05/50 கண்டேன் ஸீதையை (1)
**சங்கே ச்ருதோயம் வ்ருத்தாந்த: ராமேண ஹரியூதபா: *
தத் க்ஷணம் நேஹ ந: ஸ்தாதும் க்ருதே கார்யே பரந்தபா: *
ஸர்வே யதா மாம் வக்ஷ்யநாதி ஸமேத்ய ஹரியூதபா: *
ததாஸ்மி கர்தா கர்தவ்யே பவத்பி: பரவாஹனம்*
நாஜ்ஞாபயிதும் ஈசோஹம் யுவராஜ: அஸ்மி யத்யபி*
அயுக்தம் க்ருதகர்மாண: யூயம் தர்சயிதும் மயா*
ஏவம் வக்ஷ்யதி கோ ராஜன் ப்ரபு: ஸன் வானரர்ஷப: *
ஐஸ்வர்யமதமத்த::ஹி ஸர்வ: அஹமிதி மன்யதே*
தவ சேதம் ஸுஸத்ருசம் வாக்யம் நான்யஸ்ய கஸ்யசித் *
ஸந்நதிர்ஹி தவாக்யாதி பவிஷ்யம் சுபயோக்யதாம் *
பாடம் கச்சேம இத்யுக்த்வா கம் உத்பேது: மஹாபலா: *
க்ருத்வா ஆகாசம் நிராகாசம் யநதரோக்ஷிப்தா: இவாசலா: *
வினதந்தோ மஹாநாதம் கனா: வாதேரிதா: யதா **
அங்கதன் வானரப் படைத்தலைவர்களிடம் கூறுவான் --
நாம் திரும்பியதும், மதுவனத்தில் தங்கி தேனைப் பருகியதும், மதுவனத்தை அழித்ததும் நம் மகாராஜருக்கு தெரிந்திருக்கும் போலும். மதுவனத்தில் தகாததைச் செய்துவிட்டு ஒரு க்ஷணம் கூட நாம் இங்கு தங்குவது உசிதமில்லை என்றான்.
அங்கதனின் வார்த்தையை கேட்டு ஆச்சரியப்பட்ட வானரர்கள் பேசுவார்கள். -- எங்களுக்கு உத்தரவிட அதிகாரம் இருந்தும் இப்படியா பேசுவீர்கள். உலகில் எல்லோரும் நிறைய செல்வத்தைப் பெற்ற திமிரினால் நான் என்று அஹங்கார த்தோடு பேசுகிறார்கள். நீ எங்களுக்கு அரசாக இருந்தும் எங்களை கட்டளையிடாமல் இவ்வாறு பேசுவது ஆச்சரியம் தான். உம்முடைய பணிவு எதிர்காலத்தில் நீ அடையப்போகிற பெருமையை எடுத்துக்காட்டுகிறது.
அங்கதன் மகிழ்ச்சியினால் புறப்படலாம் என்றதும் எல்லோரும் வானத்தில் தாவினார்கள். ராமனுக்கு செய்தி சொல்லப் போகிறோம் என்கிற மகிழ்ச்சியினால் ஆரவாரம் செய்து கொண்டு சென்றனர்.
** உவாச சோகோபஹதம் ராமம் கமலலோசனம்*
ஸமாச்வஹி பத்ரம் தே த்ருஷ்டா தேவீ ந ஸம்ஸய: *
நாகந்துமிஹ சக்யம் தை: அதிதே ஸமயே ஹி ந: *
ந மத்ஸகாசம் ஆகச்சேத் க்ருத்யே ஹி விநிபாதிதே*
யுவராஜோ மஹாபாஹு: ப்லவதாம் ப்ரவரோங்கத: *
பவேத் ஸ தீனவதன: ப்ராந்தவிப்லுத மானஸ: *
ந மே மதுவனம் ஹன்யாத் அஹ்ருஷ்ட ப்லவகேச்வர: *
கௌசல்யா ஸுப்ரஜா ராம ஸமாச்வஸிஹி ஸூவ்ரத *
தத: கிலகிலா சப்தம் சுச்ராவாஸன்னம் அம்பரே*
ஹனுமத்கர்ம த்ருப்தானாம் நர்ததாம் கானநௌகஸாம்*
ஆஜக்மு: தேபி ஹரய: னராமதராசன காங்க்ஷிண:*
அங்கதன்புரத: க்ருத்வா ஹனுமந்தம் ச வானரம்**
அங்கதனையும் அனுமனையும் முன்னிலைப் படுத்திக் கொண்டு வானவர்கள் வானத்தில் பறந்து வந்து கொண்டிருக் கிறார்கள். அங்கதனை வானத்தில் அருகில் பார்த்துவிட்டு பிரிவுத்துயரால் வருந்தி கொண்டிருக்கும் ராமனைப் பார்த்து சுக்ரீவன் பேசுவான். ராமா! மனதைத் தேற்றிக்கொள். உனக்கு க்ஷேமம் உண்டாகுக. சீதையைக் கண்டுபிடித்து விட்டார்கள். அவர்களுக்கு நாம் சொன்ன கெடு கடந்துவிட்டபடியால் வெற்றி பெறாவிடில் இங்கு வரமாட்டார்கள். வானத்தில் அங்கதன் மகிழ்ந்த முகத்துடன் வருவதால் சீதையைப் பார்த்தது உறுதி யாகிறது. ஸீதையைப் பார்க்காது போனால் மனதின் மகிழ்ச்சி இராது மதுவனத்தில் இறங்கியே இருக்க மாட்டார்கள். சீதை இருக்கும் இடம் தெரிந்தபடியால் உனக்கு வாழ்வு கிடைத்தது இதனால் உன் தாய் கோசலை நன்மகனைப் பெற்றவர் ஆகிறார் அனுமனே உனக்கு உயிரை கொடுத்தவன் இதோ வானத்தில் அருகில் கர்வத்தோடு கத்திக்கொண்டு பார்க்க வேண்டும் என்கிற ஆசையினால் வந்து விட்டார்கள்.
** என் பழி அனுமனும் இரவி என்பவன் *
தென்புறத்தனன் என தெரிவதாயினான் *
பொன்பொழி தடக்கை அப்பொருவில் வீரனும்*
அன்பூறு சிந்தையன் அமைய நோக்கினான் **
ராமனும் சுக்ரீவனும் பேசிக் கொண்டிருக்கும் போதே தென்திசையில் சூரியன் உதயமாகிறானோ என்னும்படி
மஹாதேஜஸ்ஸோடு அனுமன் காணப்பட்டான்.
அனுமன் முதலியோர் இறந்தார்களோ, இன்னும் தேடுகின்றார் களோ, போரிட்டு வீர ஸ்வர்கம் எய்தினார்களோ, சிறைப்பட்டார் களோ, இங்கு வர அஞ்சி தவம் புரிகின்றார்களோ என்றெண்ணி பேசிக் கொண்டிருக்கும்போதே தென் திசையின் சூரியன் உதயமாக அதை ராமனும் உற்று நோக்க, அனுமன் எதிரில் குதிக்கின்றான். ராமன் அனுமனை செவ்வையாகப் பார்த்தான்.
** ஹனுமான் ச மஹாபாஹு: ப்ரணம்ய சிரஸா.தத : *
நியதாம் அக்ஷதாம் தேவீம் ராகவாய ந்யவேதயத் **
அனுமான் ராமனுடைய திருவடிகள் வரை கைகளை நீட்டி தலையை பூமியில் படும்படி நன்கு தாழ்த்தி வணங்கிவிட்டு பாதிவ்ரத்ய வ்ரதம் உடையவனாய், சரீரத்திலும் க்ஷேமம் உடையவனாய், தேஜஸ்வியாயிருக்கும் ஸீதையை ரகு குல தோன்றலாகிய ராமனிடம் விண்ணப்பித்தான்.
** எய்தினர் அனுமனும், எய்தி, ஏந்தல்தன் *
மொய்கழல் -- தொழுதிலன், முளரி நீங்கிய *
தையலை நோக்கிய தலையன், கையினன் *
வையகம் திழீ இநெடிது இறைஞ்சி வாழ்த்தினான் **
அனுமனும் வந்து சேர்ந்தான். வந்து சேர்ந்து பெருமையிற் சிறந்தவனான ஸ்ரீராமனுடைய வலிய வீரக்கழலை அணிந்த திருவடியை என்ன செய்தான்? தொழுதானா? அதுதான் இல்லை. தொழுதிலன் -- வணங்கவில்லை. ஸுக்ரீவனையும் வணங்கவில்லை. பின் என்ன செய்தான்? தென் திசைப் பக்கம் திரும்பினான். ஏன்? தெற்கே இலங்கையில் ஸீதை இருக்கிறாள். அவள் தனக்கு உறைவிடமான செந்தாமரை மலரை விட்டு மிதிலை நகரில் தரையில் அவதரித்தவள். மஹாலட்சுமியின் அவதாரமானவள். ஜானகிப் பிராட்டி. அவளை மனதில் நினைத்து கைகளை தலை மேல் வைத்து கூப்பிக் கொண்டு பூமியில் விழுந்து சாஷ்டாங்கமமாக நமஸ்கரித்து வாழ்த்துக் கூறினான். போகும்போது ராமன் கொடுத்த மோதிரத்தின் அருளால் இலங்கைப் போய் சேர்ந்தான்.திரும்பி வரும்போது பிராட்டி கொடுத்த சூடாமணியின் அருளால் தீங்கின்றி ராமன் இருக்குமிடம் கடலைத் தாண்டி வந்து சேர்ந்தான். ராமனோ கருணையின் கோயில். கோயிலினுள் புகுந்தால் முதலில் தாயார் சன்னதிக்குச் சென்று தாயாரை வணங்கி விட்டு பிறகு தானே பெருமாள் சன்னதிக்குச் சென்று பெருமாளை சேமிப்போம் எனவே சீதையிருக்கும் தென் திசை நோக்கி வணங்கினான்.
அதோடு அரக்கர்கள் வாலில் வைத்த தீ தன்னைச் சூடாதவாறு செய்தாள். எனவே நன்றி காட்டு முகமாகவும் முதலில் நமஸ்கரித்தான். பிறகு ராமனை வணங்கினான்.
** திண்திறல் அவன் செயல் தெரிய நோக்கினான் *
வண்டுறை ஓதியும் வலியள், மற்ற இவன் *
கண்டதும் உண்டு அவள் கற்பும் நன்று எனக் *
கொண்டனன் குறிப்பினால் உணரும் கொள்கையான்**
கண்டேன் சீதையை என்கிற அனுமனின் வாயிலிருந்து வந்த அமிழ்தம் போன்ற சொல்லைக் கேட்டு லக்ஷ்மணனோடு கூடிய ராமன் மகிழ்ந்தான்.
அனுமன் ராமனைப் பார்த்து தேவர்கட்கெல்லாம் தலைவனே! பார்த்தேன் ஸீதையை என்றான். ஸீதையை என்று ஆரம்பித்தால் அடுத்து என்ன சொல்வானோ. வால்மீகியும் த்ருஷ்டா ஸீதா என்றார். அதை மனதில் கொண்டு கம்பரும் கண்டனன் என்று முதலில் கூறினார். சீதையினிடம் கற்பு இல்லையேல் அவளைப் பார்த்தும் பயனில்லை. எனவே கற்பினுக்கு அணியை என்றான். பிராட்டி ஒருத்தி பல இன்னல்களையும் பொருட்படுத்தாது கற்பை காப்பாற்றிய படியால் தான் உலகத்தில் கற்பு சிறப்புற்று விளங்குகிறது. எனவே அவள் கற்புக்கு திருவாபரணமாக திகழ்ந்தாள். ஆக கற்பிற் சிறந்த ஸீதையைக் கண்டேன் என்றான். எங்கு பார்த்தாய். இலங்கையில் பார்த்தேன். நம் நாட்டிலேயே பார்ப்பதாயிருந்தால் எளிதாகப் பார்த்து விடலாம். இலங்கையோ ஒரு தீவு. கடலால் சூழப்பட்டது.எப்பொழுதும் பேரலைகள் இரைச்சலை எழுப்பிக் கொண்டு பயங்கரமாக வீசிக் கொண்டி ருக்கிறது. அவற்றையெல்லாம் பொருட் படுத்தாது உம் அருளால் கடலைக் கடந்து சென்று இரவெல்லாம் தேடிக் கண்டுபிடித்தேன். எனவே உம்மை வருத்திய துன்பங்களை எல்லாம் விட்டு விடுங்கள்.
வால்மீகி அக்ஷதா தேவி என்றார். அவளிடத்தில் எந்த குறை பாடும் ஒழுங்கீனமும் கிடையாது. குறை இருந்தால் அதை அவள் முகமே காட்டிவிடும். அவள் முகத்தில் கற்பின் தேஜஸ் ஜோலிக்கிறது என்றான்.
இங்கு கண்டேன் அல்லது கண்டனன் என்று சொன்னாலே போதும். காண்பது என்பது கண்களால் தானே. எப்படி இருக்க "கண்டனன் கண்களால்" என்றான்.
அவள் உன்னைப் பிரிந்து சிறைப்பட்டு அங்கு கண்களி னின்றும் நீரைத் தாரை தாரையாக பெருக்கிக் கொண்டிருப்பதால் அவள் கண்களாலேயே கண்டேன்.
** விஷஸ்ய தாதா ந ஹி மே அஸ்தி கச்சித்*
சஸ்த்ரஸ்ய வா வேச்மனி ராக்ஷஸஸ்ய*
இதீவ தேவீ பஹுதா விலப்ய*
ஸர்வாத்மனா ராமம் அனுஸ்ரமந்தீ *
ப்ரவேபமானா பரிசுஷ்க வக்த்ரா*
நகோத்தமம் புஷ்பிதம் ஆஸஸாத **
நான் பார்க்கும் போது அவள் எனக்கு விஷம் கொடுப்பவர். யாரும் இல்லையே. ஆயுதங்களை யாவது யாராவது கொடுக்க மாட்டானா -- எளிதாகப் பிராணனை விட வழி தெரிய வில்லையே என்று அழுது கொண்டும் உன்னையே நினைத்து உடல் நடுங்கிக் கொண்டும், வாய் உலர்ந்து கொண்டும் இருக்க தூக்குப் போட்டுக் கொள்ள ஒரு மரத்தடிக்கு போனாள். அவள் கற்பு அத்தகையது. இதையும் பார்த்தேன்
இத்தகைய நிலையை எனது இரு கண்களாலும் கண்டேனே. என்னே! என் துணிவு இந்தக் கஷ்டத்தை என் கண்களால் பார்க்க வேண்டியிருந்ததே என்று தன்னை நொந்து கொள்கிறான்.
*"லக்ஷ்மண: ப்ரீதிமான் ப்ரீதம் பஹுமானாத் அவைக்ஷத*"
கண்டேன் ஸீதையை என்கிற வார்த்தையைக் கேட்டதும் லக்ஷ்மணன் அனுமனை ரொம்ப ப்ரீதியோடும் கௌரவத்தோடும் பார்த்தானாம்.
** பஹுமினேன மஹதா ஹனுமந்தம் அவைக்ஷத*
க்வ ஸீதா வர்ததே தேவீ கதம் ச மயி வர்ததே *
ஏதன்மே ஸர்வம் ஆக்யாத வைதேஹீம் ப்ரதி வானரா:*
சோதயந்தி ஹனூமந்தம் ஸீதா வ்ருத்தாந்த கோவிதம் **
ராகவனும் எல்லையற்ற அன்போடும் பஹுமானத்தோடும் ஹனுமானைப் பார்த்தானாம். உடன் வந்த வானரர்களும்
யுவராஜாவான அங்கதனை முந்திக்கொண்டு ஸீதையின் நிலையைப் பற்றிச் சொல்ல தொடங்கினர். எல்லா குரங்குகட்கும் நான் சொல்ல வேண்டும் நான்சொல்ல வேண்டும் என்கிற ஆசையினால் அனுமனிடம் கேட்டதில் நினைவுக்கு வரும் செய்தியை சொல்லின. அதிலிருந்து ஸீதை கற்பு நிலையிலிருந்து வழுவாதவள் என்பதை அறிந்த ராமன் பேசினான். ஸீதை எங்கே இருக்கிறாள்? என் விஷயத்தில் என்ன எண்ணத்தோடு இருக்கிறாள் என்பதை விரிவாகச் சொல்லுங்கள் என்றார். அனுமனைச் சொல்லும்படி தூண்டினார்.
** ப்ரணம்ய சிரஸா தேவ்யை ஸீதாயை தாம் திசம் ப்ரதி*
ஸன்யஸ்ய த்வபி ஜீவந்தி ராமா! ராம! மனோரதம் *
துக்கம் ஆஸாத்யதே தேவீ ததாதுக்கோசிதா ஸதீ*
ஏவம் மயா மஹாபாகா த்ருஷ்டா ஜனகநந்தனீ*
உக்ரேண தபஸா யுக்தா த்வத்பக்த்யா புருஷர்ஷப **
உடனே அனுமன் ஸீதை இருக்கும் தென் திசையைப் பார்த்து சீதாதேவிக்கு வணக்கத்தை தெரிவித்துவிட்டு, ஸீதை அடையாளமாகக் கொடுத்த சூடாமணியை ராமனிடம் ஸமர்ப்பித்து விட்டு கைகளைக் கூப்பிய வண்ணம் பேசத் தொடங்கினான். கடலை தாண்டியது, அரக்கிகளின் நடுவே அவர்களால் மிரட்டப்பட்டு ஒற்றைப் பின்னலோடு தரையில் படுத்துக்கொண்டு உன்னையே நினைத்து வாடி உடல் இளைப்பு வாழ்வை வெறுத்து உயிர்விடத் துணிந்து விட்டாள்.
**ஏவம் மயா மஹாபாகா த்ருஷ்டா ஜனகநந்தனீ*
உக்ரேண தபஸா யுக்தா த்வத்பக்த்யா புருஷர்ஷப **
உன்னிடம் உள்ள நிலையான பக்தியினால் உக்ரமாக தவம் புரிந்து கொண்டு இருக்கும் நிலையில் ஸீதையை நான் பார்த்தேன்.
** உன் பெருந்தேவி என்னும் உரிமைக்கும் உன்னைப் பெற்ற *
மன் பெருமருகி என்னும் வாய்மைக்கும் மிதிலை மன்னன் *
தன் பெருந்தனைய என்னும் தகைமைக்கும் தலைமை சான்றாள் *
என் பெருந் தெய்வம் ஐயா இன்னமும் கேட்டி என்பான்**
ராமா! ஸீதை புருஷோத்தமனாகிய உனது சிறந்த மனைவி என்னும் தகுதிக்கும், உன்னைப் பெற்ற அறம்திறம்பாத சக்கரவர்த்தி தசரதனுடைய மருமகள் என்னும் வார்த்தைக்கும், மிதிலை மன்னனும் வைதிக ஆசாரமுறை வழுவாத சிறந்த பரம்பரையைச் சேர்ந்தவருமாகிய ஜனகரின் சிறப்புமிக்க பெண் எனும் தன்மைக்கும், ஏற்ற சிறப்புகளை உடையவள் சீதை.
இவள் என்னால் வரிக்கப்பட்ட தெய்வமாவாள். எனவே இவள் நான் பிறந்த இடம், புகுந்த இடம், தன்னைக் கைப்பிடித்தவன், பக்தனாகிய நான் எல்லோருக்கும் ஏற்றவள். உனக்குரிய தர்ம பத்னீ உன்னிடம் பக்தி செலுத்துவதையே தவமாகக் கொண்ட பதிவ்ரதை அவள்.
** பொன் அலது இல்லைப் பொன்னை ஒப்பூ எனபா பொறையில் நின்றாள் *
தன் அலது இல்லைத் தன்னை ஒப்பெனத் தனக்குவந்த *
என் அலது இல்லை என்னை ஒப்பென எனக்கும் ஈந்தாள் **
பொன்னுக்கு ஒப்பான பொருள் பொன்னைத் தவிர வேறொரு பொருளைச் சொல்ல முடியாது. தன்னை ஒத்திருப்பவள் வேறு யாராவது பெண் உண்டா எனில் தன்னை ஒத்த வேறு ஒருத்தி கிடையாது என்று சொல்லும்படி பொறுமைக் குணத்தில் நிலைபெற்றிருக்கிறாள். தனக்குக் கணவனாக வாய்த்த உன்னை அல்லாது உன் போன்ற வேறு ஒருவர் உலகில் இல்லை என்னும் படியான உன்னைப் பெற்றிருக்கிறாள்.
அதேபோல் எனக்கு ஸமமானவன் என்னைத் தவிர வேறு யாரும் உலகில் இல்லை. தூதனாக கிளம்பி கடலைத் தாண்டி சீதையை கண்டு பேசி ராமகல்யாண குணங்களைப் பேசி, மோதிரத்தைக் கொடுத்து சூடாமணியைப் பெற்றுத் திரும்பி வந்து உனக்குச் செய்தியைச் சொல்லிக் கொண்டிருக்கும் எனக்கு ஸமமான ஒருவன் உலகில் வேறு யாராவது இருக்க முடியுமா? இல்லை. இத்தகு பெருமையை புகழை அவள் எனக்கு கொடுத்திருக்கிறாள்.
துயரங்கள் அனைத்தையும் தன்னை பொறுமைக் குணத்தால் வென்று தன்னை ஒப்பாரும் மிக்காரும் இலராம்படி சிறப்புற்ற சீதை -- சுடச்சுடப் புடமிட்டதும், மாற்றுப் பெற்றுச் சுடர்கின்ற பொன்போல, தவத்தியாக சுந்தரியாக ஒளி சிறந்து ஒரு பொது நிறம் பெற்றிருக்கிறாளாம். இதுவே ராமனுக்கும் பெருமை. அடியவனாகிய எனக்கும் பெருமை என்கிறான்.
கற்புத் தவத்தினால் ராமனை புருஷோத்தமனாக்கிய சீதை.
கேடி போல் வந்து சூழலுக்கும் எவ்வளவு பெருமை அளித்திருக்கிறாள். உத்தம ராம பக்தன். சீதாராம பக்தனாக அல்லவா திரும்பி வந்திருக்கிறான். அவனுக்கு ராமன் தெய்வம். ஸீதையோ தனக்கு உவந்த பெருந்தெய்வம்.
** உன் குலம் உன்னது ஆக்கி உயர் புகழ்க்கு ஒருத்தி ஆக *
தன் குலம் தன்னது ஆக்கித் தன்னை இத்தனிமை செய்தாள் *
உன் குலம் கூற்றுக்கு ஈந்து, அவ்வானவர் குலத்தை வாழ்வித்து*
என்குலம் எனக்குத் தந்தாள் என் இனிச் செய்வதம்மா **
ராமா! நீ பிறந்த குலம் இதுவரை சூரிய குலம். மனு குலம், ககுத்ஸ்த குலம், ரகு குலம் என்று வழங்கப்பட்டு வருகிறது.
இனி உன் பெயரிட்டு ராம குலம், ராகவகுலம் என்று வழங்கும்படி செய்துவிட்டாள். உன் குலத்தை உன்னது ஆக்கிவிட்டாள்.
சிறந்த புகழில் ஒருத்தியேயாக நின்று, ஜனக குலத்தை இனி ஜானகி குலம், ஸீதை குலம் என்று தன் குலத்தை தன்னுடையது ஆக்கிக் கொண்டாள். என் குலத்துப் பிராணிகளையெல்லாம் ஹனுமத்குலம், ஆஞ்சநேயகுலம் என்று தனித்துப் பெருமை யாக பிற பேசும்படி செய்துவிட்டாள். என்னை வாயுபுத்ரன் என்று என்னைக் கூறுவதை விட ஹனுமத் பிதா வாயு,
அனுமனின் தந்தை வாயு பகவான் என்று இவனே இட்டு வாயுவைப் பேசும் படி செய்துவிட்டாள். அதாவது என் குலத்துப் பிராணிகளை எல்லாம் அனுமனின் குலம் என்று பேசும்படி செய்து விட்டாள். இவனால் வாயு பகவானுக்குப் பெருமை உண்டாயிற்று.
அனுமன் உலகோர் பாராட்டக்கூடிய நிலையை அறிவால் பெற்றவன். தன் குடிப்பிறப்பை ஒன்றையே மேம்படுத்துவது ஒருவருக்கு அரிதாகும். ஸீதையோ தான் பிறந்த குடி, தான் புகுந்த குடி, தன்னைச் சாரந்தவள் குடி, தேவர் குடி நான்கையும் ஓங்கும்படி செய்தவள்.
** விற்பெரும் தடக்கை வீர! வீங்குநீர் இலங்கை வெற்பின் *
நற்பெரும் தவத்தளாய நங்கையைக் கண்டேன் அல்லேன் *
இற்பிறப்பு என்பது ஒன்றும், இரும்பொறை என்பதொன்றும் *
கற்பெனும் பெயரது ஒன்றும் களிநடம் புரியக் கண்டேன்**
பெரிய நீண் கையை உடைய வீரனே! த்ரிகூடமலை நாற்புறமும்
கடலால் சூழப்பட்டது. அந்த மலை மீது இலங்கை நகர் அமைந்திருக்கிறது. நான் அங்கு போய் ஸீதையை கண்டேன் அல்லேன். காணவில்லையென்றான். கண்டேன் சீதையை என்று சொன்னேன் இப்பொழுது கண்டேன் அல்லேன் என்றதும் ராமன் திகைக்கிறான். உடனே ஆனந்தக் கனவு கண்டது போல் பேசுகிறான். அனைவராலும் பாராட்டக்கூடிய சிறந்த உயர்ந்த கற்பொழுக்கமாகிய தவத்தை உடையவள். மகளிர் சிறந்தவள். ஒரு பெண்ணரசி மாத்திரம் அன்று உயர் குடியில் பிறத்தலாகிய குணத்தை உடையவள். சிறந்த பொறுமை என்பதொரு குணத்தையும் உடையவள். ஆக இவளிடம் உயர்குடி பிறப்பு, பொறுமை,கற்பு நிலை ஆகிய முக்குணங்களும் போட்டி போட்டுக்கொண்டு ஆனந்த தாண்டவம் ஆடுகிறதோ என்னும் படி இருந்தாள். நான் ஸீதையைப் பார்க்கவில்லை. இம்முக்
குணங்களும் அவளிடம் களிநடம் புரிவதையே கண்டேன். நற்குணங்கள் நற்பண்புகள் வழுவாதபடி இருப்பதை அழகாக எடுத்துரைத்தான். ஸீதை எப்படி இருக்கிறாளோ என்கிற கவலை ராமனுக்கு அடியோடு நீங்கும்படி உரைத்தான்.
பிராட்டியின் தவமாவது ராமனைஸமணந்து கொள்ளுமாறு செய்த நோன்பு பொருத்தமானது . பிரிந்த நிலையிலும் ராமன் மனத்தினின்றும் சிறிதும் அகலாதிருக்கும் நோன்பு. அவளை நான் பார்த்த போது அவளை விட அவளிடமுள்ள உயர்குடி பிறப்பு,, பொறுமை, கற்பு ஆகிய முக்குணங்களும் போட்டியிட்டுக் களிப்புடன் முன்னாலா தோன்றினவாம். இம்மூன்று குணங்களும் ஸீதை என்னும் உருவத்தை எடுத்துக் கொண்டனவோ என்று சொல்லும்படி இருந்ததாம்.
கன்னிப் பருவத்தில் அழகு தெய்வமாய் விளங்கினாள்.
அயோத்தியில் ரூப ஸௌந்தர்யத்தோடு குண ஸௌந்தர்யமும் போட்டியிட்டு வளர்ந்தது. காட்டில் மெலிந்து இளைத்து வருந்திய போதிலும் குணஸௌந்தர்யம் குறையவிவ்லை. பின்னர் சிறையிருந்த காலத்தில்
**வேலையுள் இலங்கை என்னும் விரிநகர் ஒருசார் விண்தோய்*
காலையும் மாலைதானும் இல்லது ஓர் கனகக் கற்பச் *
சோலை அங்கு அதனில் உம்பி புல்லினால் தொடுத்த தூய *
சாலையில் இருந்தாள் ஐய! தவம் செய்த தவம் ஆம் தையல்**
என்றபடி தவமே தான் தவம் கிடந்து சீதையைப் பெற்றெ டுத்ததோ என்னும்படி இருந்தாள்.
(தொடரும்)
💥💥💥💥💥😀
No comments:
Post a Comment