Saturday, November 26, 2022

Mahabharatam in tamil part 128

மஹாபாரதம்(முழுவதும்)-பாகம்-128
வனபர்வம்
..
ஜடாசுரன் வதம்
.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார்,
 "அந்த இடத்தில் {குபேரனின் தடாகத்தருகில்} வாழ்ந்து வந்தபோது யுதிஷ்டிரன் ஒருநாள் கிருஷ்ணை {திரௌபதி}, தனது தம்பிகள் மற்றும் அந்தணர்களிடம், "நாம் கவனத்துடன் பல மங்களகரமான புண்ணியத் தீர்த்தங்களையும், காண்பதற்கினிய கானகங்களையும் ஒன்றன்பின் ஒன்றாகக் கண்டோம். அவ்விடங்கள் அனைத்தும் தேவர்களாலும், உயர் ஆன்ம முனிவர்களாலும், பல அந்தணர்களாலும் வழிபடப்படும் இடங்களாகும். நாம் அந்தணர்களுடன் கூடி பல புண்ணிய ஆசிரமங்களிலும் நமது சுத்திகரிப்புச் சடங்குகளைச் செய்துள்ளோம். அந்த அந்தணர்களிடமிருந்து பல முனிவர்கள் மற்றும் பழங்கால அரசமுனிகளின் வாழ்வுகளையும், செயல்களையும், இனிமையான கதைகளையும் கேட்டோம். மலர்களையும் நீரையும் கொண்டு தேவர்களை வணங்கினோம். அந்த அந்த இடங்களில் கிடைக்கும் கனிகளையும், கிழங்குகளையும் காணிக்கைகளாகக் கொடுத்து பித்ருக்களையும் திருப்தி செய்தோம்.
உயர் ஆன்மா கொண்டவர்களுடன் சேர்ந்து புண்ணியமான அழகான மலைகளிலும், தடாகங்களிலும், கடலிலும் நமது சுத்திகரிப்புச் சடங்குகளைச் செய்தோம். அந்தணர்களுடன் கூடி இளை, சரஸ்வதி, சிந்து, யமுனை, நர்மதை மற்றும் பல அழகிய தீர்த்தங்களிலும் நீராடினோம். கங்கையின் தோற்றுவாயைக் கடந்த நாம், பல பறவைகள் வசிக்கும் அழகிய மலைகளையும், இமய மலைகளையும் கடந்து விசாலை என்று அழைக்கப்படும் இலந்தை இருக்கும் இடமான {பதரி} நரன் மற்றும் நாராயணனின் ஆசிரமத்தை அடைந்தோம். (கடைசியாக) சித்தர்கள் பெரிதாக மதிக்கும் இந்தத் தெய்வீகமான தடாகத்தை அடைந்தோம். ஓ! அந்தணர்களில் சிறந்தோரே, கொண்டாடப்படும் புனிதமான இடங்களை உயர் ஆன்ம லோமசருடன் சேர்ந்து நாமனைவரும் உண்மையில் கவனமாகக் கண்டோம். ஓ! பீமா, இனி நாம் சித்தர்கள் வசிக்கும் வைஸ்ரவணனின் {குபேரனின்} வசிப்பிடத்திற்கு எப்படிச் செல்வது? அதை அடைவதற்கான வழிகளைக் குறித்துச் சிந்தி" என்றான் {யுதிஷ்டிரன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார்,
 "அந்த மன்னன் {யுதிஷ்டிரன்} அப்படிச் சொன்ன போது, ஒரு ஆகாயக் குரல், "அடைவதற்கு அரிதான அவ்விடத்தை {குபேரனின் வசிப்பிடத்தை} உங்களால் அடைய முடியாது. குபேரனின் இந்த இடத்தில் இருந்து, நீங்கள் எங்கிருந்து வந்தீர்களோ அந்தப் பதரி என்றழைக்கப்படும் நர நாராயணனின் ஆசிரமத்திற்கு இந்த வழியாகவே செல்லுங்கள். ஓ! கௌந்தேயா {யுதிஷ்டிரா}, பிறகு மலர்களும் கனிகளும் நிறைந்து, சித்தர்களும் சாரணர்களும் வசிக்கும் விருஷபர்வாவின் ஆசிரமத்திற்குச் செல். அதைக் கடந்த பிறகு, ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அர்ஷ்டிஷேனரின் ஆசிரமத்தை அடைவாய். அங்கிருந்து குபேரனின் வசிப்பிடத்தைக் காண்பாய்" என்றது {அசரீரி}.
 அதே நேரத்தில் தெய்வீக மணத்துடன் குளிர்ந்த புதிய காற்று வீசியது; மலர் மாரியும் பொழிந்தது. வானத்தில் இருந்து வந்த தெய்வீகக் குரலைக் கேட்ட அனைவரும் மலைத்தனர். குறிப்பாக முனிவர்களும், அந்தணர்களும் மிகவும் ஆச்சரியப்பட்டனர். இந்த மாபெரும் அற்புதத்தைக் கேட்ட அந்தணரான தௌமியர், "இதற்கு மாறாக நாம் நடக்கக்கூடாது. ஓ! பாரதா {யுதிஷ்டிரா},
அதன்படியே {அக்குரல் சொல்லியபடியே} செய்வோம்" என்றார். மன்னன் யுதிஷ்டிரனும் அவருக்குக் கீழ்ப்படிந்தான். பிறகு, நர நாராயணரின் ஆசிரமத்திற்குத் திரும்பி, பீமசேனன், மற்றத் தம்பிகள், பாஞ்சாலி {திரௌபதி} மற்றும் அந்தணர்கள் சூழ அவன் {யுதிஷ்டிரன்} மகிழ்ச்சியாக வசிக்க ஆரம்பித்தான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார்,
"இப்படி அச்சிறந்த மலையில் அந்தணர்களுடன் வசித்து வந்த பாண்டவர்கள் அர்ஜுனன் திரும்புவதை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அவர்களுக்கு நம்பிக்கை வளர்ந்து பிற ராட்சசர்களும், பீமனின் மகனும் {கடோத்கசனும்} சென்ற பிறகு, ஒரு நாள் பீமன் வெளியே சென்றிருந்தான்.
அப்போது, தீடீரென ஒரு ராட்சசன், நீதிமானான யுதிஷ்டிரனையம், இரட்டையர்களையும் {நகுலன், சகாதேவன் இருவரையும்}, கிருஷ்ணையையும் {திரௌபதியையும்} கடத்திச் சென்றான். (அந்தண வேடத்தில் இருந்த) அந்த ராட்சசன் பாண்டவர்களுடனேயே நெடுங்காலமாகத் தங்கியிருந்தவனாவான். அப்படி இருந்த போது அவன் தன்னைச் சாத்திரங்களை அறிந்த ஆலோசனை கூறத்தக்க உயர்ந்த வகை அந்தணனனாகக் காட்டிக் கொண்டான். பாண்டவர்கள் உபயோகித்த வில் மற்றும் அம்பறாத்தூணிகளையும், இன்னும் பிற பொருட்களையும் கவர்ந்து செல்லவும், திரௌபதியை அபகரிக்கவுமே அவன் நீண்ட நாட்களாகக் கண்காணித்து வந்தான். அந்தத் தீய பாவியின் பெயர் ஜடாசுரன் ஆகும்.
ஓ மன்னர் மன்னா {ஜனமேஜயா}, அவனை ஆதரித்த பாண்டுவின் மகனுக்கு {யுதிஷ்டிரனுக்கு}, அந்தப் பாவி சாம்பலால் மூடப்பட்ட நெருப்பைப் போன்றவன் என்பது தெரியாது.
ஒரு நாள் எதிரிகளை ஒடுக்குபவனான பீமசேனன் வேட்டையாடுவதற்கு வெளியே சென்றான். கடோத்கசனும், அவனது அடிபொடிகளும் பலதரப்பட்ட திசைகளுக்குச் சிதறிப் போனதையும், லோமசர் மற்றும் நோன்பு நோற்கும் பிற பெரும் முனிவர்கள் நீராடுவதற்கும், மலர்கள் சேகரிப்பதற்கும் சென்றிருப்பதையும் கண்ட அவன் {அந்த ராட்சசன் ஜடாசுரன்}, பயங்கரமான பெரும் உருவம் எடுத்து (பாண்டவர்களின்) ஆயதங்களையெல்லாம் எடுத்துக் கொண்டு, திரௌபதியையும், மூன்று பாண்டவர்களையும் கடத்திக்கொண்டு சென்றான். அதன் பிறகு, பாண்டுவின் மகனான சகாதேவன், தனது முயற்சியால் அவனிடமிருந்து {அந்த ஜடாசுரன் என்ற ராட்சசனிடம் இருந்து} விடுபட்டு, கௌசிக என்ற வாளை எதிரியிடம் இருந்து பறித்து, பீமனை அழைத்துக் கொண்டே, அந்தப் பெரும் பலம் வாய்ந்தவன் சென்ற திக்கில் சென்றான்.
இப்படிக் கடத்திச் செல்லப்பட்ட போது, நீதிமானான யுதிஷ்டிரன் அவனிடம் (அந்த ராட்சசனிடம்),
"ஓ! மூடா, (இத்தகு செயலால்) உனது தகுதி குறைந்தது. இயற்கையால் விதிக்கப்பட்ட விதியை நீ மதிக்க மாட்டாயா? மானுட இனத்தைச் சேர்ந்தவரோ அல்லது தாழ்ந்த வகையைச் சேர்ந்தவரோ, எவராயினும் அறத்தை மதித்து நடக்க வேண்டும். அதிலும் குறிப்பாக ராட்சசர்கள் அப்படி மதித்து நடக்க வேண்டும். முதலில் அவர்களே மற்றவர்களைவிட அறத்தை நன்கறிந்தவர்கள். இதையெல்லாம் கருதிப் பார்த்து நீ அறத்தைக் கைக்கொள்ள வேண்டும்.
 ஓ! ராட்சசா, தேவர்கள், பித்ருக்கள், சித்தர்கள், முனிவர்கள், கந்தர்வர்கள், விலங்குகள், ஏன் புழுக்களும் எறும்புகளும் கூட மனிதர்களை நம்பியே தங்கள் வாழ்வை நடத்துகின்றனர். நீயும் அப்படியே வாழ்கிறாய். மானுட இனத்தில் செல்வம் கொழிக்கிறது என்றால், உனது இனமும் செழிப்படையும். அவர்களுக்குப் பேரிடர் சம்பவித்தால் தேவர்களும் துன்புறுவர். காணிக்கைகளால் திருப்தி செய்யப்படுவதால்தான் தேவர்களும் வாழ்கின்றனர்.
ஓ! ராட்சசா {ஜடாசுரா}, நாங்களே {மனிதர்களே} நாடுகளின் பாதுகாவலர்களாகவும், ஆட்சியாளர்களும், குருக்களாகவும் இருக்கிறோம். நாடுகள் பாதுகாப்பற்று இருந்தால் வளமையும் மகிழ்ச்சியும் எப்படி வரும்? குற்றமேதும் நடக்காத வரை ஒரு ராட்சசன் ஒரு மன்னனை மீறி நடக்கக்கூடாது.
ஓ! மனிதர்களை உண்பவனே {ஜடாசுரனே},
சிறு தீங்கைக் கூட நாங்கள் செய்யவில்லையே. விகாசையில் வாழும் நாங்கள் தேவர்களையும் பிறரையும் எங்கள் சக்திக்குத் தக்கவாறு சேவித்தே வருகிறோம். நாங்கள் எங்களுக்கு மூத்தவர்களையும், அந்தணர்களையும் வணங்காமல் இருந்ததில்லை. ஒரு நண்பன், நம்பியிருப்பவன், உணவு கொடுத்தவன், தங்க இருப்பிடம் அளித்தவன் ஆகியோருக்கு ஒரு போதும் தீங்கிழைக்கக் கூடாது. நீ எங்களுடன் இருந்ததில் மகிழ்ச்சியாகவும் மரியாதையுடனும் வசித்திருக்கிறாய். ஓ! தீய மனம் கொண்டவனே, நாங்கள் கொடுத்த உணவையும் உண்ட நீ, எங்களைக் கடத்திக் கொண்டு செல்கிறாயா? உனது செயல்கள் சரியற்றவையாக இருக்கிறது. எந்தப் பலனும் இல்லாமல் நீ வயதால் வளர்ந்திருக்கிறாய். விலங்குக்கொப்பான உனது இயல்புகள் தீமையானவையாக இருக்கின்றன. ஒன்றுமில்லாததற்குச் சாகத் துணிந்தாய். ஆகையால் இன்று நீ ஒன்றுமில்லாமலேயே இறப்பாய். நீ உண்மையில் அறமற்று இருந்தாலும், தீமையற்றவனாக இருந்தால், எங்கள் ஆயுதங்களைக் கொடுத்துவிட்டு, போரிட்ட பின் திரௌபதியை அபகரித்துச் செல். ஆனால் மூடத்தனத்தால் நீ இச்செயலைச் செய்தால் நீ அவப்பெயரையும், சிறுமையையுமே பெறுவாய். மானுட இனத்தைச் சேர்ந்த இப்பெண்ணுக்கு {திரௌபதிக்கு} நீ ஏதும் தீங்கு செய்தால், நன்கு குலுக்கப்பட்ட பாத்திரத்தில் இருந்த விஷத்தைக் குடித்தவனாவாய்" என்று சொன்னான் {யுதிஷ்டிரன்}.
பிறகு, யுதிஷ்டிரன் தன்னைக் கனம் நிறைந்தவனாக ஆக்கிக் கொண்டான். அவனது எடையால் ஒடுக்கப்பட்ட அவன் முன்பு போல வேகமாகச் செல்ல முடியவில்லை. பிறகு திரௌபதி, நகுலன், சகாதேவன் ஆகியோரிடம் யுதிஷ்டிரன், "இந்த இழிந்த ராட்சசனைக் குறித்து அச்சத்தை வளர்த்துக் கொள்ளாதீர்கள். நான் அவனது வேகத்தைத் தடுத்திருக்கிறேன். பலம்வாய்ந்த கரம் கொண்ட வாயுத்தேவனின் மகன் {பீமன்}, வெகு தொலைவில் இருக்க மாட்டான். பீமன் இங்கு வந்த அடுத்த நொடி இந்த ராட்சசன் வாழ மாட்டான்" என்றான்.
ஓ! மன்னா {ஜனமேஜயா}, உணர்விழந்த ராட்சசனை முறைத்துப் பார்த்த சகாதேவன் குந்தியின் மகனான யுதிஷ்டிரனிடம், "ஒரு க்ஷத்திரியனுக்குப் போரைவிடவோ அல்லது எதிரியை வீழ்த்துவதை விடவோ எது தகுதி வாய்ந்ததாக இருக்கும்?
ஓ! எதிரிகளை ஒடுக்குபவரே, நாம் போரிடலாம். ஓ! பலம் வாய்ந்த கரம் கொண்டவரே {யுதிஷ்டிரரே}, ஒன்று இவன் நம்மைக் கொல்வான் அல்லது நாம் இவனைக் கொல்வோம்.
ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, இதுவே தகுந்த நேரமும் இடமும் ஆகும். ஓ! பொய்க்காத பராக்கிரமம் கொண்டவரே {யுதிஷ்டிரரே}, நமது க்ஷத்திரிய அறத்தைக் காட்ட நேரம் வாய்த்தது. நாம் வென்றோ அல்லது கொல்லப்பட்டோ சொர்க்கத்தை அடைவதே நமக்குத் தகும். இந்த ராட்சசன் வாழ்ந்தவாறே இன்று சூரியன் மறைந்தனானால், நான் இனிமேல் என்னை க்ஷத்திரியன் என்று சொல்லிக் கொள்ள மாட்டேன். ஹோ! ஹோ! ராட்சசனே, நான் பாண்டுவின் மகனான சகாதேவன். ஒன்று என்னைக் கொன்று இந்த மங்கையைக் கடத்தி செல் அல்லது என்னால் கொல்லப்பட்டு உணர்விழந்து விழு" என்றான் {சகாதேவன்}.
மாத்ரியின் மகனான சகாதேவன் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போதே, வஜ்ரம் தாங்கியிருக்கும் வாசவனைப் போலக் கைகளில் கதாயுதத்துடன் பீமசேனன் அங்கே தோன்றினான்.
அவன் {பீமன்} தனது இரு சகோதரர்களையும், நல்ல மனம் கொண்ட திரௌபதியையும் (அந்தப் பேயின் தோள்களில்), தரையில் நின்று கொண்டு விதியால் மதியிழந்த ராட்சசனை கண்டித்துக் கொண்டிருந்த.சகாதேவனையும் கண்டான். தனது சகோதரர்களும், திரௌபதியும் கடத்தப்படுவதை அறிந்த பெரும் பலம் வாய்ந்த பீமன் கோபத்தால் எரிந்து அந்த ராட்சசனிடம், "முன்பு நீ எங்கள் ஆயுதங்களை நுண்ணாய்வு செய்த போதே நீ தீயவன் என்பது எனக்குத் தெரியும்; ஆனால் உன்னைக் குறித்து நான் அச்சப்படவில்லை. அதனால் உன்னை அப்போது கொல்லாமல் விட்டேன். நீ அப்போது அந்தண உருவில் இருந்தாய். எங்களிடம் எந்தக் கடும் வார்த்தைகளையும் பேசவில்லை. எங்களைத் திருப்தி செய்வதிலேயே மகிழ்ச்சி கொண்டிருந்தாய். மேலும் நீ எங்களுக்கு எந்தத் தீங்கும் செய்யவில்லை. அதற்கு மேலும் நீ எங்கள் விருந்தினராக வேறு இருந்தாய். ஆகையால் குற்றமிழைக்காத அப்பாவியான உன்னை; அதுவும் அந்தண உருவில் இருந்த உன்னை நான் எப்படிக் கொல்ல முடியும்? அப்படியிருப்பவன் ஒருவன் ராட்சசனாகவே இருந்தாலும், அவனைக் கொல்பவன் நரகத்திற்குச் செல்வான். மேலும் நேரம் வருவதற்கு முன்னால் உன்னைக் கொல்ல முடியாதல்லவா. இன்று உனது முழு நேரமும் முடிந்தது. அதனால்தான் விதி உன்னைக் கிருஷ்ணையை {திரௌபதியை} அபகரிக்கச் செய்தது. இக்காரியத்தைச் செய்ததால் நீ விதியெனும் தூண்டில் முள்ளில் சிக்கிக் கொண்டாய். முள்ளால் தைக்கப்பட்ட வாயுடன் நீரில் இருக்கும் மீனைப் போல இருக்கும் நீ எப்படி இன்று உயிருடன் இருக்க முடியும்? நீ ஏற்கனவே மனதால் {நீ விரும்பிய இடத்திற்கு} சென்றிருந்தாலும் உன்னால் இன்று நீ விரும்பிய இடத்திற்குச் செல்ல முடியாது. ஆனால் பகனும், ஹிடிம்பனும் சென்ற இடத்திற்கு நீ செல்ல வேண்டியதிருக்கும்" என்றான் {பீமன்}.
பீமனால் இப்படிச்சொல்லப்பட்ட அந்த ராட்சசன் அச்சத்தால் அவர்கள் அனைவரையும் கீழே இறக்கினான். இருப்பினும் விதியால் இழுக்கப்பட்ட அவன் போர் செய்ய அணுகினான். கோபத்தால் உதடுகள் துடிக்க அவன் {ஜடாசுரன்} பீமனிடம், "இழிந்தவனே, நான் தடுமாறவில்லை. நான் உனக்காகவே தாமதம் செய்தேன். நான் கேட்டிருப்பது போல உன்னால் ஏற்கனவே போரில் கொல்லப்பட்ட ராட்சசர்களுக்கு உனது இரத்தத்தைக் காணிக்கையாக்குவேன்" என்றான். இப்படிச் சொல்லப்பட்ட பீமன் மிகச்சினம் கொண்டு பிரளய கால யமன் போல வாயோரங்களைத் தனது நாவால் நக்கிக் கொண்டிருந்த அந்த ராட்சசனை அணுகி, தனது கரங்களைத் தட்டினான். பீமன் போருக்கு எதிர்பார்த்து காத்திருப்பதைப் பார்த்த ராட்சசன் {ஜடாசுரன்} கோபத்துடன் வாலி இந்திரனை நோக்கி விரைந்தது போல விரைந்து சென்றான்.
அந்த இருவருக்குள்ளும் கடும் மற்போர் ஏற்பட்ட போது, மாத்ரியின் மகன் இருவரும் எல்லைமீறிய கோபத்துடன் முன்னேறினர். ஆனால் குந்தியின் மகனான விருகோதரன் {பீமன்} அவர்களைப் புன்னகையுடன் தடுத்து, "இந்த ராட்சசனுக்கு நானே போதும். நின்று பார். எனது சகோதரர்கள், எனது நற்செயல்கள், எனது வேள்விகள், எனது சக்திகள் மீது ஆணையாகச் சொல்கிறேன். நான் இந்த ராட்சசனைக் கொல்வேன்" என்றான். அவன் {பீமன்} அப்படிச் சொன்ன பிறகு, அந்த இரு வீரர்களான ராட்சசனும் {ஜடாசுரனும்} விருகோதரனும் {பீமனும்} ஒருவருக்கொருவர் சவால் விட்டபடி ஒருவர் கரத்தை மற்றவர் பிடித்தனர். அவர்கள் இருவரும் விட்டுக் கொடுக்காமல் சண்டையிட்டது தேவனுக்கும் அரசுரனுக்கும் இடையில் நடந்த போரைப் போல அது இருந்தது. தொடர்ச்சியாக மரங்களை வேரோடு பிடுங்கி அந்தப் பலம் பொருந்திய இருவரும் போரிட்டுக் கொண்டனர். ஒருவரை ஒருவர் பழிவாங்கும் உணர்ச்சியுடன் கொல்ல நினைத்த அவர்கள் தங்கள் தொடைகளால் பெரும் மரங்களை ஒடித்துப் போட்டனர். செடிகளுக்கு அழிவைத் தருவதான மரங்களைக் கொண்டு அவர்கள் செய்த போர் ஒரு பெண்ணுக்காக இரு சகோதரர்களான வாலிக்கும் சுக்ரீவனுக்கும் இடையில் நடந்த போரைப் போல இருந்தது. ஒரு நொடியில் மரங்களைக் காற்றில் வீசிய அவர்கள், அதைக் {மரங்களைக்} கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு பெரும் கர்ஜனை செய்தனர்.
அந்தப் பகுதியில் இருந்த மரங்களை அனைத்தும் பிடுங்கப்பட்டு நார்நாராய் ஆன பிறகு ஒருவரை ஒருவர் கொல்ல நினைத்த பலம்பொருந்திய அவர்கள் இருவரும்,
ஓ! பாரதா {ஜனமேஜயா}, மலையைப் போன்றும், பெரும் மேகக்கூட்டம் போன்று இருந்த பெரிய பாறைகளை எடுத்துக் கொண்டு போரிட்டனர். அதனால் பாதிக்கப்படாத இருவரும், பிறகு இடியைப் போன்ற செங்குத்தான பாறைகளை எடுத்துக் கொண்டு போரிட்டனர். பலம் நிறைந்த அவர்கள் அறைகூவியபடி துள்ளிக் குதித்துக் கொண்டு ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக் கொண்டு இரு பெரும் யானைகளைப் போல மற்போர் புரிந்தனர். பிறகு கடும் அடிகளைக் கொண்டு சண்டையிட்டனர். அந்த இரு பெரும் பலம் வாய்ந்தவர்களும் பற்களை நறநறவெனக் கடித்து ஒலியை எழுப்பினர்.
ஐந்து தலை பாம்பைப் போல இருந்த தனது கரத்தால் பீமன் அந்த ராட்சசனின் {ஜடாசுரனின்} கழுத்தில் ஒரு கடுமையை அடியை அடித்தான். பீமன் அடித்த முதல் அடியில் அந்த ராட்சசன் மயங்கினான். மயங்கிய அவனைப் பீமேசனேன் பிடித்துக் கொண்டான். பிறகு தேவனைப் போன்ற அந்தப் பெரும்பலம் வாய்ந்த கரம் கொண்ட பீமன் தனது இரு கரங்களால் அவனைத் தூக்கி நல்ல விசையுடன் தரையில் தூக்கி எறிந்து அவனது உறுப்புகள் அனைத்தையும் நொறுக்கினான். பிறகு தனது முட்டியால் அடித்து, கண்கள் உருண்டபடி, உதடுகள் கடித்தபடி இருந்த அந்த ராட்சசனின் தலையை மரத்தில் இருந்து கனியைப் பிடுங்குவது போல அவனது உடலில் இருந்து பிய்த்தெறிந்தான். பீமசேனன் தனது பலத்தால் ஜடாசுரனின் தலையைப் பிய்த்த போது, அவனது உடல் முழுவதும் ரத்தத்தால் பூசப்பட்டபடி இருந்தது. ஜடாசுரனைக் கொன்ற பீமன் யுதிஷ்டிரனின் முன்னிலைக்குக் வந்தான். அந்தணர்களில் முதன்மையானவர்கள் (பீமனை) வாசவனைப் புகழும் மருதர்களைப் போலப் புகழ ஆரம்பித்தனர்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார்,
"அந்த ராட்சசன் {ஜடாசுரன்} கொல்லப்பட்ட போது, குந்தியின் அரச மகனான அந்தத் தலைவன் {யுதிஷ்டிரன்}, நாராயணனின் ஆசிரமத்திற்குத் திரும்பி அங்கே வசிக்க ஆரம்பித்தான். பிறகு ஒரு நாள்,, தனது தம்பியான ஜெயனை (அர்ஜுனனை) நினைவுகூர்ந்த யுதிஷ்டிரன் தனது மற்றத் தம்பிகளையும் திரௌபதியையும் அழைத்து, "நாம் இந்த நான்கு வருடத்தையும் கானகங்களில் உலவி அமைதியாகக் கழித்தோம். பூத்துக்குலுங்கும் செடிகளும், குயில்களும், கருவண்டுகளும், சாதகங்களும், புலிகளும், பன்றிகளும், எருமைகளும் கவயங்களும், மான்களும், கடும் விலங்குகளும், புனிதமான அழகான நூறு {100} இதழ் மற்றும் ஆயிரம் {1000} இதழ் தாமரைகளும், குவளை மலர்களும், நீலக் குவளைகளும் நிறைந்து தேவர்களாலும் அசுரர்களாலும் அடையப்படும் மலைகளின் ஏகாதிபதியான ஸ்வேத மலைக்கு ஐந்தாம் ஆண்டு வருவதாக அர்ஜுனன் வாக்களித்திருக்கிறான்.
அவனை {அர்ஜுனனைக்} காண விரும்பிய நாமும் அவனை {அர்ஜுனனைச்} சந்திப்பதற்காக அங்கே செல்வதாக இருந்தோம். ஒப்பற்ற பராக்கிரமம் கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்} என்னிடம், "நான் இராணுவ அறிவியல் பயில்வதற்காக அயல்வெளியில் இருப்பேன் ஐந்து வருடங்கள்" என்று என்னிடம் குறித்துச் சொல்லியனுப்பியிருக்கிறான். தேவலோகத்தைப் போல இருக்கும் அந்த இடத்தில் ஆயுதங்களைப் பெற்றுத் திரும்பும் காண்டீவத்தைத் தாங்கியிருப்பவனைக் காண்போம்" என்றான் {யுதிஷ்டிரன்}. இதைச் சொன்ன அந்தப் பாண்டவன் {யுதிஷ்டிரன்} அந்தணர்களையும், பிருதையின் {குந்தியின்} மகன்களையும் துறவிகளை வலம் வரச் செய்து, அத்துறவிகளிடம் மேற்சொன்ன காரியங்களைத் தெரிவித்தான். அதற்கு அந்த அந்தணர்கள், "இக்காரியம் உங்களுக்குச் செழிப்பையும் நன்மையையும் தரும். ஓ! பாரதர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, இந்தத் தொல்லைகள் அனைத்தும் மகிழ்ச்சியாக மாறும். ஓ! பக்திமானே, க்ஷத்திரிய அறத்தால் பூமியை அடைந்து அவற்றை நீ ஆள்வாய்" என்று சொல்லி தங்கள் சம்மதத்தைத் தெரிவித்தனர்.
பிறகு அத்துறவிகளின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்த, அந்த எதிரிகளை ஒடுக்குபவனான யுதிஷ்டிரன், தனது தம்பிகளுடனும், அந்தணர்களுடனும் ராட்சசர்கள் பின்தொடர லோமசரின் பாதுகாப்போடு கிளம்பினான். அந்தப் பெரும் சக்தியுடையவனும் நோன்புகள் நோற்பவனுமான யுதிஷ்டிரன் தனது தம்பிகளுடன் வெறுங்காலில் நடந்து சென்றான். மற்றவர்கள் ராட்சசர்களால் சுமந்து செல்லப்பட்டனர். பிறகு மன்னன் யுதிஷ்டிரன் பல இன்னல்களுக்கிடையில், சிங்கங்களும், புலிகளும், யானைகளும் நிறைந்த வடக்கு திசையை நோக்கிச் சென்றான். அப்படி அவர்கள் செல்லும் வழியில் மைநாக மலையையும், கந்தமாதனத்தின் அடிப்பாகத்தையும், பாறை பரப்பான ஸ்வேத மலையையும், மலையின் உச்சியில் தெளிந்த நீருடைய சிற்றோடைகளையும் கண்டான். பதினேழாவது நாளில் அவன் இமயத்தின் புனிதச் சரிவுகளை அடைந்தான். ஓ! மன்னா {ஜனமேஜெயனே}, காந்தமாதனத்திலிருந்து வெகு தொலைவில் அல்லாமல் சற்று அருகே, ஒரு அருவிக்கருகில் பூத்துக் குலுங்கும் மரங்களுடன் இருந்த விருஷபர்வாவின் ஆசிரமத்தை பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, பல மரங்களும் கொடிகளும் அடர்ந்த இமயத்தின் புனிதச் சரிவுகளில் கண்டான்.
அந்த எதிரிகளை ஒடுக்குபவர்களான பாண்டுவின் மகன்கள், களைப்பில் இருந்து மீண்டு அரசமுனியான பக்திமான் விருஷபர்வாவிடம் சென்று அவருக்கு வாழ்த்து கூறினர். அந்த அரச முனியும் {விருஷபர்வாவும்} பாரதர்களில் முதன்மையான அவர்களைத் {பாண்டவர்களைத்} தனது சொந்த மகன்களைப் போலப் பாசத்துடன் வரவேற்றார். அந்த எதிரிகளை ஒடுக்குபவர்கள் அங்கே உரிய மரியாதையுடன் ஏழு இரவுகளைக் கடத்தினர். எட்டாவது நாளில் அனைத்து உலகங்களாலும் கொண்டாடப்படும் அந்த முனியிடம் {விருஷபர்வாவிடம்} விடைபெற்றுக் கொண்டு தங்கள் பயணத்தைத் தொடங்க தயாராகினர். தங்களிடம் மீந்திருந்த ஆடைகளை உயர் ஆன்ம விருஷபர்வாவிடம் ஒப்படைத்த பாண்டுவின் மகன்கள்,
 ஓ! மன்னா {ஜனமேஜயா}, தங்கள் ஆபரணங்களையும், நகைகளையும் ஒன்றாக விருஷபர்வாவின் ஆசிரமத்தில் விட்டுவிட்டுச் சென்றனர். ஞானியும், பக்திமானும், அனைத்துக் கடமைகளையும் அறிந்தவனும், கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் அறிந்தவனுமான அவன் {விருஷபர்வா}, தனது மகன்களுக்குச் சொல்வது போல அந்தப் பாரதர்களில் சிறந்தவர்களுக்கு {பாண்டவர்களுக்கு} அறிவுரை கூறினார். பிறகு அவனிடம் {விருஷபர்வாவிடம்} விடைபெற்றுக் கொண்ட அந்த உயர் ஆன்மா கொண்டவர்கள் வடக்கு நோக்கி சென்றனர். அப்படி அவர்கள் சென்ற போது பெருந்தன்மை கொண்ட விருஷபர்வா சிறிது தூரம் அவர்களைத் தொடர்ந்து சென்றார். பிறகு பாண்டவர்களை அந்தணர்களிடம் ஒப்படைத்துவிட்டு, அவர்களுக்கு அறிவுரை கூறி, அருள் கூறி, அவர்கள் செல்ல வேண்டிய வழி குறித்துச் சொல்லிய பெரும் சக்தி படைத்த விருஷபர்வா தான் வந்த வழியே சென்றான்.
பிறகு பொய்க்காத பராக்கிரமம் கொண்ட குந்தியின் மகனான யுதிஷ்டிரன் தனது தம்பிகளுடன் சேர்ந்து அனைத்து வகை விலங்குகளும் இருந்த மலைப்பாதையில் கால்நடையாக நடந்து சென்றான். அடர்த்தியான மரங்கள் நிறைந்த மலைச்சரிவுகளில் வாழ்ந்த பாண்டுவின் மகன் நான்காவது நாளில், ஓடைகளும், தங்கமும் ரத்தினங்களும் நிறைந்த பெரும் மேகக் குவியல் போல இருந்த ஸ்வேத மலையை அடைந்தான். பிறகு விருஷபர்வா சொன்ன வழியில் சென்று தாங்கள் பார்க்க எண்ணிய பலவித மலைகளையும் இடங்களையும் கண்டான். மீண்டும் மீண்டும் பல கடக்க முடியாத பாறைகளையும், அடைவதற்கு அரிதான மலைக்குகைகளையும் அவர்கள் தாண்டி சென்றனர். தௌமியர், கிருஷ்ணை {திரௌபதி}, பார்த்தர்கள் {பாண்டவர்கள்}, பெருந்துறவியான லோமசர் ஆகியோர் ஒன்றாக {சுமக்கப்பட்டு} சென்றனர். அவர்கள் களைப்படையவில்லை. பறவைகள் மற்றும் விலங்குகளின் ஓசைகளும், பலதரப்பட்ட மரங்களும் கொடிகளும், தாமரைத்தடாகங்களும், சதுப்பு நிலங்களும் நிறைந்து குரங்குகள் வசிக்கும் இடமாக அந்தப் பரந்து விரிந்த கானகம் இருந்தது. கிம்புருஷர்களின் வசிப்பிடமும், சித்தர்கள், சாரணர்கள், வித்யாதரர்கள், கின்னரர்கள் அடிக்கடி அடைவதும், யானைக்கூட்டங்களும், சிங்கங்கள், புலிகள், சரபங்களின் கர்ஜனைகள் நிறைந்ததும், பல விலங்களின் வசிப்பிடமுமான கந்தமாதன மலையை மயிர்ச்சிலிர்ப்புடன் அங்கிருந்து கண்டனர்.
போர்க்குணமுள்ள பாண்டுவின் மகன்கள் படிப்படியாக மகிழ்ச்சி நிறைந்த மனம் மற்றும் இதயத்துடன் நந்தன தோட்டத்தைப் போல அழகான தோப்புகளுடன் இருந்த வசிக்கத்தகுந்த கந்தமாதனை காட்டுக்குள் நுழைந்தனர். திரௌபதியுடனும், உயர் ஆன்ம அந்தணர்களுடனும் இப்படி நுழைந்த அந்த வீரர்கள் மந்தமாகத் தெளிவில்லாமல் மங்களகரமாக இருக்கும் காதுக்கினிமையான பறவைகளின் இனிய ஓசைகளைக் கேட்டனர். அனைத்துக் காலங்களிலும் பிரகாசமாகப் பூக்கும் மலர்களையும், காய்க்கும் கனிகளையும் கொண்ட மரங்கள் பாரம் தாங்க முடியாதவாறு நின்றன. மா, காட்டு இலந்தை, பவ்யம், மாதுளை, எலுமிச்சை நாரத்தைப் போன்றவை, பலா, கொய்யா, வாழை, நீர்ச்செடிகள், பரா, சண்பகம், மனமகிழச் செய்யும் கடம்பு, வில்வம், விளா, நாவல், காஸ்மரி, இலந்தை, அத்தி, இறலி, ஆல், அரசு, க்ஷிரிகம், சேமரம், நெல்லி, கடுமரம், தான்றி, புன்கு, கரமர்த்தம், மேலும் நிறையக் கனிகளைக் காய்க்கும் திந்துகம் ஆகிய பலவிதமான மரங்கள் அமிர்தம் போன்ற சுவையுள்ள கனிகளால் கந்தமாதன மலைச்சரிவிலுள்ள மரங்கள் நிறைந்திருந்தது.
அது தவிரச் சண்பகம், அசோகம், தாழை {கேதகம்}, மகிழ் {வாகுலம்}, புன்னை {புன்னகம்}, எழிலைம்பாலை {சப்தபர்னம்}, தாழையோடு கூடிய கோங்கு {கர்னிகரம்}, பாதிரி {பாதல் Patal}, அழகிய வெட்பாலை {குதஜம்}, மந்தாரம், தாமரை, பாரிஜாதம், மலையகத்தி {கோவிதரம்}, தேவதாரு, ஆச்சா {சாலம்}, பனை, பச்சிலை, திப்பிலி, பெருங்காயம், இலவு, பலாசு, அசோகம், சிம்சுபை, ஸர்ஜகம் ஆகிய மரங்கள் நான்கு பக்கங்களிலும் மனத்தைக் கவரும் வகையில் நிறைந்திருந்தது. அல்லிகள், புண்டரீகங்கள், கோகநாதங்கள், கருநெய்தல்கள், செங்கழுநீர்கள், தாமரைகள் ஆகியவை நான்கு பக்கத்திலும் நிரம்பியிருந்தன. கமலஹம்சங்கள், சக்கிரவாகங்கள், அன்றில்கள், நீர்க்கோழிகள், காரண்டவங்கள், வாத்துக்கள், அன்னங்கள், கொக்குகள், நாரைகள் ஆகிய நீர்வாழ் பறவைகள் அங்கிருந்த தடாகங்களில் நிறைந்திருந்தன. அந்த மனிதர்களில் முதன்மையானவர்கள் அங்கே அந்தத் தாமரைத் தடாகங்கள் அழகான தாமரைக்கூட்டங்கள் நிரம்பியும், அதில் தேனைப் பருகி போதையின் மயக்கத்தில் மகிழ்ச்சியாகத் திரிந்த வண்டுகளின் இனிமையான ரீங்காரத்துடனும், தாமரைகளின் மத்தியில் இருந்து விழும் மகரந்தங்களால் சிவந்தும் காணப்பட்டன.
அங்கே இருந்த புதர்களில் பெண்மயில்களோடு இருந்த ஆண்மயில்கள் ஆசையால் பித்துக் கொண்டு மேக தூரியம் போன்ற ஒலியெழுப்பின. அப்படி ஆசையால் மயங்கி இருந்த மயில்கள் மகிழ்ச்சியால் ஆடிக்கொண்டும், தங்கள் தோகையை விரித்துக் கொண்டும் இனிமையான ஒலிகளை எழுப்பின. சில மயில்கள் தங்கள் துணையுடன் சேர்ந்து கொடிகள் அடர்ந்த வெட்பாலை மரங்களில் {குதஜா மரங்கள்} விளையாடிக் கொண்டிருந்தன. சில மயில்கள் வெட்பாலை மரங்களின் கிளைகளில் அமர்ந்து தங்கள் அழகான தோகைகளை விரித்து வீற்றிருந்தது அம்மரங்கள் அணிந்த கிரீடம் போல இருந்தது. காட்டின் ஊடே திறந்தவெளிகளில் காமனின் கணைகளைப் போல இருக்கும் அருள்நிறைந்த சிந்துவாரங்களைக் கண்டார்கள். மலைச்சிகரங்களில் உள்ள கோங்கு மரங்களில் {Karnikara கர்ணிகர மரம்} பொன்னிறமான மலர்கள் பூத்துக் குலுங்குவது சிறந்த காதணிகளைப் போல இருப்பதைக் கண்டார்கள். அக்கானகத்தில் காமனின் கணைகளைப் போல ஒருவனை ஆசையில் புன்னகைக்க வைத்து, சங்கடப்படவைக்கும் பூத்துக் குலுங்கும் மருதோன்றி மரங்களையும் கண்டார்கள். அக்கானகத்தின் நெற்றியில் அழகாக வரையப்பட்டது போல உள்ள மஞ்சாடி மரங்களையும் கண்டார்கள். பூத்திருந்த மாமரங்களில் கருவண்டுகள் ரீங்காரமிட்டபடி காமனின் கணைகளுக்கு உதவி செய்து கொண்டிருந்தன.
அந்த மலைச்சரிவுகளில் பூத்துக்குலுங்கும் பலவிதமான மரங்களில் சில தங்க நிறத்திலும், சில காட்டுத்தீ போன்ற நிறத்திலும், சில சிவப்பு நிறத்திலும், சில கரு நிறத்திலும், சில வைடூரியம் போன்ற பச்சை நிறத்திலும் மலர்களைச் சுமந்த படி அழகாக நின்றன. இது தவிர அந்தப் பகுதியில் ஆச்சா {சால மரம்}, பச்சிலை பாதிரி , மகிழம் மரங்களும் சேர்ந்து அந்த மலைச்சிகரத்திற்கு அணிவிக்கப்பட்ட மாலை போல இருந்தன. தெளிந்த பளிங்கு போன்ற பல தடாகங்களைக் கொண்ட அந்த மலைச் சரிவுகளில் வெண்மையான இறகுகள் கொண்ட அன்னங்கள் மற்றும் நாரைகளின் சத்தங்களும், தாமரைகளும், குவளைகளும் நிறைந்த அழகான நீர்நிலைகளும், நறுமணமிக்க மலர்களும், சுவமிக்கக் கனிகளும், அழகான தடாகங்களும், மனதைக் கவரும் மரங்களும் என அனைத்தையும் பாண்டவர்களின் கண்கள் ஆச்சரியத்துடன் கண்டன. (அப்படியே அவர்கள் முன்னேறிச் செல்கையில்) தாமரை , கருநெய்தல் செங்கழுநீர் செந்தாமரை ஆகியவற்றின் நறுமணத்துடன் இனிமையான தீண்டல் கொண்ட தென்றல் காற்றினால் வீசப்பட்டவர்களாகவும் அவர்கள் அந்தக் கானகத்துக்குள் புகுந்தார்கள்.
அப்போது யுதிஷ்டிரன் பீமனிடம் இனிமையாக, "ஆ! ஓ! பீமா, கந்தமாதனத்தின் இந்தக் கானகம் அழகாக இருக்கிறது. அந்த அழகான வனத்தில் தெய்வீகமான காட்டு மரங்களும், கொடிகளும், அழகான அடர்த்தியான இலைகளும், கனிகளும் இங்கிருக்கின்றன. மலராத மரமேதும் நாம் இங்குக் காணவில்லை. கந்தமாதனத்தின் இந்தச் சரிவுகளில், அனைத்து மரங்களும் அழகான இலைகளும் கனிகளும் கொண்டிருக்கின்றன. இந்தத் தாமரைத் தடாகங்களைப் பார், அதில் இருக்கும் தாமரைகளும் முழுதும் மலர்ந்திருக்கின்றன. அவற்றைச் சுற்றி கருவண்டுகள் ரீங்காரமிட்டபடி இருக்கின்றன. அத்தடாகத்தை யானைகள் தங்கள் துணையுடன் சேர்ந்து கலக்கிக் கொண்டிருக்கின்றன. இதோ இன்னுமொரு தடாகத்தைப் பார். மாலைகள் அணிந்து உருவம் கொண்டு வந்திருக்கும் இரண்டாவது ஸ்ரீயைப் {லட்சுமியைப்} போல வரிசையாகத் தாமரைகளுடன் இருக்கின்றன பார். இந்த அற்புதமான கானகத்தில் அழகான வனங்களும், பலவிதமான மலர்களின் நறுமணங்களும், கருவண்டுகளின் ரீங்காரமமும் நிறைந்திருக்கின்றன. ஓ! பீமா, எல்லாப்புறங்களையும் சுற்றிப் பார், இது தேவர்களின் விளையாட்டு மைதானம் போலல்லவா இருக்கின்றது. இங்கே வந்ததால் நாம் மனிதர்களில் உயர்ந்த நிலையை அடைந்து அருளப்பட்டவர்களானோம்.
ஓ! பார்த்தா {பீமா}, இந்தக் கந்தமாதனச் சரிவுகளில் பூத்துக்குலுங்கும் அழகான மரங்களில், பூத்துக் குலுங்கும் கொடிகள் அணைத்துக் கொண்டிருப்பது அழகாக இருக்கிறது. ஓ! பீமா, மலைச்சரிவுகளில் பேடுகளுடன் சேர்ந்து ஒலியெழுப்பும் மயில்களின் ஓசையைக் கேள். சகோரங்களும் , சதபத்திரங்களும் மதம்பிடித்த குயில்களும் , கிளிகளும் பூத்துக் குலுங்கும் இந்தப் பெரிய மரங்களில் அமர்ந்திருக்கின்றன. சிவப்பு நிறத்திலும், சிவந்த மஞ்சள் நிறத்திலும், மஞ்சள் நிறத்திலும் பல பறவைகள் மரங்களின் உச்சியை அடைந்து, கிளைகளில் அமர்ந்து கொண்டு ஒன்றை மற்றொன்று பார்க்கின்றன. மலை அருவிகளிலும், பச்சை மற்றும் சிவந்த நிறத்திலுள்ள புற்தரையிலும் நாரைகள் தென்படுகின்றன. பிருங்கராஜம் , வல்லூறு , போத்து {heron} ஆகியவை அனைத்து உயிரினங்களின் மனதையும் கவரும் வண்ணம் இனிமையான ஒலியுடன் கூவுகின்றன. தாமரை போன்ற வெண்ணிறத்தில் நான்கு தந்தங்களைக் கொண்ட யானைகள் தங்கள் துணைகளுடன், வைடூரிய நிறத்தில் இருக்கும் பெரிய தடாகங்களைக் கலக்கிக் கொண்டிருக்கின்றன.
பல பனைமரங்கள் உயரமுள்ள மலைச்சிகரங்களில் இருந்து விழும் பல ஊற்றுகள் பல அருவிகளில் இருந்து விழுகின்றன. சூரியனின் பிரகாசத்தைக் கொண்ட பல அற்புதமான தாதுக்கள், இலையுதிர் காலத்தின் மேகங்கள் போல இந்தப் பெரிய மலையைப் பிரகாசிக்கச் செய்கின்றன. சில இடங்களில் மையின் நிறத்திலும், சில இடங்களில் தங்க நிறத்திலும், சில இடங்களில் கனிப்பொருள் போல மஞ்சள் நிறத்திலும், சில இடங்களில் செந்தூர நிறத்திலும், சில இடங்களில் மாலைநேர மேகங்களின் நிறத்திலும் சிவப்பு நஞ்சு போலக் குகைகளிலும், சில இடங்களில் முயலின் நிறத்திலும், சில இடங்களில் வெள்ளையும் கருப்புமாகத் தாதுக்கள் நிறத்திலும், சில இடங்களின் உதயச் சூரியனின் நிறத்திலும், பெரும் பிரகாசமிக்கத் தாதுக்கள் அந்த மலையை அழகூட்டிக் கொண்டிருக்கின்றன. ஓ! பார்த்தா {பீமா}, விருஷபர்வா சொன்னது போல, கந்தர்வர்களும், கிம்புருஷர்களும், தங்கள் காதல் துணைகளுடன் இந்த மலையின் சிகரங்களில் தெரிகிறதார்கள். ஓ! பீமா, அனைத்து உயிரினங்களையும் மயக்கும் ஒரே தாளம் கொண்ட பல பாடல்களும், வேத ஒலிகளும் கேட்கின்றன. புனிதமானதும், அருள் நிறைந்ததுமான தெய்வீக நதியான மகாகங்கை அன்னங்களுடனும், முனிவர்களுடனும், கின்னரர்களுடன் இருப்பதைப் பார். ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே {பீமா}, தாதுக்களையும், நதிகளையும், அழகிய வனங்களையும், விலங்குகளும், பல வடிவங்களிலும், நூறு தலைகள் கொண்ட பாம்புகளையும், கின்னரர்களையும், கந்தர்வர்களையும், அப்சரசுகளையும் பார்" என்றான் {யுதிஷ்டிரன் பீமனிடம்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார்,
"எதிரிகளை வாட்டுபவர்களும், பராக்கிரமசாலிகளுமான அவர்கள் திரௌபதியுடனும், உயர் ஆன்ம அந்தணர்களுடனும், அச்சிறந்த மலைகளின் மன்னனை அடைந்து மகிழ்ந்தும், போதுமென்ற மனநிலையை அடையவில்லை. அதன்பிறகு, மலர்களும் கனிகளும் கொண்ட மரங்கள் நிறைந்த அரசமுனி ஆர்ஷ்டிஷேணரின் ஆசிரமத்தை அவர்கள் கண்டார்கள். பிறகு அவர்கள் எலும்புக்கூடு போலச் சதைகள் அற்று இருப்பவரும், கடும் தவத்திற்கான அனைத்துக் கடமைகளை அறிந்தவருமான ஆர்ஷ்டிஷேணரிடம் சென்றார்கள்.
..
தொடரும்..
..
மகாபாரதம் தொடர் முழுவதும் படிக்க இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைந்திருங்கள்

No comments:

Post a Comment