Courtesy: Smt.Dr.Saroja Ramanujam
அத்யாத்ம ராமாயணம் - ஆரண்ய காண்டம் - அத்தியாயம் 8
மாரீசனைக் கொன்று திரும்பிய ராமன் லக்ஷ்மணன் வருவதைக் கண்டார். அவர் நினைத்தார் –
"லக்ஷ்மணனுக்கு ஆஸ்ரமத்தில் இருந்து மாயாசீதை என்பது தெரியாது ஆகையால் நான் ஒரு சாமன்யன் போல் சீதையைப பிரிந்த துயரை நடித்து ராவண வதத்தை நிறைவேற்றுவேன். அதற்குப் பிறகு உண்மையான சீதையை அக்னியிலிருந்து வெளிக் கொணர்ந்து ஆவலுடன் அயோத்திக்குச் செல்வேன். பிரம்மாவின் வேண்டுகோளுக்கிணங்க நான் ஒரு மனிதனாகவே செயலாற்றுவது அவசியம் ஆகிறது."
சீதையைத் தனியே விட்டு வந்ததைப் பற்றி லக்ஷ்மணனைக் கடிந்து பேசிய ராமன் ஆச்ரமத்திற்குத் திரும்பி சீதையைக் காணாமல் ஒரு சாமான்ய கணவனைப் போல் இங்கும் அங்கும் தேடி பரிதவித்தார்.
இவ்வாறு சர்வக்ஞனாகவும் அஹங்கார மமகாரம் அற்றவராகவும் இருந்து சாதாரண மனிதன் என மாயைக்குட்பட்டவர் போல் நடந்துகொள்வதை ஞானிகள் மட்டுமே அது வெறும் விளயாட்டு என்று அறிந்தனர்.
அங்கு அடிபட்டு விழுந்து கிடந்த ஜடாயுவைக் கண்டு சீதையைக் கொன்று தின்ற அசுரன் என்று கோபம் கொண்டு லக்ஷ்மணனிடம் வில்லையும் அம்பையும் எடுத்துவரப் பணித்தார் . அப்போது ஜடாயு பயந்து நடந்ததை ராமனிடம் கூறி ராவணன் சீதையை எடுத்துக் கொண்டு தெற்கு திசை நோக்கிசென்றதாகக் கூறி தனக்கு மரணம் நெருங்கி விட்டதால் சாக்ஷாத் மகாவிஷ்ணுவாகிய ராமன் தன்னை திவ்ய கரத்தினால் ஸ்பர்சித்தால் அவரைப் பார்த்துக்கொண்டே உயிரை விட்டு பரமபதம் அடைய ஆசை கொண்டதாகவும் கூறியது.
ராமன் ஜடாயுவை அன்புடன் தடவிகொடுத்து அவனுக்கு சாரூப்ய முக்தி கிடைக்குமாறு அருளினார். ஜடாயுவின் உயிர் பிரிந்தது. ராமன் கண்ணீருடன் ஜடாயுவின் அந்திமக்ரியைகளைச்செய்தார். அப்போது ஜடாயு ஒரு ஒளிமயமான விமானத்தில் ஏறி சங்க சக்ராதிகளுடன் திவ்ய ரூபத்தில் காட்சி அளித்தான்.பிறகு ராமனை துதி செய்யலானான்.
ஜடாயு கூறியது ,
" அனந்த கல்யாண குணம் கொண்டவரும் எவரலும் அறிய ஒண்ணாதவரும், சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் இவற்றின் காரணமானவரும் பரமாத்மாவும் ஆன ஸ்ரீராமனை சரணம் அடைகிறேன்.
கோதண்ட பாணியும் பரமானந்தஸ்வரூபமும், இந்திரன் பிரமன் ஆகியோரின் இடர் களைபவரும், லக்ஷ்மிதேவியால் கடாக்ஷிக்கப் படுபவரும் , நரோத்தமரும் , வரமளிப்பவரும் ஆன ராமனை நமஸ்கரிக்கிறேன்.
மூவுலகங்களும் வியக்கும் அழகிய மேனியுடையவரும், ஆயிரம் சூரியனுடைய ப்ரகாசம் கொண்டவரும், வேண்டும் வரமளிப்பவரும், சரணாலயமும் , பக்தியையே இருப்பிடமாகக் கொண்டவரும் ஆன ராமனை சரண் புகுகிறேன்.
எவருடைய நாமம் சம்சாரமாகிய காட்டை எரிக்கும் தீ போன்றதோ, எவர் மற்ற எல்லா தேவதைகளாலும் வணங்கப்படுகிறாரோ, யமுனையின் நீரைப்போன்ற நிறம் கொண்ட , ஆயிரக்கணக்கான அசுரரகளை அழித்த அந்த ஹரியை அடைக்கலம் புகுகிறேன்.
உலக இச்சை உள்ளோருக்கு அடைய முடியாதவரும், உலகைத் துறந்த யோகிகளால் அறியப்படுபவரும், சம்சார சாகரத்தைக் கடக்கும் படகு போன்றவரும் ஆன ரகுவம்சத் தோன்றலை சரணம் அடைகிறேன்."
இவ்வாறு துதித்த ஜடாயுவைப் பார்த்து ராமன் பரம பதத்தை அடையுமாறு அருள் புரிந்தார்.
No comments:
Post a Comment