மஹாபாரதம்(முழுவதும்)-பாகம்-309
துரோண பர்வம்
….
அர்ஜுனன் ஏற்ற மற்றொரு சபதம்
....
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "ஓ! சஞ்சயா, சிந்துக்களின் வீர ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} அர்ஜுனனால் கொல்லப்பட்ட பிறகு எனது போர் வீரர்கள் என்ன செய்தனர் என்பதை எனக்குச் சொல்வாயாக" என்றான்.(1)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்}, போரில் பார்த்தனால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்டதைக் கண்ட சரத்வானின் மகன் கிருபர், கோபவசப்பட்டு, அடர்த்தியான கணை மழையால் அந்தப் பாண்டுவின் மகனை மறைத்தார்.(2) துரோணரின் மகனும் {அஸ்வத்தாமனும்}, பிருதையின் {குந்தியின்} மகனான பல்குனனை {அர்ஜுனனை} எதிர்த்துத் தன் தேரில் விரைந்தான்.(3) தேர்வீரர்களில் முதன்மையான அவ்விருவரும், தங்கள் தேர்களில் எதிர்த்திசையில் இருந்து தங்கள் கூரிய கணைகளைப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} மீது பொழியத் தொடங்கினர்.(4) தேர்வீரர்களில் முதன்மையான அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அர்ஜுனன், (கிருபர் மற்றும் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகியோரின்) கணை மழைகளால் பீடிக்கப்பட்டுப் பெரும் வலியை உணர்ந்தான்.(5) எனினும், தன் ஆசானையும் (கிருபரையும்), (மற்றொரு ஆசானான) துரோணரின் மகனையும் {அஸ்வத்தாமனையும்} கொல்ல விரும்பாதவனும், குந்தியின் மகனுமான அந்தத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, தானே ஆயுதங்களின் ஆசானைப் போலச் செயல்படத் தொடங்கினான்.(6)
தன் ஆயுதங்களால் அஸ்வத்தாமன் மற்றும் கிருபர் ஆகிய இருவரின் ஆயுதங்களைக் கலங்கடித்த அவன் {அர்ஜுனன்}, அவர்களைக் கொல்ல விரும்பாமல் மெதுவாகச் செல்லும் கணைகளை அவர்கள் மீது ஏவினான்.(7) எனினும், ஜெயனால் {அர்ஜுனால்} (மெதுவாகவே) ஏவப்பட்ட அக்கணைகள், கிருபரையும், அவரது மருமகனையும் {அஸ்வத்தாமனையும்} பெரும்பலத்துடன் தாக்கித் தங்கள் எண்ணிக்கையில் விளைவாக அவ்விருவருக்கும் பெரும் வலியை உண்டு பண்ணின.(8) பிறகு, சரத்வானின் மகன் {கிருபர்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இப்படி அர்ஜுனனின் கணைகளால் பீடிக்கப்பட்டு, பலம் அனைத்தையும் இழந்து, தன் தேர்த்தட்டில் மயங்கி விழுந்தார்.(9) கணைகளால் பீடிக்கப்பட்ட தன் தலைவர் உணர்வுகளை இழந்ததைப் புரிந்து கொண்டு, அவர் {கிருபர்} இறந்துவிட்டார் என்று நம்பிய கிருபரின் தேரோட்டி, கிருபரை போருக்கு {போர்க்களத்திற்கு} வெளியே தேரில் கொண்டு சென்றான்.(10) சரத்வானின் மகனான கிருபர் இப்படிப் போருக்கு வெளியே கொண்டு செல்லப்பட்ட பிறகு, அஸ்வத்தாமனும், பாண்டுவின் மகனிடம் {அர்ஜுனனிடம்} கொண்ட அச்சத்தால் அவனிடம் இருந்து தப்பி ஓடினான்.(11)
அப்போது வலிமைமிக்க வில்லாளியான பார்த்தன் {அர்ஜுனன்}, சரத்வானின் மகன் {கிருபர்} கணைகளால் பீடிக்கப்பட்டு மயங்கியதைக் கண்டு, தன் தேரில் பரிதாபகரமான புலம்பல்களில் ஈடுபடத் தொடங்கினான்.(12) கண்ணீர் நிறைந்த முகத்துடனும், இரக்கம் கொண்ட இதயத்துடனும் கூடிய அவன் {அர்ஜுனன்} இந்த வார்த்தைகளைச் சொன்னான்: "பெரும் ஞானம் கொண்ட விதுரர், இழிந்தவனும், தன் குலத்தை அழிப்பவனுமான சுயோதனன் {துரியோதனன்} பிறந்த போது, திருதராஷ்டிரரிடம், "தன் குலத்தின் இழிந்தவனான இவன் {துரியோதனன்} விரைவில் கொல்லப்பட வேண்டும்.(13, 14) இவனால் குருகுலத்தில் முதன்மையானோருக்கு பேரிடர் நேரப்போகிறது" என்றார். ஐயோ, உண்மையைப் பேசும் விதுரரின் வார்த்தைகள் உண்மையாகிவிட்டனவே.(15) அவனது {துரியோதனின்} நிமித்தமாகவே என் ஆசான் {பீஷ்மர்} அம்புப்படுக்கையில் கிடப்பதை நான் காண்கிறேன். க்ஷத்திரிய நடைமுறைக்கு ஐயோ. என் வலிமைக்கும், ஆற்றலுக்கும் ஐயோ.(16) என்னைப் போல வேறு எவன் தான் ஒரு பிராமணரிடம், அதுவும் தன் ஆசானிடமே போரிடுவான்? கிருபர் ஒரு முனிவரின் மகனாவார்; அவர் எனது ஆசானுமாவர்; மேலும் அவர் துரோணரின் அன்பு நண்பருமாவார்.(17) ஐயோ, அவர் என் கணைகளால் பீடிக்கப்பட்டுத் தன் தேர்த்தட்டில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடக்கிறாரே. விரும்பாமலே நான் என் கணைகளால் அவரை நசுக்கிவிட்டேனே.(18) தன் தேர்த்தட்டில் உணர்வற்றுக் கிடக்கும் அவர் {கிருபர்} {கிருபர்}, என் இதயத்தை மிகவும் வலிக்கச் செய்கிறார். கணைகளால் அவர் என்னைப் பீடித்திருந்தாலும், பளபளக்கும் காந்தி கொண்ட அந்தப் போர் வீரரை (பதிலுக்குத் தாக்காமல், அவரை) நான் பார்த்துக் கொண்டு மட்டுமே இருந்திருக்க வேண்டும்.(19) எண்ணற்ற என் கணைகளால் தாக்கப்பட்ட அவர் {கிருபர்}, அனைத்து உயிரினங்களின் வழியிலேயே சென்றுவிட்டார். அதனால் என் மகனின் {அபிமன்யுவின்} கொலையைவிட எனக்கு அதிக வலியைத் தந்துவிட்டார்.(20)
ஓ! கிருஷ்ணா, இப்படிப் பரிதாபகரமாகத் தன் தேரில் உணர்வற்று கிடக்கும் அவர் எந்நிலைக்குக் குறைக்கப்பட்டுவிட்டார் என்பதைப் பார். தங்கள் ஆசான்களிடம் அறிவை அடைந்த பிறகு விருப்பத்திற்குரிய பொருட்களை அவர்களுக்குக் கொடுக்கும் மனிதர்களில் காளையர் தெய்வீகத் தன்மையை அடைகின்றனர். மறுபுறம், தங்கள் ஆசான்களிடம் அறிவை அடைந்துவிட்டு, அவர்களைத் தாக்கும் மனிதர்களில் இழிந்தோரான அந்தத் தீய மனிதர்கள் நரகத்திற்கே செல்வார்கள்.(21, 22) நான் செய்திருக்கும் இச்செயல் என்னை நரகத்திற்கே வழிநடத்தும் என்பதில் ஐயமில்லை.(23) கிருபரின் பாதங்களில் ஆயுத அறிவியலை நான் படித்துக் கொண்டிருந்த அந்நாட்களில், அவர் {கிருபர்} என்னிடம்,(24) "ஓ! குரு குலத்தோனே {அர்ஜுனா}, உன் ஆசானை ஒரு போதும் தாக்காதே" என்று சொன்னார். என் கணைகளால் கிருபரை நான் தாக்கியதால், நீதிமானும், உயர் ஆன்மா கொண்டவருமான என் ஆசானின் {கிருபரின்} அந்தக் கட்டளைக்கு நான் கீழ் படியவில்லை.(25) பின்வாங்காதவரும், கௌதமரின் வழிபடத்தகுந்த மகனுமான அந்த வீரரை {கிருபரை} நான் வணங்குகிறேன்.(26) ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, நான் அவரைத் தாக்கியதால் எனக்கு ஐயோ {என்னை இகழவே வேண்டும்}" என்றான் {அர்ஜுனன்}.
இப்படிச் சவ்யசச்சின் {அர்ஜுனன்}, கிருபருக்காகப் புலம்பிக் கொண்டிருந்த போது, சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} கொல்லப்பட்டதைக் கண்ட ராதையின் மகன் {கர்ணன்} அவனை {அர்ஜுனனை} நோக்கி விரைந்தான்.(27) இப்படி ராதையின் மகன் {கர்ணன்}, அர்ஜுனனின் தேரை நோக்கி விரைவதைக் கண்ட பாஞ்சால இளவரசர்களும், சாத்யகியும் திடீரென அவனை {கர்ணனை} நோக்கி விரைந்தனர்.(28) வலிமைமிக்கத் தேர்வீரனான பார்த்தன் {அர்ஜுனன்}, ராதையின் மகன் {கர்ணன்} முன்னேறி வருவதைக் கண்டு, தேவகியின் மகனிடம் {கிருஷ்ணனிடம்} புன்னகைத்துக் கொண்டே,(29) "அதோ அதிரதன் மகன் {கர்ணன்}, சாத்யகியின் தேரை எதிர்த்து வருகிறான்.(30) போரில் பூரிஸ்ரவஸின் கொலையை அவனால் {கர்ணனால்} தாங்கிக் கொள்ள முடியவில்லை என்பதில் ஐயமில்லை [1]. ஓ! ஜனார்த்தனா, கர்ணன் எங்கே வருகிறானோ, அங்கே என் குதிரைகளைத் தூண்டுவாயாக.(31) அந்த விருஷன் (கர்ணன்), சாத்வத வீரனை {சாத்யகியைப்} பூரிஸ்ரவஸின் வழியை அடையச் செய்ய வேண்டாம்" என்றான் {அர்ஜுனன்}.
[1] வேறொரு பதிப்பில் சாத்யகிக்கும் கர்ணனுக்கு இடையில் நேரப்போகும் இந்த மோதல் பூரிஸ்ரவஸின் கொலைக்குப் பிறகு வருகிறது. கங்குலியிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் இங்கேயே வருகிறது. வேறொரு பதிப்பில் உள்ளவாறே துரோண பகுதி 144ல் வரும் அர்ஜுனன் கர்ணன் மோதல் காட்சிகள் இந்த 146ம் பகுதியிலும், இந்த 146ல் வரும் சாத்யகி கர்ணன் காட்சிகள் 144லும் இருந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.
சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} இவ்வாறு சொல்லப்பட்டவனும் வலிமைமிக்கக் கரங்களையும், பெரும் சக்தியையும் கொண்டவனுமான கேசவன் {கிருஷ்ணன்} சந்தர்ப்பத்திற்கு ஏற்ற இவ்வார்த்தைகளை மறுமொழியாகக் கூறினான்(32): "ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட சாத்யகியானவன், தனியாகவே கர்ணனுக்கு இணையானவனாவான்.(33) அப்படியிருக்கையில் துருபதனின் இரு மகன்களுடன் சேர்ந்திருக்கும் இந்தச் சாத்வதர்களில் காளை {சாத்யகி} எவ்வளவு மேன்மையாக இருப்பான்? ஓ! பார்த்தா {அர்ஜுனா}, தற்போது நீ கர்ணனுடன் போரிடுவது முறையாகாது.(34) பின்னவன் {கர்ணன்}, வாசவன் {இந்திரன்} அவனுக்குக் கொடுத்த கடும் எரிக்கோளைப் போன்ற சுடர்மிக்க ஈட்டி {சக்தி} ஒன்றைத் தன்னிடம் வைத்திருக்கிறான். ஓ! பகைவீரர்களைக் கொல்பவனே {அர்ஜுனா}, அவன் {கர்ணன்} அதை மரியாதையுடன் வழிபட்டு உனக்காகவே அதைத் தன்னிடம் வைத்திருக்கிறான்.(35) எனவே கர்ணன் சாத்வத வீரனை {சாத்யகியை} எதிர்த்துச் சுதந்திரமாகச்செல்லட்டும். ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, எப்போது நீ உன் கூரிய கணைகளால் அவனை {கர்ணனை} அவனது தேரில் இருந்து தள்ள வேண்டுமோ அந்தக் காலத்தை, அந்தப் பொல்லாதவனின் நேரத்தை நான் அறிவேன்" என்றான் {கிருஷ்ணன்} [2]" {என்றான் சஞ்சயன்}.(36)
[2] வேறொரு பதிப்பில், கர்ணனின் புகழையும், மேன்மையையும் கிருஷ்ணன் சொல்லி அர்ஜுனனைக் காத்திருக்கப் பணிப்பதாக வருகிறது. கங்குலியிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் அவ்வாறு இல்லை.
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "ஓ சஞ்சயா, பூரிஸ்ரவஸ் மற்றும் சிந்துக்களின் ஆட்சியாளன் ஆகியோரின் வீழ்ச்சிக்குப் பிறகு, வீரக் கர்ணனுக்கும், விருஷ்ணி குலத்தோனான சாத்யகிக்கும் இடையில் போர் எவ்வாறு நடந்தது என்பதை எனக்குச் சொல்வயாக. சாத்யகியோ {பூரிஸ்ரவஸால்} தேரற்றவனாக்கப்பட்டான். {அப்படியிருக்கையில்} அவன் எந்தத் தேரில் ஏறிச் சென்றான்? (அர்ஜுனனின் தேர்ச்) சக்கரங்களைப் பாதுகாப்போரான அந்தப் பாஞ்சால இளவரசர்கள் இருவரும் (யுதாமன்யுவும், உத்தமௌஜஸும்} எவ்வாறு போரிட்டனர்?" என்று கேட்டான்.(37, 38)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "அந்தப் பயங்கரப் போரில் நடைபெற்ற யாவையும் உமக்கு விளக்கிச் சொல்கிறேன். உமது தீய நடத்தையை (தீய நடத்தையின் விளைகளைப்) பொறுமையாகக் கேட்பீராக.(39) மோதல் நடைபெறுவதற்கு வெகு முன்பே, யூபக் கொடியோனால் (பூரிஸ்ரவஸால்) வீரச் சாத்யகி வெல்லப்படுவான் என்பதைக் கிருஷ்ணன் தன் இதயத்தில் அறிந்திருந்தான்.(40)
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நடந்ததையும், நடக்கப்போவதையும் ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} அறிவான். அதன் காரணமாக, தன் தேரோட்டியான தாருகனை அழைத்த அவன் {கிருஷ்ணன்}, அவனிடம் {தாருகனிடம்}, "நாளை என் தேர் தயாராக இருக்கட்டும்" என்றான்.(41) இதையே அந்த வலிமைமிக்கவன் {கிருஷ்ணன்} கட்டளையிட்டான். தேவர்களோ, கந்தர்வர்களோ, யக்ஷர்களோ, உரகர்களோ, ராட்சசர்களோ, மனிதர்களோ அந்த இரு கிருஷ்ணர்களையும் {இரு கருப்பர்களையும்} வெல்லத் தகுந்தவர்கள் அல்ல.(42) பாட்டனை {பிரம்மனைத்} தங்கள் தலைமையில் கொண்ட தேவர்களும், சித்தர்களும், இவ்விருவரின் ஒப்பிலா ஆற்றலை அறிவார்கள்.(43) எனினும், போரை நடந்தவாறே இப்போது கேட்பீராக.
தேரற்ற சாத்யகியையும், போருக்குத் தயாராக இருக்கும் கர்ணனையும் கண்ட மாதவன் {கிருஷ்ணன்}, ரிஷப ஸ்வரத்தில் [3] பேரொலியுடன் சங்கை முழக்கினான்.(44) (கேசவனின்) சங்கொலியைக் கேட்டுப் பொருளைப் புரிந்து கொண்ட தாருகன், பெரிய கொடிமரத்தைக் கொண்ட அந்தத் தேரைக் கேசவனிடம் கொண்டு சென்றான்.(45)
சிநியின் பேரன் {சாத்யகி}, கேசவனின் {கிருஷ்ணனின்} அனுமதியுடன், பிரகாசத்தில் சுடர்மிக்க நெருப்புக்கோ, சூரியனுக்கோ ஒப்பானதும், தாருகனால் வழிநடத்தப்பட்டதுமான அந்தத் தேரில் ஏறினான்.(46) தெய்வீக வாகனத்திற்கு ஒப்பானதும், விரும்பிய இடத்திற்குச் செல்லவல்லதும், சைப்யம், சுக்ரீவம், மேகபுஸ்பம் மற்றும் வலாஹகம் ஆகிய முதன்மையான குதிரைகள் பூட்டப்பட்டதும், தங்க இழைகளால் அலங்கரிக்கப்பட்டதுமான அந்தத் தேரில் ஏறிய சாத்யகி, கணக்கிலடங்கா கணைகளை இறைத்தபடி ராதையின் மகனை {கர்ணனை} எதிர்த்து விரைந்தான்.(47, 48) (அர்ஜுனனின்) தேர்ச்சக்கரங்களின் இரு பாதுகாவலர்களான யுதாமன்யுவும், உத்தமௌஜஸும் தனஞ்சயனின் {அர்ஜுனனின்} தேரைக் கைவிட்டு, ராதையின் மகனை {கர்ணனை} எதிர்த்துச் சென்றனர்.(49) ராதையின் மகனும் {கர்ணனும்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபத்துடன் கணைமாரியை ஏவியபடி, வெல்லப்படாத சிநியின் பேரனை எதிர்த்து அந்தப் போரில் விரைந்தான்.(50)
[3] ஏழு ஸ்வரங்களுக்குள் இரண்டாவது ஸ்வரம் இஃது எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அவர்களுக்கிடையில் நடைபெற்ற போரானது இதற்கு முன்னர்ப் பூமியிலோ, சொர்க்கத்திலோ, தேவர்கள், கந்தர்வர்கள், அசுரர்கள், உரகர்கள் அல்லது ராட்சசர்களுக்கு மத்தியிலோ கூட நடைபெற்றதாகக் கேள்விப்பட்டதில்லை என்ற அளவக்கு இருந்தது. தேர்கள், குதிரைகள், மனிதர்கள், யானைகள் ஆகியவற்றைக் கொண்ட மொத்த படையும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்த இரு போர்வீரர்களின் மலைக்கத்தக்க செயல்களைக் கண்டு போரிடுவதைக் கைவிட்டது.(51, 52) அவர்கள் அனைவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த இரு மானுட வீரர்களுக்கு இடையில் நடைபெற்ற மனித சக்திக்கு அப்பாற்பட்ட அந்தப் போரையும், தேரை வழிநடத்தும் தாருகனின் திறனையும் கண்டு அமைதியான பார்வையாளர்களாக இருந்தனர்.(53) உண்மையில் தாருகன், தேரில் நின்று கொண்டு, அந்த வாகனத்தை முன்னோக்கியும், பின்னோக்கியும், பக்கவாட்டில் சென்றும், வட்டமாகச் சுழன்றும், ஒரே அடியாக நிறுத்தியும் வழிநடத்திய போது, அவனது திறனைக் கண்ட அனைவரும் வியப்படைந்தனர். ஆகாயத்திலிருந்த தேவர்கள், கந்தர்வர்கள், தானவர்கள் ஆகியோர், கர்ணனுக்கும் சிநியின் பேரனுக்கும் {சாத்யகிக்கும்} இடையில் நடைபெற்ற போரை ஊன்றிக் கவனித்து வந்தனர்.(54, 55) பெரும் வலிமை கொண்ட அந்தப் போர்வீரர்கள் இருவரும், ஒருவரையொருவர் அறைகூவியழைத்து, தங்கள் ஒவ்வொருவரின் நண்பர்களுக்காகவும் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தினர்.(56)
தேவனைப் போலத் தெரிந்த கர்ணனும், யுயுதானனும் {சாத்யகியும்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருவரின்மேல் ஒருவர் கணைமாரிகளைப் பொழிந்தனர்.(57) உண்மையில், தன் கணைப்பொழிவால் சிநியின் பேரனை {சாத்யகியைக்} கலங்கடித்த கர்ணனால், (சாத்யகியால்} குரு வீரன் ஜலசந்தனின் [4] கொலையைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(58) துயரால் நிறைந்து, பெரும்பாம்பொன்றைப் போலப் பெருமூச்சு விட்ட கர்ணன், ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் சிநியின் பேரன் {சாத்யகி} மீது கோபப் பார்வைகளை வீசிக்கொண்டு, அதனாலேயே அவனை எரித்து விடுபவனைப் போல அவனை நோக்கி மூர்க்கமாக மீண்டும் மீண்டும் விரைந்தான்.(59) சினத்தால் நிறைந்திருந்த அவனை {கர்ணனைக்} கண்ட சாத்யகி, (பகை யானையைத்) தன் தந்தங்களால் துளைக்கும் யானையொன்றைப் போல, அடர்த்தியான கணைமாரிகளை ஏவி பதிலுக்கு அவனைத் {கர்ணனைத்} துளைத்தான்.(60) புலிகளின் சுறுசுறுப்பையும், ஒப்பற்ற ஆற்றலையும் கொண்ட மனிதர்களில் புலிகளான அவ்விருவரும், அந்தப் போரில் ஒருவரையொருவர் மூர்க்கமாகச் சிதைத்துக் கொண்டனர்.(61)
[4] துரோண பர்வம் பகுதி 114ல் ஜலசந்தனைச் சாத்யகி கொன்றான்.
அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, முழுக்க இரும்பாலான கணைகளால், எதிரிகளைத் தண்டிப்பவனான கர்ணனின் அங்கங்களனைத்திலும் மீண்டும் மீண்டும் துளைத்தான். மேலும் ஒரு பல்லத்தால் அவன் கர்ணனின் தேரோட்டியை அவனது தேர்த்தட்டில் இருந்து வீழ்த்தினான்.(62, 63) மேலும் அவன் {சாத்யகி} தன் கூரிய கணைகளால், வெண்ணிறத்தைக் கொண்ட அதிரதன் மகனின் {கர்ணனின்} நான்கு குதிரைகளையும் கொன்றான். மேலும் ஒரு நூறு கணைகளால் கர்ணனின் கொடிமரத்தை நூறு துண்டுகளாக அறுத்த அந்த மனிதர்களில் காளை {சாத்யகி}, உமது மகன் {துரியோதனன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே கர்ணனைத் தேரற்றவனாகச் செய்தான். அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது போர்வீரர்கள் அனைவரும் உற்சாகத்தை இழந்தனர்.(64, 65)
அப்போது கர்ணனின் மகனான விருஷசேனன், மத்ர ஆட்சியாளனான சல்லியன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகியோர் அந்தச் சிநியின் பேரனை {சாத்யகியை} அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டனர்.(66) பிறகு எதையும் காண முடியாத ஒரு குழப்பம் தோன்றியது. உண்மையில், வீரக் கர்ணன், சாத்யகியால் தேரற்றவனாக்கப்பட்ட போது, துருப்புகள் அனைத்தின் மத்தியிலும், "ஓ" என்றும், "ஐயோ" என்றும் கூச்சல்கள் எழுந்தன(67).
சாத்வதனின் {சாத்யகியின்} கணைகளால் துளைக்கப்பட்ட கர்ணனும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குழந்தை பருவத்தில் இருந்து உமது மகனுடன் கொண்ட தன் நட்பை நினைவு கூர்ந்து, துரியோதனனுக்கு அரசுரிமையை அளிப்பதாகத் தான் செய்த உறுதிமொழியை உண்மையாக்க முயன்று, மிகவும் பலவீனமடைந்து, பெருமூச்சுவிட்டுக் கொண்டே துரியோதனனின் தேரில் ஏறினான்.(68, 69)
கர்ணன் தேரற்றவனாக்கப்பட்ட பிறகு, ஓ! மன்னா, சுயக்கட்டுப்பாடு கொண்டவனும், பீமசேனனின் சபதத்தைப் பொய்யாக்க விரும்பாதவனுமான சாத்யகியால், துச்சாசனன் தலைமையிலான உமது துணிச்சல்மிக்க மகன்கள் கொல்லப்படாதிருந்தனர். முன்னர்ப் பார்த்தனால் {அர்ஜுனனால்} (கர்ணனைக் கொல்வது குறித்து) செய்யப்பட்ட சபதத்தையும் பொய்யாக்க விரும்பாத சாத்யகி, வெறுமனே அவர்களைத் தேரற்றவர்களாக்கி மிகவும் பலவீனர்களாக்கினானே ஒழிய அவர்களைக் கொல்லவில்லை.(70, 71) உண்மையில், உமது மகன்களைக் கொல்வதாகப் பீமன் சபதம் செய்திருந்தான், மேலும் இரண்டாம் பகடையாட்டத்தின் போது கர்ணனைக் கொல்வதாகப் பார்த்தனும் {அர்ஜுனனும்} சபதம் செய்திருந்தான்.(72) கர்ணனின் தலைமையிலான அந்தப் போர் வீரர்கள் அனைவரும், சாத்யகியைக் கொல்லப் பலமான முயற்சிகளைச் செய்தாலும், அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானோர் அவனைக் {சாத்யகியைக்} கொல்வதில் தோற்றனர்.(73) துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கிருதவர்மன், வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பிறர், நூற்றக்கணக்கான க்ஷத்திரியர்களின் முதன்மையானோர் ஆகியோர் அனைவரையும் தன் ஒரே வில்லைக் கொண்டு சாத்யகி வெற்றி கொண்டான்.(74) அந்த வீரன் {சாத்யகி}, நீதிமனான மன்னன் யுதிஷ்டிரனின் நலனையும், சொர்க்கத்தையும் அடைய விரும்பியே போரிட்டான்.(75) உண்மையில், எதிரிகளை நசுக்குபவனான அந்தச் சாத்யகி, சக்தியில் இரு கிருஷ்ணர்களுக்கும் {இரு கருப்பர்களுக்கும்} இணையானவனாக இருந்தான். ஓ! மனிதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, அவன் {சாத்யகி} சிரித்துக் கொண்டே உமது துருப்புகள் அனைத்தையும் வெற்றி கொண்டான்.(76) இவ்வுலகில், கிருஷ்ணன், பார்த்தன் {அர்ஜுனன்}, சாத்யகி ஆகிய மூவர் மட்டுமே வலிமைமிக்க வில்லாளிகளாவர். நான்காவதாக ஒருவன் காணப்படவில்லை" {என்றான் சஞ்சயன்}.(77)
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "தாருகனைச் சாரதியாகக் கொண்டதும் வெல்லப்பட முடியாததுமான வாசுதேவனின் {கிருஷ்ணனின்} தேரில் ஏறியவனும், தன் கரவலிமையில் செருக்குடையவனும், போரில் வாசுதேவனுக்கே {கிருஷ்ணனுக்கே} நிகரானவனுமான சாத்யகி கர்ணனைத் தேரற்றவனாகச் செய்தான். சாத்யகி (கர்ணனனுடனான மோதல் முடிந்த பிறகு) வேறு ஏதேனும் தேரில் ஏறினானா?(78, 79) ஓ! சஞ்சயா, நான் இதைக் கேட்க விரும்புகிறேன். உரைப்பதில் நீ திறனுள்ளவனாக இருக்கிறாய். தாங்கிக் கொள்ளப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனாகச் சாத்யகியை நான் கருதுகிறேன். ஓ! சஞ்சயா அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக" என்றான் {திருதராஷ்டிரன்}.(80)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அஃது எப்படி நடந்தது என்பதைக் கேட்பீராக. நுண்ணறிவு கொண்ட தாருகனின் தம்பி, தேவைக்குரிய அனைத்தையும் கொண்ட மற்றொரு தேரைச் சாத்யகியிடம் கொண்டு வந்தான்.(81) இரும்பு, தங்கம் மற்றும் பட்டுப் பட்டைகளில் இணைக்கப்பட்ட ஏர்க்காலைக் கொண்டதும், ஆயிரம் நட்சத்திரங்களால் அலங்கரிக்கப்பட்டதும், கொடிகளால் அலங்கரிக்கப்பட்டதும், சிங்க வடிவம் பொறிக்கப்பட்ட கொடிமரம் கொண்டதும், தங்க இழைகளால் அலங்கரிக்கப்பட்டவையும் காற்றின் வேகத்தைக் கொண்டவையுமான குதிரைகள் பூட்டப்பட்டதும், மேக முழக்கத்தைப் போல ஆழமான சடசடப்பொலி கொண்டதுமான தேர் அவனிடம் {சாத்யகியிடம்} கொண்டு வரப்பட்டது.(82, 83) அதில் ஏறிய சிநியின் பேரன் {சாத்யகி}, உமது துருப்புகளுக்கு எதிராக விரைந்தான். அதே வேளையில் தாருகன் முன்பைப் போலவே கேசவன் {கிருஷ்ணன்} பக்கத்தில் சென்றான்.(84)
கர்ணனுக்கும், ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, சிறந்த இனத்தில் பிறந்தவையும், தங்க இழைகளால் அலங்கரிக்கப்பட்டவையும், சங்கு, அல்லது பசுவின் பால் போன்ற வெண் நிறத்தைக் கொண்டவையுமான வேகமானக் குதிரைகள் பூட்டப்பட்ட ஒரு புதிய தேர் கொண்டு வரப்பட்டது. அதன் காக்ஷமும், கொடிமரமும் தங்கத்தாலானவையாக இருந்தன. கொடிகள், இயந்திரங்கள் ஆகியவற்றைக் கொண்ட அந்த முதன்மையான தேர் ஒரு சிறந்த சாரதியையும் கொண்டிருந்தது. மேலும் அஃது அனைத்து வகை ஆயுதங்களையும் தன்னகத்தே அபரிமிதமாகக் கொண்டிருந்தது. அந்தத் தேரில் ஏறி, கர்ணனும் தன் எதிரிகளை எதிர்த்து விரைந்தான். நீர் கேட்ட அனைத்தையும் நான் இப்போது சொல்லிவிட்டனே.(85-87)
எனினும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது தீய கொள்கையால் விளைந்த அழிவை (அழிவின் அளவை) அறிந்து கொள்வீராக. உமது மகன்களில் முப்பத்தோரு {31} பேர் பீமசேனனால் கொல்லப்பட்டனர் [5].(88) துர்முகனை முதன்மையாகக் கொண்ட அவர்கள் அனைவரும் போர்க்கலையின் அனைத்து முறைகளையும் அறிந்தவர்களாக இருந்தனர். சாத்யகியும், அர்ஜுனனும், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே} பீஷ்மர் மற்றும் பகதத்தன் முதலான நூற்றுக்கணக்கான வீரர்களைக் கொன்றிருக்கின்றனர். இப்படியே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} உமது தீய ஆலோசனைகளின் காரணமாக அழிவு தொடங்கியது" {என்றான் சஞ்சயன்}.(89, 90)
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "போரில், அவர்கள் {பாண்டவர்கள்} தரப்பிலும், என் தரப்பிலும் {கௌரவர்கள் தரப்பிலும்} உள்ள வீரர்களின் நிலை இவ்வாறு இருந்த போது, பீமன் என்ன செய்தான்? ஓ! சஞ்சயா, யாவையும் எனக்குச் சொல்வாயாக" என்றான்.(1)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "பீமசேனன் தேரற்றவனாக்கப்பட்ட பிறகு, கர்ணனின் வார்த்தைகளால் பீடிக்கப்பட்ட அந்த வீரன் {பீமன்}, சினத்தால் நிறைந்து பல்குனனிடம் {அர்ஜுனனிடம்}, "ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, நீ பார்த்துக் கொண்டிருக்கும்போதே கர்ணன் என்னிடம் மீண்டும் மீண்டும், "அலியே, மூடனே, பெருந்தீனிக்காரா, ஆயுதங்களில் திறனற்றவனே, குழந்தாய், போரின் சுமையைத் தாங்கிக் கொள்ள முடியாத நீ போரிடாதே" என்று சொன்னான். என்னிடம் அப்படிச் சொல்பவன் என்னால் கொல்லப்பட வேண்டும். ஓ! பாரதா {அர்ஜுனா}, கர்ணன் அந்த வார்த்தைகளை என்னிடம் சொல்லியிருக்கிறான்.(2-4) ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, நான் உன்னுடன் சேர்ந்து ஏற்ற உறுதிமொழியை {சபதத்தை} நீ அறிவாய். என்னால் அப்போது சொல்லப்பட்ட வார்த்தைகளை நினைவுகூர்வாயாக. ஓ! மனிதர்களில் சிறந்தவனே, ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, உன் சபதத்தைப் போலவே என் சபதமும் பொய்யாக்கப்படாதவாறு நடந்து கொள்வாயாக. ஓ! தனஞ்சயா {அர்ஜுனா} எதனால் என் சபதம் உண்மையாகுமோ அதைச் செய்வாயாக.(5, 6)
பீமனின் இவ்வார்த்தைகளைக் கேட்டவனும், அளக்க முடியாத ஆற்றலைக் கொண்டவனுமான அர்ஜுனன், அந்தப் போரில் கர்ணனின் அருகில் சென்று,(7) "ஓ! கர்ணா, நீ தவறான பார்வையைக் கொண்டிருக்கிறாய். ஓ! சூதனின் மகனே {கர்ணா}, உன்னை நீயே புகழ்ந்து கொள்கிறாய். தீய புரிதல் கொண்டவனே, இப்போது நான் உன்னிடம் சொல்வதைக் கேட்பாயாக.(8) வீரர்கள் போரில் வெற்றி, அல்லது தோல்வி என்ற இரண்டையே அடைகிறார்கள். ஓ! ராதையின் மகனே {கர்ணா}, இவைகளில் இரண்டும் நிச்சயமற்றவையே. போரில் ஈடுபடும் இந்திரனுக்கே வேறு கதி கிடையாது. யுயுதானனால் {சாத்யகியால்} தேரற்றவனாக்கப்பட்டு, உணர்வுகளை இழந்த நீ கிட்டத்தட்ட மருணத்தருவாயில் இருந்தாய். எனினும், உன்னைக் கொல்வதாக நான் ஏற்றிருந்த சபதத்தை நினைவுகூர்ந்த அந்த வீரன் {சாத்யகி}, உன் உயிரை எடுக்காமலேயே உன்னை விட்டான்.(10) பீமசேனரை தேரற்றவனாக்குவதில் நீ வென்றாய் என்பது உண்மையே. எனினும், ஓ! ராதையின் மகனே {கர்ணா}, அவ்வீரரை {பீமரை} நீ இகழ்ந்தது பாவச் செயலாகும்.(11) உண்மையான நேர்மையும், துணிச்சலும் கொண்ட மனிதர்களில் காளையர், ஓர் எதிரியை வெற்றிக் கொண்டால், தற்புகழ்ந்து கொள்ளவோ, எவரையும் இகழ்ந்து பேசவோ மாட்டார்கள்.(12) எனினும், உன் அறிவு அற்பமானதே. இதன் காரணமாகவே, ஓ! சூதனின் மகனே {கர்ணா}, நீ இத்தகு பேச்சுகளில் ஈடுபடுகிறாய். மேலும், பெரும் ஆற்றல் மற்றும் வீரம் கொண்டவரும், நேர்மையான செயல்பாடுகளுக்கு எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பவரும், போராடிக் கொண்டிருந்தவருமான பீமசேனர் குறித்த உன் தூற்றும் அடைமொழிகள் எதுவுமே உண்மைக்கு இயைந்தவையாக இல்லை. கேசவனும் {கிருஷ்ணனும்}, நானும், இந்தத் துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருந்தபோதே, பீமசேனரால் போரில் நீ பல முறை தேரற்றவனாகச் செய்யப்பட்டாய்.(13, 14) எனினும் அந்தப் பாண்டுவின் மகன் {பீமர்}, உன்னிடம் கடுமையான வார்த்தை ஒன்றைக் கூடச் சொல்லவில்லை.(15)
எனினும், விருகோதரிடம் {பீமரிடம்} நீ கடுமையான வார்த்தைகள் பலவற்றைச் சொன்னதாலும், என் பார்வைக்கு அப்பால் பிறருடன் சேர்ந்து சுபத்திரையின் மகனைக் {அபிமன்யுவைக்} கொன்றதாலும், அந்த உன் குற்றங்களுக்கான கனியை {பலனை} நீ இன்றே அடையப் போகிறாய்.(16)
ஓ! பொல்லாதவனே {கர்ணா}, உன் அழிவுக்காகத்தான் நீ அபிமன்யுவின் வில்லை அறுத்தாய்.(17) ஓ! அற்ப அறிவைக் கொண்டவனே {கர்ணா}, அதற்காகவே நீ, உன் தொண்டர்கள், படைகள், விலங்குகள் அனைத்துடன் சேர்த்து என்னால் கொல்லப்படுவாய். பேரிடர் உனக்கு நேரப்போவதால், நீ செய்ய வேண்டிய அனைத்துச் செயல்களையும் இப்போதே செய்து கொள்வாயாக.(18) போரில் நீ பார்த்துக் கொண்டிருக்கும்போதே விருஷசேனனை {உன் மகனை} நான் கொல்வேன். மூடத்தனத்தால் என்னை எதிர்க்கப்போகும் மன்னர்கள் அனைவரையும் நான் யமனுலகுக்கு அனுப்பி வைப்பேன்.(19) என் ஆயுதத்தின் மீது கையைவைத்து இதை நான் உண்மையாகவே {சத்தியமாகச்} சொல்கிறேன். ஞானமற்றவனும், அகங்காரம் நிறைந்தவனும், மூடனுமான நீ போர்க்களத்தில் {வீழ்ந்து} கிடக்கும் போது, உன்னைக் கண்டு, மனங்கசந்து தீயத் துரியோதனன் புலம்பல்களில் ஈடுபடுவான் என்று நான் சொல்கிறேன்" என்றான் {அர்ஜுனன்}.
கர்ணனின் மகனை {விருஷசேனனைக்} கொல்வதாக அர்ஜுனன் சபதமேற்றபோது, தேர்வீரர்களுக்கு மத்தியில் பேரோலியுடன் கூடிய மிகப் பெரிய ஆரவராம் எழுந்தது.(20, 21) அச்சம் நிறைந்த அவ்வேளையில் எங்கும் குழப்பம் நிலவியபோது, ஆயிரம் கதிர்களைக் கொண்ட சூரியன், ஒளியிழந்த கதிர்களுடன் அஸ்த மலைக்குள் நுழைந்தான்.(22) அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரின் முன்னணியில் நின்ற ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, சபதத்தை நிறைவேற்றிய அர்ஜுனனை வாரி அணைத்துக் கொண்டு,(23) அவனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான், "ஓ! ஜிஷ்ணு {அர்ஜுனா}, உன் பெரும் சபதம் நிறைவேற்றப்பட்டது நற்பேறாலேயே.(24) பொல்லாதவனான விருத்தக்ஷத்திரனும், அவனது மகனும் {ஜெயத்ரதனும்} கொல்லப்பட்டது நற்பேறாலேயே. ஓ! பாரதா {அர்ஜுனா}, இந்தத் தார்தராஷ்டிரப் படையுடன் தேவர்களின் படைத்தலைவனே {முருகனே} போரிட்டாலும், ஓ! ஜிஷ்ணு {அர்ஜுனா}, அவன் தன் உணர்வுகளை இழந்திருப்பான்.(25) இதில் எந்த ஐயமும் இல்லை. ஓ! மனிதர்களில் புலியே {அர்ஜுனா}, மூவுலகிலும் இந்தப் படையுடன் போரிடக்கூடியவனாக உன்னைத் தவிர வேறு எவனையும் என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.
உனக்கு இணையாகவோ, மேன்மையாகவோ பெரும் ஆற்றலைக் கொண்டவர்களான அரசப் போர்வீரர்கள் பலர், துரியோதனனின் கட்டளையின் பேரில் ஒன்று சேர்ந்திருக்கின்றனர். கவசம் பூண்டவர்களான அவர்களாலும் போரில் கோபம் நிறைந்த உன்னை அணுகவே முடியாது.(26-28) உன் சக்தியும், வலிமையும், ருத்ரனுக்கோ, சக்ரனுக்கோ {இந்திரனுக்கோ}, யமனுக்கோ நிகரானவை. ஓ! ஏதிரிகளை எரிப்பவனே, யாருடைய ஆதரவும் இல்லாமல், தனியாகப் போரில் இன்று நீ வெளிப்படுத்திய இத்தகு ஆற்றலை வெளிப்படுத்த இயன்றவன் வேறு எவனும் இல்லை.(29) தீய ஆன்மா கொண்ட கர்ணன் தன் தொண்டர்களுடன் கொல்லப்படும்போது மீண்டும் உன்னை நான் இப்படிப் பாராட்டுவேன். உன் எதிரி வெல்லப்பட்டுக் கொல்லப்படும்போது, நான் இப்படியே உன்னைப் போற்றுவேன்" என்றான் {கிருஷ்ணன்}.
அவனிடம் {கிருஷ்ணனிடம்} மறுமொழியாக அர்ஜுனன், "ஓ! மாதவா {கிருஷ்ணா}, தேவர்களும் சாதிக்கக் கடினமான இந்தச் சபதமானது, உன் அருளாலேயே என்னால் நிறைவேற்றப்பட்டது.(30, 31) ஓ! கேசவா {கிருஷ்ணா}, உன்னைத் தலைவனாகக் கொண்டோரின் வெற்றியானது ஆச்சரியப்பட வேண்டிய ஒன்றே அல்ல.(32) உன் அருளால் யுதிஷ்டிரர் முழுப் பூமியையும் அடைவார். ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, இவை யாவும் உன் சக்தியாலேயே நடக்கின்றன. ஓ! தலைவா {கிருஷ்ணா}, இந்த வெற்றி உனதாகும்.(33) ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, எங்கள் செழிப்பு உனது பொறுப்பு, நாங்கள் உன் பணியாட்களே" என்றான் {அர்ஜுனன்}. இப்படிச் சொல்லப்பட்ட கிருஷ்ணன் மெல்லப் புன்னகைத்தபடியே மெதுவாகக் குதிரைகளைத் தூண்டினான். மேலும் அவன் சென்ற வழியெங்கும் பார்த்தனுக்கு {அர்ஜுனனுக்குக்} கொடூரக் காட்சிகள் நிறைந்த போர்க்களத்தைக் காட்டிக் கொண்டே வந்தான்.(34)
அப்போது கிருஷ்ணன் {அர்ஜுனனிடம்}, "போரில் வெற்றியையோ, உலகப்புகழையோ விரும்பிய வீர மன்னர்கள் பலர் கணைகளால் தாக்கப்பட்டுப் பூமியில் கிடக்கின்றனர்.(35) அவர்களது ஆயுதங்களும், ஆபரணங்களும் சிதறடிக்கப்பட்டும், அவர்களது குதிரைகள், தேர்கள், யானைகள் ஆகியவை சிதைக்கப்பட்டும், உடைக்கப்பட்டும் கிடக்கின்றன. கவசங்கள் துளைக்கப்பட்டோ, பிளக்கப்பட்டோ அவர்கள் பெரும் துன்பத்தை அடைந்தனர்.(36) அவர்களில் சிலர் இன்னும் உயிருடன் இருக்கின்றனர், சிலரோ இறந்து விட்டனர். எனினும் அப்படி மாண்டோரும் கூடத் தங்கள் காந்தியின் விளைவால் இன்னும் உயிருடன் இருப்பவர்களைப் போலவே தெரிகின்றனர்.(37) தங்கச் சிறகுகளைக் கொண்ட அவர்களது கணைகளாலும், தாக்குவதற்கும், தற்காத்துக் கொள்வதற்கும் பயன்படும் அவர்களது எண்ணற்ற பிற ஆயுதங்களாலும், (உயிரை இழந்த) அவர்களது விலங்குகளாலும் பூமியானது மறைக்கப்பட்டிருப்பதைப் பார்.(38) உண்மையில், கவசங்கள், ரத்தின ஆரங்கள், காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட அவர்களது தலைகளாலும், தலைக்கவசங்கள், கிரீடங்கள், மலர் மாலைகள், மகுடங்களில் உள்ள கற்கள், கண்டசூத்ரங்கள் {கழுத்தணிகள்}, அங்கதங்கள் {தோள்வளைகள்}, தங்கப்பட்டைகள் மற்றும் பல்வேறு பிற அழகிய ஆபரணங்களாலும் பூமியானது பிரகாசமாகத் தெரிகிறது.(39, 40)
அனுகர்ஷங்கள் {இருசுக்கட்டைகள்}, அம்பறாத்தூணிகள், கொடிமரங்கள், கொடிகள், உபஷ்கரங்கள் {தேரிலுள்ள பிற பொருட்கள்}, அதிஷ்தானங்கள் {பீடங்கள்}, கணைகள், தேர்களின் {கோபுர} முகடுகள், உடைந்த சக்கரங்கள், பெரும் எண்ணிக்கையிலான அழகிய அக்ஷங்கள் {ஏர்க்கால்கள்}, நுகத்தடிகள், குதிரைகளின் கடிவாளங்கள், கச்சைகள், விற்கள், அம்புகள், யானைகளின் அம்பாரிகள், பரிங்கங்கள், அங்குசங்கள், ஈட்டிகள், பிண்டிபாலங்கள் {குறுங்கணைகள்}, தோமரங்கள், சூலங்கள், குந்தங்கள், தண்டாயுதங்கள், சதாக்னிகள், புசுண்டிகள், வாள்கள், கோடரிகள், குறுகிய கனமானத் தண்டாயுதங்கள், உலக்கைகள், கதாயுதங்கள், குணபங்கள் {ஒரு வகை ஈட்டிகள்}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட சாட்டைகள், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, மணிகள், பெரும் யானைகளின் பல்வேறு விதமான ஆபரணங்கள், மனிதர்கள் மற்றும் விலங்குகளின் உடல்களில் இருந்து நுழுவிய மலர்மாலைகள், விலையுயர்ந்த ஆடைகள், ஆபரணங்கள் ஆகிவற்றால் விரவிக் கிடந்த பூமியானது, கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் விரவிக்கிடக்கும் கூதிர்காலத்து ஆகாயத்தைப் போலப் பிரகாசமாக ஒளிர்ந்தது. பூமிக்காகக் கொல்லப்பட்ட பூமியின் தலைவர்கள், அன்புக்குரிய மனைவியை அணைத்துக் கொள்வதைப் போலப் பூமியைத் தங்கள் அங்கங்களால் தழுவியபடி உறங்கிக் கொண்டிருந்தனர்.
மலைகள் தங்கள் குகைகள் மற்றும் பிளவுகளில் சுண்ணாம்பை உதிர்ப்பதைப் போல, ஐராவதத்திற்கு ஒப்பானவையும், மலைகளைப் போலப் பெரியவையுமான இந்த யானைகள், ஆயுதங்களால் தங்கள் உடல்களில் உண்டான பிளவுகளில் அபரிமிதமாகக் குருதியைச் சிந்துகின்றன.(41-49) ஓ! வீரா {அர்ஜுனா}, கணைகளால் பீடிக்கப்பட்டுத் தரையில் கிடக்கும் அந்தப் பெரும் உயிரினங்கள் நடுங்கிக் கொண்டிருப்பதைப் பார். தங்க இழைகளால் அலங்கரிக்கப்பட்டுத் தரையில் கிடக்கும் அந்தக் குதிரைகளையும் பார்.(50) ஓ! பார்த்தா {அர்ஜுனா}, சாரதியற்றவையும், தேரோட்டியற்றவையும், ஒரு காலத்தில் தெய்வீக வாகனங்களுக்கோ, மாலை வானில் தோன்றும் ஆவி வடிவங்களுக்கோ {கந்தர்வ மாளிகைகளுக்கோ} ஒப்பாக இருந்தவையுமான அந்தத் தேர்கள், ஓ! தலைவா {அர்ஜுனா}, துண்டுகளாக வெட்டப்பட்ட கொடிமரங்கள், கொடிகள், அக்ஷங்கள், நுகத்தடிகள் ஆகியவற்றுடனும், உடைந்த ஏர்க்கால்கள் மற்றும் முகடுகளுடனும் இப்போது தரையில் கிடப்பதைப் பார்.(51, 52) ஓ! வீரா {அர்ஜுனா}, விற்கள் மற்றும் கேடயங்களைத் தாங்கிய காலாட்படை வீரர்களும், நூற்றுக் கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் கொல்லப்பட்டுக் குருதியில் குளித்துப் புழுதி படிந்த தங்கள் குழல்களுடன் {கேசங்களுடன்}, தங்கள் அனைத்து அங்கங்களாலும் பூமியைத் தழுவியபடி பூமியில் கிடப்பதைப் பார்.(53)
ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, அந்தப் போர்வீரர்களின் உடல்கள் உன் ஆயுதங்களால் சிதைக்கப்பட்டிருப்பதைப் பார்.(54) சாமரங்கள், விசிறிகள், குடைகள், கொடிமரங்கள், குதிரைகள், தேர்கள், யானைகள், பல்வேறு வகையான விரிப்புகள், குதிரைகளின் கடிவாளங்கள், அழகிய ஆடைகள், விலைமதிப்புமிக்க (தேர்களின்) வரூதங்கள், சித்திர வேலைப்பாடுகளுள்ள திரைச்சீலைகள் ஆகியவற்றால் விரவிக் கிடக்கும் இந்தப் பூமியைப் பார்.(55, 56) இடியால் தாக்கப்பட்டு மலையின் முகடுகளில் இருந்து விழும் சிங்கங்களைப் போல, போர்வீரர்கள் பலர், நன்கு ஆயுதம் தரிக்கப்பட்ட யானைகளின் முதுகுகளில் இருந்து விழுந்து, தாங்கள் ஏறி வந்த அந்த விலங்குகளுடனேயே கிடப்பதைப் பார்.(57) (தாங்கள் ஏறி வந்த) குதிரைகள், (தாங்கள் பிடித்திருந்து) விற்கள் ஆகியவற்றோடு கலந்து பெரும் எண்ணிக்கையிலான குதிரைவீரர்களும், காலாட்படை வீரர்கள், குருதியால் மறைக்கப்பட்டுக் களத்தில் விழுந்து கிடப்பதைப் பார்.(58)
ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {அர்ஜுனா}, பெரும் எண்ணிக்கையில் கொல்லப்பட்ட யானைகள், குதிரைகள் மற்றும் தேர்வீரர்களால் மறைக்கப்பட்டதும், அபரிமிதமான இரத்தம், கொழுப்பு மற்றும் அழுகிய இறைச்சியினால் உண்டான சேறில் மகிழும் நாய்கள், ஓநாய்கள், பிசாசங்கள் மற்றும் பல்வேறு இரவு உலாவிகள் திரிவதுமான பூமியின் பரப்புப் பயங்கரமாக இருப்பதைப் பார்.(59) ஓ! பலமிக்கவனே {அர்ஜுனா}, புகழை அதிகரிப்பதான இந்தப் போர்க்கள அருஞ்செயலானது உன்னாலோ, பெரும் போரில் தைத்தியர்களையும், தானவர்களையும் கொல்லும் தேவர்களின் தலைவனான இந்திரனாலோ மட்டுமே அடையத்தக்கதாகும்" என்றான் {கிருஷ்ணன்}.(60)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனான அர்ஜுனனுக்கு இப்படியே போர்க்களத்தைக் காட்டிவந்த கிருஷ்ணன், தன் சங்கான பாஞ்சஜன்யத்தை முழக்கி, (பதிலுக்குத் தங்கள் தங்கள் சங்குகளை முழக்கிய) பாண்டவப்படையின் வீரர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினான்.(61) கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட வீரனுக்கு {அர்ஜுனனுக்குப்} போர்க்களத்தைக் காட்டியதும், எதிரிகளைக் கொல்பவனான அந்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, பாண்டுவின் மகனான அஜாதசத்ருவிடம் {யுதிஷ்டிரனிடம்} விரைவாகச் சென்று, ஜெயத்ரதனின் கொலையைக் குறித்து அவனுக்குத் தெரிவித்தான்" {என்றான் சஞ்சயன்}.(62)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} பார்த்தனால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்ட பிறகு, கிருஷ்ணன், தர்மனின் மகனான மன்னன் யுதிஷ்டிரனிடம் சென்று, மகிழ்ச்சியான இதயத்துடன் பின்னவனை {யுதிஷ்டிரனை} வழிபட்டான்.(1) மேலும் அவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னர்களின் மன்னா {யுதிஷ்டிரரே}, உமது வளம் அதிகரிப்பது நற்பேறாலேயே. ஓ! மனிதர்களில் சிறந்தவரே, உமது எதிரி {ஜெயத்ரதன்} கொல்லப்பட்டான். உமது தம்பி {அர்ஜுனன்} அவனது சபத்தை நிறைவேற்றியது நற்பேறாலேயே" என்றான்.(2)
பகை நகரங்களை அடக்குபவனான கிருஷ்ணனால் இப்படிச் சொல்லப்பட்ட மன்னன் யுதிஷ்டிரன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மகிழ்ச்சியால் நிறைந்து, தன் தேரில் இருந்து கீழே இறங்கினான்.(3) ஆனந்தக் கண்ணீரால் நிரம்பிய கண்களுடன் இரு கிருஷ்ணர்களையும் {இரு கருப்பர்களான வாசுதேவன் மற்றும் அர்ஜுனனையும்} தழுவி கொண்ட அவன் {யுதிஷ்டிரன்}, பிரகாசமானதும், தாமரை போன்றதுமான தன் முகத்தைத் துடைத்துக் கொண்டு,(4) வாசுதேவனிடமும் {கிருஷ்ணனிடமும்}, பாண்டுவின் மகனான தனஞ்சயனிடமும் {அர்ஜுனனிடமும்} இவ்வார்த்தைகளைச் சொன்னான், "வலிமைமிக்கத் தேர்வீரர்களே, பணியை நிறைவேற்றிய உங்கள் இருவரையும் நற்பேறாலேயே நான் காண்கிறேன்.(5) பாவம் நிறைந்த இழிந்தவனான அந்தச் சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} கொல்லப்பட்டது நற்பேறாலேயே. கிருஷ்ணர்களே, பெரும் மகிழ்ச்சியால் என்னை நிறைய வைக்கும் செயலை நற்பேறாலேயே நீங்கள் செய்தீர்கள்.(6)
நம் எதிரிகள் துன்பக்கடலில் மூழ்கியிருப்பது நற்பேறாலேயே. ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, அனைத்து உலகங்களின் தலைவன் {இறைவன்} நீயே. உன்னைத் தங்கள் பாதுகாவலராகக் கொண்டோரால் இந்த மூவுலகிலும் அடைய முடியாத சாதனை எதுவும் இல்லை. ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, பழங்காலத்தில் தானவர்களை வென்ற இந்திரனைப் போல, உன் அருளால் நாங்கள் எங்கள் எதிரிகளை வெல்வோம்.(7, 8)
ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, நீ எவரிடம் மனநிறைவு கொள்கிறாயோ, ஓ! கௌரவங்களை அளிப்பவனே, அவர்கள் உலகத்தை வெல்வதோ, மூவுலகங்களை வெல்வதோ நிச்சயம் சாத்தியமே.(9) ஓ! தேவர்களின் தலைவா {கிருஷ்ணா}, நீ யாரிடம் மனநிறைவு கொண்டுள்ளாயோ, ஓ! கௌரவங்களை அளிப்பவனே, அவர்கள் போரில் தோல்வியையோ எந்தப் பாவத்தையோ அடைய மாட்டார்கள்.(10)
ஓ! ரிஷிகேசா {கிருஷ்ணா}, சக்ரன் {இந்திரன்} தேவர்களின் தலைவனானது உன் அருளாலேயே.(11) அந்த அருளப்பட்டவன் {இந்திரன்}, போர்க்களத்தில் மூவுலகங்களின் அரசுரிமையையும் அடைந்தது உன் அருளாலேயே. ஓ! தேவர்களின் தலைவா {கிருஷ்ணா}, பின்னவன் {இந்திரன்} இறவா நிலையை அடைந்ததும், ஓ! கிருஷ்ணா, நித்தியமான (அருள்) உலகங்களை அனுபவிப்பதும் உன் அருளாலேயே (12) ஓ! எதிரிகளைக் கொல்பவனே, உன் அருளால் உண்டான ஆற்றலைக் கொண்டு ஆயிரக்கணக்கான தைத்தியர்களைக் கொன்ற சக்ரன் {இந்திரன்}, தேவர்களின் தலைமைப் பொறுப்பை அடைந்தான்.(13) ஓ! ரிஷிகேசா {கிருஷ்ணா}, அசைவன மற்றும் அசையாதன ஆகியவற்றைக் கொண்ட இந்த அண்டம், ஓ! வீரா {கிருஷ்ணா} அதன் பாதையில் இருந்து நழுவாமல் வேண்டுதல்களிலும், ஹோமங்களிலும் ஈடுபட்டுக்கொண்டிருப்பது உன் அருளாலேயே.(14) தொடக்கத்தில் இருளில் முழ்கியிருந்த இந்த அண்டம் முழுவதும ஒரே நீர்ப்பரப்பே இருந்தது.(15) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, ஓ! மனிதர்களில் சிறந்தவனே {கிருஷ்ணா}, இந்த அண்டம் உன் அருளாலேயே வெளிப்பட்டது.
உலகங்கள் அனைத்தின் படைப்பாளன் நீயே, பரமாத்மா நீயே, மாற்றமில்லாதவன் நீயே.(16) ஓ! ரிஷிகேசா {கிருஷ்ணா}, உன்னைக் கண்டவர் எவரும் ஒருபோதும் குழம்புவதில்லை. பரம்பொருள் நீயே, தேவர்களின் தேவன் நீயே, அழிவற்றவன் நீயே.(17) ஓ! தேவர்களின் தலைவா {கிருஷ்ணா}, உன்னைப் புகலிடமாகக் கொண்டோர் ஒரு போதும் குழம்புவதில்லை. அனைத்து உலகங்களையும் படைப்பவனும், மாற்றமில்லாதவனும், ஆதி அந்தம் இல்லாதவனுமான தெய்வீகமானவன் நீயே.(18) ஓ! ரிஷிகேசா {கிருஷ்ணா}, உனக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவர்கள் எப்போதும் அனைத்துச் சிரமங்களையும் கடப்பார்கள். பரமனும் {ஆதி முதல்வனும்}, பழமையானவனும், தெய்வீகமானவனும் {தெய்வீகப் புருஷனும்}, உயர்ந்தவையனைத்திலும் உயர்ந்தவனும் நீயே.(19) பரமனான உன்னை அடைந்தவன் எவனோ, அவன் உயர்ந்த வளத்தை அடைய விதிக்கப்பட்டிருக்கிறான். நான்கு வேதங்களிலும் பாடப்படுபவன் நீயே. நான்கு வேதங்களும் உன்னையே பாடுகின்றன.(20)
சிறகு படைத்த பறவகளின் தலைவன் கருடன்
ஓ! உயர் ஆன்மா கொண்டோனே {கிருஷ்ணா}, உன் உறைவிடத்தை நாடி ஒப்பற்ற வளத்தை நான் அடைவேன். பரம்பொருள் நீயே, உயர்ந்த தேவர்களின் தேவன் நீயே, சிறகு படைத்த உயிரினங்களின் தலைவன் நீயே, மனிதர்கள் அனைவரின் தலைவன் நீயே.(21)
அனைத்தினுக்கும் உயர்ந்த தலைவன் நீயே. ஓ! இருப்போரில் சிறந்தவனே {கிருஷ்ணா}, நான் உன்னை வணங்குகிறேன். ஓ! பலமிக்கவனே, தலைவனும், தலைவர்களுக்குத் தலைவன் நீயே. ஓ! மாதவா {கிருஷ்ணா}, வளமே உனதாகட்டும்.(22)
ஓ! அகன்ற கண்களை உடையவனே, ஓ! அண்ட ஆன்மாவே, அனைத்துப் பொருட்களின் தொடக்கம் நீயே. எவன் தனஞ்சயனின் {அர்ஜுனனின்} நண்பனோ, எவன் தனஞ்சயனின் நன்மையில் ஈடுபடுபவனோ அவன், தனஞ்சயனின் பாதுகாவலனான உன்னையே அடைந்து மகிழ்ச்சியை அடைவான்" என்றான் {யுதிஷ்டிரன்}.(23)
இப்படி அவனால் சொல்லப்பட்டவர்களும், உயர் ஆன்மா கொண்டவர்களுமான கேசவனும் {கிருஷ்ணனும்}, அர்ஜுனனும், பூமியின் தலைவனான அந்த மன்னனிடம் {யுதிஷ்டிரனிடம்} மகிழ்ச்சியாக,(24) "பாவம் நிறைந்த மன்னனான ஜெயத்ரதன், உமது கோபம் எனும் நெருப்பாலேயே எரிக்கப்பட்டான்.(25) ஓ! பலமிக்கவரே, தார்தராஷ்டிரப் படையானது பெரியதாகவும், செருக்கு நிறைந்ததாகவும் இருப்பினும், ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, தாக்குதலுக்குள்ளாகியும், கொல்லப்பட்டும் அழிக்கப்பட்டு வருகிறது.(26) ஓ! எதிரிகளைக் கொல்பவரே {யுதிஷ்டிரரே}, உமது கோபத்தின் விளைவாலேயே கௌரவர்கள் அழிக்கப்பட்டு வருகின்றனர். ஓ! வீரரே, கண்களால் மட்டுமே கொன்றுவிடக்கூடியவரான உம்மைக் கோபமூட்டிய தீய மனம் கொண்ட சுயோதனன் {துரியோதனன்}, தன் நண்பர்களுடனும், தன் சொந்தங்களுடனும் சேர்ந்து போரில் உயிரை விடப் போகிறான்.
அம்புப் படுக்கையில் பீஷ்மர்
உமது கோபத்தின் விளைவால் முன்பே கொல்லப்பட்டவரும், தேவர்களலேயே தாக்கப்பட்டவரும், குருக்களின் பாட்டனுமான வெல்லப்பட முடியாத பீஷ்மர், இப்போது கணைப்படுக்கையில் கிடக்கிறார்.(27, 28) ஓ! எதிரிகளைக் கொல்பவரே {யுதிஷ்டிரரே}, உம்மை எதிரியாகக் கொண்டோரால் போரில் வெற்றியடையமுடியாது, ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே}, மரணமும் அவர்களுக்காகக் காத்திருக்கிறது.(29) ஓ! எதிரிகளை எரிப்பவரே {யுதிஷ்டிரரே}, எவனிடம் நீர் கோபம் கொள்கிறீரோ, அவன் தன் உயிர், அன்புக்குரியோர், பிள்ளைகள், பல்வேறு வகையான அருள்நிலைகள் ஆகியவற்றை விரைவில் இழப்பான்.(30) ஓ! எதிரிகளை எரிப்பவரே, மன்னர்களின் கடமைகளை நோற்பவரான நீர் கௌரவர்களிடம் கோபம் கொண்டிருக்கிறீர் எனும்போது, அவர்கள் {கௌரவர்கள்}, தங்கள் மகன்கள், விலங்குகள் மற்றும் சொந்தங்களோடு ஏற்கனவே வீழ்ந்து விட்டனர் என்றே நான் கருதுகிறேன்" என்றான் {கிருஷ்ணன்}.(31)
அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கணைகளால் சிதைக்கப்பட்டவர்களான பீமன் மற்றும் வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி ஆகிய இருவரும் தங்களுக்கு மூத்தவனை {யுதிஷ்டிரனை} வணங்கினர். வலிமைமிக்க வில்லாளிகளான அவ்விருவரும், பாஞ்சாலர்கள் சூழ கீழே தரையில் அமர்ந்தனர்.(32, 33) அவ்விரு வீரர்களும் மகிழ்ச்சியால் நிறைந்திருப்பதையும், வந்திருந்து கூப்பிய கரங்களுடன் இருப்பதையும் கண்ட குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, அவர்கள் இருவரையும் வாழ்த்தி,(34) "வீரர்களே, துரோணரே வெல்லப்பட முடியாத முதலையாகவும், ஹிருதிகன் மகனே {கிருதவர்மனே} கடும் சுறாவாகவும் உள்ள கடலெனும் (பகைவரின்) துருப்புகளில் இருந்து நீங்கள் இருவரும் உயிரோடு தப்பி வந்தது நற்பேறாலேயே. பூமியின் மன்னர்கள் அனைவரும் (உங்கள் இருவராலும்) வெல்லப்பட்டது நற்பேறாலேயே.(35) வெற்றிகரமானவர்களாக உங்கள் இருவரையும் நான் காண்பது நற்பேறாலேயே. துரோணரும், வலிமைமிக்கத் தேர்வீரனான ஹிருதிகன் மகனும் {கிருதவர்மனும்} போரில் வெல்லப்பட்டதும் நற்பேறாலேயே.(36)
விகர்ணிகளால் {முள் பதிக்கப்பட்ட கணைகளால்} போரில் கர்ணன் வெல்லப்பட்டது நற்பேறாலேயே. மனிதர்களில் காளையரே, உங்கள் இருவராலும் போரில் இருந்து சல்லியன் புறமுதுகிடச் செய்யப்பட்டது நற்பேறாலேயே. (37) தேர்வீரர்களில் முதன்மையானவர்களும், போரில் நல்ல திறம் கொண்டவர்களுமான நீங்கள் இருவரும், போரில் இருந்து பாதுகாப்பாகவும், நலமாகவும் திரும்பி வந்ததை நான் காண்பது நற்பேறாலேயே.(38) வீரர்களே, என்னைக் கௌரவிக்கும் விருப்பத்தால் உந்தப்பட்டு, போருக்குச் சென்றவர்களான நீங்கள், என் உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து, கடலெனும் துருப்புகளைக் கடந்து வந்திருப்பதை நான் காண்பது நற்பேறாலேயே.(39) போரில் மகிழ்பவர்கள் நீங்கள். போரில் புறமுதுகிடாதவர்கள் நீங்கள். எனக்கு உயிரைப் போன்றவர்கள் நீங்கள். உங்கள் இருவரையும் நான் காண்பது நற்பேறாலேயே" என்றான் {யுதிஷ்டிரன்}.(40)
இதைச் சொன்ன அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மனிதர்களில் புலிகளான அந்த யுயுதானன் {சாத்யகி}, மற்றும் விருகோதரன் {பீமன்} ஆகிய இருவரையும் ஆரத் தழுவி கொண்டு ஆனந்தக் கண்ணீரை உதிர்த்தான்.(41) அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மொத்த பாண்டவப் படையும் உற்சாகமடைந்து மகிழ்ச்சியில் நிறைந்தன. மேலும் அவர்கள் அனைவரும் மீண்டும் தங்கள் இதயங்களைப் போரில் நிலைநிறுத்தினர்" {என்றான் சஞ்சயன்}.(42)
….
தொடரும்..
..
மகாபாரதம் தொடர் முழுவதும் படிக்க இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைந்திருங்கள்
No comments:
Post a Comment