Monday, January 15, 2024

Mahabharatam in tamil 308

மஹாபாரதம்(முழுவதும்)-பாகம்-308
துரோண பர்வம்
….
ஜெயத்ரதனைக் கொன்ற அர்ஜுனன்
..
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "துரோணர், ராதையின் மகன் {கர்ணன்}, விகர்ணன், கிருதவர்மன் ஆகியோரால் வெல்லப்படாதவனும், போரில் எப்போதும் தடுக்கப்படாதவனும், யுதிஷ்டிரனிடம் உறுதியளித்துவிட்டுக் கௌரவத் துருப்புகளின் கடலைக் கடந்தவனுமான வீரச் சாத்யகி, குரு போர்வீரனான பூரிஸ்ரவசால் அவமதிக்கப்பட்டு, பலவந்தமாக எவ்வாறு தரையில் தூக்கி வீசி எறியப்பட்டான்?" என்று கேட்டான்.(1, 2)


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பழங்காலத்தில் சிநியின் பேரனின் {சாத்யகியின்} தோற்றத்தையும், பூரிஸ்ரவஸ் எவ்வாறு தோன்றினான் என்பதையும் கேட்பீராக. இஃது உமது ஐயங்களை விளக்கும்.(3) அத்ரி, சோமனை மகனாகக் கொண்டார். சோமனின் மகன் புதன் என்று அழைக்கப்பட்டான். புதனுக்கு, பெரும் இந்திரனின் காந்தியைக் கொண்டவனும், புரூரவஸ் என்று அழைக்கப்பட்டவனுமான ஒரு மகன் இருந்தான்.(4) புரூரவஸுக்கு ஆயுஷ் என்று அழைக்கப்பட்ட ஒரு மகன் இருந்தான். ஆயுஷ், நகுஷனை மகனாகக் கொண்டான். நகுஷன், தேவர்களுக்கு இணையான அரசமுனியான யயாதியைத் தன் மகனாகக் கொண்டான்.(5) யயாதி, தேவயானியின் மூலம் யதுவைத் தன் மூத்த மகனாகக் கொண்டான். இந்த யதுவின் குலத்தில் தேவமீடன் [1] என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான்.(6) யது குலத்தின் தேவமீடனுக்கு மூவுலகங்களிலும் புகழப்பட்ட சூரன் என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான். சூரன், மனிதர்களில் முதன்மையானவனும், கொண்டாடப்படுபவனுமான வசுதேவனைத் தன் மகனாகக் கொண்டான்.(7) விற்திறனில் முதன்மையான சூரன், போரில் கார்த்தவீரியனுக்கு இணையானவனாக இருந்தான். அந்தச் சூரனின் குலத்தில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சூரனின் பலத்துக்கு இணையான சிநி பிறந்தான்.(8)

[1] வேறொரு பதிப்பில் இஃது ஆஜமீடன் என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியைப் போலவே தேவமீடன் என்றே இருக்கிறது.

அந்த நேரத்தில்தான், ஓ! மன்னா {திருதராஸ்டிரரே}, க்ஷத்திரியர்கள் அனைவரும் இருந்த, உயர் ஆன்ம தேவகனுடைய மகளின் {தேவகியின்} சுயம்வரம் நடந்தது.(9) அந்தச் சுயம்வரத்தில் மன்னர்கள் அனைவரையும் வென்ற சிநி, வசுதேவனுக்காக இளவரசி தேவகியைத் தன் தேரில் விரைவாகக் கடத்திச் சென்றான்.(10) இளவரசி தேவகியை சிநியின் தேரில் கண்டவனும், மனிதர்களில் காளையும், துணிச்சல்மிக்கவனும், வலிமையும், சக்தியும் கொண்டவனுமான சோமதத்தனால் அந்தக் காட்சியைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(11) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவ்விருவருக்கும் இடையில் அரை நாள் நீடித்ததும், பார்ப்பதற்கு அழகானதும், அற்புதமானதுமான போரொன்று நடந்தது. வலிமைமிக்க அவ்விரு மனிதர்களுக்கும் இடையில் நடைபெற்ற போரானது மற்போர் மோதலாக இருந்தது. மனிதர்களில் காளையான சோமதத்தன், சிநியால் பலவந்தமாகப் பூமியில் தூக்கி வீசப்பட்டான்.(12) தன் வாளை உயர்த்தி, அவனது முடியைப் பற்றிய சிநி, சுற்றிலும் பார்வையாளர்களாக நின்றுகொண்டிருந்த ஆயிரக்கணக்கான மன்னர்களுக்கு மத்தியில், தன் எதிரியை {சோமதத்தனைத்} தன் காலால் தாக்கினான் {மிதித்தான்}.(13) பிறகு இறுதியாகக் கருணையால் அவன் {சிநி}, "பிழைப்பாயாக" என்று சொல்லி அவனை {சோமதத்தனை} விட்டான்.(14)

சிநியால் அந்நிலைக்குக் குறைக்கப்பட்ட சோமதத்தன், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, கோபவசப்பட்டு, மகாதேவனின் அருளை வேண்டி, அவனுக்குத் தன் துதிகளைச் செலுத்தத் தொடங்கினான். வரமளிக்கும் தெய்வங்கள் அனைத்திலும் பெரும் தலைவனான மகாதேவன் {சிவன்}, அவனிடம் {சோமதத்தனிடம்} மனம் நிறைந்து, அவன் விரும்பிய வரத்தை வேண்டும்படி கேட்டுக் கொண்டான். அரசனான சோமதத்தன் பிறகு பின்வரும் வரத்தை வேண்டினான்,(16) அஃதாவது, "ஓ! தெய்வீகத் தலைவா {மகாதேவா}, ஆயிரக்கணக்கான மன்னர்களுக்கு மத்தியில் சிநியின் மகனைத் தாக்கி, போரில் அவனைத் தன் காலால் தாக்கும் ஒரு மகனை நான் விரும்புகிறேன்" என்றான்.(17) சோமதத்தனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்தத் தெய்வம் {சிவன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி அங்கேயே அப்போதே மறைந்துவிட்டான்.(18) அவ்வரக் கொடையின் விளைவாக, அதன் தொடர்ச்சியாக, மிக உயர்ந்த தர்ம சிந்தனையுள்ள பூரிஸ்ரவஸை மகனாக அடைந்தான், இதன் காரணமாகவே, சோமதத்தன் மகன் {பூரிஸ்ரவஸ்}, சிநியின் வழித்தோன்றலை {சாத்யகியைப்} போரில் தூக்கி வீசி, மொத்த படையின் கண்களுக்கு எதிராகவே அவனைத் தன் காலால் தாக்கினான் {மிதித்தான்}.(19) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நீர் கேட்டது குறித்து நான் இப்போது உமக்குச் சொல்லிவிட்டேன்.(20)

உண்மையில், அந்தச் சாத்வத வீரன் {சாத்யகி}, மனிதர்களில் முதன்மையானோராலும் கூட வெல்லப்பட்ட முடியாதவனே. விருஷ்ணி வீரர்கள் அனைவரும், போரில் துல்லியமான குறி கொண்டவர்களாவர், மேலும் அவர்கள் போர்க்கலையின் அனைத்து வழிமுறைகளையும் அறிந்தவர்களுமாவர்.(21) அவர்கள் தேவர்களையும், தானவர்களையும், கந்தர்வர்களையும் வெல்பவர்களாவர். அவர்கள் ஒருபோதும் கலக்கமடைவதில்லை. அவர்கள் தங்கள் சொந்த சக்தியை நம்பியே எப்போதும் போரிடுபவர்களாவர். அவர்கள் ஒருபோதும் பிறரைச் சார்ந்திருப்பதில்லை.(22) ஓ! தலைவரே {திருதராஷ்டிரரே}, இவ்வுலகில் விருஷ்ணிகளுக்கு இணையாக எவரும் காணப்படவில்லை. ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, விருஷ்ணிகளின் வலிமைக்கு இணையானவர்களாக ஒருவரும் இருந்ததுமில்லை, இருக்கவும் இல்லை, இருக்கப் போவதும் இல்லை.(23) அவர்கள் தங்கள் சொந்தங்களை ஒரு போதும் அவமதிப்பதில்லை. வயதால் மதிப்புடையவர்களின் கட்டளைகளுக்கு அவர்கள் எப்போதும் கீழ்ப்படிபவர்களாகவே இருக்கின்றனர்.

தேவர்களும், அசுரர்களும், கந்தர்வர்களும், யக்ஷர்களும், உரகர்களும், ராட்சசர்களும் கூட விருஷ்ணி வீரர்களை வெல்ல முடியாது எனும்போது, போரில் மனிதர்களைக் குறித்து என்ன சொல்லப்படமுடியும்?(24) பிராமணர்கள், அல்லது தங்கள் ஆசான்கள், அல்லது தங்கள் சொந்தங்களின் உடைமைகளில் அவர்கள் ஒருபோதும் ஆசை கொண்டதில்லை.(25) துயர்மிக்க எந்தச் சந்தர்ப்பத்திலாவது அவர்களுக்கு உதவி செய்வோரின் உடைமைகளிலும் அவர்கள் ஒருபோதும் ஆசை கொண்டதில்லை. பிராமணர்களுக்கு அர்ப்பணிப்புடனும், பேச்சில் உண்மையுடனும் உள்ள அவர்கள், செல்வந்தர்களாக இருப்பினும் ஒருபோதும் செருக்கை வெளிக்காட்டுவதில்லை.(26) 

பலவான்களையும் பலவீனர்களாகக் கருதும் விருஷ்ணிகள், அவர்களைத் துயரங்களில் இருந்து மீட்கிறார்கள். தேவர்களுக்கு எப்போதும் அர்ப்பணிப்புடன் இருக்கும் விருஷ்ணிகள் சுயக்கட்டுப்பாடு மற்றும் தர்ம சிந்தனை கொண்டவர்களாகவும், செருக்கில் இருந்து விடுபட்டவர்களாகவும் இருக்கின்றனர்.(27) இதன் காரணமாகவே விருஷ்ணிகளின் ஆற்றல் ஒருபோதும் கலங்கடிக்கப்படுவதில்லை. ஒரு மனிதன் மேரு மலைகளை அகற்றிவிடலாம், அல்லது பெருங்கடலையே கூடக் கடந்து விடலாம்.(28) ஆனால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} விருஷ்ணிகளிடம் மோதி, அவர்களை மீறுதல் எவனாலும் முடியாது. ஓ! தலைவரே {திருதராஷ்டிரரே}, எதைக் குறித்து உமக்கு ஐயங்கள் இருந்தனவோ, அதைக் குறித்த அனைத்தையும் நான் உமக்குச் சொல்லிவிட்டேன். எனினும், ஓ! குருக்களின் மன்னா, ஓ! மனிதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, உமது தீய கொள்கைகளின் விளைவாகவே இவை யாவும் நடைபெறுகின்றன" {என்றான் சஞ்சயன்}.(29)

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "அந்தச் சூழ்நிலையில் குரு போர்வீரனான பூரிஸ்ரவஸ் கொல்லப்பட்ட பிறகு, ஓ! சஞ்சயா, எவ்வாறு போர் நடந்தது என்பதை எனக்குச் சொல்வாயாக" என்றான்.(1)


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "பூரிஸ்ரவஸ் மறு உலகத்திற்குச் சென்ற பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அர்ஜுனன், வாசுதேவனிடம்,(2) "ஓ! கிருஷ்ணா, குதிரைகளைப் பெரும் வேகத்தில் தூண்டி மன்னன் ஜெயத்ரதன் இருக்குமிடத்திற்கு என்னை அழைத்துச் செல்வாயாக. ஓ! பாவமற்றவனே {கிருஷ்ணா}, என் சபதத்தை உண்மையாக்குவதே உனக்குத் தகும்.(3) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, சூரியன் அஸ்த மலைகளை நோக்கி வேகமாகச் செல்கிறான். ஓ! மனிதர்களில் புலியே {கிருஷ்ணா}, இந்தப் பெரும் பணியை நான் அடைய வேண்டும். மேலும் சிந்துக்களின் ஆட்சியாளனோ {ஜெயத்ரதனோ}, குரு படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலரால் பாதுகாக்கப்படுகிறான். எனவே, ஓ! கிருஷ்ணா, சூரியன் மறைவதற்குள் ஜெயத்ரதனைக் கொல்லும் வகையில் குதிரைகளைத் தூண்டி, என் சபதத்தை உண்மையாக்குவாயாக" என்று சொல்லி {கிருஷ்ணனைத்} தூண்டினான்.

பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனன், கர்ணன், விருஷசேனன், மத்ர ஆட்சியாளன் {சல்லியன்}, அஸ்வத்தாமன், கிருபர் போன்ற குரு {கௌரவப்} படையின் தலைவர்கள் பலர், எவனுடைய கணைகள் எப்போதும் கலங்கடிக்கப்பட்டதில்லையோ, எவன் பெரும் வேகம் கொண்ட குதிரைகளால் இழுக்கப்பட்ட தேரில் செல்கிறானோ அந்த அர்ஜுனனை நோக்கி வேகமாக விரைந்தனர். எனினும் பீபத்சு {அர்ஜுனன்}, தன் எதிரில் நின்று கொண்டிருந்த சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனை} அடைந்து, அவன் மீது தன் பார்வையைச் செலுத்தி, கோபத்தால் சுடர்விட்ட தனது கண்களால் அவனை எரிக்கப்போவது போலத் தெரிந்தான்.(4-9)

அப்போது மன்னன் துரியோதனன், ராதையின் மகனிடம் {கர்ணனிடம்} விரைவாகப் பேசினான். உண்மையில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது மகன் சுயோதனன் {துரியோதனன்}, கர்ணனிடம்,(10,11) "ஓ! விகர்த்தனன் மகனே {கர்ணா}, இறுதியாகப் போருக்கான அந்தக் காலம் வந்துவிட்டது. ஓ! உயர் ஆன்மாவே, உன் வலிமையை வெளிப்படுத்துவாயாக. ஓ! கர்ணா, அர்ஜுனனால் ஜெயத்ரதன் கொல்லப்படாதவாறு செயல்படுவாயாக.(12) ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, பகல் முடியப் போகிறது. எதிரியைக் கணை மேகங்களால் தாக்குவாயாக. பகல் பொழுது முடிந்தால், ஓ! கர்ணா, நிச்சயம் வெற்றி நமதே.(13) சூரியன் மறைவது வரை சிந்துக்களின் ஆட்சியாளன் பாதுகாக்கப்பட்டால், பிறகு சபதம் பொய்யாக்கப்பட்ட பார்த்தன் {அர்ஜுனன்} சுடர்மிக்க நெருப்பில் நுழைவான்.(14)

பிறகு, ஓ! கௌரவங்களை அளிப்பவனே {கர்ணா}, அர்ஜுனனின் சகோதரர்களால், அர்ஜுனன் இல்லாத உலகில் ஒருக்கணமும் வாழ இயலாது.(15) பாண்டுவின் மகன்கள் இறந்ததும், ஓ! கர்ணா, மலைகள், நீர்நிலைகள், காடுகளுடன் கூடிய மொத்த பூமியையும், நம் தரப்பில் எந்த முள்ளும் இல்லாமல் நான் அனுபவிக்கலாம்.(16) ஓ! கௌரவங்களை அளிப்பவனே, எதைச் செய்ய முடியும், எதைச் செய்ய முடியாது என்பதை உறுதி செய்து கொள்ளாமலே, போரில் இச்சபதத்தைச் செய்த பார்த்தன் {அர்ஜுனன்}, தவறான வழியைத் தீர்மானித்ததால் விதியாலேயே பீடிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.(17) ஓ! கர்ணா, கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தன் அழிவுக்காகவே ஜெயத்ரதனைக் கொல்வது குறித்த இந்தச் சபதத்தைச் செய்திருக்கிறான் என்பதில் ஐயமில்லை.(18)

ஓ! ராதையின் மகனே {கர்ணா}, நீ உயிரோடிருக்கையில், சிந்துக்களின் ஆட்சியாளனைச் சூரியன் அஸ்த மலைகளை அடைவதற்கு முன் பல்குனனால் {அர்ஜுனனால்} எவ்வாறு கொல்ல முடியும்?(19)

மத்ர மன்னனாலும், சிறப்புமிக்கக் கிருபராலும் ஜெயத்ரதன் பாதுகாக்கப்படும்போது, பின்னவனை {ஜெயத்ரதனைத்} தனஞ்சயனால் {அர்ஜுனனால்} எவ்வாறு கொல்ல முடியும்?(20)

துரோணராலும், என்னாலும், துச்சாசனனாலும் பாதுகாக்கப்படும் ஜெயத்ரதனை அடைய விதியால் தூண்டப்பட்டவனாகத் தெரியும் பீபத்சுவால் {அர்ஜுனனால்} எவ்வாறு முடியும்?(21)

போரில் ஈடுபடும் வீரர்கள் பலராவர். சூரியனோ வானத்தின் கீழே சாய்கிறான். ஓ! கௌரவங்களை அளிப்பவனே {கர்ணா}, பார்த்தனால் {அர்ஜுனனால்} போரில் ஜெயத்ரதனை நெருங்கக்கூட முடியாது.(22)

எனவே, ஓ! கர்ணா, என்னோடும், துணிவும், வலிமையும் மிக்கப் பிற தேர்வீரர்களோடும், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, கிருபர் ஆகியோரோடும் சேர்ந்து, பெரும் உறுதியோடும், தீர்மானத்தோடும் முயற்சி செய்து போரில் பார்த்தனோடு {அர்ஜுனனோடு} போரிடுவாயாக" என்றான் {துரியோதனன்}.(23)

ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, இப்படி உமது மகனால் சொல்லப்பட்ட ராதையின் மகன் {கர்ணன்}, குருக்களில் முதன்மையான துரியோதனனிடம் இவ்வார்த்தைகளை மறுமொழியாகக் கூறினான்:(24) "மூர்க்கமாகத் தாக்கவல்லவனும், துணிவுமிக்க வில்லாளியுமான பீமசேனனின் தொடர்ச்சியான கணைமாரியால் போரில் எனது உடல் ஆழமாகத் துளைக்கப்பட்டிருக்கிறது. ஓ! கௌரவங்களை அளிப்பவனே {துரியோதனா}, என்னைப் போன்ற ஒருவன் இங்கே இருக்க வேண்டும் என்பதற்காகவே இன்னும் நான் போரில் இருக்கிறேன்.(25, 26) பீமசேனனின் பலமிக்கக் கணைகளால் எரிக்கப்பட்ட என் அங்கங்கள் அனைத்தும் சித்திரவதையை அனுபவிக்கின்றன. எனினும், இவையாவும் இருந்தாலும், நான் என் சக்திகளில் சிறந்ததைப் பயன்படுத்திப் போரிடுவேன். என் வாழ்வே {நான் வாழ்வதே} உனக்காகத்தான்.(27) பாண்டுவின் மகன்களில் முதன்மையான இவன் {அர்ஜுனன்}, சிந்துக்களின் ஆட்சியாளனைக் கொல்லாத வகையில் நான் சிறப்பாக முயற்சி செய்வேன். என் கூரிய கணைகளை நான் ஏவிப் போரிடும் வரையில், தன் இடது கையாலும் வில்லை வளைக்கவல்ல வீரத் தனஞ்சயனால் {அர்ஜுனனால்} சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனை} அடைவதில் வெல்ல முடியாது.(28) ஓ! குரு குலத்தோனே {துரியோதனா}, உன்னிடம் அன்பும் பற்றும் கொண்டவனும், எப்போதும் உனது நன்மையை வேண்டுபவனுமான ஒருவன் என்னவெல்லாம் செய்வானோ, அவை அனைத்தும் என்னால் செய்யப்படும்.(29) வெற்றியைப் பொறுத்தவரை, அது விதியைப் பொறுத்தே அமையும். இன்றைய போரில் நான், ஓ! மன்னா {துரியோதனா}, சிந்துக்களின் ஆட்சியாளனுக்காகவும் {ஜெயத்ரதனுக்காகவும்}, உனது நன்மையை அடைவதற்காகவும் என்னால் முடிந்த மட்டும் முயல்வேன்.(30) எனினும், வெற்றியானது விதியைப் பொறுத்தே அமையும். ஓ! மனிதர்களில் புலியே {துரியோதனா}, என் ஆண்மையைச் சார்ந்து உனக்காக நான் இன்று அர்ஜுனனுடன் போரிடுவேன்.(31) எனினும், வெற்றியானது விதியைப் பொறுத்தே அமையும். ஓ குருக்களின் தலைவா {துரியோதனா}, மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வகையில் எனக்கும், அர்ஜுனனுக்கும் இடையில் நடைபெறப்போகும் கடும்போரை இன்று துருப்புகள் அனைத்தும் காணட்டும்" என்றான் {கர்ணன்}.

இப்படிப் போரில் கர்ணனும், குரு மன்னனும் {துரியோதனனும்} ஒருவரோடொருவர் பேசிக் கொண்டிருக்கும்போது, அர்ஜுனன், தன் கூரிய கணைகளால் உமது படையைக் கொல்லத் தொடங்கினான்.(32, 33) பெருங்கூர்மை கொண்ட தன் பல்லங்களால் அவன் {அர்ஜுனன்}, பரிகங்கள் {முள் பதித்த தண்டாயுதங்கள்}, அல்லது யானைகளின் துதிக்கைகளைப் போலிருக்கும் பின்வாங்காத வீரர்களின் கரங்களை அந்தப் போரில் வெட்டத் தொடங்கினான். மேலும் அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வீரன் {அர்ஜுனன்}, தன் கூரிய கணைகளால் அவர்களது சிரங்களையும் அறுத்தான்.(34, 35) மேலும் அந்தப் பீபத்சு {அர்ஜுனன்}, யானைகளின் துதிக்கைகளையும், குதிரைகளின் கழுத்துகளையும், சுற்றிலும் உள்ள தேர்களின் அக்ஷங்களையும் {ஏர்க்கால்களையும்}, ஈட்டிகள் மற்றும் வேல்களை ஏந்திய இரத்தக் கறை கொண்ட குதிரைவீரர்களையும் க்ஷுரப்ரங்களால் இரண்டு அல்லது மூன்று துண்டுகளாக அறுத்தான். குதிரைகள், முதன்மையான யானைகள், கொடிமரங்கள், குடைகள், விற்கள், சாமரங்கள், தலைகள் ஆகியன அனைத்துப் பக்கங்களிலும் வேகமாக விழத்தொடங்கின.(36, 37) வைக்கோல் பொதியை எரிக்கும் சுடர்மிக்க நெருப்பைப் போல உமது படையை எரித்த பார்த்தன் {அர்ஜுனன்}, விரைவில் பூமியைக் குருதியால் மறைத்தான்.(38) வலிமைமிக்கவனும், வெல்லப்பட முடியாதவனும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனுமான பார்த்தன் {அர்ஜுனன்}, அந்த உமது படையில் மிகப்பெரிய படுகொலைகளைச் செய்து விரைவில் சிந்துக்களின் ஆட்சியாளனை அடைந்தான்.

பீமசேனன் மற்றும் சாத்வதனால் {சாத்யகியால்} பாதுகாக்கப்பட்ட பீபத்சு {அர்ஜுனன்}, ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, சுடர்மிக்க நெருப்பைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(39, 40) பல்குனனை {அர்ஜுனனை} அந்நிலையில் கண்ட மனிதர்களில் காளையரான உமது படையின் வலிமைமிக்க வில்லாளிகளால் அவனை {அர்ஜுனனைப்} பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அப்போது, கோபத்தால் தூண்டப்பட்டவர்களும், சிந்து மன்னனுக்காக {ஜெயத்ரதனுக்காகப்} போரிட்டுக் கொண்டிருந்தவர்களுமான துரியோதனன், கர்ணன், விருஷசேனன், மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, அஸ்வத்தாமன், கிருபர் ஆகியோரும், ஏன் சிந்துக்களின் ஆட்சியாளனும் {ஜெயத்ரதனும்} கூடக் கிரீடம் தரித்தவனான அர்ஜுனனை அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டனர்.(41-43) போரில் திறன்வாய்ந்த அந்தப் போர்வீரர்கள் அனைவரும், சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைத்} தங்கள் பின்னால் நிறுத்திக் கொண்டு, அர்ஜுனனையும், கிருஷ்ணனையும் கொல்ல விரும்பி, போரை நன்கறிந்த வீரனும், தன் தேர் செல்லும் வழியெங்கும் நர்த்தனம் செய்து கொண்டிருந்தவனும், வில்லின் நாணொலியாலும், தன் உள்ளங்கையாலும் கடும் ஒலிகளை உண்டாக்கியவனும், வாயை அகல விரித்திருக்கும் யமனுக்கு ஒப்பானவனுமான பார்த்தனை {அர்ஜுனனை} அச்சமற்ற வகையில் சூழ்ந்து கொண்டனர்.(44, 45)

அப்போது வானத்தில் சூரியன் சிவப்பு நிறத்தை ஏற்றான். அவன் {சூரியன்} (வேகமாக) மறைய விரும்பிய கௌரவ வீரர்கள், பாம்பின் உடல்களுக்கு ஒப்பான (கூம்பு போன்ற) கரங்களால் தங்கள் விற்களை வளைத்து, சூரியனின் கதிர்களுக்கு ஒப்பான தங்கள் நூற்றுக்கணக்கான கணைகளைப் பல்குனனை {அர்ஜுனனை} நோக்கி ஏவினர்.(46) இப்படித் தன்னை நோக்கி ஏவப்பட்ட கணைகள் அனைத்தையும், இரண்டு, மூன்று அல்லது எட்டு துண்டுகளாக வெட்டியவனும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனும், போரில் வெல்லப்படாதவனுமான அர்ஜுனன், அம்மோதலில் அவர்கள் அனைவரையும் துளைத்தான். சிங்கத்தின் வாலைத் தன் கொடியில் அடையாளமாகப் பொறித்திருக்கும் அஸ்வத்தாமன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் வலிமையை வெளிக்காட்டிக்கொண்டு அர்ஜுனனைத் தடுக்கத் தொடங்கினான்.(47, 48) உண்மையில் அந்தச் சரத்வான் மகளின் {கிருபியின்} மகன் {அஸ்வத்தாமன்}, பார்த்தனைப் பத்து கணைகளாலும், வாசுதேவனை {கிருஷ்ணனை} ஏழாலும் துளைத்து, சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைப்} பாதுகாத்தபடியே, அர்ஜுனனின் பாதையில் நின்றான்.

பிறகு, குருக்களில் முதன்மையானவர்கள் பலரும், பெரும் தேர்வீரர்கள் அனைவரும் பெரும் தேர்க்கூட்டங்களால் அர்ஜுனனை அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டனர். தங்கள் விற்களை வளைத்து, கணக்கிலடங்கா கணைகளை ஏவிய அவர்கள், உமது மகனின் {துரியோதனனின்} கட்டளையின் பேரில், சிந்துக்களின் ஆட்சியாளனைக் காக்கத் தொடங்கினர்.(50, 51) அப்போது நாங்கள் துணிச்சல்மிக்கப் பார்த்தனின் கர வலிமையையும், அவனது கணைகளின் வற்றாத தன்மையையும், அவனது காண்டீவத்தின் வலிமையையும் கண்டோம்.(52) தன் ஆயுதங்களால் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} மற்றும் கிருபரின் ஆயுதங்களைக் கலங்கடித்த அவன் {அர்ஜுனன்}, அந்தப் போர்வீரர்களில் ஒவ்வொருவரையும் ஒன்பது கணைகளால் துளைத்தான்.(53)

அப்போது அவனைத் {அர்ஜுனனைத்} துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} இருபத்தைந்து கணைகளாலும், விருஷசேனன் ஏழாலும், துரியோதனன் இருபதாலும், கர்ணனும் சால்வனும் {சல்லியனும்} மூன்றாலும் துளைத்தனர்.(54) அவர்கள் அனைவரும் அவனை {அர்ஜுனனை} நோக்கி முழங்கி, அடிக்கடி அவனைத் துளப்பதைத் தொடர்ந்தனர்.(55) தங்கள் விற்களை அசைத்துக் கொண்டே அவர்கள் அவனை அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டனர். விரைவில் அவர்கள் தங்கள் தேர்களை அர்ஜுனனைச் சுற்றி வரிசையாக நிறுத்தினர்.(56) சூரியன் (வேகமாக) மறைய விரும்பியவர்களும், பெரும் சுறுசுறுப்பைக் கொண்டவர்களுமான கௌரவப் படையின் அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், அர்ஜுனனை நோக்கி முழங்கத் தொடங்கி, தங்கள் விற்களை அசைத்துக் கொண்டே மலையில் மழையைப் பொழியும் மேகங்களைப் போலக் கூரிய கணைமாரியால் அவனை மறைத்தனர்.(57) கனமான தண்டாயுதங்களுக்கு ஒப்பான கரங்களைக் கொண்ட அந்தத் துணிச்சல்மிக்க வீரர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் தெய்வீக ஆயுதங்களைத் தனஞ்சயன் {அர்ஜுனன்} உடலின் மீது அந்தச் சந்தர்ப்பத்தில் வெளிக்காட்டினர். வலிமைமிக்கவனும் வெல்லப்பட முடியாதவனும், கலங்கடிக்கப்பட முடியாதவனுமான தனஞ்சயன், உமது படையில் மிகப்பெரிய படுகொலைகளை நிகழ்த்தியபடியே சிந்துக்களின் ஆட்சியாளனிடம் {ஜெயத்ரதனிடம்} வந்தான்.(58, 59) எனினும் கர்ணன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} பீமசேனனும், சாத்வதனும் {சாத்யகியும்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்தப் போரில் தன் கணைகளால் அவனை {அர்ஜுனனைத்} தடுத்தான்.(60)

வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்}, துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அந்தப் போர்க்களத்தில் சூதன் மகனை {கர்ணனைப்} பத்து கணைகளால் பதிலுக்குத் துளைத்தான். அப்போது சாத்வதன் {சாத்யகி}, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, மூன்று கணைகளால் கர்ணனைத் துளைத்தான்.(61, 62) பீமசேனன் மூன்று கணைகளாலும், பார்த்தன் {அர்ஜுனன்} மீண்டும் ஏழு கணைகளாலும் அவனைத் {கர்ணனைத்} துளைத்தனர். வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணன், பிறகு, அந்த மூன்று போர்வீரர்களில் ஒவ்வொருவரையும் அறுபது {60} கணைகளால் துளைத்தான்.(63) இப்படியே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (ஒரு புறத்தில்) கர்ணன் தனியாகவும், (மறுபுறத்தில்) பலருக்கும் இடையில் அந்தப் போர் நடந்தது. அந்தப் போரில் கோபத்தால் தூண்டப்பட்டு மூன்று பெரும் தேர்வீரர்களையும் தனியாக அவன் {கர்ணன்} தடுத்ததால், அப்போது நாங்கள் கண்ட சூதன் மகனின் {கர்ணனின்} ஆற்றல் மிக அற்புதமானதாக இருந்தது.(64)

அப்போது வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பல்குனன் {அர்ஜுனன்}, அந்தப் போரில், ஒரு நூறு {100} கணைகளால், விகர்த்தனன் மகனான கர்ணனின் அங்கங்கள் அனைத்தையும் துளைத்தான். குருதியில் குளித்த அனைத்து அங்கங்களுடன் கூடியவனும், பெரும் ஆற்றலும், துணிச்சலும் கொண்டவனுமான அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, பதிலுக்கு ஐம்பது {50} கணைகளால் பார்த்தனைத் {அர்ஜுனனைத்} துளைத்தான்.(65, 66) அந்தப் போரில் அவனால் {கர்ணனால்} வெளிக்காட்டப்பட்ட கர நளினத்தைக் கண்டு அதை அர்ஜுனனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(67) அவனது வில்லை அறுத்த வீரனான பிருதையின் மகன் தனஞ்சயன் {அர்ஜுனன்}, கர்ணனின் நடு மார்பில் ஒன்பது கணைகளால் விரைவாகத் துளைத்தான். பிறகு தனஞ்சயன் {அர்ஜுனன்}, அந்தப் போரில் வேகம் தேவைப்பட்ட நேரத்தில் சூரியப் பிரகாசம் கொண்ட கணையொன்றைப் பெரும் வேகத்தோடு கர்ணனின் அழிவுக்காக ஏவினான்.(68, 69) எனினும், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, அந்தக் கணை (கர்ணனை நோக்கி) மூர்க்கமாகச் சென்ற போது, அர்த்தச்சந்திரக்கணை ஒன்றால் அதை வெட்டினான். இப்படி அஸ்வத்தாமனால் வெட்டப்பட்ட அந்தக் கணை கீழே பூமியில் விழுந்தது.(70)

பிறகு பெரும் ஆற்றலைக் கொண்ட சூதனின் மகன் {கர்ணன்}, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, பல்லாயிரம் கணைகளால் பாண்டுவின் மகன் {அர்ஜுனனை} மறைத்தான்.(71) எனினும் பார்த்தன் {அர்ஜுனன்}, விட்டிற்பூச்சிகளை விரட்டும் காற்றைப் போலக் கர்ணனின் வில்லில் இருந்து வந்த அந்த அசாதாரணக் கணை மாரியைத் தன் கணைகளால் விலக்கினான்(72). அப்போது அர்ஜுனன், தன் கரநளினத்தை வெளிப்படுத்தித் துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே தன் கணைகளால் அந்தப் போரில் கர்ணனை மறைத்தான்.(73) படைகளைக் கொல்பவனான கர்ணனும், அர்ஜுனனின் அருஞ்செயலுக்கு எதிர்வினையாற்ற விரும்பி, பல்லாயிரம் கணைகளால் அர்ஜுனனை மறைத்தான்.(74) ஒன்றையொன்று நோக்கி முழங்கும் இரு காளைகளைப் போல மனிதர்களில் சிங்கங்களான அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், நேரான கணைகளின் மேகங்களால் ஆகாயத்தையே மறைத்தனர்.(75) அடுத்தவர் கணை மாரியால் கண்ணுக்குப் புலப்படாமல் போன அவர்கள் ஒவ்வொருவரும் ஒருவரையொருவர் தாக்குவதைத் தொடர்ந்தனர். ஒருவரையொருவர் நோக்கி முழங்கி, "நான் பார்த்தன், காத்திருப்பாயாக", அல்லது "நான் கர்ணன், ஓ! பல்குனா {அர்ஜுனா}, காத்திருப்பாயாக" என்ற வார்த்தைக் கணைகளால் அவர்கள் ஒருவரையொருவர் துளைத்துக் கொண்டனர். உண்மையில், அவ்விரு வீரர்களும் ஒருவருடனொருவர் அழகாகப் போரிட்டு, தங்கள் பெரும் சுறுசுறுப்பையும், திறனையும் வெளிக்காட்டினர்.(76, 77) அவர்களால் அளிக்கப்பட்ட காட்சியால், அந்தப் போரில் போர்வீரர்கள் அனைவரும் பார்வையாளர்களாக ஆனார்கள். சித்தர்கள், சாரணர்கள், பன்னகர்கள் ஆகியோரால் மெச்சப்பட்ட அவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருவரையொருவர் கொல்ல விரும்பி, ஒருவரோடொருவர் போரிட்டனர்.(78)

அப்போது துரியோதனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது போர்வீரர்களிடம், "ராதையின் மகனை {கர்ணனைக்} கவனமாகப் பாதுகாப்பீராக. அர்ஜுனனைக் கொல்லாமல் அவன் போரில் இருந்து விலக மாட்டான். இது விருஷனே {கர்ணனே} என்னிடம் சொன்னதாகும்" என்றான்.(79, 80) அதே வேளையில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கர்ணனின் ஆற்றலைக் கண்டவனும், வெண்குதிரைகளைக் கொண்டவனுமான அர்ஜுனன், காதுவரை இழுக்கப்பட்ட வில்லில் இருந்து ஏவப்பட்ட நான்கு கணைகளால், கர்ணனின் நான்கு குதிரைகளை யமனின் ஆட்சிப்பகுதிக்கு அனுப்பி வைத்தான். மேலும் அவன், ஒரு பல்லத்தால் கர்ணனின் தேரோட்டியையும் அவனது தேரில் இருந்து வீழ்த்தினான்.(81, 82) உமது மகன் {துரியோதனன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே கணைகளின் மேகங்களால் அவன் கர்ணனை மறைத்தான். இப்படிக் கணைகளால் மறைக்கப்பட்டு, குதிரைகளற்று, சாரதியற்றுப் போன கர்ணன், அந்தக் கணைமாரியால் மலைப்படைந்து, என்ன செய்வது என்பதை அறியாதிருந்தான்.(83)

அவன் {கர்ணன்} தேரற்றவனாக்கப்பட்டதைக் கண்ட அஸ்வத்தாமன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவனைத் {கர்ணனைத்} தன் தேரில் ஏறச் செய்து அர்ஜுனனுடனான போரைத் தொடர்ந்தான். பிறகு மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, குந்தியின் மகனை {அர்ஜுனனை} முப்பது கணைகளால் துளைத்தான்.(84, 85) சரத்வானின் மகன் {கிருபர்}, இருபது கணைகளால் வாசுதேவனை {கிருஷ்ணனைத்} துளைத்தார். மேலும் அவர் {கிருபர்}, பனிரெண்டு கணைகளால் தனஞ்சயனையும் {அர்ஜுனனையும்} தாக்கினார். சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்}, கிருஷ்ணனையும், பார்த்தனையும் {அர்ஜுனனையும்} நான்கு கணைகளாலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, விருஷசேனன் அவர்கள் ஒவ்வொருவரையும் ஏழு கணைகளாலும் துளைத்தனர்.(87) குந்தியின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்} அவர்கள் அனைவரையும் பதிலுக்குத் துளைத்தான். உண்மையில் பார்த்தன் {அர்ஜுனன்}, துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} அறுபத்துநான்கு {64} கணைகளாலும், மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனை} நூறாலும் {100}, சிந்து மன்னனை {ஜெயத்ரதனை} பத்து பல்லங்களாலும், விருஷசேனனை மூன்று கணைகளாலும், சரத்வானின் மகனை {கிருபரை} இருபதாலும் {20} துளைத்துப் பெருங்கூச்சலிட்டான்.(88, 89) சவ்யசச்சினின் {அர்ஜுனனின்} சபதத்தைக் கலங்கடிக்க விரும்பிய உமது போர்வீரர்கள், கோபத்தால் தூண்டப்பட்டு, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் தனஞ்சயனை {அர்ஜுனனை} நோக்கி வேகமாக விரைந்தனர்.(90)

அப்போது அர்ஜுனன், தார்தராஷ்டிரர்களை அச்சுறுத்தும் வகையில், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் வாருண ஆயுதத்தை இருப்புக்கு அழைத்தான். எனினும், விலைமதிப்புமிக்கத் தேர்களில் இருந்த கௌரவர்கள், கணைமாரிகளைப் பொழிந்து கொண்டு பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} எதிர்த்துச் சென்றனர்.(91) ஆனால், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கிரீடத்தாலும், தங்க மாலையாலும் அலங்கரிக்கப்பட்ட இளவரசனான அந்த அர்ஜுனன், பெரும் குழப்பத்துடன் கூடியதும், மலைக்கச் செய்வதுமான அந்தக் கடுமையான போரின் போது ஒரு போதும் தன் உணர்வுகளை இழக்கவில்லை. மறுபுறம், அவன் {அர்ஜுனன்} தொடர்ந்து தன் கணைகளின் மாரியைப் பொழிந்து கொண்டிருந்தான்.(92) அரசாங்கத்தை மீட்க விரும்பி, குருக்களின் விளைவாகப் பனிரெண்டு {12} வருடங்கள் அனுபவித்த தீங்குகள் அனைத்தையும் நினைவுகூர்ந்தவனும், உயர் ஆன்மா கொண்டவனும், அளவிட முடியாதவனுமான அர்ஜுனன், காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட கணைகளால் திசைகளின் அனைத்துப் புள்ளிகளையும் இருளச் செய்தான்.(93) ஆகாயம் எரிகற்களால் எரிந்து கொண்டிருப்பதாகத் தெரிந்தது. வானத்தில் இருந்து இறங்கிய எண்ணற்ற காகங்கள் (இறந்து போன போராளிகளின்) உடல்களைக் கொத்தின. அதே வேளையில் அர்ஜுனன், பழுப்பு நிற நாண் கொண்டு பினாகையால் அசுரர்களைக் கொன்ற மகாதேவனை {சிவனைப்} போலக் காண்டீவத்தால் எதிர்களைக் கொல்வதைத் தொடர்ந்தான்.(94)

அப்போது எதிரிகளை அடக்குபவனான சிறப்புமிக்கக் கிரீடி {அர்ஜுனன்}, தன் உறுதிமிக்க வில்லால் எதிரியின் கணைகளை விலக்கி, முதன்மையான தங்கள் குதிரைகளிலும், யானைகளிலும் ஏறியிருந்த குருக்களில் முதன்மையானோர் பலரைத் தன் கணைகளால் கொன்றான்.(95) பிறகு, கனமான கதாயுதங்கள், இரும்பாலான தண்டாயுதங்கள், வாள்கள், ஈட்டிகள் மற்றும் பல்வேறு விதங்களிலான பிற பலமிக்க ஆயுதங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொண்ட மன்னர்கள் பலர், பயங்கரத் தோற்றங்களை ஏற்று, அந்தப் போரில் பார்த்தனை {அர்ஜுனனை} எதிர்த்துத் திடீரென விரைந்தனர்.(96) பிறகு அர்ஜுனன், இந்திரனின் வில்லுக்கு ஒப்பானதும், யுக முடிவின் போது திரளும் மேகங்களின் முழக்கங்களைப் போல உரத்த நாணொலி கொண்டதும், தன் உறுதிமிக்க வில்லுமான காண்டீவத்தைத் தன் கரங்களால் வளைத்துச் சிரித்துக் கொண்டே உமது துருப்புகளை எரித்தபடியே யமனுடைய அரசாங்கத்தின் மக்கள் தொகையை அதிகரித்தான்.(97) உண்மையில் அந்த வீரன் {அர்ஜுனன்}, அப்படிக் கோபத்துடன் வந்த அந்தப் போர்வீரர்களை, அவர்களது தேர்கள், யானைகள், காலாட்படை வீரர்கள் மற்றும் அவர்களை ஆதரித்த வில்லாளிகளோடு சேர்த்து கரங்களற்றவர்களாகவும், உயிரற்றவர்களாகவும் செய்து, இப்படியே யமனின் ஆட்சிப் பகுதிகளுடைய மக்கள் தொகையை அதிகரித்தான்" {என்றான் சஞ்சயன்} [1].(98)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "தனஞ்சயன் {அர்ஜுனன்} தன் வில்லை வளைத்தபோது யமனின் உரத்த அழைப்புக்கோ, இந்திரனுடைய வஜ்ரத்தின் பயங்கர முழக்கத்துக்கோ ஒப்பான நாணொலியைக் கேட்ட அந்த உமது படை, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மீன்கள் மற்றும் மகரங்களுடன் கூடிய கடல் நீரானது, யுக முடிவில் எழும் சூறாவளியால் சீற்றத்துடன் அடிக்கப்பட்டு, மலை போன்ற அலைகளாக உடைவதைப் போல மிகவும் கலங்கியது. அப்போது பிருதையின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, ஒரே நேரத்தில் திசைகள் அனைத்திலும் இருப்பவனைப் போலத் தன் அற்புத ஆயுதங்களை வெளிப்படுத்தியபடியே அந்தப் போரில் திரிந்து கொண்டிருந்தான்.(1-3) உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவன் {அர்ஜுனன்} எப்போது தன் கணைகளை எடுக்கிறான், எப்போது அவற்றை வில்லின் நாணில் பொருத்துகிறான், எப்போது வில்லை வளைக்கிறான், எப்போது அவற்றை விடுகிறான் என்பதை நாங்கள் காண முடியாத அளவுக்கு அவனது கரநளினம் {கரலாகவம்} இருந்தது. பிறகு அந்த வலிய கரங்களைக் கொண்டவன் {அர்ஜுனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்டு, வெல்லப்பட முடியாத ஐந்திர ஆயுதத்தை {ஐந்திராஸ்திரத்தை} இருப்புக்கு அழைத்துப் பாரதர்கள் அனைவரையும் அச்சுறுத்தினான். தெய்வீக ஆயுதங்களின் சக்தியுள்ள மந்திரங்களால் ஈர்க்கப்பட்டு, நெருப்பு போன்ற வாய்களைக் கொண்ட நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான சுடர்மிக்கக் கணைகள் அதிலிருந்து {அந்த ஐந்திராஸ்திரத்தில் இருந்து} பாய்ந்தன. நெருப்புக்கோ, சூரியனின் கதிர்களுக்கோ ஒப்பான அந்தக் கணைகள், கடும் மூர்க்கத்துடன் விரைந்ததால், மின்னும் எரிக்கோள்களால் நிறைந்திருப்பதைப் போல ஆகாயம் காண முடியாததாக ஆனது.(4-7)


கௌவர்களின் கணைகளால் உண்டானதும், மற்றவரால் கற்பனையிலும் கூட அகற்றப்பட முடியாததுமான அந்த இருளை {சஸ்திராந்தகாரத்தை}, களத்தில் தன் ஆற்றலை வெளிப்படுத்தியபடி திரிந்து கொண்டிருந்த அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, அதிகாலையில் சூரியன் இரவின் இருளைத் தன் கதிர்களால் விரைவாக அகற்றுவதைப் போலத் தெய்வீக ஆயுதங்களின் சக்தியுடன் கூடிய மந்திரங்களால் ஈர்க்கப்பட்ட தன் கணைகளால் {அந்த இருளை} அழித்தான்.(8, 9) , சூரியன் தன் வெப்பக் கதிர்களால் குளங்கள் மற்றும் தடாகங்களில் உள்ள நீரை உறிஞ்சுவதைப் போல அந்தப் பலமிக்க அர்ஜுனன், சுடர்மிக்கத் தன் கணைகளால் உமது போர்வீரர்களின் உயிர்களை உறிஞ்சினான்.(10) உண்மையில், சூரியனின் கதிர்கள் பூமியை மறைப்பதைப் போல (அர்ஜுனனால் ஏவப்பட்ட) தெய்வீக ஆயுதங்களின் சக்தியுடன் கூடிய அந்தக் கணைகளின் மாரி அந்தப் பகைவரின் படையை மறைத்தன.(11) (தனஞ்சயனால்) ஏவப்பட்ட கடுஞ்சக்தி கொண்ட பிற கணைகள் உயிர் நண்பர்களைப் போல (பகை) வீரர்களின் இதயங்களுக்குள் வேகமாக நுழைந்தன.(12) உண்மையில், அந்தப் போரில் அர்ஜுனனுக்கு எதிரில் வந்த அந்தத் துணிச்சல்மிக்கப் போர்வீரர்கள் அனைவரும், சுடர்மிக்க நெருப்பை அணுகிய பூச்சிகளைப் போல அழிந்தனர்.(13) இப்படித் தன் எதிரிகளின் உயிர்களையும், அவர்களது புகழையும் நசுக்கிய பார்த்தன் {அர்ஜுனன்}, உடல் கொண்டு வந்த யமனைப் போலவே அந்தப் போரில் திரிந்து கொண்டிருந்தான்.(14)

பார்த்தன் {அர்ஜுனன்}, கிரீடங்களால் அலங்கரிக்கப்பட்ட தன் எதிரிகளின் தலைகள், அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்ட அவர்களின் பருத்த கரங்கள், காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட காதுகள் ஆகியவற்றைத் தன் கணைகளால் அறுத்தான்.(15) யானைப்பாகர்களின் ஈட்டிகளுடன் கூடியவையும், குதிரைவீரர்களின் வேல்களுடன் கூடியவையும், காலாட்படைவீரர்களின் கேடயங்களுடன் கூடியவையும், தேர்வீர்களின் விற்களுடன் கூடியவையும், தேரோட்டிகளின் சவுக்கு மற்றும் சாட்டைகளுடன் கூடியவையுமான கரங்களை அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} அறுத்தான்.(16, 17) உண்மையில், தன்னொளியுடன் சுடர்விடும் முனை கொண்ட கணைகளுடன் கூடிய அந்தத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, இடையறாத பொறிகள் மற்றும் எழுதழல்களுடன் கூடிய சுடர்மிக்க நெருப்பைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(18)  ஆயுதங்களைத் தரிப்போர் அனைவரிலும் முதன்மையானவனும், தேவர்களின் தலைவனுக்கே {இந்திரனுக்கே} இணையான வீரனும், மனிதர்களில் காளையும், ஒரே நேரத்தில் அனைத்துத் திசைகளிலும் தன் வலிமைமிக்க ஆயுதங்களை இறைத்தபடியே தன் தேரில் தான் செல்லும் வழியெங்கும் நர்த்தனம் செய்தபடி காணப்படுபவனும், தன் வில்லின் நாண்கயிறாலும் உள்ளங்கைகளாலும் செவிடாகும்படி ஒலியெழுப்பக்கூடியவனும், எரிக்கும் கதிர்களுடன் ஆகாயத்தில் இருக்கும் நடுப்பகல் சூரியனுக்கு ஒப்பானவனுமான அந்தத் தனஞ்சயனைப் {அர்ஜுனனைத்} தங்கள் பலம் அனைத்தையும் திரட்டிக் கொண்ட பகை மன்னர்கள் அனைவராலும் பார்க்ககூட முடியவில்லை.(19-21)

சுடர்மிக்க முனைகளைக் கொண்ட தன் கணைகளுடன் கூடியவனும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனுமான அர்ஜுனன், மழைக்காலங்களில் வானவில்லால் அலங்கரிக்கப்பட்ட மழைநிறைந்த மேகங்களின் வலிமைமிக்கத் திரளைப் போல அழகாகத் தெரிந்தான்.(22) வலிமைமிக்க ஆயுதங்களின் அந்தப் பலமான வெள்ளத்தை ஜிஷ்ணு {அர்ஜுனன்} பாயச் செய்த போது, போர்வீரர்களின் காளையரான பலர் தாங்க முடியாத அந்தப் பயங்கரமான வெள்ளத்தில் மூழ்கினர்.(23) துதிக்கைகளோ, தந்தங்களோ வெட்டப்பட்ட மதங்கொண்ட யானைகள், குளம்புகளையோ, கழுத்துகளையோ இழந்த குதிரைகள், துண்டு துண்டாகக் குறைந்து போன தேர்கள், குடல்கள் வெளியேறிய போர்வீரர்கள், கால்களோ, பிற அங்கங்களோ வெட்டப்பட்ட பிறர், முற்றிலும் அசையாமலோ, சுயநினைவின்றி அசைந்து கொண்டோ கிடந்த நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான உடல்கள் ஆகியவை விரவி கிடந்ததும், பார்த்தன் {அர்ஜுனன்} போரிட்டுக் கொண்டிருந்ததும், யமனே ஆசைப்படும் இடத்துக்கு ஒப்பானதும், மருண்டோரின் அச்சத்தை அதிகப்படுத்துவதும், பழங்காலத்தில் ருத்ரன் {சிவன்} உயிரினங்களை அழித்த போது, அவன் {சிவன்} விளையாடிய மைதானம் போன்றதுமான அந்தப் பரந்த களத்தை நாங்கள் கண்டோம்.(24-27) க்ஷுரப்ரங்களில் {கத்தி போன்ற முனை கொண்ட கணைகளில்} வெட்டப்பட்ட யானைகளின் துதிக்கைகளால் விரவிக் கிடந்த அந்தக் களத்தில் சில பகுதிகள், பாம்புகளால் விரவிக் கிடப்பதைப் போலத் தெரிந்தன. அதே போல வெட்டப்பட்ட போர்வீரர்களின் தலைகளால் மறைக்கப்பட்ட பகுதிகள், தாமரை மலர் மாலைகளால் விரவிக் கிடப்பதைப் போலத் தெரிந்தன. பல வண்ணங்களிலான அழகிய தலைக்கவசங்கள், மகுடங்கள், கேயூரங்கள், அங்கதங்கள், காது குண்டலங்களுடனும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டட கவசங்களுடனும், யானைகள், குதிரைகள் ஆகியவற்றின் {தங்க} இழைகள், பிற ஆபரணங்களுடனும், அங்கேயும் இங்கேயும் சிதறிக் கிடந்த நூற்றுக்கணக்கான கிரீடங்களுடனும் பூமியானவள் புதுமணப்பெண்ணைப் போல மிக அழகாகத் தெரிந்தாள்.

அப்போது தனஞ்சயன் {அர்ஜுனன்}, அச்சமிக்கப் பொருள்களால் நிறைந்து, மருண்டோரின் அச்சங்களை அதிகரிக்கும் வகையில் வைதரணீக்கு ஒப்பாகப் பாய்வதும், சீற்றமிக்கதுமான ஒரு பயங்கர ஆற்றை {நதியை} அங்கே உண்டாக்கினான். (மனிதர்கள் மற்றும் விலங்குகளின்) மஜ்ஜையும் கொழுப்பும் அதன்  சகதியாகின. குருதி அதன் ஓடையாகியது. உறுப்புகளாலும், எலும்புகளாலும் நிறைந்திருந்த அஃது அடியற்ற ஆழம் கொண்டதாக இருந்தது. உயிரினங்களின் மயிர்கள் அதன் பாசிகளும், புற்களுமாகின. சிரங்களும், கரங்களும் அதன் கரைகளில் உள்ள கற்களாகின. கொடிமரங்கள், பலவண்ணங்களிலான கொடிகள் ஆகியவற்றால் அஃது அலங்கரிக்கப்பட்டிருந்தது. குடைகளும், விற்களும் அதன் அலைகளாகின. உயிரிழந்த பெரும் யானைகளின் உடல்களால் அது நிறைந்திருந்தது. தேர்க்கூட்டங்கள் அதன் பரப்பில் மிதக்கும் நூற்றுக்கணக்கான தெப்பங்களாகின. கணக்கிலடங்கா குதிரைகளின் சடலங்கள் அதன் கரைகளாகின. பாம்புகளைப் போலத் தெரிந்த தேர்களின் அக்ஷங்கள், கூபரங்கள், தோமரங்கள், வாள்கள், ஈட்டிகள், போர்க்கோடரிகள், கணைகள் ஆகியவற்றின் விளைவால் அது கடப்பதற்குக் கடினமானதாக இருந்தது. அண்டங்காக்கைகளும், கங்கப் பறவைகளும் அதன் முதலைகளாகின. நரிகள் அதன் மகரங்களாக அமைந்து அதைப் பயங்கரமாக்கின. கடும் கழுகுகள் அதன் சுறாக்களாகின. துள்ளித் திரியும் பேய்களாலும், பிசாசங்களாலும், ஆயிரக்கணக்கான பிறவகை ஆவிகளாலும் அது நிறைந்திருந்தது [1]. மேலும் அதில் உயிரற்ற போர்வீரர்களின் கணக்கிலடங்கா உடல்கள் மிதந்தன. யமனுக்கு ஒப்பான முகத்தோற்றம் கொண்ட அந்த அர்ஜுனனின் ஆற்றலைக் கண்டு, அந்தப் போர்க்களத்தில் இதற்கு முன் எப்போதும் நேராத அளவுக்குக் குருக்கள் பீதியை அடைந்தனர்.(28-38)

[1] வேறொரு பதிப்பில், "ஆயிரக்கணக்காகக் கூத்தாடும் பிரேதம் {சடலம்}, பிசாசம் முதலான பூதங்களால் நான்கு பக்கங்களும் சூழப்பட்டிருந்தது" என்றிருக்கிறது. பேய், ஆவி போன்ற சொற்கள் பயன்படுத்தப்படாதது இங்கே கவனிக்கத்தக்கது.

பிறகு, அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தன் ஆயுதங்களால் பகைவீரர்களைக் கலங்கடித்துக் கடும் சாதனைகளை அடைவதில் ஈடுபட்டு, அவன் {அர்ஜுனன்} கடுஞ்சாதனைகளைச் செய்யும் போர்வீரன் என அனைவரையும் உணரச் செய்தான்.(39) அப்போது, அர்ஜுனன் தேர்வீரர்களில் முதன்மையான அனைவரையும் விஞ்சி நின்றான்.(40) ஆகாயத்தில் எரிக்கும் கதிர்களைக் கொண்ட நடுப்பகல் சூரியனைப் போல, உயிரினங்கள் ஏதாலும் அவனைப் பார்க்கக்கூட முடியவில்லை.(41) அந்தப் போரில் அந்தச் சிறப்புமிக்க வீரனின் {அர்ஜுனனின்} வில்லான காண்டீவத்திலிருந்து வெளிப்பட்ட கணைகள், ஆகாயத்தில் நாரைகளின் வரிசைக்கு ஒப்பாக எங்களுக்குத் தெரிந்தன.(42) அந்த வீரர்கள் அனைவரின் ஆயுதங்களையும் தன் ஆயுதங்களால் கலங்கடித்து, தான் ஈடுபட்ட பயங்கரச் சாதனைகளால் தன்னைக் கடுஞ்சாதனைகள் கொண்ட போர்வீரனாகக் காட்டிக் கொண்ட அர்ஜுனன், ஜெயத்ரதனைக் கொல்ல விரும்பி, தேர்வீரர்களில் முதன்மையானோர் அனைவரையும் விஞ்சி அவர்கள் அனைவரையும் தன் கணைகளால் மலைக்கச் செய்தான்.(44) கிருஷ்ணனைத் தன் தேரோட்டியாகக் கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, அனைத்துப் பக்கங்களிலும் தன் கணைகளை ஏவியபடி, அந்தப் போர்க்களத்தில் பெரும் வேகத்துடன் திரிந்து அழகாகக் காட்சியளித்தான்.(45) அந்தச் சிறப்புமிக்க வீரனின் {அர்ஜுனனின்} நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான கணைகள் வானத்தினூடாகத் தொடர்ந்து செல்வது ஆகாயத்தில் காணப்பட்டது.(46) அந்த வலிமைமிக்க வில்லாளி {அர்ஜுனன்} எப்போது தன் கணைகளை எடுத்தான், உண்மையில் அந்தப் பாண்டுவின் மகன் எப்போது அதைக் குறிபார்த்தான், எப்போது அதை விடுத்தான் என்பதை எங்களால் கவனிக்கவே முடியவில்லை.(47)

அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் கணைகளால் திசைகளின் அனைத்துப் புள்ளிகளையும் நிறைத்து, போரில் தேர்வீரர்கள் அனைவரையும் பீடித்த அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, ஜெயத்ரதனை நோக்கிச் சென்று, அவனை {ஜெயத்ரதனை} அறுபத்துநான்கு {64} நேரான கணைகளால் துளைத்தான்.(48) பிறகு, ஜெயத்ரதனை நோக்கிச் சென்ற அந்தப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனைக்} கண்ட குருவீரர்கள் அனைவரும் போரில் இருந்து விலகினர்.(49) உண்மையில், அந்த வீரர்கள் ஜெயத்ரதனின் உயிரில் {ஜெயத்ரதன் உயிருடன் தப்புவான் என்ற} நம்பிக்கையற்றுப் போனார்கள். அந்தக் கடும்போரில் பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} எதிர்த்து விரைந்த உமது வீரர்களில் ஒவ்வொருவரும், ஓ! தலைவரே {திருதராஷ்டிரரே}, அர்ஜுனனின் கணையால் தங்கள் உடலில் ஆழத் துளைக்கப்பட்டனர்.(50) வலிமைமிக்கத் தேர்வீரனும், வெற்றியாளர்களில் முதன்மையானவனுமான அர்ஜுனன், நெருப்பு போலச் சுடர்விட்ட தன் கணைகளால், உமது படையைத் தலைகளற்ற உடல்களின் {கபந்தங்களின்} [2] கூட்டமாக மாற்றினான். உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குந்தியின் மகன் {அர்ஜுனன்}, இப்படியே நால்வகைப் படைப்பிரிவுகளுடன் கூடிய உமது படையில் முழுக் குழப்பத்தை ஏற்படுத்தி, ஜெயத்ரதனை நோக்கி முன்னேறினான். மேலும் அவன் {அர்ஜுனன்} துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} ஐம்பது கணைகளாலும், விருஷசேனனை {கர்ணனின் மகனை} மூன்றாலும் துளைத்தான்.(51-53) அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, ஒன்பது கணைகளால் கிருபரை மென்மையாகத் தாக்கினான். மேலும் அவன், சல்லியனைப் பதினாறு கணைகளாலும், கர்ணனை முப்பத்திரண்டாலும் துளைத்தான்.(54) அதற்கு மேலும் அவன், சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனை} அறுபத்துநான்கு கணைகளால் துளைத்து சிங்க முழக்கம் செய்தான்.

[2] "ஒரு கபந்தம் என்பது உயிருடன் கூடியதும், நடக்கக்கூடியதுமான தலையற்ற உடலாகும். இந்தத் தலையற்ற முண்டங்கள் தங்கள் பிடிக்குள் அகப்பட்டு இரையாவோரின்  குருதியைக் குடிக்கும் என்று கதைகள் சொல்லப்படுகின்றன" என இங்கே விளக்குகிறார் கங்குலி.

எனினும், காண்டீவதாரியின் {அர்ஜுனனின்} கணைகளால் இப்படித் துளைக்கப்பட்ட சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்}, அங்குசத்தால் துளைக்கப்பட்ட யானையொன்றைப் போல அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் சினத்தால் நிறைந்தான்.(55) பன்றிக் கொடியைத் தாங்கிய அவன் {ஜெயத்ரதன்}, முழுதாக வளைக்கப்பட்ட தன் வில்லில் இருந்து ஏவப்பட்டவையும், கொல்லனின் கைகளால் பளபளப்பாக்கப்பட்டவையும், கடும் நஞ்சுமிக்கக் கோபக்காரப் பாம்புகளுக்கு ஒப்பானவையும், கழுகின் சிறகுகளைக் கொண்டவையுமான நேரான கணைகள் பலவற்றைப் பல்குனனின் {அர்ஜுனனின்} தேர் மீது விரைவாக ஏவினான்.(56, 57) பிறகு கோவிந்தனை {கிருஷ்ணனை} மூன்று கணைகளால் துளைத்த அவன் {ஜெயத்ரதன்}, அர்ஜுனனை ஆறால் {6 கணைகளால்} தாக்கினான். பிறகு அவன் {ஜெயத்ரதன்} எட்டு கணைகளால் அர்ஜுனனின் குதிரைகளையும், மற்றொன்றால் அவனது கொடிமரத்தையும் துளைத்தான்.(58) அப்போது அர்ஜுனன், சிந்துக்களின் ஆட்சியாளனால் {ஜெயத்ரதனால்} ஏவப்பட்ட கூரிய கணைகளைக் கலங்கடித்த அதே வேளையில், இரண்டு கணைகளால் ஜெயத்ரதனுடைய தேரோட்டியின் தலையையும், நன்கு அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தையும் அறுத்தான். வெட்டப்பட்டு, துளைக்கப்பட்டு, கணைகளால் தாக்கப்பட்ட அந்தக் கொடிமரம், நெருப்பின் தழல் ஒன்றைப் போலக் கீழே விழுந்தது. அதே வேளையில் சூரியனும் வேகமாகக் கீழே இறங்கினான்.(59-61)

அப்போது ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, பாண்டுவின் மகனிடம் {அர்ஜுனனிடம்} விரைவாக, "ஓ! பார்த்தா {அர்ஜுனா}, வலிமையும், வீரமும் மிக்க ஆறு தேர்வீரர்களுக்கு மத்தியில் சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} நிறுத்தப்பட்டிருப்பதைப் பார்.(62) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, அந்த ஜெயத்ரதனும், அங்கே அச்சத்துடன் காத்திருக்கிறான். ஓ! மனிதர்களில் காளையே {அர்ஜுனா}, தடையின்றி நீ முயன்றாலும், அந்த ஆறு தேர்வீரர்களையும் போரில் வெல்லாமல் உன்னால் சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கொல்லவே முடியாது. எனவே, நான் யோகத்தை {யோக சக்தியைப்} பயன்படுத்திச் சூரியனை மறைக்கப் போகிறேன். (அதன் விளைவாக) சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} சூரியன் மறைவதைக் காண்பான். ஓ! தலைவா {அர்ஜுனா}, உயிரை விரும்புபவனான அந்தப் பொல்லாதவன், தன் அழிவுக்காகவே மகிழ்ச்சியை அடைந்து, அதற்கு மேலும் தன்னை மறைத்துக் கொள்ள மாட்டான். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, ஓ! குருக்களில் சிறந்தவனே {அர்ஜுனா}, நீ அவனைத் {ஜெயத்ரதனைத்} தாக்க வேண்டும்.(65-66)

சூரியன் உண்மையாகவே மறைந்துவிட்டான் என்று எண்ணி நீ உன் ஊக்கமான முயற்சியைக் கைவிட்டுவிடாதே" என்றான் {கிருஷ்ணன்}. இந்த வார்த்தைகளைக் கேட்ட பீபத்சு {அர்ஜுனன்}, கேசவனிடம் {கிருஷ்ணனிடம்}, "அப்படியே ஆகட்டும்" என்றான்.(67)

அப்போது ஹரி என்றும் அழைக்கப்படுபவனும், தவச் சக்திகளைக் கொண்டவனும், தவசிகள் அனைவரின் தலைவனுமான கிருஷ்ணன், யோகத்தைப் பயன்படுத்தி, சூரியனை மறைப்பதற்காக இருளை உண்டாக்கினான் [3].(68)

கிருஷ்ணன் இருளை உண்டாக்கிய போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது போர்வீரர்கள், சூரியன் மறைந்துவிட்டதாக நினைத்துக் கொண்டு, பார்த்தன் {அர்ஜுனன்} தன் உயிரை விடப்போகிறான் என்ற மகிழ்ச்சியில் நிறைந்தனர்.(69)

உண்மையில், உமது போர்வீரர்கள், சூரியனைக் காணாது மகிழ்ச்சியிலேயே நிறைந்தனர். அவர்கள் அனைவரும் தங்கள் தலைகளைத் திருப்பிக் கொண்டு நின்றனர். மன்னன் ஜெயத்ரதனும் அதே மனநிலையில்தான் இருந்தான். இப்படி அந்தச் சிந்துக்களின் ஆட்சியாளன் சூரியனைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, கிருஷ்ணன் மீண்டும் தனஞ்சயனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான், "ஓ! பாரதர்களில் முதன்மையானவனே {அர்ஜுனா}, உன் மீது கொண்ட அச்சத்தை விட்டு, சிந்துக்களின் வீர ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} சூரியனைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் காண்பாயாக.(72) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, பொல்லாத ஆன்மா கொண்ட அவனை {ஜெயத்ரதனைக் கொல்ல} இதுவே தகுந்த நேரம். விரைவாக அவனது தலையை அறுத்து உனது சபதத்தை உண்மையாக்குவாயாக" என்றான் [4].(73)

[3] வேறொரு பதிப்பில் இந்த இடத்தில் ஒரு அடிக்குறிப்பு இருக்கிறது. அது பின்வருமாறு, "இங்கே சில புஸ்தகங்களில் பல பாட பேதங்கள் காணப்படுகின்றன. "வாசுதேவர் சக்ரத்தினால் சூரியனை மறைத்தார்" என்பது அவைகளுள் முக்கியமானது" என்று இருக்கிறது. இந்தக் குறிப்பு கங்குலியிலோ, மன்மதநாததத்தரின் பதிப்பிலோ இல்லை.

[4] வேறொரு பதிப்பில் இதன் பிறகு நேரடியாக ஜெயத்ரதன் கொல்லப்படும் காட்சிக்கே செல்கிறது. கங்குலியில் பின்வருவன, கிருஷ்ணன் இருளை உண்டாக்கிய போது நடந்ததாக அந்தப் பதிப்பில் விவரிக்கப்படுகிறது.

இப்படிக் கேசவனால் {கிருஷ்ணனால்} சொல்லப்பட்ட அந்தப் பாண்டுவின் வீர மகன் {அர்ஜுனன்}, காந்தியில் சூரியனுக்கோ, நெருப்புக்கோ ஒப்பான தன் கணைகளால் உமது படையைக் கொல்லத் தொடங்கினான்.(74) மேலும் அவன் {அர்ஜுனன்} கிருபரை இருபது கணைகளாலும், கர்ணனை ஐம்பதாலும் துளைத்தான். சல்லியன், துரியோதனன் ஆகியோர் ஒவ்வொருவரையும் ஆறு கணைகளால் அவன் தாக்கினான்.(75) மேலும் அவன் {அர்ஜுனன்} விருஷசேனனை எட்டு கணைகளாலும், சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனை} அறுபது {60} கணைகளாலும் துளைத்தான். மேலும் அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது படையின் பிற போர்வீரர்களைத் தன் கணைகளால் தாக்கியபடியே ஜெயத்ரதனை எதிர்த்து விரைந்தான். தழல் நாக்கை விரித்துப் பரவும் நெருப்பைப் போலத் தங்கள் முன்னிலையில் அவனைக் {அர்ஜுனனைக்} கண்ட ஜெயத்ரதனின் பாதுகாவலர்கள் மிகவும் குழம்பினர்.(76, 77) பிறகு வெற்றியை விரும்பிய உமது போர்வீரர்கள் அனைவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் இந்திரனின் மகனை {அர்ஜுனனைக்} கணைத்தாரைகளால் குளிப்பாட்டினர்.(78) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், குருவின் வெற்றிகொள்ளப்படாத வழித்தோன்றலுமான அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, இடைவிடாத கணை மழையால் மறைக்கப்பட்டுச் சினத்தால் நிறைந்தான்.(79)

அப்போது, மனிதர்களில் புலியான அந்த இந்திரனின் மகன் {அர்ஜுனன்}, உமது படையைக் கொல்ல விரும்பி, அடர்த்தியான கணை வலைகளை உண்டாக்கினான். பிறகு, அவ்வீரனால் {அர்ஜுனனால்} போரில் கொல்லப்பட்ட உமது போர்வீரர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அச்சத்தால் சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கைவிட்டுவிட்டுத் தப்பி ஓடினர்.(80, 81)

இரு மனிதர்களாகச் சேர்ந்து ஓடும் எவரையும் காண முடியாத வகையில் அவர்கள் அப்படி {தனித்தனியாகத்} தப்பி ஓடினர். குந்தியின் மகனிடம் {அர்ஜுனனிடம்} நாங்கள் அப்போது கண்ட ஆற்றல் மிக அற்புதமானதாக இருந்தது.(82) உண்மையில் அந்தச் சிறப்புமிக்கப் போர்வீரன் {அர்ஜுனன்} அப்போது செய்ததைப் போல இதுவரை செய்யப்பட்டதும் இல்லை, இனி செய்யப்படப் போவதும் இல்லை. உயிரினங்களைக் கொல்லும் ருத்ரனைப் போலத் தனஞ்சயன், யானைகள், யானைப் பாகர்கள், குதிரைகள், குதிரை சாரதிகள், (தேர்வீரர்கள்) மற்றும் தேரோட்டிகள் ஆகியோரைக் கொன்றான். பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் தாக்கப்படாத எந்த ஒரு யானையையோ, குதிரையையோ, மனிதப் போர்வீரனையோ நான் அந்தப் போரில் காணவில்லை.(83-84)

புழுதியாலும், இருளாலும் பார்வை தடைபட்ட உமது வீரர்களால் ஒருவரையொருவர் வேறுபடுத்திக்காண முடியாமல் முற்றிலும் உற்சாகத்தை இழந்தனர்.(85)

விதியால் உந்தப்பட்டும், கணைகளால் தங்கள் அங்கங்கள் சிதைக்கப்பட்டும், வெட்டப்பட்டும் இருந்த உமது படை வீரர்கள், விழவோ, நொண்டித் திரியவோ தொடங்கினர்.(86) அவர்களில் சிலர், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, செயல் இழந்தனர், சிலரோ மரணம் ஏற்பட்டதைப் போல இருண்டனர் {நிறம் மங்கினர்}. யுக முடிவில் உயிரினங்கள் கொல்லப்படுவதற்கு ஒப்பாக நடந்த அந்தப் பயங்கரப் பேரழிவின் போது, வெகுசிலரே தப்ப முடிந்த மூர்க்கமான அந்தக் கொடூரப் போரில் சிந்திய குருதி பூமியை நனைத்தது, பூமியில் எழுந்த புழுதியானது அப்படிச் சிந்திய குருதி மழை மற்றும் களத்தில் வீசிய வேகமான காற்று ஆகியவற்றின் விளைவால் மறைந்து போனது. தேர்ச்சக்கரங்களின் மத்திய பகுதி வரை மூழ்கும் அளவுக்கு அந்த இரத்த மழை ஆழமாக இருந்தது.(88, 89)

பெரும் வேகத்தைக் கொண்டவையும், மதங்கொண்டவையுமான உமது படையின் ஆயிரக்கணக்கான யானைகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் பாகர்கள் கொல்லப்பட்டு, அங்கங்கள் சிதைக்கப்பட்டு, வலியால் கதறிக்கொண்டு நட்புப் படையணிகளைத் தங்கள் நடையால் நசுக்கியபடியே தப்பி ஓடின.(90) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சாரதிகளை இழந்த குதிரைகளும், காலாட்படை வீரர்களும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தனஞ்சயனின் {அர்ஜுனனின்} கணைகளால் தாக்கப்பட்டு, அச்சத்துடன் தப்பி ஓடினர்.(91) உண்மையில் உமது படைவீரர்கள், கலைந்த கேசங்களுடன், தங்கள் கவசங்களை இழந்து, தங்கள் காயங்களில் இரத்தப் பெருக்கெடுத்து, அச்சத்தால் போர்க்களத்தை விட்டே தப்பி ஓடினர். ஒரு சிலர், ஏதோ தங்கள் கீழ் உறுப்புகள் {கால்கள்} முதலைகளால் பற்றப்பட்டதைப் போல அசையும் சக்தியை இழந்து களத்தில் கிடந்தனர்.(92, 93) வேறு சிலரோ, கொல்லப்பட்ட யானைகளின் உடல்களுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டனர்.

இப்படி உமது படையை முறியடித்த தனஞ்சயன் {அர்ஜுனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைப்} பாதுகாத்தோரைப் பயங்கரக் கணைகளால் தாக்கத் தொடங்கினான். அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} தன் கணை மாரியால் கர்ணன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கிருபர், சல்லியன், விருஷசேனன், துரியோதனன் ஆகியோரை மறைத்தான். எப்போது அர்ஜுனன் தன் கணைகளை எடுத்தான், எப்போது அவற்றை வில்லின் நாணில் பொருத்தினான், எப்போது வில்லை வளைத்தான், எப்போது அவற்றைத் தொடுத்தான் என்பதை எவராலும் கவனிக்க முடியாத அளவுக்கு அவனுடைய {அர்ஜுனனின்} வேகம் இருந்தது. உண்மையில் எதிரியைத் தாக்கும்போது, அவனது வில்லானது இடைவிடாமல் வட்டமாக வளைக்கப்பட்ட நிலையிலேயே காணப்பட்டது.(95-97) அவனது கணைகளும் இடைவிடாமல் அவனது வில்லில் இருந்து வெளிப்பட்டு அனைத்துத் திசைகளிலும் இறைக்கப்படுவதும் காணப்பட்டது.

அப்போது கர்ணனின் வில்லையும், விருஷசேனனுடையதையும் வெட்டிய அர்ஜுனன், ஒரு பல்லத்தால் சல்லியனின் தேரோட்டியும் அவனது தேர்த்தட்டில் இருந்து வீழ்த்தினான்.(98) பிறகு வெற்றியாளர்களில் முதன்மையான அந்தத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, மாமனும் மைத்துனனுமாக உறவுமுறை கொண்ட கிருபரையும், அஸ்வத்தாமனையும் பல கணைகளால் ஆழமாகத் துளைத்தான். இப்படி உமது படையின் அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களை மிகவும் பீடித்த அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, நெருப்பு போன்ற காந்தி கொண்ட பயங்கரக் கணையொன்றை எடுத்தான்.(99, 100) இந்திரனின் வஜ்ரத்தைப் போலத் தெரிந்ததும், தெய்வீக மந்திரங்களால் ஈர்க்கப்பட்டதுமான அந்த உறுதி மிக்கக் கணை, எந்தக் கடுமையையும் தாங்கவல்லதாக இருந்தது.(101) மேலும் அது நறுமணப் பொருட்களாலும், மலர்மாலைகளாலும் எப்போதும் வழிபடப்பட்டதாக இருந்தது. (மந்திரங்களின் துணையுடன்) வஜ்ரத்தின் சக்தியால் அதை ஈர்த்தவனும், குருவின் வழித்தோன்றலும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான அந்த அர்ஜுனன், காண்டீவத்தில் அதைப் பொருத்தினான்.(102) நெருப்பின் பிரகாசத்தைக் கொண்ட அந்தக் கணை வில்லின் நாணில் பொருத்தப்பட்டபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} ஆகாயத்தில் உரத்த கூச்சல்கள் கேட்கப்பட்டன.(103)


அப்போது ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, மீண்டும் அர்ஜுனனிடம் விரைவாகப் பேசினான், "ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, தீய ஆன்மா கொண்ட சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} தலையை விரைவாக அறுப்பாயாக. சூரியன் அஸ்த மலைகளை அடையப் போகிறான். எனினும், ஜெயத்ரதனின் கொலை குறித்து நான் சொல்லப்போகும் வார்த்தைகளைக் கேட்பாயாக. உலகம் அனைத்திலும் அறியப்படும் விருத்தக்ஷத்திரன் ஜெயத்ரதனின் தந்தையாவான்.(105) நெடுங்காலத்திற்குப் பிறகே அவன் {விருத்தக்ஷத்திரன்}, எதிரிகளைக் கொல்பவனான ஜெயத்ரதனைத் தன் மகனாக அடைந்தான். (அந்த மகன் பிறந்த போது) வடிவமற்ற கண்ணுக்குத் தெரியாத குரல் ஒன்று, மேகங்கள் அல்லது துந்துபியைப் போன்ற ஆழ்ந்த ஒலியுடன் விருத்தக்ஷத்திரனிடம், "இந்த உனது மகன் {ஜெயத்ரதன்}, ஓ! தலைவா {விருத்தக்ஷத்திரா}, குருதியாலும், நடத்தையாலும், சுயக்கட்டுப்பாட்டாலும், இன்னும் பிற குணங்களாலும், இவ்வுலகின் இரு குலங்களுக்கு (சூரியன் மற்றும் சந்திர குலங்களுக்குத்) தகுந்தவனாவான். க்ஷத்திரியர்களில் முதன்மையடையும் அவன் {ஜெயத்ரதன்}, வீரர்களால் எப்போதும் வழிபடப்படுபவனாக இருப்பான்.(107-109) ஆனால் போரில் போராடிக் கொண்டிருக்கையில், க்ஷத்திரியர்களில் காளையும், உலகில் பகட்டானவனுமான ஒருவன், கோபத்தால் தூண்டப்பட்டு இவனது தலையை அறுப்பான்" என்றது.(110) பகைவர்களைத் தண்டிப்பவனான அந்தச் சிந்துக்களின் (பழைய) ஆட்சியாளன் {விருத்தக்ஷத்திரன்} இவ்வார்த்தைகளைக் கேட்டுச் சில காலம் சிந்தித்தான். தன் மகன் மீது கொண்ட அளவுகடந்த பாசத்தால் அவன் {விருத்தக்ஷத்திரன்} தன் சொந்தங்கள் அனைவரையும் அழைத்து அவர்களிடம்,(111) "எந்த மனிதன் போரில் போராடிக் கொண்டிருக்கும் என் மகனின் {ஜெயத்ரதனின்} தலையைப் பூமியில் விழச் செய்வானோ, அவன் பெரும் சுமையைச் சுமப்பான், அந்த மனிதனின் தலை நிச்சயம் நூறு துண்டுகளாகச் சிதறும் என நான் சொல்கிறேன்" என்றான்.(12)

இவ்வார்த்தைகளைச் சொல்லி, ஜெயத்ரதனை அரியணையில் நிறுவிய விருத்தக்ஷத்திரன் காடுகளுக்குச் சென்று தவத்துறவுகளுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டான்.(113) ஓ! குரங்குக் கொடியோனே {அர்ஜுனா}, பெரும் சக்தி கொண்ட அவன் {விருத்தக்ஷத்திரன்} இப்போதும் கூட இதே சமந்தபஞ்சகத்துக்கு {குருசேத்திரத்திற்கு} வெளியே கடுந்தவத்தைச் செய்து கொண்டிருக்கிறான். எனவே, ஓ! எதிரிகளைக் கொல்பவனே {அர்ஜுனா}, இந்தப் பயங்கரப் போரில் ஜெயத்ரதனின் தலையை வெட்டும் நீ, ஓ! பாரதா {அர்ஜுனா}, அற்புதச் செயல்களைச் செய்யும் உனது கடுமையான தெய்வீக ஆயுதத்தைக் கொண்டு, ஓ! வாயு தேவன் மகனின் {பீமனின்} தம்பியே {அர்ஜுனா}, காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட அந்தத் தலையை {ஜெயத்ரதனின் தலையை} விரைவாக அந்த விருத்தக்ஷத்திரனின் மடியிலேயே விழச் செய்வாயாக. ஜெயத்ரதனின் தலையை நீ பூமியில் வீழ்த்தினால், உன் தலை நூறு துண்டுகளாகச் சிதறும் என்பதில் ஐயமில்லை.(116, 117) தெய்வீக ஆயுதத்தின் துணை கொண்டு, பூமியின் தலைவனான அந்த முதிய சித்து மன்னன் {விருத்தக்ஷத்திரன்} அறியாத வண்ணம் இச்செயலைச் செய்வாயாக. உண்மையில், ஓ! வாசவனின் {இந்திரனின்} மகனே, ஓ! அர்ஜுனா, மூன்று உலகங்களிலும் உன்னால் அடைய முடியாததோ, செய்ய முடியாததோ  எதுவுமில்லை" என்றான் {கிருஷ்ணன்}.

(கிருஷ்ணனின்) இவ்வார்த்தைகளைக் கேட்டத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் கடைவாயை நாவால் நனைத்தபடி, இந்திரனின் வஜ்ரத்துக்கு ஒப்பான தீண்டலைக் கொண்டதும், மந்திரங்களால் ஈர்க்கப்பட்டதும், தெய்வீக ஆயுதமாக {அஸ்திரமாக} மாற்றப்பட்டதும், கடினங்கள் எதையும் தாங்கவல்லதும், நறுமணப் பொருட்களையும், மாலைகளையும் கொண்டு எப்போதும் வழிபடப்பட்டதும் ஜெயத்ரதனைக் கொல்லத் தன்னால் எடுக்கப்பட்டதுமான அந்தக் கணையை விரைவாக ஏவினான். காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட அந்தக் கணை வேகமாகச் சென்று, மரத்தின் உச்சியில் இருக்கும் சிறு பறவையைக் கவர்ந்து செல்லும் ஒரு பருந்தைப் போல ஜெயத்ரதனின் தலையைக் கவர்ந்து சென்றது. அப்போது தனஞ்சயன் {அர்ஜுனன்} தன் கணைகளைக் கொண்டு அந்தத் தலையை (கீழே விழாதபடிக்கு) ஆகாயத்திலேயே செலுத்திக் கொண்டிருந்தான்.(118-123) தன் எதிரிகள் கவலையையும், தன் நண்பர்கள் மகிழ்ச்சியையும் அடையும்படி செய்த அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தன் கணைகளை மீண்டும் மீண்டும் அந்தத் தலையின் மீது ஏவி அதை {அந்தத் தலையைச்} சமந்தபஞ்சகத்தின் எல்லைகளுக்கு அப்பால் செலுத்தினான்.(124)

அதேவேளையில் உமது மருமகனின் {ஜெயத்ரதனின்} தந்தையும், பெரும் சக்தியைக் கொண்டவனுமான மன்னன் விருத்தக்ஷத்திரன், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, தன் மாலைவேளை வேண்டுதல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்.(125) அமர்ந்த நிலையில் தன் வேண்டுதல்களைச் சொல்லிக் கொண்டிருந்த விருத்தக்ஷத்திரனின் மடியில் கருங்குழல்களாலும், காது குண்டலங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த ஜெயத்ரதனின் தலை விழுந்தது. ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, காதுகுண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தத் தலை தன் மடியில் வீசப்பட்டது மன்னன் விருத்தக்ஷத்திரனால் காணப்படவில்லை. எனினும், பின்னவன் {விருத்தக்ஷத்திரன்} தன் வேண்டுதலைகள் முடித்து எழுந்த போது, திடீரென அது கீழே பூமியில் விழுந்தது. ஜெயத்ரதனின் தலையானது கீழே பூமியில் விழுந்தபோது, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, அந்த முதிய விருத்தக்ஷத்திரனின் தலை நூறு துண்டுகளாகச் சிதறியது. இந்தக் காட்சியைக் கண்ட உயிரினங்கள் அனைத்தும் ஆச்சரியத்தால் நிறைந்தன.(126-130). அவர்கள் அனைவரும் வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்}, வலிமைமிக்கப் பீபத்சுவையும் {அர்ஜுனனையும்} புகழ்ந்தனர்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனனால் அந்தச் சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} கொல்லப்பட்டதும், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, வாசுதேவனால் {கிருஷ்ணனால்} அந்த இருள் விலக்கிக் கொள்ளப்பட்டது.(131) அதன் பிறகே தொண்டர்களோடு கூடிய உமது மகன்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} தாங்கள் கண்ட அந்த இருள் வாசுதேவனால் உண்டாக்கப்பட்ட மாயையே என்பதை அறியவந்தனர். இப்படியே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மருமகனான சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்}, எட்டு அக்ஷௌஹிணிகளைக் கொல்லச் செய்து {கொல்லப்பட காரணமாக அமைந்து}, நினைத்துப் பார்க்க முடியாத சக்தியைக் கொண்ட பார்த்தனால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்டான். சிந்துக்களின் ஆட்சியாளனான ஜெயத்ரதன் கொல்லப்பட்டதைக் கண்டு கவலையடைந்த உமது மகன்களின் கண்களில் கண்ணீர் வழிந்தது.(132-134) பார்த்தனால் {அர்ஜுனனால்} ஜெயத்ரதன் கொல்லப்பட்டதும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கேசவன் {கிருஷ்ணன்} தன் சங்கை முழக்கினான், எதிரிகளை எரிப்பவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான அந்த அர்ஜுனனும் தனது சங்கை முழக்கினான்.(135) பீமசேனனும், அந்தப் போரில் யுதிஷ்டிரனுக்குச் செய்தியை அனுப்புபவனைப் போல, பேராற்றலுடன் கூடிய சிங்க முழக்கத்தால் ஆகாயத்தை நிறைத்தான்.(136) அந்தப் பிரம்மாண்டமான கூச்சலைக் கேட்டவனும், தர்மனின் மகனுமான யுதிஷ்டிரன், உயர் ஆன்ம பல்குனனால் {அர்ஜுனனால்} சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} கொல்லப்பட்டதைப் புரிந்து கொண்டான்.(137) துந்துபி ஒலிகளாலும், பிற கருவிகளாலும் தன் படையின் போர்வீரர்களுக்கு மகிழ்ச்சியூட்டிய அவன் {யுதிஷ்டிரன்} போரிடும் விருப்பத்தால் பரத்வாஜர் மகனை {துரோணரை} எதிர்த்துச் சென்றான்.(138)

அதன் பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சூரியன் மறைந்ததும், துரோணருக்கும், சோமகர்களுக்கும் இடையில் மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு பயங்கரப் போர் தொடங்கியது. பரத்வாஜரின் மகனை {துரோணரைக்} கொல்ல விரும்பிய அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் {சோமகர்கள்}, ஜெயத்ரதன் வீழ்ந்த பிறகு, முடிந்த மட்டும் முயன்று அவருடன் {துரோணருடன்} போரிட்டனர். உண்மையில், சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கொன்று வெற்றியடைந்த பிறகு, அந்த வெற்றியால் போதை கொண்டு துரோணருடன் போரிட்டனர்.(139-141) அர்ஜுனனும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மன்னன் ஜெயத்ரதனைக் கொன்ற பிறகு, உமது படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலருடன் போரிட்டான்.(142) உண்மையில், கிரீடத்தாலும், மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்ட அந்த வீரன் {அர்ஜுனன்}, தன் முந்தைய சபதத்தைச் சாதித்த பிறகு, தானவர்களை அழிக்கும் தேவர்களின் தலைவனை {இந்திரனைப்} போலவோ, இருளை அழிக்கும் சூரியனைப் போலவோ தன் எதிரிகளை அழிக்கத் தொடங்கினான்" {என்றான் சஞ்சயன்}.143
….
தொடரும்..
..
மகாபாரதம் தொடர் முழுவதும் படிக்க இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைந்திருங்கள்  

No comments:

Post a Comment