Thursday, December 16, 2021

Did that dog eat? _ Periyavaa

*மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - நாய்க்குப் போட்டாச்சா?* 

நாயைத் தாழ் பிறவியாகவே சாஸ்திரம் கூறும். ஆனால் நாய்க்கும் ஈந்த நாயகராக நமது சாஸ்திரக் காவலர் இருக்கிறார்.

1927-ம் வருஷத்தில் ஒரு நாய் மடத்து முகாமுக்குத் தானாகவே வந்து காவல் காக்கத் தொடங்கியது. தமது பிக்ஷை முடிந்தவுடன் அதற்கு ஆஹாரம் போடுமாறு பெரியவாள் ஆக்ஞாபித்தார்.

விந்தையாக மடத்து பிக்ஷை சேஷத்தை உண்ண ஆரம்பித்தபின் அது வேறெவர் எது கொடுத்தாலும் உண்ண மறுத்தது.

ஸ்ரீ மஹா பெரியவாள் பல்லக்கில் ஊர் ஊராகச் சென்று கொண்டிருந்த காலத்தில் அந்த நாய், ஒன்று அந்தப் பல்லக்கின் கீழேயே போகும்; அல்லது யானையின் தூண் போன்ற நாலு கால்களுக்கு உள்ளாகவே போகும். பல்லக்கு நிறுத்தப்பட்டவுடன் எட்டத்திற்கு ஓடிச் சென்று பெரியவாள் இறங்கிச் செல்வதை அங்கிருந்தே கண்குளிரக்கண்டு வாலை ஆட்டும்.

ஒரு முறை அதற்கு வெறிபிடித்து விட்டதாகச் சிப்பந்திகள் எண்ணினர். சேவகன் ஒருவனிடம் அதன் கண்ணைக் கட்டி நாற்பது கிலோமீட்டர் தள்ளியிருந்த ஒரு கிராமத்தில் கயிற்றால் பிணித்து விட்டுத் திரும்பி வருமாறு பணித்தனர்.

அப்படியே அச் சேவகன் செய்து திரும்பினான்.

அவன் திரும்பும் முன்னரே பைரவனாரும் திரும்பியிருந்தார்! அவருக்கு வெறியில்லை என்று தெரிந்தது.

அன்றிலிருந்து மஹா பெரியவாளைத் தரிசிக்காமல் உண்பதில்லை என்று அந்த நாய் உயிர் பிரியும் வரையில் விரதம் காத்தது!

அக்காலத்தில் பிக்ஷை முடித்தபின் சிறிது ச்ரம பரிஹாரம் செய்து கொண்டு பெரியவாள் தமது அருள் ஆஃபீஸை மீண்டும் தொடங்கும் போது கேட்கும் முதற் கேள்வி - "நாய்க்குப் போட்டாச்சா" என்பதுதான்.

பெரியவா சரணம்!

 _தொகுப்பு: பெரியவா குரல் |_ https://t.me/perivakural

 *An initiative of Kanchi Periva Forum - www.periva.org | www.anusham.org | www.mahaswami.org*

No comments:

Post a Comment