Friday, October 8, 2021

Trivikrama avatar

த்ரிவிக்ரம அவதாரம்
 பலிசக்ரவர்த்தி சுக்ராசார்யாரின் போதனையை ஏற்றுக் கொள்ளவில்லை. "தன் உடமைகளை காப்பாற்றிக்கொள்வதற்காக நான் கொடுத்த வார்த்தையை மீறுவது சரியல்ல. ஸத்யத்திற்காக ததீசியும், சிபியும் தங்கள் உயிரையே கொடுக்க வில்லையா? என் குலத்தின் புகழை மங்கச் செய்யும் ஒரு காரியம் நான் செய்ய மாட்டேன். வந்திருப்பவன் மாயாவியான விஷ்ணுவாக இருந்தாலும் எனக்குக் கவலையில்லை. என்னை அவன் அனுக்ரஹம் செய்தாலும் சரி. எனக்கு தண்டனை கொடுத்தாலும் சரி. இரண்டும் எனக்கு ஒன்றுதான். இவன் கேட்ட பூமியை நான் கொடுத்தே தீருவேன்". என்று உறுதியாகச் சொன்னான். சுக்ராசாரியாருக்கு கோபம் ஏற்பட்டது. "ஏன் அறிவுரையைப் புறக்கணித்த நீ ராஜ்யத்தை இழக்கத்தான் போகிறாய்" என்று சபித்தார்.
 மஹாபலியின் பட்டமஹிஷி, விந்த்யாவளி கலசத்தில் தீர்த்தம் கொண்டுவந்தாள். மஹாபலி வாமனனின் திருவடிகளைக் கழுவி, அந்த்ப்புனித தீர்த்தத்தை ப்ரோக்ஷித்துக்கொண்டான். பிறகு வாமனனின் கையில் தீர்த்தத்தைக் கொடுத்து மனப்பூர்வமாக தானத்தை தாரைவார்த்துக் கொடுத்தான். தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.
 அடுத்தகணம் வாமனனின் சிறிய உருவம் வளரத் தொடங்கியது. மேலும் மேலும் வளர்ந்து கொண்டேபோய் பூமிக்கும் ஆகாசத்திற்குமாய் விசுவரூபமாக வியாபித்துவிட்டது. த்ரிவிக்ரமனின் ப்ரம்மாண்டமான சரீரத்தில் அண்டசராசரங்கள் அடங்கியிருந்தன. அவன் வயிற்றுள் ஸப்தஸமுத்ரங்களையும் மார்பில் நக்ஷத்ரகணங்களையும், புஜங்களில் இந்த்ராதி தேவர்களையும், வாயில் வேதங்களையும், இடுப்பில் தன்னையும் மற்ற அஸுரர்களையும் மஹாபலி அந்த திவ்ய சரீரத்தில் கண்டான்.
 த்ரிவிக்ரமனான மஹாவிஷ்ணு ஓரடியால் பூலோகத்தை அளந்தார். தன் உடலால் வானத்தை அளாவிக்கைகளால் எட்டு திக்குகளையும் வியாபித்து நின்றார். இரண்டாவது அடிவைக்க ஸ்வர்க்கலோகமே போதவில்லை. உலகளந்த பெருமானின் திருவடி அதையும் தாண்டி, மஹர்லோகம், ஜனோலோகம், தபோலோகம் ஆகியவற்றையும் தாண்டி, ஸத்ய லோகத்தையும் ஊடுறுவி நின்றது. ஸத்யலோகத்தில் இருந்த ப்ரம்மதேவன் அந்தத் திருவடியை தனது கமண்டலு தீர்த்தத்தால் அபிஷேகம் செய்தார். அந்த நீரே 'விஷ்ணுபதி' என்று சொல்லப்பட்ட புனித கங்கையாக கீழே பாய்ந்தது. ப்ரம்மாதி தேவர்கள் ஸ்தோத்ரங்கள், ஜயகோஷம், கானம், துந்துபி, நடனங்கள் முதலியவற்றால் பூஜித்தனர். ஜாம்பவான் தம்பட்டம் அடித்துக்கொண்டு உலகெங்கிலும் பரமனின் விஜயத்தை பறைசாற்றினார். 
 விஷ்ணுவே அந்தணச்சிறுவன் வேஷம் பூண்டு தங்கள் அரசனை ஏமாற்றி விட்டான் என்று அஸுரர்கள் வாமனனைத் தாக்க முற்பட்டார்கள். ஆனால் உடனே விஷ்ணுவின் ஸேவகர்கள் அந்த அஸுரர்களை அடித்து நொறுக்கிவிட்டார்கள். மற்றுள்ள அஸுரர்களை பலியே தடுத்து அவர்களிடம் கூறினான். "தேஹபலம், ஸஹாயபலம், புத்திபலம், மந்த்ரபலம், ஔஷதிபலம் யாவும் பகவானிடத்தில் ப்ரயோஜனப்படாது. இது வரையில் நாம் செம்மையாக வாழ்ந்து அனுபவித்ததெல்லாம் அவன் கொடுத்த பலத்தினால்தான். இனி தேவர்கள் ஓங்கியிருப்பார்கள். கீழ் உலகங்களுக்குச் சென்றுவிடுங்கள்." என்று கட்டளையிட்டான்.
 பிறகு கருடன் வருணபாசத்தால் பலியைக் கட்டிப் போட்டான். வாமனன், பலியிடம் கேட்டார். "அஸுரனே! நீ மூன்றடி நிலம் எனக்குத் தருவதாக வாக்களித்தாய். பூலோகமும், மேல் உலகங்களும் எனது இரண்டு கால் அடிகளுக்கு சரியாகிவிட்டன. மூன்றாவது கால் அடிக்கு இடம் எங்கே? ஸத்யம் தவறினால் உனக்கு நரகம்தான் கதி". பலி பதட்டமில்லாமல் அடக்கத்துடன் பதில் கூறினான். "புருஷோத்தமனே! நான் கொடுத்த வாக்கை மீறவில்லை. உனது மூன்றாவது காலடிக்கு என் சிரஸே ஸ்தானமாகும். நரகம், பதவி இழப்பு, வறுமை, தண்டனை இவை எதற்கும் நான் அஞ்சவில்லை. சொன்ன சொல்லைக் காப்பாற்றாதவன் என்ற அவப் பெயருக்குத்தான் நான் பயப்படுவேன். எங்கள் கர்வமே எங்கள் அழிவிற்கு காரணம். பக்தி யோகத்தால் அநேக அஸுரர்கள் சித்தியடைந்துள்ளார்கள். என் பாட்டனார், ப்ரஹ்லாதன் சரீரத்தையும், ப்ராணனையும் துச்சமாக மதித்து உன்னிடம் பக்தி செய்து அழியாத கீர்த்தியைப் பெற்றவர். என் ஐச்வர்யத்தை நீ அழித்தது எனக்கு உன் அனுக்கிரஹமே. உன் ஸ்வரூபத்தைப் பார்க்கும் பாக்கியம் பெற்றேன். உன்னையே நான் சரணடைகிறேன்". என்றான். அப்பொழுது ப்ரஹ்லாதன் அவ்விடத்திற்கு வந்தான். உடல் முழுவதும் வருண பாசத்தால் கட்டுண்டிருந்ததால் பலி தன் பாட்டனாருக்கு தன் தலையினால் மட்டும் வந்தனம் செய்தான். பகவானிடம் ப்ரஹ்லாதன் கூறினான். "நீயேதான் இவனுக்கு விச்வஜித் யாகத்தின் பயனாக இந்த்ரபதியைக் கொடுத்து மேம்படுத்தினாய். நீயேதான் அந்த ஸ்தானத்தை இப்பொழுது பறித்துக் கொள்கிறாய். இதுவும் அவனுக்கு உன்னுடைய அனுக்ரஹமே". பலியின் தர்மபத்னியான விந்த்யாவளி பகவானிடம் கூறினாள். "உலகம் யாவற்றையும் படைத்தது நீதான். அப்படிப்பட்ட உனக்கு என் பர்த்தா மூன்றடிகளாக தானம் கொடுத்தார் என்று சொல்வது அறிவீனமே. இவரை மன்னித்து பந்தத்திலிருந்து விடுவிக்க அருளும்" என்று ப்ரார்த்தித்தாள். ப்ரம்மதேவனும் பகவானிடம், "இப்பலி தன் சொத்தான பூமியையும், தன் முயற்சியால் சம்பாதித்த ஸ்வர்க்கத்தையும், தன் உடமையான தனது சரீரத்தையும் உமக்கு அர்ப்பணித்துவிட்டான். ஆகையால் இவன் உன் நிக்ரஹத்திற்கு பாத்திரமாக மாட்டான். எல்லாவற்றையும் உனக்கு அர்ப்பணித்துவிட்ட இவனுக்கு துர்க்தி ஏற்பட வேண்டாம்" என்று கோரினார்.
 பகவான் பலியிடம் சொன்னார். "நான் யாரை அனுக்ரஹிக்க எண்ணுகிறேனோ அவன் ஐச்வர்யத்தைப் பறிப்பேன். செல்வச் செருக்கினால் ஆத்ம ஞானத்தில் ச்ரத்தை ஏற்படுவதில்லை. ஜாதி, கர்மா, வித்யை, ஐச்வர்யம் இவற்றால் எவன் மதிமயங்காது இருக்கிறானோ அவன் எனது அனுக்ரஹத்தைப் பெறுகிறான். நீ கடைசி வரையிலும் மனம் தளராது ஸத்யத்தைக் காப்பாற்றிவிட்டாய். நீ ஸுதலம் என்ற பாதாளலோகத்திற்கு உன் மக்களுடன் சென்று சுகமாய் வாழ்வாய். பிறகு ஸாவர்ணிமன்வந்தரத்தில் நீ இந்த்ர பதவி பெற்று முடிவில் என்னை வந்தடைவாய். நான் அதுவரையில் உன் த்வாரபாலகனாய் இருந்து உன்னைப் பாதுகாத்துவருவேன்".
 ஸ்ரீ சுகர் பரீக்ஷித்திடம் கூறுகிறார். "பலி, தான் பகவானின் அனுக்ரஹத்தைப் பெற்றதற்கு அவரை ஸ்தோத்ரம் செய்தான். பகவான் ஆஜ்ஞைப்படி தன் பரிவாரங்க்களோடு ஸுதலம் சென்றான். பகவான் உபேந்த்ரன் என்ற பெயருடன் தனது அண்ணனாகிய இந்த்ரனுக்கு ஸ்வர்க்கத்தை பலியிடமிருந்து மீட்டுக்கொடுத்து அதிதியின் விருப்பத்தை நிறைவேற்றினார். ப்ரஹ்லாதன் பகவானிடம் சொன்னான். "பக்தி இருக்குமானால் அஸுரர்களுக்கும் பக்ஷ பாதமின்றி நீ அனுக்ரஹம் செய்கிறாய். உன் பக்தர்களை நீ கைவிடுவதில்லை" என்று பாராட்டினான். பகவானின் கட்டளைப்படி ப்ரஹ்லாதனும் பலியுடன் ஸுதலம் சென்றான். பிறகு பகவான் சுக்ரனை பலி தொடங்கிய யாகத்தை நிறைவேற்றச் சொன்னார். உபேந்த்ரனான வாமனன் ஸமஸ்த லோக பூத கணங்களுக்கும் அதிபதியானார். இந்த்ரன் வாமனனை ஸ்வர்க்கத்திற்கு விமானத்தில் அழைத்துச் சென்று, நிர்ப்பயமாய் த்ரிலோகாதிபத்யத்தை அடைந்து ஸுகமாய் இருந்தான்.
 இந்த த்ரிவிக்ரம அவதாரக் கதையை கேட்பவர்கள் (படிப்பவர்கள்) பாவங்கள் யாவும் நீங்கப் பெறுவார்கள். இப்புனித விருத்தாந்தம் மோக்ஷத்தையளிக்கும். எவரெவர் எந்தெந்த விருப்பங்கள் கொள்ளுகிறார்களோ அவையாவும் நிறைவேறும்.
ஸ்ரீவைஷ்ணவிஸம் முகநூலில் பதிவு செய்தவர் திரு விஜயராகவன் நரசிம்ஹன் அவர்கள்.

No comments:

Post a Comment