவரை {துரோணரைப்} பின்தொடர்ந்து சென்றவர்கள் யாவர்? ஓ! சூதா {சஞ்சயா}, போரில் ஈடுபடும்போது, அந்த வீரருக்கு {துரோணருக்குப்} பின்னால் நின்ற வீரர்கள் யாவர்? போரில் எதிரிகளைக் கொல்வதில் அவர் {துரோணர்} ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது அவருக்கு முன்னணியில் நின்று போரிட்டது யார்?(5) குளிர் கால வானத்தின் கீழ் நடுங்கிக் கொண்டிருக்கும் மெலிந்த பசுக்களைப் போல, ஓ! சூதா {சஞ்சயா}, பரத்வாஜர் மகனின் {துரோணரின்} கணைகளால் பாண்டவர்கள் அனைவரும் பீடிக்கப்பட்டிருப்பர் என்றே நான் நினைக்கிறேன்.(6) பாஞ்சாலர்களுக்கு மத்தியில் ஊடுருவிய பிறகு, மனிதர்களில் புலியும், எதிரிகளை எரிப்பவருமான அந்தப் பெரும் வில்லாளி {துரோணர்}, தன் மரணத்தை எவ்வாறு சந்தித்தார்?(7)

அந்த இரவில் ஒன்றாகச் சேர்ந்திருந்த துருப்புகள் அனைத்தும், ஒன்று சேர்ந்திருந்த பெரும் தேர்வீரர்கள் அனைவரும், (துரோணரால்) தனித்தனியாகக் கலங்கடிக்கப்பட்ட போது, உங்களில் புத்திசாலியான எந்த மனிதர்கள் அங்கே இருந்தனர்?(8) என் துருப்புகள் கொல்லப்பட்டதாக, அல்லது ஒன்றாக நெருக்கப்பட்டதாக, அல்லது வெல்லப்பட்டனர் என்றும், அம்மோதல்களின் என் தேர்வீரர்கள் தேரிழந்தவர்களாகச் செய்யப்பட்டனர் என்றும் நீ சொல்கிறாய். பாண்டவர்களால் கலங்கடிக்கப்பட்ட அந்தப் போராளிகள் உற்சாகமற்றவர்களாக ஆன போது, அந்த இருண்ட இரவில் இப்படிப்பட்ட துன்பத்தில் மூழ்கிய அவர்கள் என்ன நினைத்தனர்?(9,10) பாண்டவர்களை உற்சாகமானவர்களாகவும், நம்பிக்கை மிகுந்தவர்களாகவும், என்னுடையவர்களை மனச்சோர்வடைந்தவர்களாகவும், உற்சாகமற்றவர்களாகவும், பீதியால் தாக்கப்பட்டவர்களாகவும் நீ சொல்கிறாய்.(11) ஓ! சஞ்சயா, அந்த இரவில் குருக்களுக்கும், புறமுதுகிடாத பார்த்தர்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை எப்படி நீ அடையாளம் கண்டாய்?" என்றான் {திருதராஷ்டிரன்}.(12)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தக் கடுமையான இரவு போர் நடந்து கொண்டிருந்த போது, பாண்டவர்களும் அவர்களோடு கூடிய சோமகர்கள் அனைவரும் துரோணரை எதிர்த்து விரைந்தனர்.(13) அப்போது துரோணர் வேகமாகச் செல்லும் தமது கணைகளால் கைகேயர்கள் அனைவரையும், திருஷ்டத்யும்னனின் மகன்களையும் ஆவிகளின் உலகத்திற்கு [1] அனுப்பி வைத்தார்.(14) உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணரை எதிர்த்து வந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களான அந்தப் பூமியின் தலைவர்கள் அனைவரும் இறந்தோரின் உலகத்திற்குள் (அவரால்) அனுப்பப்பட்டனர்.(15) அப்போது பெரும் ஆற்றலைக் கொண்டவனான மன்னன் சிபி, சினத்தால் நிறைந்து, (பகைவர் தரப்பு போராளிகளை) இப்படிக் கலங்கடிப்பதில் ஈடுபட்டிருந்த வலிமைமிக்கத் தேர்வீரரான அந்தப் பரத்வாஜர் மகனை {துரோணரை} எதிர்த்துச் சென்றான்.(16)

[1] கங்குலியின் பதிப்பில் world of spirits என்றும், மன்மதநாதத்தரின் பதிப்பில் region of the departed spirits என்றும் இருக்கிறது. வேறொரு பதிப்பில், "பிரேதலோகத்திற்கு அனுப்பி வைத்தார்" என்றிருக்கிறது.

பாண்டவர்களின் அந்தப் பெரும் தேர்வீரன் {சிபி} முன்னேறுவதைக் கண்ட துரோணர், முழுவதும் இரும்பாலான பத்து கணைகளால் அவனைத் துளைத்தார்.(17) எனினும் சிபி, கங்க இறகுகளாலமைந்த சிறகுகளைக் கொண்ட முப்பது கணைகளால் பதிலுக்குத் துரோணரைத் துளைத்தான். மேலும் சிரித்துக் கொண்டேயிருந்த அவன் {சிபி}, ஒரு பல்லத்தால், துரோணருடைய தேரின் சாரதியையும் வீழ்த்தினான்.(18) பிறகு துரோணர் சிறப்புமிக்க அந்தச் சிபியின் குதிரைகளைக் கொன்று, அவனது தேரின் சாரதியையும் கொன்று, தலைக்கவசத்துடன் கூடிய சிபியின் தலையை அவனது உடலில் இருந்து வெட்டினார்.(19) பிறகு துரியோதனன், துரோணரின் தேருக்கு ஒரு சாரதியை விரைவாக அனுப்பினான். அவரது குதிரைகளின் கடிவாளங்களைப் புதிய மனிதன் ஏற்றதும், துரோணர் தம் எதிரிகளை எதிர்த்து மீண்டும் விரைந்தார்.(20)

கலிங்கத்துருப்புகளால் ஆதரிக்கப்பட்ட கலிங்கர்களின் ஆட்சியாளனுடைய [2] மகன், பீமசேனனால் தன் தந்தை கொல்லப்பட்டதால் சினத்தால் நிறைந்து பின்னவனை {பீமனை} எதிர்த்து விரைந்தான்.(21) ஐந்து கணைகளால் பீமனைத் துளைத்த அவன் {சுருதாயுஷின் மகன்}, ஏழால் {எழு கணைகளால்} மீண்டும் அவனை {பீமனைத்} துளைத்தான். மேலும் அவன் (பீமனுடைய தேரின் சாரதியான) விசோகனை மூன்று கணைகளாலும், பின்னவனின் {பீமனின்} கொடிமரத்தை ஒன்றாலும் தாக்கினான்.(22) அப்போது சினத்தால் நிறைந்த விருகோதரன் {பீமன்}, தன் தேரில் இருந்து, எதிரியின் தேருக்குக் குதித்து, கலிங்கர்களின் அந்தக் கோபக்கார வீரனை {சுருதாயுஷின் மகனைத்} தன் கை முட்டிகளை மட்டுமே கொண்டு கொன்றான்.(23) பாண்டுவின் வலிமைமிக்க மகனால் {பீமனால்}, அவனது கை முட்டிகளை மட்டுமே கொண்டு இப்படிப் போரில் கொல்லப்பட்ட அந்த இளவரசனின் எலும்புகள் ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்து தனித்தனியாகக் கீழே பூமியில் விழுந்தன.(24)

[2] கலிங்க மன்னன் சுருதாயுஷ் பீஷ்ம பர்வம் பகுதி 54ல் விவரிக்கப்படும் இரண்டாம் நாள் போரில் பீமனால் கொல்லப்பட்டான். இப்போது நடப்பது பதினான்காம் நாளின் இரவு நேரப் போராகும்.

கர்ணன் மற்றும் கொல்லப்பட்ட அந்த இளவரசனின் சகோதரன் ஆகியோரால், (இன்னும் பிறராலும்) பீமனின் அந்தச் செயலைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவர்கள் அனைவரும், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான கூரிய கணைகளால் பீமசேனனைத் தாக்கத் தொடங்கினர்.(25) (தான் நின்று கொண்டிருந்த) எதிரியின் தேரைக் கைவிட்ட பீமன், துருவனின் {துருமனின்} [3] தேருக்குச் சென்று, இடைவிடாமல் தன்னைத் தாக்கிக் கொண்டிருந்த அந்த இளவரசனைத் {துருமனைத்} தன் கை முட்டியால் அடித்து நசுக்கினான்.(26) பாண்டுவின் வலிமைமிக்க மகனால் இப்படித் தாக்கப்பட்ட துருவன் கீழே விழுந்தான். அவனைக் {துருமனைக்} கொன்ற பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும்பலம்கொண்ட பீமசேனன், ஜெயராதனின் தேருக்குச் சென்று, ஒரு சிங்கத்தைப் போல மீண்டும் மீண்டும் முழங்கினான்.(27) முழங்கிக் கொண்டே தன் இடது கரத்தால் ஜெயராதனை இழுத்து வந்த அவன் {பீமன்}, கர்ணன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தன் உள்ளங்கையின் ஒரே அறையால் அந்தப் போர் வீரனை {ஜெயராதனைக்} கொன்றான்.(28)

[3] இவன் கலிங்க இளவரசனின் சகோதரன் எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில் இவன் துருமன் என்று அழைக்கப்படுகிறான். மேலும் துருமனும், ஜெயராதனும் கர்ணனின் சகோதரர்கள் என்றும் சொல்லப்படுகிறார்கள்.

அப்போது கர்ணன் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட ஈட்டியொன்றை அந்தப் பாண்டுவின் மகன் மீது வீசினான்.(29) எனினும் அந்தப் பாண்டவன் {பீமன்} சிரித்துக் கொண்டே தன் கரத்தால் அந்த ஈட்டியைப் பிடித்தான். வெல்லப்படாத விருகோதரன் {பீமன்}, அதே ஈட்டியை அந்தப் போரில் கர்ணன் மீதே திரும்ப வீசினான்.(30) அப்போது சகுனி, எண்ணெய் குடித்த கணையொன்றால் கர்ணனை நோக்கிச் சென்ற அந்த ஈட்டியை வெட்டினான். போரில் இந்த வலிமைமிக்கச் சாதனைகளைச் செய்தவனும், அற்புதமான ஆற்றலைக் கொண்டவனுமான பீமன், தன் தேருக்கே திரும்பி வந்து, உமது துருப்புகளை எதிர்த்து விரைந்தான்.(31)

சினத்துடன் கூடிய பீமன் யமனைப் போல (உமது துருப்புகளைக்) கொன்றபடியே அப்படி முன்னேறிச் செல்கையில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே} அந்த வலிமைமிக்க வீரனை உமது மகன்கள் தடுக்க முயன்றனர்.(32) உண்மையில் அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அவனை {பீமனை} அடர்த்தியான கணை மழையால் மறைத்தனர்.(33) அப்போது பீமன், சிரித்துக் கொண்டே, அந்தப் போரில் தன் கணைகளால் துர்மதனின் சாரதியையும், குதிரைகளையும் யமனுலகுக்கு அனுப்பி வைத்தான்.(34) இதன் காரணமாகத் துர்மதன் வேகமாகத் துஷ்கர்ணனின் தேரில் ஏறிக் கொண்டான். அப்போது ஒரே தேரில் ஏறிச் சென்ற எதிரிகளை எரிப்பவர்களான அந்த இரு சகோதரர்களும், தைத்தியர்களில் முதன்மையான தாரகனை எதிர்த்து விரையும், நீர் நிலைகளின் தலைவன் {வருணன்} மற்றும் சூரியன் ஆகியோரைப் போலப் போரின் முன்னணியில் இருந்த பீமனை எதிர்த்து விரைந்தனர்.(35, 36)

அப்போது உமது மகன்களான துர்மதனும், துஷ்கர்ணனும், ஒரே தேரில் இருந்து கொண்டு கணைகளால் பீமனைத் துளைத்தனர்.(37) பிறகு, கர்ணன், அஸ்வத்தாமன், துரியோதனன், கிருபர், சோமதத்தன், பாஹ்லீகன் ஆகியோர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, எதிரிகளைத் தண்டிப்பவனான அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, தன் பாதத்தால் மிதித்தே வீரத் துர்மதன் மற்றும் துஷ்கர்ணனின் அந்தத் தேரை பூமிக்குள் மூழ்கச் செய்தான்.(38, 39) சினத்தால் நிறைந்த அவன் {பீமன்}, வலிமையும், துணிவும் மிக்க உமது மகன்களான துர்மதன் மற்றும் துஷ்கர்ணன் ஆகியோரைத் தன் கை முட்டிகளால் தாக்கி நசுக்கி உரக்க முழங்கினான் [4].(40) அப்போது துருப்புகளுக்கு மத்தியில் "ஓ" என்றும், "ஐயோ" என்றும் கூச்சல்கள் எழுந்தன. பீமனைக் கண்ட மன்னர்கள், "தார்தராஷ்டிரர்களுக்கு மத்தியில் பீமனின் வடிவில் போரிட்டுக் கொண்டிருப்பது ருத்ரனே" என்றனர்.(41) இந்த வார்த்தைகளைச் சொன்ன அந்த மன்னர்கள் அனைவரும் தங்கள் உணர்வுகளை இழந்து, தங்கள் விலங்குகளைப் பெரும் வேகத்தில் தூண்டி அங்கிருந்த தப்பி ஓடினர். உண்மையில், அவர்களில் இருவராகச் சேர்ந்து ஓடுவதாக எவரும் தென்படவில்லை {அனைவரும் தனித்தனியாகச் சிதறி ஓடினர்}.(42)

[4] இந்தத் துர்மதன் மற்றும் துஷ்கர்ணன் ஆகியோரைச் சேர்த்து பீமன் இதுவரை திருதராஷ்டிரன் மகன்களில் 58 பேரைக் கொன்றிருக்கிறான். இந்தப் பதினான்காம் நாள் போரில் மட்டும் 34 பேரைக் கொன்றிருக்கிறான். துரோண பர்வம் பகுதி 136ல் கொல்லப்பட்ட துர்ஜயன், துர்முகன் இருவரும் ஒருவரேயெனில் 33 பேரைக் கொன்றிருக்கிறான். மேலதிக விவரங்களுக்குத் துரோண பர்வம் பகுதி 136ன் அடிக்குறிப்பு [1] மற்றும் [3] ஐ காண்க.

அப்போது, அந்த இரவில் (கௌரவப்) படைக்கு மத்தியில் பேரழிவு உண்டான போது, முழுதும் மலர்ந்த தாமரையைப் போன்ற அழகான கண்களைக் கொண்டவனும், வலிமைமிக்கவனுமான விருகோதரன் {பீமன்}, மன்னர்களில் காளையர் பலரால் உயர்வாகப் புகழப்பட்டு யுதிஷ்டிரனிடம் சென்று அவனுக்குத் தன் மரியாதைகளைச் செலுத்தினான்.(43) அப்போது, இரட்டையர் (நகுலன் மற்றும் சகாதேவன்), துருபதன், விராடன், கைகேயர்கள் ஆகியோரும், யுதிஷ்டிரனும் பெரும் மகிழ்ச்சியை உணர்ந்தனர். மேலும் அவர்கள் அனைவரும், அந்தகன் கொல்லப்பட்ட பிறகு மகாதேவனைப் புகழ்ந்த தேவர்களைப் போலவே விருகோதரனுக்குத் தங்கள் துதிகளைச் செலுத்தினர்.(44) பிறகு வருணனின் மகன்களுக்கு ஒப்பானவர்களான உமது மகன்கள் அனைவரும், சினத்தால் நிறைந்து, சிறப்புமிக்க ஆசானின் {துரோணரின்} துணையுடன், பெரும் எண்ணிக்கையிலான தேர்கள், காலாட்படை வீரர்கள், யானைகள் ஆகியவற்றுடன் சேர்ந்து போரிடும் விருப்பத்தால் அனைத்துப் பக்கங்களிலும் விருகோதரனை {பீமனைச்} சூழ்ந்து கொண்டனர்.(45) அப்போது, ஓ! மன்னர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, அந்தப் பயங்கர இரவில், அனைத்தும் மேகத்தைப் போன்ற அடர்ந்த இருட்டில் மூழ்கியிருந்த போது, ஓநாய்கள், காகங்கள் மற்றும் கழுகுகள் ஆகியவற்றுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும் வகையில் அச்சந்தரும் போரொன்று அந்தச் சிறப்புமிக்க வீரர்களுக்கு மத்தியில் நடைபெற்றது" {என்றான் சஞ்சயன்}.(46)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "பிராயத்தில் அமர்ந்திருந்த {பிராயோபவேசம் செய்த} தன் மகன் (பூரிஸ்ரவஸ்) சாத்யகியால் கொல்லப்பட்ட பிறகு, சினத்தால் நிறைந்த சோமதத்தன் சாத்யகியிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(1) "ஓ! சாத்வதா {சாத்யகி}, உயர் ஆன்ம தேவர்களால் விதிக்கப்பட்ட க்ஷத்திரியக் கடமைகளைக் கைவிட்டுக் கள்வர்களின் நடைமுறையை ஏன் நீ கைக்கொண்டாய்?(2) க்ஷத்திரியக் கடமைகளை நோற்பவனும், விவேகியுமான ஒருவன், போரில் இருந்து திரும்புபவனையோ {பின்வாங்குபவனையோ}, ஆதரவற்றவனையோ, தன் ஆயுதங்களைக் கீழே வைத்து விட்டவனையோ, இடத்தை வேண்டுபவனையோ போரில் தாக்குவானா?(3) உண்மையில், ஓ! சாத்யகி, விருஷ்ணிகளில் வலிமையும் சக்தியும் கொண்ட பிரத்யும்னனும், நீயும் பெரும் தேர்வீரர்களில் முதன்மையானவர்கள் என்று புகழ்பெற்றவர்கள்.(4) அப்படியிருக்கையில் பிராயத்தில் அமர்ந்தவனும், பார்த்தனால் {அர்ஜுனனால்} தன் கரம் வெட்டப்பட்டவனுமான ஒருவனிடம்  பாவம் நிறைந்த கொடூரமாக ஏன் நீ நடந்து கொண்டாய்?(5)


ஓ! தீய நடத்தை கொண்டவனே, உனது அந்தச் செயலின் விளைவை இப்போது போரில் பெறுவாயாக. ஓ! இழிந்தவனே {சாத்யகி}, என் ஆற்றலை வெளிப்படுத்தும் நான், சிறகு படைத்த கணையொன்றால் உன் தலையை இன்று வெட்டப் போகிறேன்.(6) ஓ! சாத்வதா {சாத்யகி}, என்னிரு மகன்கள் மீதும், எனக்குப் பிடித்த எதன் மீதும், என் புண்ணியச் செயல்கள் அனைத்தின் மீதும் ஆணையாகச் சொல்கிறேன், ஓ! விருஷ்ணி குலத்தில் இழிந்தவனே {சாத்யகி}, இன்றிரவு கடப்பதற்குள், பிருதையின் {குந்தியின்} மகனான ஜிஷ்ணு {அர்ஜுனன்} உன்னைக் காக்கவில்லையெனில், வீரத்தில் செருக்குக் கொண்ட உன்னை, உன் மகன்கள், தம்பி ஆகியோரோடு சேர்த்துக் கொல்லாதிருந்தால் நான் பயங்கர நரகத்திற்குள் மூழ்குவேனாக" என்றான் {சோமதத்தன்}.(7,8) இவ்வார்த்தைகளைச் சொன்னவனும், வலிமைமிக்கவனுமான சோமதத்தன், சினத்தால் நிறைந்து தன் சங்கை உரக்க முழங்கி சிங்க முழக்கம் செய்தான்.(9)

அப்போது, தாமரை இதழ்களைப் போன்ற கண்களையும், சிங்கம் போன்ற பற்களையும், பெரும் பலத்தையும் கொண்ட சாத்யகி, சினத்தால் நிறைந்து, சோமதத்தனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(10) "ஓ! குரு குலத்தவரே {சோமதத்தரே}, உம்மோடு போரிட்டாலும், பிறரோடு போரிட்டாலும், என் இதயத்தில் கிஞ்சிற்றும் நான் அச்சத்தை உணர்வதில்லை.(11) ஓ! குரு குலத்தவரே {சோமதத்தரே}, துருப்புகள் அனைத்தாலும் பாதுகாக்கப்பட்டு நீர் என்னோடு போரிட்டாலும், உம்மால் எந்த வலியையும் நான் அடையமாட்டேன்.(12) நான் எப்போதும் க்ஷத்திரிய நடைமுறைகளேயே பயில்பவனாவேன். எனவே, போர்மணம் கொண்ட வார்த்தைகள், அல்லது நல்லோரை அவமதிக்கும் பேச்சுகள் ஆகியவற்றால் மட்டுமே உம்மால் என்னை அச்சுறுத்த முடியாது.(13) நீர் இன்று என்னோடு போரிட விரும்பினால், ஓ! மன்னா {சோமதத்தரே}, கூரிய கணைகளால் கொடூரமாக என்னைத் தாக்குவீராக, நானும் உம்மைத் தாக்குவேன்.(14) ஓ! மன்னா {சோமதத்தரே}, உமது மகனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான பூரிஸ்ரவஸ் கொல்லப்பட்டான். சலனும், விருஷசேனனும் என்னால் நசுக்கப்பட்டனர் [1].(15) உமது மகன்களுடனும், சொந்தங்களுடனும் கூடிய உம்மையும்கூட இன்று நான் கொல்வேன். ஓ! கௌரவரே {சோமதத்தரே}, பெரும் பலங்கொண்டவர் நீரென்பதால், போரில் உறுதியோடு இருப்பீராக.(16)

[1] வேறொரு பதிப்பில், "வீரனும், மகாரதனுமான உனது புத்திரனான பூரிஸ்ரவஸ் கொல்லப்பட்டான். பிராதாவினுடைய (பிரிவின்) துக்கத்தால் பீடிக்கப்பட்ட சலனும் கொல்லப்பட்டான்" என்று இருக்கிறது. விருஷசேனன் பற்றிய குறிப்பேதும் இல்லை. மன்மதநாததத்தரின் பதிப்பில் "வீரர்களான சலனும் விருஷசேனனும் கொல்லப்பட்டனர்" என்று இருக்கிறது.

கொடை, புலனடக்கம், இதயத் தூய்மை, கருணை, பணிவு, நுண்ணறிவு, மன்னிக்கும் தன்மை {பொறுமை} ஆகியவற்றையும், அழிவில்லாத அனைத்தையும் கொண்டவரும், முரசை {முரசு} கொடியில் கொண்டவருமான மன்னர் யுதிஷ்டிரரின் சக்தியால் நீர் ஏற்கனவே கொல்லப்பட்டவரே. நீர் கர்ணனோடும், சுபலனின் மகனோடும் {சகுனியோடும்} சேர்ந்து அழிவையே அடைவீர்.(17, 18) கிருஷ்ணனின் பாதங்களின் மீதும், என் நற்செயல்கள் அனைத்தின் மீதும் ஆணையிட்டுச் சொல்கிறேன், சினத்தால் நிறையும் நான் உம்மையும் உமது மகன்களையும் என் கணைகளால் போரில் கொல்வேன்.(19) போரைவிட்டு ஓடிவிட்டால் மட்டுமே நீர் பாதுகாப்பாக இருக்கலாம்" என்றான் (சாத்யகி). கோபத்தால் சிவந்த கண்களுடன் ஒருவரோடொருவர் இப்படிப் பேசிக் கொண்டவர்களான அந்த மனிதர்களில் முதன்மையானோர் {சோமதத்தனும், சாத்யகியும்}, தங்கள் கணைகளை ஒருவரின் மீதொருவர் ஏவத் தொடங்கினர்.(20)

அப்போது துரியோதனன், ஆயிரம் தேர்களுடனும், பத்தாயிரம் குதிரைகளுடனும் வந்து சோமதத்தனைச் சூழ்ந்து நின்றான். சினத்தால் நிறைந்த சகுனியும், அனைத்து ஆயுதங்களையும் தரித்துக் கொண்டு, இந்திரனுக்கு நிகரான ஆற்றலைக் கொண்ட தன் மகன்கள், பேரர்கள் மற்றும் தன் சகோதரர்கள் சூழ (அதையே செய்தான் {சோமதத்தனைச் சூழ்ந்து}) நின்றான்.(21, 22) வயதால் இளமையுடையவனும், வஜ்ரத்தைப் போன்ற உடலைக் கொண்டவனும், ஞானம் கொண்டவனுமான உமது மைத்துனன் {சகுனி} முதன்மையான தீரம் கொண்ட நூறாயிரம் {ஒரு லட்சம்} குதிரைகளைத் தன்னிடம் கொண்டிருந்தான். அவற்றுடனேயே அவன் {சகுனி}, வலிமைமிக்க வில்லாளியான சோமதத்தனைச் சூழ்ந்து நின்றான்.(23, 24) அந்த வலிமைமிக்கப் போர்வீரர்களால் பாதுகாக்கப்பட்ட சோமதத்தன் (கணை மேகங்களால்) சாத்யகியை மறைத்தான். நேரான கணைகளின் மேகங்களால் இப்படி மறைக்கப்பட்ட சாத்யகியைக் கண்ட திருஷ்டத்யும்னன், ஒரு பெரும் படையின் துணையுடனும் சினத்துடனும் அவனை {சாத்யகியை} நோக்கிச் சென்றான்.(25) அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒன்றையொன்று தாக்கிக் கொண்ட அந்தப் பெரும் படைகள் இரண்டிலும் எழுந்த பேரோலியானது, பயங்கரச் சூறாவளியால் சீற்றத்துடன் தாக்கப்பட்டும் பெருங்கடல்களுக்கு ஒப்பாக இருந்தது.

அப்போது சோமதத்தன் ஒன்பது கணைகளால் சாத்யகியைத் துளைத்தான்.(26, 27) பதிலுக்குச் சாத்யகி, ஒன்பது கணைகளாலேயே குரு போர்வீரர்களில் முதன்மையான அவனை {சோமதத்தனைத்} துளைத்தான். வலிமைமிக்கவனும், உறுதிமிக்கவனுமான அந்த வில்லாளியால் (சாத்யகியால்) ஆழத் துளைக்கப்பட்ட சோமதத்தன், மயக்கத்தால் உணர்வுகளை இழந்து தன் தேர்த்தட்டில் அமர்ந்தான்.(28) அவன் {சோமதத்தன்} உணர்வுகளை இழந்ததைக் கண்ட அவனது சாரதி, பெரும் தேர்வீரனான அந்தச் சோமதத்தனைப் போரில் இருந்து வெளியே பெரும் வேகத்துடன் சுமந்து சென்றான்.(29) யுயுதானனின் {சாத்யகியின்} கணைகளால் பீடிக்கப்பட்ட சோமதத்தன் தனது உணர்வுகளை இழந்ததைக் கண்ட துரோணர், அந்த யது வீரனை {சாத்யகியைக்} கொல்லும் விருப்பத்தால் பெரும் வேகத்துடன் விரைந்து சென்றார்.(30) ஆசான் {துரோணர்} முன்னேறுவதைக் கண்டவர்களும், யுதிஷ்டிரனின் தலைமையில் இருந்தவர்களுமான பாண்டவ வீரர்கள் பலர், யது குலத்தைத் தழைக்க வைப்பவனான அந்தச் சிறப்புமிக்கவனை {சாத்யகியைக்} காக்கும் விருப்பத்தால் அவனைச் சூழ்ந்து கொண்டனர்" {என்றான் சஞ்சயன்}.31

{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் தொடர்ந்தான்}, "அப்போது துரோணருக்கும் பாண்டவர்களுக்கும் இடையில், மூவுலகங்களுக்கான ஆட்சி உரிமையில் உள்ள விருப்பத்தால் பலிக்கும் {மகா பலிக்கும்}, தேவர்களுக்கும் இடையில் நடந்த போருக்கு ஒப்பாக ஒரு போர் தொடங்கியது.(32) பெரும் சக்தி கொண்ட பரத்வாஜரின் மகன் {துரோணர்}, கணை மேகங்களால் பாண்டவப்படையை மூழ்கடித்து, யுதிஷ்டிரனையும் துளைத்தார். மேலும் துரோணர் சாத்யகியைப் பத்து கணைகளாலும், பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனை} இருபதாலும் துளைத்தார்.(33, 34) பிறகு அவர் பீமசேனனை ஒன்பது கணைகளாலும், நகுலனை ஐந்தாலும், சகாதேவனை எட்டாலும், சிகண்டியை நூறு கணைகளாலும் துளைத்தார்.(35) பிறகு அந்த வலிய கரங்களைக் கொண்ட வீரர் {துரோணர்} திரௌபதியின் மகன்கள் (ஐவரில்) ஒவ்வொருவரையும் ஐந்து கணைகளால் துளைத்தார். மேலும் அவர் {துரோணர்}, விராடனை எட்டு கணைகளாலும், துருபதனை பத்தாலும் துளைத்தார்.(36) பிறகு அவர் {துரோணர்} அம்மோதலில் யுதாமன்யுவை மூன்று கணைகளாலும், உத்தமௌஜஸை ஆறாலும் துளைத்தார். மேலும் பல போராளிகளையும் துளைத்த அவர் {துரோணர்}, பிறகு யுதிஷ்டிரனை நோக்கி விரைந்தார்.(37)


ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணரால் கொல்லப்பட்ட பாண்டுமகனின் துருப்புகள் அச்சத்தால், உரத்த ஓலங்களுடன் அனைத்துத் திசைகளிலும் ஓடின.(38) துரோணரால் அப்படிக் கொல்லப்பட்ட அந்தப் படையைக் கண்டவனும், பிருதையின் {குந்தியின்} மகனுமான பல்குனன் {அர்ஜுனன்}, சற்றே கோபத்தால் தூண்டப்பட்டு, ஆசானை {துரோணரை} நோக்கி வேகமாகச் சென்றான்.(39) அந்தப் போரில் துரோணரும் அர்ஜுனனை நோக்கிச் செல்வதைக் கண்ட யுதிஷ்டிரனின் படை, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மீண்டும் அணிதிரண்டது.(40) அப்போது துரோணருக்கும் பாண்டவர்களுக்கும் இடையில் மீண்டும் போர் நேர்ந்தது.

உமது மகன்களால் அனைத்துப் பக்கங்களிலும் சூழப்பட்ட துரோணர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பஞ்சுப்பொதியை எரிக்கும் நெருப்பைப் போலப் பாண்டவப் படையை எரிக்கத் தொடங்கினார்.(41) சூரியனைப் போல ஒளிர்ந்தவரும், சுடர்மிக்க நெருப்பைப் போலப் பிரகாசம் கொண்டவருமான அவர் {துரோணர்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இடையறாமல் வட்டமாக வளைக்கப்பட்ட தம் வில்லிலிருந்து கடுமையாகவும், தொடர்ச்சியாகவும், கதிர்களைப் போன்ற கணைகளை வெளியிட்டுக் கொண்டும், சூரியனைப் போலச் சுற்றிலும் உள்ள அனைத்தையும் எரித்தபடியே தமது எதிரிகளை எரிப்பதைக்கண்டும் கூட, அவரைத் {துரோணரைத்} தடுக்கக்கூடியவர் எவரும் அந்தப் படையில் இல்லை.(42, 43) துரோணரின் கணைகள், அவரது முகத்துக்கு நேரே அணுகத் துணிந்தோர், அனைவரின் தலைகளையும் வெட்டிவிட்டு, பூமிக்குள் நுழைந்தன. அந்தச் சிறப்புமிக்கப் போர் வீரரால் இப்படிக் கொல்லப்பட்ட அந்தப் பாண்டவப் படை, அர்ஜுனன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மீண்டும் தப்பி ஓடியது.(44, 45) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்த இரவில் துரோணரால் இப்படி முறியடிக்கப்பட்ட அந்தப் படையைக் கண்ட ஜிஷ்ணு {அர்ஜுனன்}, துரோணரின் தேரை நோக்கிச் செல்லுமாறு கோவிந்தனை {கிருஷ்ணனைக்} கேட்டுக் கொண்டான்.(46) அப்போது தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்} வெள்ளி, அல்லது, பசுவின் பால், அல்லது குந்த {குறுக்கத்தி} மலர், அல்லது சந்திரனின் நிறம் கொண்ட அந்தக் குதிரைகளைத் துரோணரின் தேரை நோக்கித் தூண்டினான்.

பல்குனன் {அர்ஜுனன்} துரோணரை நோக்கிச் செல்வதைக் கண்டு, பீமசேனனும் தன் தேரோட்டியிடம்,(47, 48) "துரோணரின் படைப்பிரிவை நோக்கி என்னைச் சுமந்து செல்வாயாக" என்றான். பீமனின் அந்த வார்த்தைகளைக் கேட்ட அவனது சாரதி விசோகன், துல்லியமான இலக்கைக் கொண்ட ஜிஷ்ணுவை {அர்ஜுனனைப்} பின்தொடர்ந்து செல்லும்படி தன் குதிரைகளைத் தூண்டினான்.(49) உறுதியான தீர்மானத்துடன் துரோணரின் படைப்பிரிவை நோக்கிச் செல்லும் அந்த இரு சகோதரர்களைக் கண்டவர்களும், பாஞ்சாலர்கள், சிருஞ்சயர்கள், மத்ஸ்யர்கள், சேதிகள், காருஷர்கள், கோசலர்கள் மற்றும் கைகேயர்கள் ஆகியோரில் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அனைவரும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர்.(50, 51)

பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் பயங்கரப் போர் ஒன்று நடைபெற்றது. வலிமைமிக்க இரு தேர்க்கூட்டங்களுடன் சென்ற பீபத்சுவும் {அர்ஜுனனும்}, விருகோதரனும் {பீமனும்}, முன்னவன் {அர்ஜுனன்} வலப்புறத்திலும், பின்னவன் {பீமன்} முன்புறத்திலும் என உமது படைகளைத் தாக்கினர் [2]. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, (இப்படிப் போரிட்டுக் கொண்டிருந்த) மனிதர்களில் புலிகளான பீமசேனனையும், தனஞ்சயனையும் {அர்ஜுனனையும்} கண்டவர்களான திருஷ்டத்யும்னனும், பெரும்பலமுடைய சாத்யகியும் அவர்களைப் பின்னால் தொடர்ந்து சென்றனர்.(52, 53) அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒன்றையொன்று தாக்கிக் கொள்ளும் இரு படைகளின் விளைவாக அங்கே எழுந்த ஆரவாரமானது, புயலொன்றால் சீற்றத்துடன் தாக்கப்படும் பல கடல்களின் ஒலிக்கு ஒப்பானதாக இருந்தது. போரில் சாத்யகியைக் கண்ட அஸ்வத்தாமன், சோமதத்தன் மகனின் {பூரிஸ்ரவஸின்} கொலையால் சினத்தால் நிறைந்து, போரின் முன்னணியில் இருந்த அந்தச் சாத்வத வீரனை {சாத்யகியை} எதிர்த்து மூர்க்கமாக விரைந்தான்.

[2] வேறொரு பதிப்பில், "தென்பக்கத்தை அர்ஜுனனும், வட பக்கத்தைப் பீமனும் தாக்கினார்கள்" என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், "பீபத்சு வலப்புறத்தையும், விருகோதரன் இடப்புறத்தையும் தாக்கினர்" என்றிருக்கிறது.

சினியின் பேரனுடைய {சாத்யகியின்} தேரை எதிர்த்து அந்தப் போரில் விரையும் அவனை {அஸ்வத்தாமனைக்} கண்டவனும், பீமசேனனின் மகனும், பெரும் ராட்சசனும், பெரும் பலத்தைக் கொண்டவனுமான கடோத்கசன், கரடித் தோல்களால் மறைக்கப்பட்டதும், உருக்காலானதும், பெரியதுமான ஒரு பயங்கரத் தேரில் ஏறி அவனை {அஸ்வத்தாமனை} நோக்கி விரைந்தான். அந்தப் பெரிய தேரின் உயரம் மற்றும் அகலம் இரண்டும் அளவில் முப்பது நல்வங்கள் [3] இருந்தன. சரியான இடங்களில் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுத் தயாரிக்கப்பட்டிருந்த அதன் சடசடப்பொலி பெரும் மேகத்திரள்களுக்கு ஒப்பானதாக இருந்தது.(54-58) அதில் குதிரைகளோ, யானைகளோ பூட்டப்படவில்லை, ஆனால், யானைகளைப் போன்ற உயிரினங்கள் [4] பூட்டப்பட்டிருந்தன. அதன் நெடிய கொடிமரத்தில், சிறகுகளையும், கால்களையும் விரித்தபடியும், கண்களை அகல விரித்த படியும், பயங்கரமாகக் கூச்சலிட்டபடியும் கழுகுகளின் இளவரசன் அமர்ந்திருந்தான். மேலும் சிவப்புக் கொடிகளுடன் கூடிய அது பல்வேறு விலங்குகளின் உள்ளுறுப்புகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.(59, 60) அந்தப் பெரும் வாகனம் எட்டுச் சக்கரங்களை உடையதாக இருந்தது.

[3] ஒரு நல்வம் என்பது நானூறு முழம் எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[4] நீலகண்டர் இவற்றைப் பிசாசங்கள் என்று விளக்குவதாகக் கங்குலி இங்கே குறிப்பிடுகிறார். வேறொரு பதிப்பிலும், பழைய உரையில் பிசாசங்கள் என்றிருப்பதாக அடிக்குறிப்பு ஒன்று இருக்கிறது.

அதில் {அந்தத் தேரில்} ஏறிச் சென்ற கடோத்கசன், வேல்கள் {சூலங்கள்}, கனமான தண்டாயுதங்கள் {உலக்கைகள்}, பாறைகள் {மலைகள்}, மரங்கள் ஆகியவற்றை ஆயுதமாகக் கொண்டிருந்தவர்களும், கடுந்தோற்றும் கொண்டவர்களும், முழுமையாக ஓர் அக்ஷௌஹிணி அளவுக்கு இருந்தவர்களுமான ராட்சசர்களால் சூழப்பட்டிருந்தான். பிரளய காலத்தில் தண்டாயுதத்துடன் கூடிய யமனுக்கு ஒப்பாக உயர்த்திப் பிடிக்கப்பட்ட வில்லுடன் முன்னேறி வரும் அவனை {கடோத்கசனைக்} கண்ட பகை மன்னர்கள் அச்சத்தால் பீடிக்கப்பட்டனர். மலைச்சிகரத்தைப் போலத் தெரிந்தவனும், அச்சந்தரும் வகையில் பயங்கரத்தோற்றம் கொண்டவனும், பயங்கரப் பற்கள், கடும் முகம், அம்பு போன்ற காதுகள், உயர்ந்த தாடை எலும்புகள், மேல்நோக்கி நிற்கும் விறைப்பான முடி, பயங்கரக் கண்கள், சுடர்விடும் வாய், ஆழமான வயிறு, குறுகிய திறப்புக் கொண்ட ஆழமான பள்ளத்தைப் போல அகன்ற உணவுக்குழாய் ஆகியவற்றைக் கொண்டவனும், தலையில் கிரீடம் தரித்தவனும், அனைத்து உயிரினங்களையும் அச்சத்தால் பீடிக்கவல்லவனும், யமனைப் போல அகல விரிந்த வாய் கொண்டவனும், பெரும் காந்தி கொண்டவனும், எதிரிகள் அனைவரையும் கலங்கடிக்கவல்லவனும், ராட்சசர்களின் இளவரசனுமான அந்தக் கடோத்கசன் தங்களை நோக்கி வருவதைக் கண்ட உமது மகனின் {துரியோதனனின்} படையானது, காற்றினால் (அசைவால்) உண்டாகும் கடும் அலைகளால் கலங்கடிக்கப்படும் கங்கையின் ஓடையைப் போலப் பெரும் கலக்கமடைந்து அச்சத்தால் பீடிக்கப்பட்டது.(61-67) கடோத்கசனால் செய்யப்பட்ட சிங்கமுழக்கங்களால் பீதியடைந்த யானைகள் சிறுநீர் கழிக்கத்தொடங்கின, மன்னர்கள் நடுங்கத் தொடங்கினர்.(68)

இரவின் விளைவால் மிகப் பலமடைந்த ராட்சசர்களால் பொழியப்பட்ட அடர்த்தியான கற்களின் மழையொன்று அந்தப் போர்க்களத்தில் விழத் தொடங்கியது.(69) இரும்புச்சக்கரங்கள், புசுண்டிகள், ஈட்டிகள், வேல்கள், சூலங்கள், சதாக்னிகள் மற்றும் கோடரிகள் ஆகியவற்றின் தடையற்ற மழை அங்கே பொழிந்தது.(70) அச்சந்தருவதும், கடுமையானதுமான அந்தப் போரைக் கண்ட மன்னர்கள், உமது மகன்கள் ஆகியோரும், கர்ணனும் கூட வலியை மிகவும் உணர்ந்து தப்பி ஓடினர்.(71) தன் ஆயுத வலிமையில் எப்போதும் தற்பெருமை கொண்டவனான துரோணரின் பெருமைமிக்க மகன் {அஸ்வத்தாமன்} மட்டுமே அச்சமில்லாமல் நின்றான். மேலும் அவன் {அஸ்வத்தாமன்} விரைவில் கடோத்கசனால் உண்டாக்கப்பட்ட அந்த மாயையை விலக்கினான்.(72)

தன் மாயை அழிக்கப்பட்டதும் சினமடைந்த கடோத்கசன், (அஸ்வத்தாமன் மீது) கடுங்கணைகளை ஏவினான். கோபக்காரப் பாம்புகள் எறும்புப்புற்று ஒன்றை வேகமாகத் துளைத்துச் செல்வதைப் போலவே அவை துரோணரின் மகனை {அஸ்வத்தாமனைத்} துளைத்தன.(73) அஸ்வத்தாமனின் உடலைத் துளைத்துச் சென்ற அக்கணைகள் குருதியால் நனைந்து, எறும்புப்புற்றுக்குள் செல்லும் பாம்புகளைப் போல வேகமாகப் பூமிக்குள் நுழைந்தன.(74) எனினும், வேகமான கரங்களையும், பெரும் ஆற்றலையும் கொண்ட அஸ்வத்தாமன், கோபத்தால் நிறைந்து, பத்து கணைகளால் கடோத்கசனைத் துளைத்தான்.(75) துரோணரின் மகனால் {அஸ்வத்தாமனால்} தன் முக்கிய அங்கங்களில் ஆழத் துளைக்கப்பட்ட கடோத்கசன், பெரும் வலியை உணர்ந்து, ஆயிரம் ஆரங்களைக் கொண்ட சக்கரம் ஒன்றை எடுத்துக் கொண்டான்.(76)

உதயச் சூரியனின் பிரகாசத்தைக் கொண்ட அதன் {அந்தச் சக்கரத்தின்} முனை கத்தியைப் போன்று கூர்மையானதாக இருந்தது. மேலும் அது பல்வேறு ரத்தினங்களாலும், வைரங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.(77) அஸ்வத்தாமனைக் கொல்ல விரும்பிய பீமசேனன் மகன் {கடோத்கசன்}, அந்தச் சக்கரத்தை அவன் மீது வீசினான். அது வேகமாகத் துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} நோக்கிச் சென்ற போது, பின்னவன் {அஸ்வத்தாமன்}, தன் கணைகளால் அதைத் துண்டுகளாக வெட்டினான்.(78) இப்படிக் கலங்கடிக்கப்பட்ட அது, பேறற்ற மனிதனால் பேணிவளர்க்கப்பட்ட நம்பிக்கையைப் போலக் கீழே பூமியில் விழுந்தது. தன் சக்கரம் கலங்கடிக்கப்பட்டதைக் கண்ட கடோத்கசன், சூரியனை விழுங்கும் ராகுவைப் போலத் தன் கணைகளால் துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} வேகமாக மறைத்தான்" {என்றான் சஞ்சயன்}.(79)


….
தொடரும்..
..
மகாபாரதம் தொடர் முழுவதும் படிக்க இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைந்திருங்கள்  

No comments:

Post a Comment