Sunday, September 19, 2021

I want mango - Periyavaa

*மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - நேக்கு மாம்பழம் வேணும்*

_சொன்னவர்-.ராதா ராமமூர்த்தி,புதுக்கோட்டை_

_தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா_

ஸ்ரீ மடத்தில் பெரியவா பலருடன் பேசிக்கொண்டு மந்தஹாஸமாக தரிசனம் தந்து கொண்டு இருந்தார். அவருக்கு முன்பு பலவிதமான பழங்கள் தட்டு தட்டாக வைத்திருந்தது.புரட்டாசி,ஐப்பசி மாதம் என்று நினைவு.

அப்போது கூட்டத்தில் ஒரு பெண் குழந்தை சுற்றி சுற்றி வந்தது.பெரியவா அந்த குழந்தையை அழைத்து "இதில் உனக்கு என்ன பழம் வேணுமோ, அதை எடுத்துக்கோ" என்றார்கள்.அங்கு அன்னாசி , ஆப்பிள், திராக்ஷை,கொய்யா,ஆரஞ்சு முதலிய எல்லாவிதப் பழங்களும் இருந்தன.

ஆனால், அக்குழந்தை "நேக்கு மாம்பழம் வேணும்" என்றது.

அது மாம்பழ காலம் இல்லை. மாவடு கூட ஆரம்பிக்கவில்லை.பெரியவா யோசிக்கலானார்!.

"வேதபுரி! உள்ளே மேட்டூர் ஸ்வாமிகிட்ட ஏதாவது மாம்பழ வத்தல் மாதிரி இருக்கா, பாரு" என்று சொல்லிவிட்டு கண்ணை மூடிக்கொண்டு தியானத்தில் அமர்ந்துவிட்டார்.

அச்சமயம் கூட்டத்தை விலக்கிகொண்டு ஆந்திராவிலிருந்து இருவர், பழத்தட்டுடன் வந்தார்கள்.

அதில் பெரியதாக இரண்டு மாம்பழங்கள். பெரியவா கண்ணைத் திறந்தார்.

அக்குழந்தையை அழைத்து, "எடுத்துக்கோ" என்றார். அது ஒரு பழத்தை சந்தோஷத்துடன் எடுத்துக் கொண்டது.

வேதபுரி திரும்பி வந்து,"அங்கு ஒன்றுமில்லை" என்று சொல்லிவிட்டு குழந்தை கையில் பழத்தைப் பார்த்து திகைத்தார்.

"ஏண்டா! மாம்பழம் எப்படி வந்தது?" என்று பெரியவா.

"பெரியவா நினைச்சேள்! பழம் வந்தது!" என்று கண்களில் நீர் வழிய வேதபுரி உணர்ச்சிவசப்பட்டு கூறினார்.

எதிரில் நின்றிருந்த நாங்களும் பெரியவாளின் சக்தியை கண்ணால் பார்த்து ஆனந்தமடைந்தோம்.

மாம்பழத்தைக் கொண்டுவந்த ஆந்திரக்காரர்கள் அப்புறம், எங்கே தான் போனார்களோ? நம் கண்ணில் படாத ஊருக்கோ?

பெரியவா சரணம்!

_தொகுப்பு: பெரியவா குரல்_ | https://t.me/perivakural

*An initiative of Kanchi Periva Forum - www.periva.org | www.anusham.org | www.mahaswami.org*

No comments:

Post a Comment