Friday, December 29, 2023

Mahabharatam in tamil 214

மஹாபாரதம்(முழுவதும்)-பாகம்-214
உத்யோக பர்வம்
..
பீமரே! போரின் சுமை உமதே  -என்றார் கிருஷ்ணர்
..
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "மலைகள் தங்கள் எடையை இழந்தது போலவும், நெருப்புக் குளுமையானதாக ஆனது போலவும் எதிர்பாராதவகையில் இத்தகு மென்மை நிறைந்த பீமனின் வார்த்தைகளைக் கேட்டவனும், சாரங்கம் எனும் வில்லைத் தாங்குபவனும், வலிய கரங்களைக் கொண்டவனும், ராமனின் {பலராமனின்} தம்பியுமான சூர குலத்துக் கேசவன் {கிருஷ்ணன்}, நெருப்பைத் தூண்டும் காற்று போலப் பீமனைத் தனது வார்த்தைகளால் தூண்டும்படி உரக்கச் சிரித்து, கருணையின் உந்துவிசையில் மூழ்கியிருந்த அவனிடம் {பீமனிடம்}, "ஓ! பீமசேனரே, மற்ற பிற நேரங்களில், பிறரை அழித்து மகிழ்ந்து, திருதராஷ்டிரரின் தீய மகன்களை நசுக்க விரும்பிய நீர் போரை மட்டுமே மெச்சினீர். ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே, முகம் கீழ்நோக்கி அமர்ந்தபடி, {அப்போதெல்லாம்} முழு இரவும் தூங்காமல் விழித்திருந்தீரே. உமது இதயத்துக்குள் வீசும் புயலைக் குறிக்கும் வகையில் பயங்கரக் கோபத்தை அடிக்கடி வெளிக்காட்டினீரே.


ஓ! பீமரே, உமது கோபமெனும் நெருப்பால் தூண்டப்பட்டு, பெருமூச்சு விட்டபடியும் அமைதியற்ற இதயத்துடனும், புகையோடு கலந்த நெருப்புச் சுடராய் இருந்தீரே. பெரும் சுமையால் அழுத்தப்பட்ட பலவீனமான மனிதன் ஒருவன் போல, கூட்டத்தில் இருந்து விலகி, கீழே படுத்தபடி சூடான பெருமூச்சுகளை விட்டுக் கொண்டிருந்தீரே. இதற்கான காரணத்தை அறியாதோர், உம்மைப் பைத்தியம் என்றே கருதினர் {தெரியுமா?}. வேரோடு பிடுங்கப்பட்டுத் தரையில் கிடக்கும் மரங்களைத் தூள் தூளாக நொறுக்கி, காலில் போட்டு அவற்றை மிதித்துக் கொண்டு, ஆத்திரத்தில் உறுமும் யானையைப் போல, ஆழ்ந்த பெருமூச்சுகளை விட்டபடி, உமது பாதச்சுவடுகளால் உலகத்தைக் குலுக்கியபடி நீர் ஓடிக் கொண்டிருந்தீரே.


இங்கே இந்தப் பகுதியில் கூடக் கூட்டத்துடன் இருப்பதில் மகிழாமல், உமது நேரத்தைத் தனிமையிலேயே கழிக்கிறீர். இரவோ, பகலோ, தனிமையைத் தவிர வேறு எதுவும் உமக்கு மகிழ்ச்சியூட்டுவதில்லை. தனியாக அமர்ந்திருக்கும் நீர், திடீரென உரக்கச் சிரிப்பீர். சில வேளைகளில், உமது கால் முட்டிகள் இரண்டுக்குமிடையில் தலையை வைத்துக் கொண்டு, கண்கள் மூடிக் கொண்டு, அதே நிலையிலேயே தொடர்ந்து நீண்ட நேரம் இருப்பீர்.


இன்னும் சில நேரங்களில், ஓ! பீமரே, அடிக்கடி உமது புருவங்களைச் சுருக்கி, உதடுகளைக் கடித்தபடி, கடுமையாக வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பீர். இவை யாவும் கோபத்தின் குறியீடுகளே. ஒரு சமயத்தில், உமது சகோதரர்களுக்கு மத்தியில் கதாயுதத்தைப் பற்றிக் கொண்டு, இந்த உறுதிமொழியை உரைத்தீர், "தனது காந்தியை வெளிப்படுத்திக் கொண்டு சூரியன் கிழக்கில் உதித்து, மேருவைச் சுற்றிப் பயணித்து மேற்கில் மறைவதைப் பார்ப்பது போல {சூரியன் உதித்து மறைவது எப்படி உறுதியானதோ அதைப் போல}, ஆணவமிக்கத் துரியோதனனை, எனது இந்தக் கதாயுதம் கொண்டு கொல்வேன் என்று உறுதி ஏற்கிறேன். இந்த உறுதிமொழி பொய்க்காது" என்றீர்.


ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே, அதே இதயத்தைக் கொண்டிருக்கும் நீர், இப்போது சமாதானத்துக்கான ஆலோசனைகளை எப்படிப் பின்பற்றுவீர்? ஐயோ, உண்மையில் போர் உடனடியாக வரும் எனும்போது, இதயத்தில் அச்சம் நுழைந்துவிட்டால், ஓ! பீமரே, {முன்பு} போரை விரும்பியவர்கள் இதயமெல்லாம் வருத்தமடையும்.

ஓ! பிருதையின் மகனே {குந்தியின் மகனே பீமரே}, உறங்கும்போதோ, விழித்திருக்கும்போதோ, மங்கலமற்ற சகுனங்களையே நீர் காண்கிறீர். உண்மையில், அதன் காரணமாகவே நீர் சமாதானத்தை விரும்புகிறீர். ஐயோ, அலியைப் போல ஆண்மைக்குரிய எந்த அறிகுறிகளையும் நீர் வெளிக்காட்டவில்லையே. பயத்தால் நீர் பீடிக்கப்பட்டிருக்கிறீர். அதன் காரணமாகவே உமது இதயம் வருத்தமடைகிறது. இதயம் நடுங்குகிறது, உமது மனமோ துயரத்தில் மூழ்கி இருக்கிறது. உமது தொடைகள் நடுங்குகின்றன. அதற்காகவே நீர் சமாதானத்தை விரும்புகிறீர்.


ஓ! பார்த்தரே {பீமரே}, காற்றின் விசைக்கு வெளிப்பட்டு நிற்கும் இலவங்காய் விதையின் நெற்றுகள் {காய்ந்த பருப்புகள்} [Pods of Salmali seed} போல, மனிதர்களின் இதயங்கள் நிலையற்றவை என்பது நிச்சயம். உமது இந்த மனநிலை, அறிவூட்டப்பட்ட பசுக்களின் பேச்சு போல விசித்திரமாக இருக்கிறது. தங்களைக் காக்க ஒரு படகின்றிக் கடலில் நீந்துபவர்களைப் போல, உண்மையில், உமது சகோதரர்களின் இதயங்கள் அனைத்தும் துன்பக் கடலில் மூழ்கப் போகின்றன.

ஓ! பீமசேனரே, நீர் இத்தகு எதிர்பாராத வார்த்தைகளைப் பேசுவது, மலையே நகர்ந்து விட்டது போன்று விசித்திரமாக இருக்கிறது. ஓ! பாரதரே {பீமரே}, உமது சாதனைகளையும், நீர் பிறந்திருக்கும் குலத்தையும் நினைத்துப் பார்த்து எழுந்திரும். ஓ! வீரரே {பீமரே}, துன்பத்துக்கு உம்மைக் கொடுக்காமல் உறுதியாக இருப்பீராக. ஓ! எதிரிகளை ஒடுக்குபவரே {பீமரே}, இத்தகு தளர்வு உமக்குத் தகுந்ததல்ல. ஏனெனில், தனது வீரத்தால் அடையப்படாத எதிலும் ஒரு க்ஷத்திரியன் மகிழ மாட்டான்" என்றான் {கிருஷ்ணன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "எப்போதும் கோபம் நிறைந்த பீமன், வாசுதேவனால் {கிருஷ்ணனால்} இப்படிச் சொல்லப்பட்டதும், அவமானங்களைத் தாங்கிக் கொள்ள இயலாமல், உயர்ந்த பொருளாலான குதிரையைப் [1] போல உடனே விழித்தெழுந்து, ஒரு நொடியும் தாமதிக்காமல், "ஓ! அச்யுதா {கிருஷ்ணா}, குறிப்பிட்ட ஒரு வழியில் நான் செயல்பட விரும்புகிறேன்; எனினும், நீ என்னை வேறு வெளிச்சத்தில் காண்கிறாய். நான் போரில் பெரும் மகிழ்வடைகிறேன் என்றும், எனது ஆற்றல் கலங்கடிக்கப்பட இயலாதது என்றும், ஓ! கிருஷ்ணா, எங்களோடு வெகு காலம் சேர்ந்து வாழ்ந்திருப்பதால் நீ நன்கு அறிந்திருப்பாய். அல்லது தடாகத்தின் ஆழம் தெரியாமல் அதில் நீந்திக் கொண்டிருப்பவனைப் போல, நீ என்னை அறியாதிருந்திருக்கலாம்.

[1] உயர்ந்த அழகுடைய குதிரை என்றும் எடுத்துக் கொள்ளலாம். ஆங்கிலத்தில் a steed of high metal என்று இருக்கிறது. metal என்பதற்குத் தமிழில் உலோகம் என்றும், மாழை என்றும் பொருள் உண்டு. மாழை  என்பது இளமை, அழகு என்ற பொருள்களைத் தரும்.


இதன்காரணமாகவே, நீ தகாத வார்த்தைகளால் என்னைக் கடிந்து கொள்கிறாய். ஓ! மாதவா? நான் பீமசேனன் என்று அறிந்தும் இத்தகு தகாத வார்த்தைகளை என்னிடம் யாரால் பேச முடியும்? எனவே {கேட்டது நீ என்பதால்}, ஓ! விருஷ்ணிகளுக்கு மகிழ்ச்சியூட்டுபவனே {கிருஷ்ணா}, எனது ஆற்றல் மற்றும் ஒப்பற்ற வலிமை குறித்து நான் உனக்குச் சொல்கிறேன். ஒருவன், தனது சொந்த ஆற்றல் குறித்துப் பேசுவது எப்போதும் இழிவான செயலே என்றாலும், அன்பற்ற உனது கண்டனங்களால் துளைக்கப்பட்டிருக்கும் நான் எனது சொந்த வலிமையைக் குறித்துப் பேசுகிறேன்.


ஓ! கிருஷ்ணா, அசைக்க இயலாதவையும், மகத்தானவையும், எல்லையற்றவையும், பிறப்பெடுத்த எண்ணற்ற உயிரினங்களுக்கு அடைக்கலமாக இருப்பவையுமான வானத்தையும், பூமியையும் பார். கோபத்தால் இவை இரு மலைகளைப் போல ஒன்றோடு ஒன்று திடீரென மோதிக் கொண்டால், அவற்றில் உள்ள அசைவன மற்றும் அசையாதன ஆகியவற்றோடு கூடிய அவற்றைத் தனித்தனியாகப் பிரிக்க எனது கரங்களால் முடியும் [2]. கரங்களைப் போல இருக்கும் எனது கதாயுதத்தின் இணைப்புகளைப் பார். அவற்றின் பிடியில் ஒருமுறை சிக்கி, தப்பிக்க இயன்றவனை நான் காணவில்லை.


இமயம், பெருங்கடல், வலனைக் கொன்றவனான வஜ்ரத்தைத் தாங்குபவன் {இந்திரன்} ஆகிய மூவராலும் கூட, என்னால் தாக்கப்பட்டவனைத் தங்கள் பலத்தால் தப்புவிக்க முடியாது. போர்க்களத்தில் பாண்டவர்களுக்கு எதிராக வரக்கூடிய க்ஷத்திரியர்கள் அனைவரையும் நான் எனது பாதத்தைக் கொண்டு எளிதாகத் தரையில் நசுக்கிவிடுவேன்.

ஓ! அச்யுதா {கிருஷ்ணா}, என்ன ஆற்றலுடன் நான் பூமியில் உள்ள மன்னர்களை வீழ்த்தி அடக்கினேன் என்பது நீ அறியாததல்ல. உண்மையில், கடும் சக்தியுடன் இருக்கும் மதிய வேளை சூரியனைப் போன்ற எனது ஆற்றலை நீ அறியவல்லையெனில், ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, போர்க்களத்தில் நடக்கும் கடும் கைக்கலப்பில் அதை அறிந்து கொள்வாய். நாற்றமிகுந்த கட்டியை உடைத்தால் ஏற்படும் வலியைப் போன்ற வலியைக் கொடுக்கும் வகையில் உனது கொடுஞ்சொற்களால் நீ என்னைக் காயப்படுத்துகிறாய்.


ஆனால், நான் சுயமாக என்னைப் பற்றிச் சொல்லிக் கொண்டதைவிட வலியவனாக என்னை அறிவாயாக. அழிவையும், சீர்குலைவையும் தரும் உக்கிரமான போர் தொடங்கும் போது, நான், யானைகளையும், தேர்வீரர்களையும், குதிரைகளில் இருந்து போரிடுவோரையும், யானைகளில் இருப்போரையும் வீழ்த்தி, க்ஷத்திரிய வீரர்களில் முதன்மையானவர்களைக் கொல்வதையும் நீ காண்பாய்.

இவை யாவையும், போராளிகளில் முதன்மையானவர்களை நான் கலங்கடித்து வீழ்த்துவதையும் நீயும் பிறரும் காண்பீர்கள். எனது எலும்புகளின் மச்சை இன்னும் அழியவில்லை, எனது இதயமும் நடுங்கவில்லை. இவ்வுலகமே என்னை நோக்கிக் கோபத்துடன் விரைந்து வந்தாலும், நான் அச்சத்தை உணர மாட்டேன் [2]. ஓ! மதுவைக் கொன்றவனே {மதுசூதனா}, கருணையின் காரணமாகவே, நான் எதிரியிடம் நல்லெண்ணத்ததை வெளிப்படுத்துகிறேன். பாரதக் குலம் அழிவடையாதிருக்கவே, நான் காயங்கள் அனைத்தையும் தாங்கிக் கொள்கிறேன்.


அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் பீமனிடம்} சொன்னான், "கல்வியின் செருக்காலோ, கோபத்தாலோ, ஓர் உரை நிகழ்த்தும் விருப்பத்தாலோ, உம்மை நிந்திக்கும் விருப்பத்தாலோ இல்லாமல், உமது மனதை அறிய விரும்பி ஒரு பற்றின் காரணமாகவே நான் இவை யாவையும் சொன்னேன். உமது ஆன்மாவின் பெருந்தன்மையையும், உமது பலத்தையும், உமது செய்கைகளையும் நான் அறிவேன். அந்தக் காரணத்திற்காக நான் உம்மை நிந்திக்கவில்லை.


ஓ! பாண்டுவின் மகனே {பீமரே}, நீர் எவ்வளவு செய்ய முடியும் என்று எண்ணியிருக்கிறீரோ, அதைவிட ஆயிரம் மடங்கு பெரிதான செயல்களை உம்மால் பாண்டவக் காரணத்திற்காகச் செய்ய முடியும். ஓ! பீமரே, நீரும், உமது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகிய ஒவ்வொருவரும், உலகத்தின் மன்னர்கள் அனைவராலும் மதிக்கப்படும் உமது குடும்பத்தைப் போன்ற குடும்பங்களில் சரியாகவே பிறப்பை எடுத்திருக்கிறீர்கள். எனினும், அறம், மறம், மற்றும் மனிதர்களின் பலம் மற்றும் பலவீனங்களின் விளைவுகளைச் {இது தெய்வாதீனமா, மனித செயலா என்ற} சந்தேகத்ததின் காரணமாக விசாரிப்பவர்களால் உண்மையை அடைய முடிவதில்லை. ஏனெனில், ஒரு மனிதனின் வெற்றிக்கு எது {எந்த அறம்} காரணமாக இருக்கிறதோ, அதுவே அவனது நிர்மூலத்திற்கும் காரணமாக அமைவதை நாம் காண்கிறோம்.


எனவே, மனித செயல்களின் விளைவுகள் சந்தேகத்திற்குரியவையே. தீய செயல்களைத் தீர்மானிக்க இயன்ற கற்றோர், ஒரு குறிப்பிட்ட செயல்முறையைப் பின்பற்றத் தகுந்தது எனச் சொல்கின்றனர். எனினும், அந்த விளைவுகள், தொலைநோக்குடன் காணப்பட்டதற்கு நேர் எதிராகக் காற்றின் வழியைப் போலவே {வேறு விதமாக அல்லது தெய்வாதீனமாக} அமைகிறது. உண்மையில், ஆழ்ந்த சிந்தனை மற்றும் நன்கு வழிநடத்தப்பட்ட கொள்கை {நியாயத்தின் உதவி} ஆகியவற்றின் விளைவுகளால் ஏற்படும் மனிதர்களின் செயல்களும், பொருத்தமுடைமைகளின் கருத்துகளுக்கு இசைவான செயல்களும் கூடத் தெய்வாதீனமானவற்றை வகுக்கையில் குழம்பிப் போகின்றன.


பிறகு, மேலும், மனித செயல்களின் விளைவுகளால் உண்டாகாமல், தெய்வாதீனமாக வகுக்கப்படும், வெப்பம், குளுமை, மழை, பசி, தாகம் ஆகியவை மனித முயற்சியால் கலங்கடிக்கப்படும். பிறகு, மேலும், ஒரு மனிதன் செய்வதற்கு (கடந்த பிறவிகளின் செய்த செயல்களின் விளைவுகளால்} முன்பே விதிக்கப்பட்ட செயல்களைத் தவிர, {மனிதன் தானே செய்த} மற்ற செயல்கள் அனைத்தையும், ஸ்ம்ருதிகள் மற்றும் சுருதிகள் ஆகிய இரண்டின் சான்றுகளின் படி, ஒருவன் தன் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் எப்போதும் கைவிடலாம்.


எனவே, ஓ! பாண்டுவின் மகனே {பீமரே}, இவ்வுலகில் ஒரு மனிதன் செயல்படாமல் இருக்க முடியாது. ஆகவே, ஒருவனுடைய காரியம் விதி மற்றும் முயற்சி ஆகிய இரண்டின் கலவையால் சாதிக்கப்பட வேண்டும் என்பதை அறிந்து வேலையில் ஈடுபட வேண்டும். இந்த நம்பிக்கையுடன் செயல்களில் ஈடுபடும் ஒருவன் தோல்வியுறும்போது துன்புறவோ, வெற்றியடையும்போது மகிழவோ மாட்டான். ஓ! பீமசேனரே, இதுவே எனது பேச்சின் நோக்கமாகும். எதிரியுடன் ஏற்படும் மோதலில் வெற்றி உறுதி என்பதை நான் நோக்கமாகக் கொள்ளவில்லை.

ஒருவன், மனவருத்தத்தில் இருக்கும்போது உற்சாகத்தை இழக்கக்கூடாது. எந்தத் தளர்வுக்கும், மன அழுத்தத்துக்கும் ஆளாகக் கூடாது. இதற்காகவே நான் இப்படிப் பேசினேன். ஓ! பாண்டவரே {பீமரே}, நாளை விடிந்ததும், நான் திருதராஷ்டிரரின் முன்னிலைக்குச் செல்வேன். உங்களது விருப்பங்களைத் {பயன்களைத்} தியாகம் செய்யாமல் அமைதியை ஏற்படுத்த முயல்வேன். கௌரவர்கள் சமாதானத்துக்கு உடன்பட்டால், எல்லையில்லா புகழ் எனதாகும். உங்கள் {பாண்டவர்களின்} நோக்கங்களும் அடையப்படும், அவர்களும் {கௌரவர்கும்} பெரும் நன்மையை அறுவடைசெய்வார்கள்.


இருப்பினும், எனது வார்த்தைகளைக் கேளாமால், அவர்களது கருத்தையே தக்க வைத்துக் கொள்ளக் கௌரவர்கள் தீர்மானித்தால், பிறகு, போர் என்பது சந்தேகத்திற்கிடமின்றித் தவிர்க்க முடியாததாகும். ஓ! பீமசேனரே, இந்தப் போரில் சுமைகள் உம்மீதே குடிகொள்ளும். அந்தச் சுமையை அர்ஜுனனும் தாங்குவான், அதே வேளையில், மற்ற வீரர்கள் அனைவரையும், நீங்கள் இருவரே வழிநடத்த வேண்டும்.

போர் நிகழ்ந்தால், நான் நிச்சயம் பீபத்சுவின் {அர்ஜுனனின்} தேரோட்டியாக இருப்பேன். ஏனெனில், உண்மையில், அது தனஞ்சயனின் {அர்ஜுனனின்} விருப்பமேயன்றி, நான் போரிட விரும்பவில்லை என்பதில்லை. ஓ! விருகோதரரே {பீமரே}, உமது நோக்கத்தை நீர் சொன்னதைக் கேட்டதாலேயே, {சந்தேகத்தின் அடிப்படையிலேயே} நான் உமது சக்தியை மீண்டும் தூண்டிவிட்டேன்" என்றான் {கிருஷ்ணன்}.

அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்} சொன்னான், "ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, என்ன சொல்லப்பட வேண்டும் என்பதை யுதிஷ்டிரர் ஏற்கனவே சொல்லிவிட்டார். ஆனாலும், ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {கிருஷ்ணா}, நீ சொன்னதைக் கேட்டதால், ஓ! தலைவா {கிருஷ்ணா}, திருதராஷ்டிரரின் பேராசை அல்லது எங்களின் தற்போதைய பலவீனம் ஆகியவற்றின் விளைவாகச் சமாதானத்தை அடைவது எளிதல்ல என்று நீ நினைப்பதாகத் தெரிகிறது. மனித முயற்சி மட்டுமே பலனளிக்காது என்றும், ஒருவனது ஆற்றலை வெளிக்காட்டாமல் ஒருவனது காரியங்கள் அடையப்பட மாட்டாது என்றும் நீ நினைக்கிறாய். நீ சொன்னது உண்மையாக இருக்கலாம். ஆனால், அதே நேரத்தில், அஃது எப்போதும் உண்மையாகவே இருக்காது. எனினும், செய்யக்கூடாதது என்று எதுவும் கருதப்படக்கூடாது.


எங்களது துயர்நிறைந்த நிலையின் விளைவால் சமாதானத்தை எட்ட முடியாது என்று உனக்குத் தோன்றுவது உண்மையே. இருப்பினும், அவர்கள் தங்கள் செயல்களுக்கான கனிகளை {பலனை / தண்டனையை} அறுவடை செய்யாமலே இன்னும் நமக்கெதிராகச் செயல்படுகிறார்கள். ஓ! தலைவா {கிருஷ்ணா}, எனவே, முறையாக முன்மொழிப்படும்போது சமாதானம் அடையப்படக்கூடியதே. எனவே, ஓ! கிருஷ்ணா, எதிரியிடம் சமாதானத்தைக் கொண்டு வர முயல்வாயாக. ஓ! வீரா {கிருஷ்ணா}, தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பிரஜாபதி எப்படியோ, அப்படியே பாண்டவர்கள், குருக்கள் ஆகிய இரு தரப்புக்கும் நண்பர்கள் அனைவரிலும் முதன்மையானவனாக நீ இருக்கிறாய். எனவே, குருக்கள், பாண்டவர்கள் ஆகிய இரு தரப்புக்கும் நன்மை எதுவோ, அதைச் சாதிப்பாயாக.


எங்களுக்கான நன்மையைச் சாதிப்பது உனக்குக் கடினமானது அல்ல என்றே நான் நம்புகிறேன். ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, நீ முயன்றால் இக்காரியம் உடனே நடந்துவிடும். நீ அங்கே சென்றதுமே, அது சாதிக்கப்பட்டு விடும். ஓ! வீரா, தீய மனம் கொண்ட துரியோதனனை வேறு வழியில் நடத்த நீ கருதினாயென்றால், அந்த உனது நோக்கம், நீ விரும்பியபடியே நடக்கும். நீ விரும்புவது எதிரியுடனான சமாதானமாகவோ, போராகவோ இருந்தாலும், அவற்றில் நீ ஊக்கப்படுத்தும் எந்த விருப்பமாக இருந்தாலும், ஓ! கிருஷ்ணா, அஃது எங்களால் நிச்சயமாக மதிக்கப்படும்.


யுதிஷ்டிரரின் செழிப்பைத் தாங்கிக் கொள்ள முடியாமல், குற்றமற்ற எந்த வழிகளையும் காணாமல், பாவம் நிறைந்த வழியான ஏமாற்றுகரமான பகடையால் நாட்டை எங்களிடம் இருந்து கவர்ந்தவனும், இழிந்தவனுமான அந்தத் தீய மனம் கொண்ட துரியோதனன், தனது மகன்களோடும் உறவினர்களோடும் சேர்த்துக் கொல்லப்படத்தகுந்தவன் இல்லையா? போருக்கு அழைக்கப்பட்ட க்ஷத்திரிய வகையைச் சேர்ந்த எந்த வில்லாளி, தான் சாகவே போகிறோம் என்றாலும் புறமுதுகிடுவான்?


பாவகர வழிகளினால் வீழ்த்தப்பட்டு, காட்டுக்கு விரட்டப்பட்ட எங்களைக் {எங்கள் நிலையைக்} கண்ட போதே, ஓ! விருஷ்ணி குலத்தவனே {கிருஷ்ணா}, என் கைகளால் இறக்கத் தகுந்தவனே சுயோதனன் {துரியோதனன்} என்று நான் நினைத்தேன். எனினும், ஓ! கிருஷ்ணா, மென்மை அல்லது கடுமை மூலம் நடைமுறையாக்கப்படும் பொருளின் நோக்கம் விவரிக்க முடியாததாகத் தெரிந்தாலும், நீ உனது நண்பர்களுக்குச் செய்ய விரும்புவது அரிதானதாகவும் விநோதமானதாகவும் இருக்கிறது. அல்லது, நீ அவர்களது உடனடி அழிவைத் தேர்ந்தெடுக்கிறாய் என்றால், அஃது அப்படியே ஆகட்டும். மேலும் அது குறித்தே சிந்தித்துக் கொண்டிராமல் செயலில் இறங்குவோமாக.

பாவம் நிறைந்த ஆன்மா கொண்ட துரியோதனனால், சபைக்கு மத்தியில் திரௌபதி எப்படி அவமதிக்கப்பட்டாள் என்பதையும், நாங்கள் அதை எப்படிப் பொறுமையாகத் தாங்கிக் கொண்டோம் என்பதையும் நீ அறிவாய். ஓ! மாதவா {கிருஷ்ணா}, அந்தத் துரியோதனன், பாண்டவர்களிடம் நீதியுடன் நடந்து கொள்வான் என்பது என்னால் நம்ப முடியாததாகும். தரிசு நிலத்தில் தூவப்படும் விதைப் போல அறிவுநிறைந்த ஆலோசனைகள் அனைத்தும் அவனிடம் {துரியோதனனிடம்} தொலைந்து போகும். எனவே, ஓ! விருஷ்ணி குலத்தவனே {கிருஷ்ணா}, எது சரி என்றும் பாண்டவர்களுக்கு எது நன்மை என்றும் அல்லது அடுத்ததாகச் செய்யப்பட வேண்டியது எது என்றும் நீ நினைக்கிறாயோ, அதை விரைந்து செய்வாயாக" என்றான் {அர்ஜுனன்}.

அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்} சொன்னான், "ஓ! வலிய கரங்கள் கொண்டவனே {அர்ஜுனா}, ஓ!பாண்டவர்களே, நீங்கள் சொல்வது போலவே ஆகும். நான் பாண்டவர்கள் மற்றும் குருக்கள் {கௌரவர்கள்} ஆகிய இருவருக்குமான நன்மையை அடையவே முயல்வேன். போர் மற்றும் அமைதி ஆகிய இருவித செயல்களில், ஓ! பீபத்சு {அர்ஜுனா}, பின்னது {அமைதி} ஒருவேளை எனது சக்திக்குட்பட்டதாக இருக்கலாம்.

மனித உழைப்பால் களைகள் அகற்றப்பட்டு நீர் தெளித்து ஈரப்படுத்தப்பட்டிருக்கும் மண்ணைப் பார். எனினும், ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, மழையற்றுப் போனால் பயிர் விளையாது. உண்மையில், மழையில்லாமல் போனால், செயற்கை பாசனத்தை வெற்றியடையும் ஒரு வழிமுறையாகக் கொள்வது குறித்துச் சிலர் பேசுகிறார்கள். ஆனால், அப்படிச் செய்யினும், தெய்வாதீனமாக ஏற்படும் வறட்சியின் விளைவால் செயற்கையாகப் பாய்ச்சப்படும் நீர் காய்ந்து போவதையும் நாம் பார்க்கிறோம்.



இவற்றையெல்லாம் கண்ட பழங்கால ஞானிகள், தெய்வாதீன மற்றும் மனித தகுமுறைகள் இரண்டின் ஒத்துழைப்பினாலேயே மனித விவகாரங்கள் நடக்கும் என்று சொல்லியிருக்கின்றனர். மனித முயற்சியால் செய்யக்கூடிய அனைத்தையும் நான் சிறப்பாகச் செய்வேன். ஆனால், தெய்வாதீனமான எதையும் என்னால் எந்த வழிகளிலும் கட்டுப்படுத்த இயலாது.


தீய ஆன்மா கொண்ட துரியோதனன் அறம் மற்றும் உலகம் ஆகிய இரண்டையும் புறக்கணிக்கும் வகையிலேயே செயல்படுகிறான். இவ்வழியில் செயல்படுவதன் விளைவாக அவன் எந்த வருத்தத்தையும் உணரவில்லை. மேலும், சகுனி, கர்ணன் மற்றும் அவனது தம்பி துச்சாசனன் ஆகிய அவனது ஆலோசகர்களும் அவனது பாவ புத்தியையே வளர்க்கின்றனர். ஓ! பார்த்தா {அர்ஜுனா}, தனது உறவினர்களோடு சேர்த்து நமது கைகளால் மொத்தமாக அழிவடையாமல், சுயோதனன் {துரியோதனன்} நாட்டைக் கொடுத்துச் சமாதானம் பெறவே மாட்டான். நீதிமானான மன்னன் யுதிஷ்டிரரும் {துரியோதனனுக்குப்} பணிந்து நாட்டை விட்டுவிட விரும்பவில்லை.


தீய மனம் கொண்ட துரியோதனன், நமது கோரிக்கையால் நாட்டைக் கொடுக்கமாட்டான். எனவே, யுதிஷ்டிரரின் செய்தியை அவனுக்குச் சொல்வது முறையல்ல என்றே நான் நினைக்கிறேன். குருகுலத்தின் பாவம் நிறைந்த துரியோதனன், ஓ! பாரதா {அர்ஜுனா}, யுதிஷ்டிரர் பேசும் பொருள்களைச் {தனக்கு வேண்டும் என்று கேட்டவற்றைச்} செய்ய மாட்டான். இணங்க மறுத்தாலோ, அவன் {துரியோதனன்} அனைவரின் கைகளாலும் மரணம் அடையத் தகுந்தவனாவான். ஓ! பாரதா {அர்ஜுனா}, குழந்தை பருவத்தில் இருந்தே உங்கள் அனைவரையும் அவன் {துரியோதனன்} துன்புறுத்தியிருக்கிறான் என்பதாலும், யுதிஷ்டிரரின் செழிப்பைக் கண்டு பொறாத தீயவனான அந்தப் பாவம் நிறைந்த இழிந்தவன் {துரியோதனன்}, உங்கள் நாட்டைத் திருடிக் கொண்டதாலும், அனைவரையும் போலவே அவன் {துரியோதனன்} என் கையாலும் கொல்லப்படத்தக்கவனே.

ஓ! பார்த்தா {அர்ஜுனா}, பல நேரங்களில் அவன் {துரியோதனன்} உன்னை என்னிடம் இருந்து பிரிக்க முயன்றிருக்கிறான். ஆனால் அவனது அந்தத் தீய முயற்சிகளை நான் எண்ணிப்பார்த்ததில்லை {கண்டுகொண்டதில்லை}. ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, துரியோதனனின் நோக்கங்கள் என்ன என்பதை நீ அறிவாய். நீதிமானான மன்னன் யுதிஷ்டிரரின் நலத்தை நான் விரும்புகிறேன் என்பதையும் நீ அறிவாய். துரியோதனனின் இதயத்தையும், எனது விருப்பங்களையும் அறிந்திருந்தும், ஓ! அர்ஜுனா, எதையும் அறியாதவனைப் போல, என்னைக் குறித்த இத்தகு அச்ச உணர்வுகளை நீ ஏன் ஊக்கப்படுத்துகிறாய்?


சொர்க்கத்தில் விதிக்கப்பட்ட அந்தப் பயங்கரச் செயலை நீ அறிவாய். ஓ! பார்த்தா {அர்ஜுனா}, பிறகு எப்படி எதிரியுடன் சமாதானம் ஏற்படும்? எனினும், ஓ! பாண்டவர்களே, பேச்சு, செயல் ஆகிய இரண்டினால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அவை அத்தனையும் என்னால் செய்யப்படும். எனினும், ஓ! பார்த்தா {அர்ஜுனா}, எதிரியுடன் சமாதானம் சாத்தியம் என்று எதிர்பாராதே. ஒரு வருடத்திற்கு முன்னால், விராடனின் பசுக்களைத் தாக்கிய சந்தர்ப்பத்தில், {தோல்வியுற்று} அவர்கள் {கௌரவர்கள்} திரும்பிக் கொண்டிருந்த போது, இந்த அமைதியே அனைவருக்கும் நன்மையைத் தரும் என்று துரியோதனனிடம், பீஷ்மர் சொல்லவில்லையா?

அவர்கள் தோற்பார்கள் என்று நீ தீர்மானித்தபோதே அவர்கள் தோற்றுவிட்டார்கள். என்னை நம்பு. உண்மையில், நாட்டில் உள்ளதிலேயே சிறுபகுதியையேனும் மிகக் குறுகிய காலத்திற்குக் கூடப் பிரிய சுயோதனன் {துரியோதனன்} சம்மதிக்கமாட்டான். என்னைப் பொறுத்தவரை, நான் யுதிஷ்டிரரின் கட்டளைகளுக்கு எப்போதும் கீழ்ப்படிந்தவனே. எனவே, அந்தத் தீய இழிந்தவனின் {பொல்லாத பாதகனான துரியோதனனின்} பாவச் செயல்களை, மீண்டும் என் மனதில் சுழலச்செய்யவேண்டும்" என்றான் {கிருஷ்ணன்}.
….
தொடரும்..
..
மகாபாரதம் தொடர் முழுவதும் படிக்க இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைந்திருங்கள்  

No comments:

Post a Comment