Thursday, September 9, 2021

Mantreeka - Periyavaa

*மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - மாந்த்ரீகரும், மஹா பெரியவாளும்*

பெரியவர் மராத்தி மாநிலத்தில் பயணம் ஏதோ ஓர் ஊரில் (பூனா என்று சொன்ன ஞாபகம்) முகாம். 
அங்கு வாழ்ந்து வந்த ஒரு அன்பர் - இப்போதைக்கு அவர் வம்பர் - ஏன் என்றால் அவர் ஆபிசாரம் எனப்படும் வேலைகள் செய்து மக்களுக்கு மருந்து வைப்பது மந்திரம் வைப்பது பில்லி சூனியம் என்று பணம் பண்ணுபவர் யாரிடம் நல்ல பெயர் இல்லாதவர்.

பெரியவர் அங்கு வந்திருப்பது தெரிந்து சொல்லத்தகாத வார்த்தைகள் சொல்லி 'நான் பெரியவனா இல்ல. அவர் பெரியவரான்னு பார்த்து விடுகிறேன் இன்று என் சித்து மற்றும் வசியம் முன் அவர் என்ன செய்ய முடியும் இன்று அவரை என் வசியத்தால் கட்டிப்போடுகிறேன்' என்றெல்லாம் கொக்கரித்து இருக்கிறார்.

அவர் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் பலர் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. அன்று பெரியவர் பூஜை பார்க்க ஆயிரக்கணக்கானோர் கூடினர். இந்த வம்பரும் சென்று 'கடைசியில் கடைசியாய்' இருந்து கொண்டு கையில் மையை வைத்துக்கொண்டு என்னென்னவோ செய்தார், செய்தார், செய்தார்.

அங்கே பெரியவரோ பூசையில் ஒன்றி விட்டார். பூசை முடிந்தது - திருநீர் பிரசாத விநியோகம் இனிதே நடந்தது. ஸ்வாமிகள் கை சொடுக்கி அழைத்தார் இவரை. இவருக்கோ ஒரே ஆச்சரியம். எப்படி இந்த ஆயிரம் ஆயிரம் ஜனத்தில் நம்மை குறி வைத்து அழைக்கிறார். குறி வைத்து தான் விட்டாரே!

யாரை வசியப்படுத்துவேன் என்றாரோ அவரிடமே வசியப்பட்டு, யாரை பொம்மை ஆக்குவேன் என்றாரோ அவரிடமே பொம்மையென சென்றார் அமர்ந்தார் அந்த வம்பர். 

ஐயன் அவரை உற்று பார்த்தார். பின் மெல்ல பகர்ந்தார். 'பின்னாடி திரும்பி பார்'. 

பார்த்தார் வம்பர். நடுநடுங்கினார். பின்னால் இருந்த மொத்த அடியார் கூட்டமும் ஐயனாய் தெரிந்தது அவருக்கு. ஆம் - அத்துணை அத்துணை மகாபெரியவர் உருவங்கள். மேலே கீழே இடது வலது என்றெல்லாம் பார்க்க சொன்னார். எங்கெங்கு காணினும் ஐயன் திருவுருவங்கள்! 

வம்பர் கதறி காலில் விழுந்தார். மன்னிக்க கோரினார். பாவமன்னிப்பு கேட்டார்.

சொன்னார் பெரியவர் 'சித்து பெரிய விஷயமே இல்லே.. ஒர்த்தர் கிட்ட கூட ஒனக்கு நல்ல பேரு இல்லே.. கெட்ட வழிலே இவ்வளவு பணம் பண்ணிருக்கே'. 

வம்பர் சொன்னார் - 'அத்தனையும் விட்டுடறேன். பெரியவா கூட மடத்துக்கு வந்து சொச்ச காலத்தையாவது சேவகம் பண்ணி பாவம் போக்குகிறேன்'.

'இல்லே இன்னும் நிறைய வேலை இருக்கு ஒனக்கு. பாவ வழிலே சம்பாதிச்சாலும் பணம் பணம் தான். அதுனாலே அத்தனை பணத்தையும் நல்ல வழிலே செலவு செய். நெறைய கல்யாணம் பண்ணிவை ஏழை கொழந்தேளுக்கு. அவாள படிக்க வை, அம்பாளை ப்ரார்த்திச்சிண்டே இரு. எல்லோரோட க்ஷேமத்துக்காகவும் பண்ணு.. நீயும் க்ஷேமமா இருப்பே'.

பார்த்த மாத்திரத்தில் பாவத்தை போக்குகின்ற தீர்த்த பெருக்கு நம் மஹா பெரியவர்!

பெரியவா சரணம்!

தொகுப்பு: பெரியவா குரல் | https://t.me/perivakural

An initiative of Kanchi Periva Forum - www.periva.org | www.anusham.org | www.mahaswami.org

No comments:

Post a Comment