ஸ்ரீமதே ராமாநுஜாய நம
"உத்தம ஆத்மா...."
திருவரங்கத்தில்.... இருள் சூழ்ந்த இரவு வேளை......
ஊருக்கு மிக வெளியே ஒதுக்குப் புறமானசேரிப் பகுதியில் ஓலை வேயப்பட்ட ஓர் சிறுகுடில்.... சிறு விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது.... மங்கலான வெளிச்சத்தில் முனகலான ஓர் குரல் பிணியின் வலியிலும்...." நாராயணா... நாராயணா என்று பகவானின் சிந்தையிலேயே... படுத்திருந்த.... மெலிந்த தேகம் உடைய ஓர் உத்தம ஆத்தமாவின் திருவாயிலிருந்து மலர்ந்து கொண்டிருந்தது.... அவரின் திருநாமம் மாறனேர் நம்பி.... ஆசார்ய பிரசாதமாக தமது ஆச்சார்யர் ஆளவந்தாரிடமிருந்து விரும்பி கேட்டுப் பெற்ற நோயின் வலியும்.... தீவிரமும் அவரை அசைய விடாமல் அடித்து விட்டிருந்தது.... ஆளவந்தார் திருவடிகளே எண்ணிக் கொண்டு தம் நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தார்....
இந்த உலகில் அவர் அறிந்ததெல்லாம் இரு ஜோடி திருப்பாதங்கள் மட்டுமே.... ஒன்று அரங்கனுடையது.... மற்றொன்று ஆச்சார்யர் ஆளவந்தாருடையது.... ஞான... கர்ம... பக்தியோகங்களால் எட்ட முடியாத மிக உயரிய நிலையைப் பாதாரவிந்தங்களைச் சரணடைந்து எட்டிப் பிடித்தவர் அவர்....
கண்ணை மூடித் திறப்பதற்குள் காலம் உருண்டு விடுகிறது..... ராமாநுஜருக்கு மாறனேர் நம்பியை இன்னும் சந்திகா திருப்பதன் ஏக்கம் வாட்டியெடுத்தது.... பெரிய நம்பி அப்படிப்பட்டவர் அல்லர்.... ஒன்று சொன்னால் உடனே செய்பவர்.... அதுவும் தம் விஷயத்தில் தாமதமோ.... அலட்சியமோ அவரால் நினைத்துப் பார்க்க முடியாதது.... ஆனாலும் ஏன் இன்னும் தம்மை அழைத்துச் செல்லவில்லை.... ?
இடையில் பல முறை இருவரும் சந்தித்துப் பேசிய போதெல்லாம் ராமாநுஜர் நினைவு படுத்தத் தவறவில்லை....
"ஸ்வாமி.... அடியேனுக்குப் பரமபாகவதரான மாறனேர் நம்பியை தரிசிக்கும் பாக்கியம் இன்னும் கிடைத்த பாடில்லை.... நீங்கள் ஏற்பாடு செய்வாதகச் சொன்னீர்கள்....
" விரைவில்... ஒரு நாள் சென்று வருவோம் உடையவரே.... " என்றார் பெரிய நம்பி....
ஆனால் காலம் ஒன்று தான் விரைவில் நகர்ந்து கொண்டிருந்த தே தவிர..... காரியம் கைகூடிய பாடில்லை..... காரணம் என்னவாக இருக்கும்....? அநேகமாக தினமும்... போகிறார் ஒரு நாள் கூடவா.... அடியேன் நினைவு வராது போகும்....?
என்னவாக இருந்தாலும்.... அதை தெரிந்து கொள்ளாமல் தீர்மானமாக விடுவதில்லை.... அன்றைக்குப் பெரிய நம்பியைப் பின் தொடர்வதெனத் தீர்மானித்தார்.....
அன்று......
இருட்டி ஒரு நாழிகை கழிந்த பிறகு பெரிய நம்பி தம் மாளிகையிலிருந்து புறப்பட்டார்.... ஒரு திருக்கரத்தில் தூக்குச் சட்டி.... அதில்பிரசாதம்.... மறு திருக்கரத்தில் மருந்துப் பெட்டி....வெளியே வந்த பெரிய நம்பி.... சாலையின் இருபுறமும் திரும்பி ஒரு பார்வை பார்த்தார்.... நடமாட்டம் இல்லை.... விறுவிறுவென நடக்க ஆரம்பித்தார்.....
கண்ணெட்டாத தொலைவில் ஒதுங்கி நின்று இதனைக் கவனித்த உடையவர்.... சத்தமின்றித் தாமும் பெரியநம்பியை பின் தொடர ஆரம்பித்தார்.....
விசித்திரம்தான்.... இப்பேர்ப்பட்ட மகான்.... ஞானாசிரியர் யாருக்குப் பயந்து .... எதற்காக இப்படி இருட்டிய நேரத்தில் பதுங்கிப் பதுங்கி வெளியே போகிறார்....?
பெரிய நம்பி கிளம்பிய கணத்தில் இருந்து நிற்கவேயில்லை.... மூச்சிறைக்க நடந்து கொண்டே இருந்தார்.... ஊருக்கு வெளியே இருந்த சேரிப்பகுதியை அடைந்தபோது .... அங்கும் நடமாட்டம் இல்லை.... மேலும் எட்டிப் போட்டு வேகமாக நடக்க ஆரம்பித்தார்....
ராமாநுஜரும் விடாமல் பின்தொடர்ந்தார்.... மறக்க முடியாத பேரனுபவம் ஒன்று வாய்க்கத்தான் போகிறது என்பது அவருக்குப் புரிந்து விட்டது..... ஊரார் உறங்கினும் தானுறங்கா உத்தமராக இந்த பெரிய நம்பி என்னவோ செய்து கொண்டிருக்கிறார்..... சர்வ நிச்சயமாக நல்லதாகத்தான் இருக்கும்.... ஆனால் அதை இப்படி ஒளித்துச் செய்ய என்ன அவசியம்....? புரியவில்லை'....
குடிசை ஒன்றை அடைந்ததும் பெரிய நம்பி வேகம் தணிந்தார்.... சத்தமின்றி நெருங்கி...கதவைத் திறந்தார்.... உள்ளே
மாறேனேர் நம்பி படுத்திருந்தார்.... ஆஹா.... என்று சிலிர்த்துப் போனது ராமானுஜருக்கு.....
'சுவாமி, மெல்ல எழுந்திருங்கள். அடியேன் பெரிய நம்பி வந்திருக்கிறேன்.' குரல் தெளிவாகக் கேட்டது. ராமானுஜர் வியப்பும் திகைப்புமாக அக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார்.மாறனேர் நம்பியால் எழுந்து உட்காரக் கூட முடியவில்லை. தள்ளாமையும் நோய்மையும் அவரை அடித்துச் சாய்த்திருந்தன. பெரிய நம்பியே அவரைக் கைத்தாங்கலாக எழுப்பி உட்கார வைத்தார். பிறகு ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து வந்து வைத்து, ஒரு மெல்லிய துணியை அதில் நனைத்துப் பிழிந்து அவரது மேனி முழுதும் துடைத்து விட்டார். எடுத்து வந்திருந்த மருந்துப் பெட்டியைத் திறந்து களிம்பெடுத்து அவரது காயங்களில் பூசினார். வெளியே வந்து கைகளைக் கழுவிக்கொண்டு மீண்டும் உள்ளே சென்று மாறனேர் நம்பிக்கு உணவளிக்க ஆரம்பித்தார்.'உடையவருக்குத் தங்களை தரிசிக்க வேண்டுமாம். விடாமல் கேட்டுக்கொண்டே இருக்கிறார் சுவாமி. ஆனால் எனக்கு இந்தப் பொல்லா உலகை நினைத்தால்தான் கவலையாக இருக்கிறது.'மாறனேர் நம்பி புன்னகை செய்தார்.'எம்பெருமான் உலகைப் படைத்தான். எம்பெருமானாரோ வைணவ உலகில் எத்தனை எத்தனையோ மக்களைக் கொண்டு சேர்த்துக்கொண்டே இருக்கிறார். அவரது பிரசங்கம், அவரது சுபாவம், அவரது சிநேகபாவம் இதெல்லாம் ஆயிரமாயிரம் பேரை எங்கெங்கிருந்தோ கொண்டு வந்து இங்கு தள்ளுகிறது. சுத்த ஆத்மா அவர். அவரது பணிக்கு எந்த ஓர் இடையூறும் வந்துவிடக் கூடாதே என்றுதான் எனக்குக் கவலையாக இருக்கிறது.''புரிகிறது.''ஒவ்வொரு முறை என்னைச் சந்திக்கிற போதும் தங்களைப் பற்றி விசாரிக்கிறார். இன்னும் தங்களைக் காண முடியாத ஏக்கத்தைத் தெரியப்படுத்துகிறார். அவருக்கு நான் எப்படிப் புரியவைப்பேன், என்ன சொல்லித் தெரியப்படுத்துவேன் என்றே புரியவில்லை சுவாமி.''புரியவைப்பதும் தெளிய வைப்பதும் உடையவருக்கு அவசியமில்லை பெரிய நம்பிகளே. நமது ஜனங்களுக்குத்தான் இதெல்லாம் அவசியம். அந்தணன் என்றும் பஞ்சமன் என்றும் இனம் பிரித்து வைத்தே பழகி விட்டார்கள். நமது ஆசாரியர் ஆளவந்தார் என்னைக் கீழ்க்குலத்தவன் என்று நினைத்திருந்தால் என்னை அண்ட விட்டிருப்பாரா? எத்தனை ஞானத்தை நம் தலைகளில் இறக்கி வைத்தார்! மழை கொடுக்குமோ அதெல்லாம்? நிலம் தருமோ அந்தளவு? புவியளவு பரந்த மனம் படைத்த மகானிடம் நாம் பாடம் கற்றிருக்கிறோம். ஜனங்களுக்கு அப்படிப்பட்ட ஆசிரியர்கள் கிடைக்காது போய்விட்டார்கள்.''உடையவர் அப்படியொரு ஆசாரியர் தாம் சுவாமி. நம்மாலும் நமது தலைமுறையாலும் மாற்ற முடியாத சமூகத்தை உடையவர் மாற்றுவார்.அற்புதங்கள் அவர்மூலம் நிகழ வாய்ப்புகள் அதிகம். ஏனெனில், அவர் ஒரு சக்தி. அவர் ஒரு விசை. படைக்கப்பட்டபோதே செலுத்தப்பட்ட வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறவர்.'சந்தோஷம். அவர் செயல்படட்டும். என்னைச் சந்திப்பதில் என்ன இருக்கிறது? என் ஆசீர்வாதம் என்றும் அவருக்கு உண்டு என்பதை மட்டும் தெரியப்படுத்தி விடுங்கள்.'பேசியபடி அவர் உண்டு முடித்தார். பெரிய நம்பி அவருக்கு வாய் துடைத்துவிட்டு, பருக நீர் கொடுத்தார். சிறிது ஆசுவாசமடைந்த பிறகு அவரைப் படுக்க வைத்துவிட்டு, 'நாளை வருகிறேன் சுவாமி' என்று விடைபெற்றுக் கொண்டு கிளம்புவதை ராமானுஜர் பார்த்தார்.சட்டென்று அவருக்கு முன்னதாகக் கிளம்பி விறுவிறுவென்று நடக்கத் தொடங்கினார்.
"உய்ய ஒரே வழி உடையவர் திருவடி"
"எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்"
அடியேன்
வகுளாபரணராமாநுஜதாசன்🙏🙏🙏
No comments:
Post a Comment