ஸ்ரீ:
ஆடி ஆனந்தம்--"ஆண்டாள் தூது!!!
(பதிவு 25)
💐🌻🌼🌸🌺🌷🌹💐
கண்ணபிரானின் திருவாய் அமுத அநுபவம் நித்யம் பெறுகின்ற திருச்சங்காழ்வானுக்கு"அவருடைய வாக்(வாய்) அம்ருதம் இருக்கும்படி என்ன"
என்பது நன்கு தெரியும் என்பதால்,அதை எனக்குச் சொல்வாயாக என்று அவனைக்
கேட்பதாக அமைந்தது இந்த முதல் பாசுரம்.முதல் பாசுரத்தில் "சொல் ஆழிவெண்சங்கே" என்று கேட்கும் ஆண்டாள் மற்ற எட்டு பாசுரங்களிலும் சொல்/கூறு என்றும் எங்கும் நேராகச் சொல்லவில்லை.அவற்றில் சங்காழ்
வானின் மேன்மை,குணங்கள்,எம்பெருமா
னோடு உள்ள நெருக்கம் ஆகியவற்றை உயர்வாகப் போற்றிப் பாடுகிறார்.
சங்காழ்வானை ஸ்தோத்ரம் செய்தால், அவர் மகிழ்ந்து,தான் கேட்ட விஷ்யத்தைச்
சொல்வார் என்னும்படி ஆகும்.
6-1"கருப்பூரம் நாறுமோ ! கமலப் பூ நாறுமோ !
திருப் பவளச் செவ்வாய் தான் தித்தித்து இருக்குமோ !
மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச் சுவையும், நாற்றமும்
விருப்புற்று கேட்கின்றேன்,
சொல் ஆழி வெண் சங்கே !"
☁️🌺🔔☁️🌺🔔☁️🌺🔔
விளக்கவுரை:
📕📗📘📙📘📕
நல்ல வெண்மையான் நிறமும்,கம்பீரமும் உடைய ஸ்ரீபாஞ்ச ஜந்யம் என்னும் சங்காழ்வானே! குவலயாபீடம் என்னும் யானையின் கொம்பை முறித்த கண்ண பிரானுடைய,திரு அதரத்தினுடைய
ரஸத்தையும்,பரிமளத்தையும் உன்னிடம் ஆசையோடு கேட்கின்றேன்.அவரது
அழகிய பவளம் போன்ற சிவந்த திரு அதரமானது,பச்சைக் கற்பூரம் போல்
பரிமளிக்குமோ? அல்லது,தாமரைப் பூப் போல பரிமளிக்குமோ? இனிப்பான
ரஸத்தை உடைத்தாயிருக்குமோ?--
இன்னபடி யிருக்குமென்று எனக்குச் சொல்வாயாக "
கருப்பூரம் நாறுமோ? கமலப் பூ நாறுமோ?
☁️🌺☁️🌺☁️🌺☁️🌺☁️🌺
பச்சைக்கற்பூரம் சிறந்த வாசனையோடு இருந்தாலும்,சிறிதளவு அதிகமானாலும்,
எறிச்சு,வெட்டியதாய் இருக்கும்--உறப்பாக,எரிக்கும்படியான காரம் உடைத்ததாய். தாமரை மலர்கள் பறித்தபின் சிறிது நேரம் நல்ல,அலர்ந்த மணமுள்ளதாக இருந்தாலும்,ஆறிக் குளிர்ந்து நிலையில் அதன் மணம் அவ்வளவாக இருக்காது.மிகவும் கொண்டாடத்தக்க மணமுள்ள இந்த இரண்டு பொருட்களுக்குமே இப்படிப்பட்ட குறை இருக்கிறது.எனவே வேறு பொருட்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.ஆனால் இது போல எந்தக் குறையும்,எப்போதும் இல்லாதபடி"சர்வ கந்த:"முடையவர் அல்லவா எம்பெருமான்!
சர்வவித நறுமணங்களுக்கும் நறுமணத்
துவம் கொடுப்பவரே பகவான் அன்றோ? அவருடைய திருஅதர நறுமணத்துக்கு முன் கருப்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ? அத்தகைய திரு நறுமணம் எப்படி இருக்கும் என்று சொல் வெண்சங்கே !
திருப் பவளச் செவ்வாய் தான் தித்தித்து இருக்குமோ ?
🍉🍎🍉🍎🍉🍎🍉🍅🍉🍅🍉🍎
திரு அதரங்களைத் தாண்டி, பவளச் செவ்வாய்க்குள் புகுந்து(பெரிதாக ஊதும் வண்ணம்) உள்ளே அனுபவிப்பதைப் பற்றிக் கேட்கிறார்.
'சர்வ கந்த:'என்பது போலே –
'சர்வ ரச :'என்பதாம்.
கந்தத்துக்கு கற்பூரம்/கமலப்பூ என்று சொன்னபடி,ரசத்துக்கு தேன் போல/கன்னல் போலே இருக்குமோ என்று விகல்பித்து கேட்க முடியாதவளாய் இருக்கிறார்.திருஅதர மணத்தை நுகரும் போது பேச முடியும்.ஆனால் பவளச் செவ்வாய் ரசத்தைப் பருகுகையில் பேச முடியாதன்றோ?
"வாய்ப்புக்கு நீராய் ஆழம் காலாய் இருக்கையாலே,வாய்ச்சுவையாய் திகைக்க வைக்கையாலே
இரண்டாவதாக (ஒரு உதாரணம் சொல்லிக்)கேட்க மாட்டாதவள் ஆனாள்"
திருப் பவளச் செவ்வாய் –
🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉
எம்பெருமானின் அழகிய திருவாய் அதரங்கள்,ஆண்டாளின் கண் பார்வை
யில் பட்ட போதிருந்தே, அவரது பார்வை அங்கிருந்து வேறெங்கும்--அவரது மற்ற அவயங்கள் மீதும் படாமல் அங்கேயே நிலைத்து நின்றது; ஏனென்றால் பெருமானின் திருப்பவளச் செவ்வாய் சர்வ இந்த்ரியங்களுக்கும் விஷயமாய் இருக்கிறபடி யாதலால்.--விஷ்யாந்தரங்கள் அல்ல !!
சப்த, ஸ்பர்ச, ரூப,ரச,கந்தங்கள் உண்டாய் இருக்கையாலே எல்லா இந்திரியங்க
ளுக்கும் இரை போடுவது அன்றோ இந்த
த்திருப்பவளச் செவ்வாய்?
சப்தம்--சங்கை வாயில் வைத்து ஊதுவதால்.
ஸ்பர்ச--சங்கு திருஅதரங்களில் படும் போது.
ரூபம்--திருப்பவள--சிவந்த நிறமுடைய--
செவ்வாய் அழகு.
ரசம்--பவளச் செவ்வாயின் அமிர்தம்.
கந்தம்: திருஅதரங்கள்/செவ்வாயின் நறுமணம்.
மருப்பொசித்த மாதவன்:
🐘🐘🌷🌹🐘🐘🌷🌹
குவலயாபீடம் என்னும், கம்சனின் பட்டத்து யானையின்(மதம் பிடித்த யானை) கொம்பை அநாயசமாக முறித்துக் கொன்றவர்.பிராட்டிமாருக்கு எம்பெருமானின் வீரதீர பராக்கிரமச் செயல்கள் உகப்பானவை.கர,தூஷண யுத்தத்தில் பதினாலாயிரம் அரக்கர்களை தனி ஒருவராக நின்று போரிட்ட ராமரின் வீரத்தால் உகந்த சீதாபிராட்டி அவரை அணைத்துக்கொண்டது போல,
மதயானையின் கொம்பை முறித்துக் கொன்ற கண்ணபிரானின் வீரத்தால் உகந்த ருக்மணிப்பிராட்டி அவரை அணைத்துக் கொண்டார்.ஆதலால் மருப்பொசித்த "மாதவன்".
இங்கு,மாதவன் மாதவன் என்றால் எம்பெருமானின் வாய்ச்சுவைக்கு உரியரான பிராட்டிமார்களின் ஸ்ரீயபதி
என்பதுவுமாம்.
வாய்ச் சுவையும் நாற்றமும்:
🍎🍀🍎🌿🍅☘🍎
அநுபவ சமயத்திலே, நாற்றம்--நறுமணம் முற்பட்டதாய் இருந்தாலும்
அநுபாஷிக்கிற--அந்த அநுபவத்தைச் சொல்கிற இடத்தில் ரசம் முற்பட்டு, கந்தம் பிற்பட்டு இருக்கிறது.பொதுவாக ஒருவர் படித்து,கேட்டு அநுபவித்த விஷயங்களை
பிறரிடம் சொல்லும்போது அண்மையில் (இறுதியாகக்) அநுபவித்த விஷயத்தை முதலில் சொல்வது போல.
விருப்புற்று கேட்கின்றேன் சொல்:
🎷🎸📢📣🎷🎸📢📣🎷🎸📢🎙
நான்,நீ பெற்ற பேற்றைக் கொண்டாடி மகிழ்கிறேன்.(உன் மேல்,பொறாமை சிறிதும் இல்லாமல்)உன் அநுபவத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ள மிக விருப்ப
முடன் இருக்கிறேன்.
நீ சொல்வாய் என்று சங்கை,நியமனம் செய்யும் அதிகாரமும் ஆண்டாளுக்கு உண்டே ! சங்கு எம்பெருமானுக்கு சேவகம் செய்யும் அடிமையாதலால்,
அவரது திவ்யமகிஷியான ஆண்டாளும், அவரை அடிமை கொண்டு நியமிக்கி
லாம் என்னும் முறைப்படி சங்கு சொன்ன
படி செய்யும் என்று விருப்புற்று, 'சொல்'
என்று நியமிக்கிறார்.
எம்பெருமானின் சப்த, ஸ்பர்ச,ரூப,ரச,
கந்த அநுபவங்களில் விருப்புற்றுக் கேட்கிறேன் என்றும் அர்த்தம் கொள்ளலாம்.
ஆழி வெண்சங்கே:
🔔🔔🔔🔔🔔🔔🔔🔔
கடலில் பிறந்து வளர்ந்த சங்கு--கடலின் ஆழத்துக்கும்,அகலத்துக்கும்,கம்பீர்யத்துக்கும் தக்கவாறு நீயும் பதில் சொல்ல வேண்டும்.கடல் போன்ற விசாலமான பரந்த மனம் கொண்ட நீ உன் அநுபவத்தைப் பகிர்ந்து கொள்ளலாமே !
கடல் அனைத்துக்கும் தாரகமானால் போலே--நிலப்பரப்பை விட மூன்றுமடங்கு அதிகப் பரப்பை உடைய கடல்,இந்த நிலம் சுபிட்சம் இருக்க பல வளங்களைத் தருகிறது; "ஆழியுட் புக்கு முகர்ந்து கொடு ஆர்த்தேறி" என்னும்படி உயிர் வாழத் தேவையான மழை பொழிய மூல காரணமாக இருக்கிறது.பல கடல்வாழ் உயிரினங்கள்/தாவரங்களை வாழ்விக்
கிறது.அந்த வகையில் கடலில் பிறந்த நீ தக்க பதில் சொல்லி என்னை உயிர் தரிக்கப் பண்ண வேணும்.
வெண் சங்கே :
📢📢📢📢📢📢
உனது தூய வெண்மை நிறம் நெஞ்சிலே பட்டால் போலே,உன் வார்த்தையும் நெஞ்சிலே படும்படி--நெஞ்சுக்கு இதமாக
இருக்கும்படி சொல்ல வேண்டும்
பிரியமானவர்கள் விட்டுப் பிரிந்தால்,
பிரிவாற்றாமையால் தேகம் மெலிந்து வெளுத்துப்போவது இயல்பு.ஆனால் அவரை விட்டு விலகாமல், எப்போதும் அவரது அநுபவம் கிடைத்துக் கொண்டிரு
ந்தாலும் உன் தேகம் வெளுப்பு அடைந்து விட்டது.அவர் எங்கே பிரிந்து விடுவாரோ, என்று, இல்லாத ஒன்றைக் கற்பனை செய்து கூட,தேகம் வெளுக்கும்படி அவர் மேல் பிரியமுடைய நீ தான் எனக்குச் சரியான ஆள்.நான் அவரை விட்டுப் பிரிந்து வெளுத்திருக்கிறேனே ! எனது ஆற்றாமையைச் சரியாகப் புரிந்து,
அதைத் சேர்க்கும்படி பதில் சொல்ல வேண்டும்.
(--அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்)
No comments:
Post a Comment