Courtesy:Smt.Dr.Saroja Ramanujam
கீதாஸாரம்-அத்தியாயம் 2
1.பகவானின் அதிரடி சிகிச்சை
அர்ஜுனன் குழப்பம் தீராமல் கடைசியில் "எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. எனக்கு எது நன்மை என்று நீயே சொல் ," என்று பகவானை சரண் அடைகிறான். அதுவரை என்ன செய்யவேண்டும் என்று தனக்குத் தோன்றியதை கூறிய பின் ( அதாவது ப்ரேயஸ், மனதிற்கு பிடித்தது), இப்போது மனம் தெளிவுறாமல் , எனக்கு எது நல்லதோ அதைக் கூறு என்கிறான். (அதாவது ச்ரேயஸ்) . அதன் பின்னரே பகவான் பேச ஆரம்பிக்கிறார்.
நம் வாழ்விலும் நாம் பகவான் என்னசெய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ அதையே வேண்டுகிறோம். ஆனால் நமக்கு எது நன்மையோ அதை வேண்டுவதில்லை. அப்படி நினைத்தோமானால் அப்போதுதான் பகவான் நம்மிடம் பேசத் தொடங்குவான்.
இங்கு அர்ஜுனன் 'சிஷ்யஸ்தே அஹம் சாதி மாம் த்வாம் பிரபன்னம் ' , "நான் உன்னை சரண் அடைகிறேன், சீடனான எனக்குக் கட்டளை இடுவாயாக ," என்று கேட்ட பின்னரே பகவான் உபதேசம் செய்ய ஆரம்பிக்கிறார். ஏனென்றால் கேட்காமல் கூறிய உபதேசம் செவிடன் காதில் ஊதிய சங்காக ஆகிவிடும் அல்லவா?
இதையேதான் கடைசி அத்தியாயத்தில் கேட்காதவருக்கு சொல்லாதே என்று கூறுகிறார்.
ஒரே ஸ்லோகத்தில் அர்ஜுனன் கூறிய அவ்வளவு வாதங்களையும் ,'குத:த்வாம் கச்மலம் இதம் விஷமே ஸமுபஸ்திதம் ' "அர்ஜுனாஎங்கிருந்து இந்த பொருத்தமில்லாத குழப்பம் , தகாத காலத்தில், உன்னை , ஸமுபஸ்திதம்- வந்தடைந்தது?" இது சான்றோர்களால் கடைப்பிடிக்கத் தகாதது, சுவர்கத்தைத் தராது. புகழையும் தரவல்லதன்று."என்று தவிடுபொடி ஆக்கிவிடுகிறார்.
இது க்லைப்யம் , கோழைத்தனம் என்று கூறும்போது அர்ஜுனனின் உண்மையான நோக்கம் வெளிவருகிறது. அதாவது "நான் எவ்வாறு பீஷ்மரையும் துரோணரையும் எதிர்ப்பேன் ?அவர்கள் வணங்கத்தக்கவர் அல்லவா"என்கிறான்.
இப்போதுதான் பகவ்த்கீதை உண்மையில் ஆரம்பம்.கண்ணன் சொல்கிறான் , 'அசோச்யான் நன்வசோசஸ்த்வம் பிரக்ஞா வாதாம்ஸ்ச பாஷசே,' யாரைக்கண்டு வருந்த வேண்டாமோ அவர்களைப் பற்றி வருந்துவதோடு பெரிய அறிவாளி போல் பேசுகிறாய்," என்கிறார். அதாவது பீஷ்மரும் துரோணரும் அர்ஜுனனைப் போல் வருந்தாமல் போருக்குத் தயாராக வந்துள்ளனர் . ஏனென்றால் அவர்களுக்கு ஆற்றவேண்டிய கடமையைக் குறித்து ஒரு குழப்பமும் இல்லை. ஒரு அறிவாளியைப் போல் பேசும் அர்ஜுனன் உண்மையில் தெளிவான அறிவு இருந்தால் இவ்விதம் குழப்பம் அடைய மாட்டான். ஏனென்றால் அறிஞனுக்கு உயிருள்ளவர் உயிரற்றவர் என்றார் பேதமே இருக்காது என்று கூறி உபதேசத்தை ஆரம்பிக்கிறார்.
No comments:
Post a Comment