Courtesy: Smt.Dr.Saroja Ramanujam
அத்யாத்ம ராமாயணம் - கிஷ்கிந்தா காண்டம் அத்தியாயம் 2
இவ்வாறு சுக்ரீவன் பேசியதைக் கேட்ட ராமர் தன் அவதார கார்யம் நிறைவேற மாயையை செலுத்தி மோகத்தை உண்டுபண்ணி அக்னிசாக்ஷியாக நட்புக் கொண்டு வாலியை வாதம் செய்வதாக வாக்குறுதி அளித்ததை நினைவூட்டினார். பின் வாலியை யுத்தத்திற்கு அழைக்கச் சொல்லி அவனை ஒரே பாணத்தால் வீழ்த்துவதாகக் கூறினார்.
அதன்படி சுக்ரீவனுக்கும் வாலிக்கும் சண்டை நடந்தது. இருவரும். உருவத்தில் ஒன்றாக இருந்ததால் தவறி சுக்ரீவனைக் கொன்றுவிடாமல் இருக்க ராமர் அம்பு எய்தவில்லை. அதனால் சுக்ரீவன் வாலியின் முன் நிற்க முடியாமல் ஓடி வந்தான்.
பிறகு ராமரிடம் தன்னைக் கொல்ல வேண்டும் என்றால் நேராகச் செய்து விடலாமே. வாலியினால் கொல்லப்படவேண்டுமா என்று கேட்டவனிடம் ராமர் தான் அம்பு எய்தாததின் காரணத்தைக் கூறி லக்ஷ்மணன் அணிவித்த மாலையுடன் திரும்ப வாலியை யுத்தத்திற்கு அழைக்குமாறு கூறினார்.
சுக்ரீவன் மறுபடியும் அழைத்ததைக் கண்ட வாலி கோபத்துடன் புறப்பட அவனை தடுத்த தாரை தோல்வியுற்று ஓடியவன் திரும்ப அழைப்பது சந்தேகத்திற்கு இடமாகிறதென்றும் தசரத புத்திரனான ராமன் அவனுக்கு ராஜ்ஜியத்தை அளிக்க பிரதிக்ஞை செய்திருப்பதாக கேள்வி என்றும் கூறி சுக்ரீவனுடன் சமாதானம் செய்துவிடும்படி வேண்டினாள்.
அதற்கு வாலி சாக்ஷாத் நாராயணனே ராமனாக அவதரித்து இருப்பதை தான் அறிந்துள்ளதாகக் கூறி பரமாத்மாவான அவருக்கு சத்ரு மித்திரன் என்ற பேதம் கிடையாதென்றும் பக்தி வசப்பட்ட அவரை பக்தியுடன் பூஜித்து அழைத்து வருவதாகவும் கூறினான். சுக்ரீவன் மட்டும் வருவானாகில் தன்னை யுத்தத்திற்கு அழைக்கும் அவனை மன்னிக்க முடியாததால் அவனைக் கொல்வதாகக் கூறினான்.
வாலி இரண்டாம் முறை யுத்தத்திற்கு வர அவர்கள் மற்போர் புரியும்போது ராமர் ஒரு மரத்தின் பின் மறைந்து வாலியை ஒரே அம்பில் வீழ்த்தினார். வாலி நினைவை இழந்து சாய்ந்தான். பிறகு கண் விழித்தபோது தன் முன் வில்லேந்தி நின்ற ராமனைக் கண்டான். பிறகு வாலி ராமனை நிந்தித்தது வால்மீகி சித்தரித்தது போலவே காணப்படுகிறது. அவன் கூறியது,
"1. மரத்தின் பின் நின்று உனக்குத் தீங்கொன்றும் செய்யாத என்னை அடித்தது தர்மமா?
2. சீதையை மீட்கவேண்டும் என்றால் ராவணனைக் கட்டி இழுத்து வந்து அதைச் செய்திருப்பேனே?
3. மனிதர் மிருகங்களை வேட்டையாடுவது அதர்மம் இல்லை என்றால் குரங்கு மாமிசம் எதற்கும் உபயோகப்படாது அல்லவா?
இதற்கு ராமர் அளித்த பதிலும் வால்மீகி ராமாயணத்தில் உள்ளபடியே உள்ளது.அதாவது,
தர்மத்தைக் காக்கவும் அதர்மம் செய்தோரை தண்டிக்கவுமே இந்த உலகில் தான் வில்லேந்தி சஞ்சரிப்பதாகவும் , மகளுக்கொப்பான தம்பி மனைவியை அபகரித்த பாவம் செய்ததால் வாலியைக் கொன்றதாகவும் கூறி, மேலும் மகாபுருஷர்கள் உலகத்தை பரிசுத்தமாக்கவே எங்கும் சஞ்சரிக்கிறார்கள் அவர்களிடம் துடுக்காகப் பேசுவது தவறு என்றும் கூறினார்.
பின் மாயை நீங்கி ராமரை ஸ்ரீமன் நாராயணன் என்று அறிந்த வாலி அவரை வணங்கி மன்னிப்புக் கோரினான். மகா யோகியருக்கும் கிடைக்காத தரிசனம் தனக்குக் கிடைத்ததனால் தன் பாபங்கள் நசித்து பரமபதம் செல்லப்போவதாகவும் கூறி, அங்கதனைக் காக்கும்படி வேண்டினான்.
பிறகு ராமர் தன் கையாலே பாணத்தை எடுத்து தனக்கு நற்பதவி அளிக்கக் கோரினான். ராமரும் கிருபையுடன் அவன் மார்பில் இருந்து பாண்த்தை எடுத்து அவனை அன்புடன் தடவிக் கொடுக்க அவன் உயிர் பிரிந்தது. அதே சமயம் அவன் சரீரத்தில் இருந்து இந்திரன் உரு வம் தோன்றி மறைந்தது.
"பார்வதி , இவ்வாறு வாலி பரம்ஹம்சர்களுக்கும் கிட்டாத உத்தம பதத்தை அடைந்தான் அவனே தன்யன்."என்று கூறினார் சிவபெருமான்.
No comments:
Post a Comment