Wednesday, January 17, 2024

Mahabharatam in tamil 309

மஹாபாரதம்(முழுவதும்)-பாகம்-310
துரோண பர்வம்
….

துரியோதனனை வென்ற யுதிஷ்டிரன்

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} வீழ்ந்த பிறகு, கண்ணீர்த்துளிகளால் நனைந்த தன் முகத்துடன், உற்சாகத்தை இழந்த உமது மகன் சுயோதனன் {துரியோதனன்}, தன் எதிரிகளை வெல்வதில் நம்பிக்கையிழந்தான்.(1) துயரால் நிறைந்து, பற்கள் உடைந்த பாம்பொன்றைப் போல வெப்பப் பெருமூச்சுகளை விட்டவனும், உலகம் முழுமைக்கும் குற்றமிழைத்தவனுமான உமது மகன் {துரியோதனன்}, மனங்கசந்து சிறுமையை அனுபவித்தான்.(2) அந்தப் போரில், ஜிஷ்ணு {அர்ஜுனன்}, பீமசேனன், சாத்வதன் {சாத்யகி} ஆகியோர் செய்த பயங்கரமான பெரிய படுகொலைகளைக் கண்டு, நிறம் மங்கியவனும், இளைத்தவனும், மனந்தளர்ந்தவனுமான அவனது {துரியோதனனின்} கண்கள் கண்ணீரால் நிறைந்தன.(3) அப்போது அவன் {துரியோதனன்} அர்ஜுனனுக்கு ஒப்பாக இவ்வுலகில் எந்த வீரனும் இல்லை என்று நினைத்தான்.(4) கோபமடைந்திருக்கும் அர்ஜுனனுக்கு எதிரில், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, துரோணரோ, ராதையின் மகனோ {கர்ணனோ}, அஸ்வத்தாமனோ, கிருபரோ நிற்கத்தகுந்தவர்கள் அல்ல.(5)


சுயோதனன் {துரியோதனன்} தனக்குள்ளேயே, "பார்த்தன் {அர்ஜுனன்}, என் படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அனைவரையும் போரில் வென்று, சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கொன்றான். அவனை {அர்ஜுனனை} எவராலும் தடுக்க முடியவில்லை.(6) இந்த எனது பரந்த படையானது, பாண்டவர்களால் கிட்டத்தட்ட அழிக்கப்பட்டுவிட்டது. எவராலும், ஏன் புரந்தரனாலும் {இந்திரனாலும்} கூட என் படையைக் காக்க முடியாது என்றே நான் நினைக்கிறேன்.(7) எவனை நம்பி நான் இந்தப் போர்ப்பாதையில் ஈடுபட்டேனோ, ஐயோ, அந்தக் கர்ணன் போரில் வீழ்த்தப்பட்டு ஜெயத்ரதனும் கொல்லப்பட்டான்.(8) என்னிடம் சமாதானம் பேச வந்த கிருஷ்ணனை, நான் எவனுடைய சக்தியை நம்பி துரும்பாகக் கருதினேனோ அந்தக் கர்ணன், ஐயோ அந்தக் கர்ணன் போரில் வெல்லப்பட்டான்" என்று நினைத்தான்.(9)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் இதயத்துக்குள்ளேயே இப்படி வருந்தியவனும், மொத்த உலகத்திற்கும் எதிராகக் குற்றமிழைத்தவனுமான அவன் {துரியோதனன்}, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, துரோணரைக் காண்பதற்காக அவரிடம் சென்றான்.(10) துரோணரிடம் சென்ற அவன் {துரியோதனன்}, குருக்களின் பேரழிவையும், தன் எதிரிகளின் வெற்றியையும், தார்தராஷ்டிரர்கள் அடைந்திருக்கும் படுபயங்கர ஆபத்தையும் அவரிடம் சொன்னான்.(11)

சுயோதனன் {துரியோதனன்}, "ஓ! ஆசானே {துரோணரே}, இந்த மன்னர்களின் மாபெரும் அழிவைக் காண்பீராக. என் பாட்டனான வீரப் பீஷ்மரை நமது தலைமையில் நிறுத்தி நான் போரிட வந்தேன்.(12) அவரைக் {பீஷ்மரைக்} கொன்ற சிகண்டி, தனது ஆசை நிறைவடைந்து, மற்றொரு வெற்றிக்கான பேராசையில் துருப்புகள் அனைத்திற்கும் முன்னணியில் நின்று கொண்டிருக்கிறான் [1].(13) உமது மற்றொரு சீடனும், வெல்லப்பட முடியாதவனுமான சவ்யசச்சின் {அர்ஜுனன்}, ஏழு அக்ஷௌஹிணி துருப்புகளைக் [2] கொன்று, மன்னன் ஜெயத்ரதனையும் யமனுலகுக்கு அனுப்பிவிட்டான்.(14) ஓ! ஆசானே {திருதராஷ்டிரரே}, எனக்கு வெற்றியை விரும்பி, எனக்கு நன்மை செய்வதிலேயே எப்போதும் ஈடுபட்டு, யமனின் வசிப்பிடத்திற்குச் சென்ற என் கூட்டாளிகளுக்கு நான் பட்ட கடனில் இருந்து எப்படி நான் மீளப்போகிறேன்?(15) 

[1] "இங்கே Praluvdhas என்பதை நீலகண்டர் வேறு மாதிரியாக விளக்குகிறார். இங்கே துரியோதனன், சிகண்டியை வஞ்சகம் நிறைந்த வேடனாகவும், அந்த வஞ்சகத்தின் விளைவால் அவன் பீஷ்மரை வீழ்த்தியதாகவும் விளக்குவதாக அவர் {நீலகண்டர்} நினைக்கிறார். இஃது ஏற்புடையதாக இல்லை" என இங்கே விளக்குகிறார் கங்குலி.

[2] துரோண பர்வம் பகுதி 145ல்  எட்டு அக்ஷௌஹிணிகள் கொல்லப்பட்டன என்று சஞ்சயன் சொல்வதாகக் குறிப்பிடப்படுகிறது. ஒருவேளை அர்ஜுனன் மட்டுமே ஏழு அக்ஷௌஹிணிகளையும், பீமன், சாத்யகி முதலிய பிறர் ஓர் அக்ஷௌணியையும் கொன்றிருக்கலாம்.

தங்கள் உலக வளத்தையெல்லாம் கைவிட்டு, பூமியின் அரசுரிமையை எனக்களிக்க விரும்பிய அந்தப் பூமியின் தலைவர்கள், இப்போது பூமியில் கிடக்கின்றனர்.(16) உண்மையில், நானொரு கோழையே. நண்பர்களின் இத்தகு படுகொலைக்குக் காரணமான நான், நூறு குதிரை வேள்விகளைச் செய்தாலும் புனிதமடைவேன் என்று நினைக்கவும் துணிய மாட்டேன்.(17) நான் பேராசைக்காரன், பாவம் நிறைந்தவன், மேலும் நீதிக்கு எதிராக நடந்தவனுமாவேன். வெற்றியடையும் விருப்பம் கொண்டிருந்த இந்தப் பூமியின் தலைவர்கள், என் செயல்களால் மட்டுமே யமனின் வசிப்பிடத்தை அடைந்தனர்.(18) நடத்தையில் பாவியும், உட்பகையைத் தோற்றுவித்தவனுமான எனக்கு, பூமியானவள் இந்த மன்னர்களுக்கு முன்னிலையில் (மூழ்கும் வகையில்) ஏன் ஒரு துளையைத் தர மறுக்கிறாள் [3].(19)

[3] வேறொரு பதிப்பில் இவ்வரி, "நல்லொழுக்கத்திலிருந்து தவறியவனும், நண்பர்களுக்குத் துரோகம் செய்பவனுமான என் விஷயத்தில் பூமியானவள் ராஜசபையில் பிளந்து என்னை உட்கொள்ள ஏன் சக்தியுள்ளவளாக இல்லை" என்றிருக்கிறது.

ஐயோ, இரத்தச்சிவப்புடைய கண்களைக் கொண்டவரும், மறு உலகை வெற்றிக் கொண்ட வெல்லப்பட முடியாத வீரருமான பாட்டன் {பீஷ்மர்} என்னைச் சந்திக்கும்போது, மன்னர்களுக்கு மத்தியில் என்னிடம் என்ன சொல்வார்.(20) வலிமைமிக்க வில்லாளியான அந்த ஜலசந்தன், சாத்யகியால் கொல்லப்பட்டதைப் பாரும். அந்தப் பெரும் தேர்வீரன் {ஜலசந்தன்}, தன் உயிரை விடத் தயாராக, என் நிமித்தமாகப் போருக்குச் செருக்குடன் வந்தான்.(21) காம்போஜர்களின் ஆட்சியாளனும் {சுதக்ஷிணனும்}, அலம்புசனும், என்னுடைய இன்னும் பல கூட்டாளிகளும் கொல்லப்பட்டதைக் கண்டும் என் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதால் எதை நான் அடையப் போகிறேன்?(22)

அந்தப் புறமுதுகிடாத வீரர்கள், என் நிமித்தமாகப் போரிட்டு, என் எதிரிகளை வெல்வதற்காகத் தங்களால் முடிந்த அளவு சக்தியுடன் போராடி தங்கள் உயிரையே விட்டனர்.(23) ஓ! எதிரிகளை எரிப்பவரே {துரோணரே}, நான் இன்று என் முழு வலிமையைப் பயன்படுத்தி அவர்களிடம் பட்ட கடனிலிருந்து விடுபட்டு, யமுனைக்குச் சென்று நீர்க்காணிக்கைகள் செலுத்தி அவர்களை நிறைவு செய்யப் போகிறேன்.(24) ஓ! ஆயுதம் தரித்தோர் அனைவரிலும் முதன்மையானவரே {துரோணரே}, ஒன்று பாஞ்சாலர்களையும், பாண்டவர்களையும் கொன்று மன அமைதியை அடைவேன், அல்லது போரில் அவர்களால் கொல்லப்பட்டு, என் கூட்டாளிகள் சென்ற உலகங்களுக்கே நானும் செல்வேன் என்று நான் செய்திருக்கும் நற்செயல்கள் மீதும், நான் கொண்டிருக்கும் ஆற்றலின் மீதும், என் மகன்களின் மீதும் ஆணையிட்டு உமக்கு நான் உண்மையாகவே சொல்கிறேன்.(25, 26) என் பொருட்டுப் போரில் ஈடுபட்ட அந்த மனிதர்களில் காளையர், அர்ஜுனனால் கொல்லப்பட்டு எங்கே சென்றார்களோ அங்கே நிச்சயம் நானும் செல்வேன்.(27) நாம் நமது கூட்டாளிகளை நன்கு பாதுகாக்கவில்லை என்பதைக் கண்டு, நம்மோடு நீடித்திருக்க அவர்கள் {நமது கூட்டாளிகள்} விரும்பவில்லை. ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, இப்போது அவர்கள் நம்மைவிடப் பாண்டவர்களையே உகந்தவர்களாகக் கருதுகின்றனர் [4].(28) அர்ஜுனன் உமது சீடன் என்பதாலும், அவனிடம் நீர் கனிவுடன் நடந்து கொள்வதாலும், துல்லிய இலக்கைக் கொண்ட நீரே போரில் நமக்கு அழிவை விதித்திருக்கிறீர்.(29) இதன் காரணமாகவே, நமக்கு வெற்றியைப் பெற்றுத் தர முயன்றோர் அனைவரும் கொல்லப்பட்டனர். இப்போது நமது வெற்றியைக் கர்ணன் மட்டுமே விரும்புவதாகத் தெரிகிறது.(30)

[4] வேறொரு பதிப்பில், "என்னால் (யுத்தத்தில்) உதவிசெய்யப்படாமலிருக்கின்ற மித்ரர்கள் இப்பொழுது என்னை அடையப் பிரியமற்றவர்களாயிருக்கிறார்கள்; பாண்டவர்களை விசேஷமாக மதிப்பது போல நம்மை மதிக்கவில்லை" என்றிருக்கிறது.

முறையாகச் சோதிக்காமல் ஒருவனை நண்பனாக ஏற்று, நண்பர்களால் சாதிக்கப்பட வேண்டிய காரியங்களில் அவனை ஈடுபடுத்தும் பலவீனமான {மந்த} அறிவைக் கொண்ட மனிதன் தீங்கை அடைவது நிச்சயம்.(31) இப்படியே எனது இந்த விவகாரமும் என் நண்பர்களில் சிறந்தோரால் நிர்வகிக்கப்பட்டது [5]. நான் பேராசைக்காரன், பாவம் நிறைந்தவன், கோணல் புத்தி கொண்டவன் மற்றும் தணிக்க முடியாத பொருளாசை கொண்டவனுமானவேன்.(32) ஐயோ, மன்னன் ஜெயத்ரதன் கொல்லப்பட்டான், மேலும் பெரும் சக்தி கொண்ட சோமதத்தன் மகனும் {பூரிஸ்ரவஸும்}, அபிஷாஹர்களும், சூரசேனர்களும், சிபிக்களும், வசாதிகளும் கொல்லப்பட்டனர்.(33) அந்த மனிதர்களில் காளையர் எனக்காகப் போரில் ஈடுபட்டிருந்த போது அர்ஜுனனால் கொல்லப்பட்டு எங்குச் சென்றார்களோ அங்கேயே நானும் இன்று செல்லப் போகிறேன்.(34) அந்த மனிதர்களில் காளையர் இல்லாத நிலையில் உயிர்வாழும் தேவையேதும் எனக்கு இல்லை. ஓ! பாண்டு மகன்களின் ஆசானே {துரோணரே}, எனக்கு இதில் {இக்காரியத்தில்} அனுமதி அளிப்பீராக" என்றான் {துரியோதனன்}" {என்றான் சஞ்சயன்}.(35)

[5] "31வது சுலோகத்தையும், 32வது சுலோகத்தின் பாதியையும் நான் சரியாக உரைத்திருக்கிறேனா என்பது தெரியவில்லை. வட்டார மொழிபெயர்ப்பாளர்கள் இந்தப் பத்தியை மிகவும் குழப்பியிருக்கின்றனர். இங்கே Surhittamais என்பது பொருள் கொள்ளக் கடினமான ஒன்றாக இருக்கிறது. துரியோதனன், 'ஓ! ஆசானே {துரோணரே}, கர்ணன், சகுனி, துச்சாசனன் ஆகியோரும், நானும் உம்மை நண்பராக ஏற்று இந்தப் போரில் உம்மை ஈடுபடுத்தினோம். எனினும், நண்பரின் போர்வையில் இருக்கும் ஓர் எதிரி என்று அப்போது உம்மை நாங்கள் அறியவில்லை' என்று சொல்வதாக இங்கே நான் பொருள் கொள்கிறேன்" என இங்கே விளக்குகிறார் கங்குலி. வேறொரு பதிப்பில், "மந்த புத்தியான எவன், உண்மையான மித்ரனென்று தெரிந்து கொள்ளாமல் ஒருவனை மித்திரன் செய்ய வேண்டிய காரியத்தில் ஏவுகிறானோ அவனுடைய அந்தக் காரியம் அழிந்து விடுகிறது. மோகத்தினாலே பேராவல் கொண்டவனும் பாவியும், கோணலான தன்மையுள்ளவனும், தனத்தை விரும்புகிறவனுமான என்னுடைய இந்தக் காரியமானது மிக்கச் சினேகமுள்ளவர்களாலே அவ்விதமாகச் செய்யப்பட்டுவிட்டது" என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், "மந்தமான புத்தி கொண்ட எந்த மனிதன், சரியாகத் தீர்மானிக்கமாலேயே ஒருவனை நண்பனாக ஏற்று, உண்மையான நண்பர்களால் மட்டுமே செய்யக்கூடிய செயல்களில் அவனை ஈடுபடுத்துவானோ, அவனது நோக்கம் அழிந்துவிடும். பேராசை, கோணல் புத்தி, வளங்களில் பேராசை கொண்ட பாவியான என்னுடைய இந்த விவகாரம் சிறந்த நண்பர்களாலே (சிறந்த நண்பர்கள் என்று அழைக்கப்படுவோரால்) இவ்வழியில் நிர்வகிக்கப்பட்டது" என்று இருக்கிறது.

...
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} போரில் கொல்லப்பட்ட பிறகு, பூரிஸ்ரவஸ் வீழ்ச்சிக்குப் பிறகு, உங்கள் மனநிலை எப்படி இருந்தது?(1) குருக்களின் மத்தியில் துரியோதனன் இப்படித் துரோணரிடம் பேசியபிறகு, ஆசான் {துரோணர்} அவனிடம் {துரியோதனனிடம்} என்ன சொன்னார்? ஓ! சஞ்சயா இவை யாவையும் எனக்குச் சொல்வாயாக" என்றான்.(2)


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, "ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பூரிஸ்ரவஸ் மற்றும் சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} ஆகியோர் கொல்லப்பட்ட பிறகு, உமது துருப்புகளுக்கு மத்தியில் உரத்த ஓலம் எழுந்தது(3).

எந்த ஆலோசனைகளின் விளைவால் நூற்றுக்கணக்கான மனிதத் தலைவர்கள் கொல்லப்பட்டனரோ, உமது மகனின் {துரியோதனனின்} அந்த ஆலோசனைகளை அவர்கள் அனைவரும் அலட்சியம் செய்தனர்.(4) துரோணரைப் பொறுத்தவரை, அவர் உமது மகனின் அந்த வார்த்தைகளைக் கேட்டுத் துயரால் நிறைந்தார். சிறிது நேரம் சிந்தித்த அவர், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பெரும் துன்பத்துடன் இவ்வார்த்தைகளைச் சொன்னார்.(5)

துரோணர் {துரியோதனனிடம்}, "ஓ! துரியோதனா, வார்த்தைக் கணைகளால் என்னை ஏன் இப்படித் துளைக்கிறாய்? அர்ஜுனனைப் போரில் வீழ்த்துவது இயலாது என முன்பே நான் உன்னிடம் சொன்னேன்.(6) கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனால் {அர்ஜுனனால்} பாதுகாக்கப்பட்ட சிகண்டி பீஷ்மரைக் கொன்றான். ஓ! குரு குலத்தோனே {துரியோதனா}, அந்த அருஞ்செயலால் போரில் அர்ஜுனனின் ஆற்றல் நன்கு சோதிக்கப்பட்டது.(7) தேவர்களாலும் வீழ்த்தப்பட முடியாத பீஷ்மர் உண்மையில் போரில் எப்போது கொல்லப்பட்டாரோ, அப்போதே பாரதப் படை அழிந்து விட்டது என்பதை நான் அறிவேன்.(8)  மூவுலகில் உள்ளோர் அனைவரிலும் மிக முதன்மையான வீரர் என நாம் கருதிய அவரே {பீஷ்மரே} வீழ்ந்த பிறகு, வேறு யாரை நாம் நம்ப முடியும்?

ஓ! ஐயா {துரியோதனா}, முன்னர்க் குருக்களின் சபையில் சகுனி விளையாடியது பகடைகளல்ல, அவை எதிரிகளைக் கொல்லவல்ல கூரிய கணைகள்.(10) ஓ! ஐயா, ஜெயனால் {அர்ஜுனனால்} ஏவப்படும் அந்தக் கணைகளே {பகடைக் கணைகளே} இப்போது நம்மைக் கொல்கின்றன. அவற்றை அப்படியே விதுரன் உருவகப்படுத்தியிருந்தாலும், நீ இன்னும் அவற்றை அவ்வாறு புரிந்து கொள்ளவில்லை.(11) ஞானியும், உயர் ஆன்மா கொண்டவனுமான விதுரன், கண்ணீர் நிறைந்த கண்களுடன் உன்னிடம் சொன்ன அந்த வார்த்தைகளை, அமைதியைப் பரிந்துரைத்த அந்த நன்மையான வார்த்தைகளை அப்போது நீ கேட்கவில்லை.(12) அவன் {விதுரன்} முன்னறிவித்த அந்தப் பேரிடர் இப்போது வந்திருக்கிறது. ஓ! துரியோதனா, விதுரனின் வார்த்தைகளுக்கு நீ கீழ்ப்படியாததன் விளைவாலேயே, {அவன் முன்னறிவித்த} அந்தப் பயங்கரமான படுகொலைகள் இப்போது நேருகின்றன.(13) மூட புத்தி கொண்ட எந்த மனிதன், நம்பிக்கைக்குரிய நண்பர்களின் வணங்கத்தக்க சொற்களை அலட்சியம் செய்து, தன் சொந்தக் கருத்தைப் பின்பற்றுவானோ, அவன் விரைவில் இழிந்த பரிதாப நிலையில் வீழ்வான்.(14)

ஓ! காந்தாரியின் மகனே {துரியோதனா}, நற்குலத்தில் பிறந்தவளும், அனைத்து அறங்களையும் பயில்பவளுமான கிருஷ்ணையை {திரௌபதியை} எங்கள் கண்களுக்கு முன்பாகவே குருக்களின் சபைக்கு இழுத்து வந்த உனது அந்தப் பாவகரச் செயலின் கனியே உனக்கு நேர்ந்திருக்கும் இந்தப் பெருந்தீமையாகும். கிருஷ்ணை {திரௌபதி} அப்படி நடத்தப்படத் தகாதவளாவாள்.(15-16) வஞ்சகத்தால் பகடையில் பாண்டவர்களை வென்ற நீ, அவர்களை மான் தோல் உடுத்தச் செய்து காடுகளுக்குள் அனுப்பினாய்.(17) எப்போதும் அறப்பயிற்சிகளில் {நல்ல செயல்களில்} ஈடுபடுபவர்களும், என் சொந்த மகன்களையே போன்றவர்களுமான அந்த இளவரசர்களுக்கு {பாண்டவர்களுக்கு} என்னைத்தவிர இவ்வுலகில் வேறு எந்தப் பிராமணன் தீங்கிழைக்க முனைவான்?(18)

திருதராஷ்டிரன் சம்மதத்துடன், குரு சபையின் மத்தியில் சகுனியை உன் உதவியாளனாகக் கொண்ட நீ, பாண்டவர்களின் கடுஞ்சினத்தைத் தூண்டினாய்.(19) துச்சாசனனுடன் சேர்ந்து கொண்டு கர்ணனும் அந்தக் கோபத்தை அதிகரிக்கச் செய்தான். விதுரனின் வார்த்தைகளை அலட்சியம் செய்து நீயேகூட மீண்டும் மீண்டும் அதை அதிகரிக்கச் செய்தாய்.(20) நீங்கள் அனைவரும் சிந்துக்களின் ஆட்சியாளனின் அருகில் நிற்கத் தீர்மானித்து உறுதியான பாதுகாப்புடன் அர்ஜுனனைச் சூழ்ந்து கொண்டீர்கள். பிறகு ஏன் நீங்கள் அனைவரும் வெல்லப்பட்டீர்கள்? மேலும் ஏன் ஜெயத்ரதன் கொல்லப்பட்டான்?(21) ஓ! கௌரவ்யா {துரியோதனா}, நீயும், கர்ணன், கிருபர், சல்லியன், அஸ்வத்தாமன் ஆகியோரும் உயிருடன் இருக்கையில் சிந்துக்களின் ஆட்சியாளன் எவ்வாறு கொல்லப்பட்டான்.(22) (உன் தரப்பில் உள்ள) மன்னர்கள், சிந்துக்களின் ஆட்சியாளனைக் காப்பதற்காகச் சீற்றத்துடன் தங்கள் சக்தி அனைத்தையும் வெளிப்படுத்தினர். பிறகு ஏன் அவர்களுக்கு மத்தியிலேயே ஜெயத்ரதன் கொல்லப்பட்டான்?(23) அர்ஜுனனின் கைகளில் இருந்து தன்னைப் பாதுகாக்க ஜெயத்ரதன் என்னை நம்பி எதிர்பார்த்தான்.(24) எனினும், அவன் எதிர்பார்த்த பாதுகாப்பை அவன் அடையவில்லை. எனக்கே எந்தப் பாதுகாப்பும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.(25)

சிகண்டியோடு கூடிய பாஞ்சாலர்களைக் கொல்வதில் வெல்லாதவரை, திருஷ்டத்யும்னப் புழுதியில் மூழ்குபவனைப் போலவே என்னை நான் உணர்கிறேன்.(26) {இப்படி} நானும் துயரில் எரிந்து கொண்டிருப்பதைக் கண்டும், ஓ! பாரதா {துரியோதனா}, சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} காப்பதில் தவறி விட்டு, உன் வார்த்தைக் கணைகளால் என்னை ஏன் நீ துளைக்கிறாய்?(27) போரில் களைக்காதவரும், துல்லியமான இலக்கைக் கொண்டவருமான பீஷ்மரின் தங்கக் கொடிமரத்தை இனி உன்னால் காண முடியாது. அப்படியிருக்கையில் எப்படி நீ வெற்றியில் நம்பிக்கைக் கொள்கிறாய்?(28) இந்த அளவுக்கு நிறைய வலிமைமிக்கத் தேர்வீரர்களுக்கு மத்தியில், சிந்துக்களின் ஆட்சியாளனும், பூரிஸ்ரவஸும் கொல்லப்பட்டிருக்கும் போது, முடிவு எவ்வாறு இருக்கும் என நீ நினைக்கிறாய்?(29) ஓ! மன்னா {துரியோதனா}, வெல்லப்படக் கடினமான கிருபர் இன்னும் உயிரோடிருக்கிறார். ஜெயத்ரதனின் பாதையைப் பின்பற்றாமல் இருந்ததற்காக நான் அவரை உயர்வாகப் போற்றுகிறேன்.(30) (போரில்) மிகக் கடினமான சாதனைகளை அடையும் வீரரும், வாசவனின் {இந்திரனின்} தலைமையிலான தேவர்களாலேயே போரில் கொல்லப்பட முடியாதவருமான பீஷ்மர், ஓ! கௌரவ்யா {துரியோதனா}, நீயும், உன் தம்பி துச்சாசனனும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கொல்லப்பட்ட போது, ஓ! மன்னா {துரியோதனா}, பூமியே உன்னைக் கைவிட்டதாக நான் நினைத்தேன்.(31, 32)

ஓ! திருதராஷ்டிரன் மகனே {துரியோதனா}, போரில் உன் நன்மையை அடைவதற்காகவே, பாஞ்சாலர்கள் அனைவரையும கொல்லாமல் நான் என் கவசத்தைக் களைய மாட்டேன்.(34) ஓ! மன்னா {துரியோதனா}, போரிட்டுக் கொண்டிருக்கும் என் மகன் அஸ்வத்தாமனிடம் சென்று, அவனது உயிரே ஆபத்துக்குள்ளானாலும், சோமகர்களை மட்டும் அவன் விட்டு விடக்கூடாது என்று சொல்வாயாக [2].(35) மேலும் அவனிடம் {அஸ்வத்தாமனிடம்}, "உன் தந்தையிடம் பெற்ற ஆணைகள் அனைத்தையும் நீ கடைப்பிடிப்பாயாக. பணிவு, சுயக்கட்டுப்பாடு, உண்மை மற்றும் {கபடமற்ற} நேர்மை ஆகிய செயல்களில் நீ உறுதியாக இருப்பாயாக.(36) அறம், பொருள், இன்பம் ஆகியவற்றைக் கடைப்பிடிப்பதில், அறத்தையும், பொருளையும் புறக்கணிக்காமல், அற ஆதிக்கம் கொண்ட செய்களையே எப்போதும் நீ செய்வாயாக.(37) பிராமணர்களை எப்போதும் பரிசுகளால் நிறைவு செய்வாயாக. அவர்கள் அனைவரும் உன் வழிபாட்டுக்குத் தகுந்தவர்களாவர். அவர்களுக்குத் தீங்கிழைக்கும் வகையில் எதையும் நீ செய்யாதிருப்பாயாக. அவர்கள் நெருப்பின் தழல்களைப் போன்றவர்களாவர்" என்றும் {அஸ்வத்தாமனிடம் நீ} சொல்ல வேண்டும்.(38)

[2] அஃதாவது, "அவன் {அஸ்வத்தாமன்}, என் எதிரிகளான சோமகர்களைத் தன் சக்திக்குட்பட்ட அனைத்து வழிகளிலும் பழிதீர்க்கவேண்டும்" என்பது பொருள் எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

என்னைப் பொறுத்தவரை, ஓ! எதிரிகளைக் கொல்பவனே {துரியோதனா}, வார்த்தைக் கணைகளால் உன்னால் துளைக்கப்படும் நான், பெரும்போர் புரிவதற்காகப் பகைவரின் படைக்குள் ஊடுருவுவேன்.(39) உன்னால் முடியுமென்றால், ஓ! துரியோதனா, போய் அந்தத் துருப்புகளைக் காப்பாயாக. குருக்கள் மற்றும் சிருஞ்சயர்கள் ஆகிய இருவரும் கோபமாக இருக்கின்றனர். அவர்கள் இரவிலும் போர்புரிவார்கள்" என்றார் {துரோணர்}.(40) இவ்வார்த்தைகளைச் சொன்ன துரோணர், விண்மீன்களின் ஒளியைத் தன் ஒளியால் மீறி மறைக்கும் சூரியனைப் போல க்ஷத்திரியர்களின் சக்தியைத் தன் சக்தியால் மீறுவதற்காகப் பாண்டவர்களை எதிர்த்துச் சென்றார்" என்றான் {சஞ்சயன்}.(41)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, "இப்படித் துரோணரால் தூண்டப்பட்ட மன்னன் துரியோதனன், சினத்தால் தூண்டப்பட்டுப் போரில் தன் இதயத்தை நிலைநிறுத்தினான்.(1) பிறகு உமது மகன் துரியோதனன் கர்ணனிடம், "போரில் போராடிக் கொண்டிருந்த சிறப்புமிக்கத் துரோணரும், இன்னும் பல முதன்மையான போர்வீரர்களும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, கிருஷ்ணனை மட்டுமே உதவிக்குக் கொண்டவனும், பாண்டுவின் மகனுமான கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவன் {கிரீடியான அர்ஜுனன்}, தேவர்களாலும் ஊடுருவமுடியாத அளவுக்கு, ஆசானால் {துரோணரால்} அமைக்கப்பட்ட வியூகத்தைப் பிளந்து, சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கொன்றுவிட்டதைக் காண்பாயாக.(2, 3)


ஓ! ராதையின் மகனே {கர்ணா}, மூர்க்கமாக முயன்று கொண்டிருந்த சிறப்புமிக்கத் துரோணரும், நானும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, சிங்கத்தால் கொல்லப்பட்ட சிறு விலங்குகளின் கூட்டத்தைப் போல, எவருடைய உதவியுமில்லாத பார்த்தனால் {அர்ஜுனனால்} போரில் கொல்லப்பட்டு, பூமியில் கிடக்கும் பல முதன்மையான மன்னர்களைப் பார்ப்பாயாக.(4, 5) சக்ரனின் {இந்திரனின்} மகன் {அர்ஜுனன்} என் படையைச் சிறிதே எஞ்சியிருக்கும் அளவுக்குக் குறைத்துவிட்டான். உண்மையில், போரில் துரோணரால் தடுக்கப்பட்டும், சிந்துக்களின் ஆட்சியாளனைக் கொன்று பல்குனனால் {அர்ஜுனனால்} தன் சபதத்தை எப்படி நிறைவேற்ற முடிந்தது?(6)  துரோணர் விரும்பவில்லையெனில், ஓ! வீரா {கர்ணா}, போராடிக் கொண்டிருக்கும் தன் ஆசானை {துரோணரை} மீறி, ஊடுருவ முடியாத அந்த வியூகத்தைப் பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்} எவ்வாறு பிளக்க முடியும்?

உண்மையில், பல்குனன் {அர்ஜுனன்}, சிறப்பு மிக்க ஆசானின் {துரோணரின்} பெரும் அன்புக்குரியவனாவான்.(7,8)  இதன் காரணமாகவே பின்னவர் {துரோணர்}, அவனுடன் போரிடாமலேயே அவனை நுழைய அனுமதித்திருக்கிறார். என் பேறின்மையைப் பார். எதிரிகளை எரிப்பவரான துரோணர், முதலில் சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைப்} பாதுகாப்பதாக உறுதியளித்துவிட்டுக் கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனனை வியூகத்துக்குள் நுழைய அனுமதித்துவிட்டார். தொடக்கத்திலேயே சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} அவனது வீட்டுக்குத் திரும்பிச் செல்ல அனுமதி அளித்திருந்தால், இத்தகு பயங்கரப் பேரழிவு நடந்திருக்காது {ஜெயத்ரதன் அழிந்திருக்க மாட்டான்}. ஐயோ, தன் உயிரைக் காத்துக் கொள்ளும் நம்பிக்கையில் ஜெயத்ரதன் வீடு திரும்ப விரும்பினான்.(9-11) போரில் பாதுகாப்பதாகத் துரோணரிடம் வாக்குறுதி பெற்ற மூடனான நானே அவன் {ஜெயத்ரதன்} செல்வதைத் தடுத்தேன் [1]. ஐயோ, இன்று சித்திரசேனனின் தலைமையிலான என் சகோதரர்கள் அனைவரும், இழிந்தவர்களான நாம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அழிந்து விட்டனர்" என்றான் {துரியோதனன்}.(12)

[1] வேறொரு பதிப்பில் இன்னும் அதிகமாக, "என் சைனியம் அழிவதற்காகப் பிராமணரால் சைந்தவன் தடுக்கப்பட்டான். பாக்யஹீனனும், யுத்தத்தில் முயற்சி செய்கின்றவனுமான அப்படிப்பட்ட என்னுடைய எல்லாச் சைனியங்களும் கொல்லப்பட்டன. ராஜாவான ஜெயத்ரதனும் கொல்லப்பட்டான். கர்ண, பார்த்தனுடைய பேரால் அடையாளமிடப்பட்ட அம்புகளாலே உத்தமர்களான யுத்தவீரர்களனைவரும் நூறு நூறாகவும், ஆயிரமாயிரமாகவும் யமன் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருப்பதைப் பார். யுத்தகளத்தில் நாமனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, ஒரே ரதத்தை உதவியாகக் கொண்ட அர்ஜுனனாலே எவ்வாறு ராஜாவான சைந்தவன் கொல்லப்பட்டான்? ஆயிரமாயிரமாக யுத்த வீரர்களும் எவ்வாறு கொல்லப்பட்டார்கள்? இப்போது துராத்மாக்களான நாம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, யுத்தத்தில் பீசமசேனனையெதிர்த்துச் சித்திரசேனன் முதலான என்னுடைய பிராதாக்கள் மண்டார்கள்" என்று இருக்கிறது.

அதற்குக் கர்ணன் {துரியோதனனிடம்}, "ஆசானை {துரோணரைப்} பழிக்காதே. அந்தப் பிராமணர் தன் சக்தி, பலம் ஆகியவற்றை முழுமையாகப் பயன்படுத்தித் தன் உயிரையும் துச்சமாக மதித்துப் போராடிவருகிறார்.(13) வெண்குதிரைகளைக் கொண்ட அர்ஜுனன் ஆசானை {துரோணரை} மீறி நம் வியூகத்தைப் பிளந்ததில் அவரிடம் {துரோணரிடம்} சிறு குற்றமும் இருக்க முடியாது.(14) ஆயுதங்களை {அஸ்திரங்களை} அறிந்தவனும், பெரும் சுறுசுறுப்பைக் கொண்டவனுமான பல்குனன் {அர்ஜுனன்} இளமையுடன் கூடியவன்; அவன் ஆயுதங்கள் அனைத்திலும் தேர்ச்சியுடைய வீரன்; அவன் தன் வேகமான இயக்கத்துக்காகத் தனித்தன்மையுடன் அறியப்படுபவனுமாவான். தெய்வீக ஆயுதங்களைத் தரித்தவனும், கிருஷ்ணனின் கைகளில் இருக்கும் கடிவாளங்களுடன் கூடிய குதிரைகள் பூட்டப்பட்டதும், குரங்குக் கொடி கொண்டதுமான தன் தேரில் ஏறியவனும், ஊடுவமுடியாத கவசம் பூண்டவனும், மங்கா வலிமை கொண்ட தன் தெய்வீக வில்லான காண்டீவத்தை எடுத்துக் கொண்டவனுமான வீர அர்ஜுனன், தன் கரங்களின் வலிமையில் உண்டான செருக்குடன்,  கூரிய கணைகளை இறைத்தபடியே துரோணரை மீறினான்.  இஃதில் எந்த ஆச்சரியமுமில்லை.(15-17)

மறுபுறம் ஆசானோ {துரோணரோ}, ஓ! மன்னா {துரியோதனா}, வயதால் முதிர்ந்தவரும், வேகமாகச் செல்ல முடியாதவரும் ஆவார். மேலும் அவர் {துரோணர்}, ஓ! மன்னா {துரியோதனா}, நீண்ட நேரம் கரங்களைப் பயன்படுத்த முடியாதவராவார்.(18) இதனாலேயே, வெண் குதிரைகளைக் கொண்டவனும், கிருஷ்ணனைத் தன் தேரோட்டியாகக் கொண்டவனுமான பல்குனன் {அர்ஜுனன்}, ஆசானை மீறிச் செல்வதில் வென்றான். இந்தக் காரணத்திற்காகவே, துரோணரிடம் நான் எந்தக் குற்றத்தையும் காணவில்லை.(19) இவை யாவையும் பார்த்தால், வெண் குதிரைகளைக் கொண்ட அர்ஜுனன், நமது வியூகத்தைப் பிளந்து துரோணரை மீறிச் சென்றதில், பின்னவர் {துரோணர்} என்னதான் ஆயுதங்களில் திறன் பெற்றவராக இருப்பினும், போரில் பாண்டவர்களை வெல்ல இயலாதவர் என்பது தெரிகிறது.(20)

விதியால் நிர்ணயிக்கப்பட்டது எதுவும் மாறாக நடக்காது என்றே நான் நினைக்கிறேன். எனவே, ஓ! சுயோதனா {துரியோதனா}, நமது சக்தியால் எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் பயன்படுத்தி நாம் போரிட்டிருந்தாலும், போரில் சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} கொல்லப்பட்டதால் விதியே அனைத்திலும் வலியது என்பது தெரிகிறது.(21) உன்னோடு சேர்ந்து நாம் அனைவரும் நம்மால் முடிந்த அளவு சக்தியைப் பயன்படுத்திப் போர்க்களத்தில் முயன்றோம்.(22) எனினும் நம் முயற்சிகளைக் கலங்கடித்த விதியானது நம்மிடம் புன்னகைக்கவில்லை.

வஞ்சகம், ஆற்றல் ஆகிய இரண்டையும் பயன்படுத்திப் பாண்டவர்களுக்குத் தீங்கிழைக்க நாம் எப்போதும் முயன்றிருக்கிறோம்.(23)  விதியால் பீடிக்கப்பட்ட மனிதன் எந்தக் காரியத்தைச் செய்தாலும், ஓ! மன்னா {துரியோதனா}, அம்மனிதன் எவ்வளவுதான் முயன்றாலும் விதியால் அது {அக்காரியம்} கலங்கடிக்கப்படும்.(24) உண்மையில், விடாமுயற்சியுடன் கூடிய ஒரு மனிதன் என்னவெல்லாம் செய்யமுடியுமோ அஃது அனைத்தையும் எப்போதும் அச்சமற்ற வகையில் செய்ய வேண்டும். வெற்றி விதியைச் சார்ந்தே இருக்கும்.(25)

ஓ பாரதா {துரியோதனா}, வஞ்சகதைக் கொண்டும், நஞ்சைப் பயன்படுத்தியும் பிருதையின் மகன்கள் {குந்தியின் மகன்கள் பாண்டவர்கள்} வஞ்சிக்கப்பட்டார்கள். அவர்கள் அரக்கு மாளிகையில் எரிக்கப்பட்டார்கள். அவர்கள் பகடையில் வெல்லப்பட்டார்கள்.(26) ஆட்சிக்கலைகளின் ஆணைகளுக்கிணங்க {ராஜநீதிக்கிணங்க} அவர்கள் காடுகளுக்குள் நாடுகடத்தப்பட்டார்கள். இவை யாவையும் நம்மால் கவனமாகச் செய்யப்பட்டாலும், விதியால் அவை கலங்கடிக்கப்படுகின்றன.(27) ஓ! மன்னா {துரியோதனா}. விதியை ஒன்றுமில்லாததாக்கி உறுதியான தீர்மானத்துடன் போரிடுவாயாக.

சிறந்த ஆற்றலுடன் போராடும் உனக்கும் அவர்களுக்கும் இடையில், எத்தரப்பு மற்றதை விஞ்சுகிறதோ அதற்கு விதி அனுகூலமாகலாம்.(28)  மேன்மையான அறிவின் உதவியுடன் பாண்டவர்களால் எந்த விவேகமான வழிகளும் பின்பற்றப்படவில்லை. அல்லது, ஓ! வீரா {துரியோதனா}, அறிவில்லாத எந்தக் காரியத்தையும் விவேகமில்லாமல் நீயும் செய்யவில்லை. (29)
செயல்களின் விளைவுகளை விவேகமானது, அல்லது விவேகமற்றது என்று விதியே நிர்ணயிக்கிறது. தன் காரியங்களையே நோக்கமாகக் கொண்ட விதியானது, அனைத்தும் உறங்கும்போது விழித்துக் கொண்டிருக்கிறது.(30)
உன் படை பெரியது, உனது போர்வீரர்களும் பலராவர். இப்படியே போர் தொடங்கியது.(31) அவர்களது படை சிறியதாக இருந்தும், நன்கு தாக்கக்கூடிய மனிதர்களுடன் கூடிய உனது பெரிய படை மிகவும் குறைக்கப்பட்டது. நம் முயற்சிகள் அனைத்தையும் கலங்கடிப்பது விதியின் செயலே என நான் அஞ்சுகிறேன்" என்றான் {கர்ணன்}.(32)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "அவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருந்த போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரிடுவதற்காகப் பாண்டவப் படைப்பிரிவுகள் தென்பட்டன.(33) பிறகு, உமது வீரர்களுக்கும், அவர்களுக்கும் இடையில் தேர்களும், யானைகளும் ஒன்றுடனொன்று மோதிய பயங்கரமான போர் ஒன்று நடந்தது. எனினும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இவையாவும் உமது தீய கொள்கையினாலேயே நடந்தன" {என்றான் சஞ்சயன்}.(34)


….
தொடரும்..
..
மகாபாரதம் தொடர் முழுவதும் படிக்க இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைந்திருங்கள்  

No comments:

Post a Comment