**ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ... ஸ்ரீமத் வரவரமுநயே நமஹ...* 🙏🙏🙏
           *தஸாவதாரம்* 
   *ஸ்ரீபரசுராமவதாரம்* 
 *பகுதி 01* 
     பெருமாளின் அவதாரங்களில் இது 6வது அவதாரமாகும்: ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகாவுக்கும் மகனாக எடுத்த அவதாரம் பரசுராமன். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை உலகத்திற்கு உணர்த்திய அவதாரம். இன்றும் மகேந்திரமலையில் சிரஞ்சீவியாக தவம் செய்து கொண்டிருக்கிறார்.
      பிரம்மதேவருடைய புத்திரர் அத்திரி மகரிஷி. அவருக்கு ஒருநாள் ஏற்பட்ட ஆனந்தக் கண்ணீரில் உதித்தவர் சந்திரன். அவரை பிரம்மா, பிராமணர்கள், ஒளஷதி மற்றும் நட்சத்திரங்களுக்கு அதிபதி ஆக்கினார். இந்த சந்திர வம்சத்தில் தோன்றியவர்களில் காதிராஜன் என்ற மன்னன் பிரசித்தி பெற்றவன். அவனுக்கு சத்தியவதி என்ற பெண் பிறந்தாள். அந்தப் பெண்ணை பிருகு புத்திரரான ரிசிகன் என்ற பிராமணன் தனக்குத் திருமணம் செய்து கொடுக்கும்படி யாசித்தான். சத்தியவதிக்கு இவன் ஏற்ற கணவன் அல்ல என்று எண்ணிய காதிராஜன், எப்படியாவது அவனைத் தட்டிக் கழிக்க ஓர் உபாயம் செய்தான். அவன் ரிசிகனைப் பார்த்து, பிராமணரே! நீர் என் பெண்ணுக்கு நான் கேட்கும் பொருளைக் கன்னிகா தானமாகத் தரமுடியுமா? என்று வினவினான். என்ன திரவியம் கேட்கிறீர், சொல்லும் என்றான் ரிசிகன். ஆயிரம் குதிரைகள்  தர வேண்டும். அந்தக் குதிரைகளின் காதுகளில் ஒன்று பச்சைப் பசேல் என்றிருக்கும். மற்ற அங்கங்கள் எல்லாம் மிகவும் தூய வெள்ளையாக இருக்கும். இப்படிப்பட்ட தெய்வ ஜாதி குதிரைகளைக் கொண்டு வந்து கொடுத்தால் நீர் திருமணம் செய்ய நான் சத்தியவதியைக் கன்னிகாதானம் செய்கிறேன் என்றான் காதிராஜன். ரிசிகன் நேரே வருணனிடம் சென்று அப்படிப்பட்ட குதிரைகள் பெற்றுக்கொண்டு வந்து காதிராஜன் முன்பு நிறுத்தினான். இதைக் கண்டதும் காதிராஜன், ஆகா! நான் எது சாத்யமாகாது என்று நினைத்துச் சொன்னேனோ அதனையே இவன் எளிதாகச் செய்து முடித்து விட்டான். இனியும் இவனைப் பரிசோதனைக்கு ஆளாக்கினால் ஓர் அந்தணனுடைய சீற்றம், சாபங்களுக்கு இலக்காக நேரிடும்! என்று சிந்தித்தான். சத்தியவதியை அவனுக்குத் திருமணம் செய்து தந்தான். கொஞ்ச காலம் சென்றதும் சத்தியவதிக்கு தனக்கு ஓர் உத்தமமான பிள்ளை பிறக்க வேண்டும் என்று ஆசை வந்தது.
       அதே சமயம் சத்தியவதியின் தாய் காதிராஜனுடைய பத்தினிக்கும் அதே ஆசை ஏற்பட்டது. ஆனால் தனக்குப் பிறப்பவன் பராக்கிரமசாலியாக இருக்க வேண்டும் என நினைத்தாள். அவர்கள் இருவரின் ஆசைகளையும் நிறைவேற்றும் பொருட்டு ரிசிகன் யாகப் பிரசாதமான இரு கவளை அன்னத்தை வீட்டிற்கு எடுத்து வந்தான். அவைகளில் ஒன்றில் உத்தமமான ஞானக்குழந்தை பிறக்குமாறு மந்திர உச்சாடணம் செய்தான். மற்றொன்றில் தன் மாமியார் விரும்பும் பராக்கிரமம் மிகுந்த பிள்ளை பிறக்க வேண்டும் என்று மந்திர ஆவாகனம் செய்தான். உத்தமனும் ஞானியும் பிறக்குமாறு ஓதிய முதல் கவளை அன்னத்தை விவரமாகச் சொல்லி சத்தியவதியை உண்ணும்படி சொன்னான். மற்ற ஒன்றை தன் மாமியாரிடம் கொடுக்கும்படி சொன்னான். அன்னக் கவளைகளை அளித்து விட்டு ரிசிகன் ஆற்றுக்கு குளிக்கப் போனான். உள்ளூர தனக்கு ஒரு அந்தணனாக ஞானியாகப் பிள்ளை பிறப்பான் என்றும், தன் மாமியாருக்கு பராக்கிரமம் மிக்க க்ஷத்திரிய வீரன் பிறப்பான் என்றும் நம்பிக்கை இருந்தது. குளித்து விட்டு வீட்டுக்கு வந்தான். அதற்குள் சத்தியவதி தன் மருமகன் தன் மனைவிக்கு விஷேசமான அன்னத்தை அளித்திருப்பார் என்று தன்னுடைய அன்னத்தை மகளுக்கும், மகனுடைய அன்னத்தை தானும் உண்டு விட்டனர். ரிசிகனுக்குப் பிள்ளையாக ஜமதக்னி பிறந்தார். சத்யவதி பின்னர் தன் வாழ்க்கையைத் துறந்து கௌசிகா என்ற நதியாக மாறிவிட்டாள். ஜமதக்னி ரேணு என்பவருடைய புத்திரியான ரேணுகா தேவியைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு வசுமனன் முதலான புத்திரர்கள் பிறந்தார்கள். அவர்களுள் ராமன் என்பவன் கடைசியாகப் பையனாகப் பிறந்தார். அவன் பரந்தாமனுடைய அம்சமாக அவதரித்தான். அவனே பூலோகத்தில் இருபத்தொரு க்ஷத்திரியப் பரம்பரையை வேரோடு அழித்தவன். இவன் சிவபெருமானை நோக்கித் தவம் செய்து பரசு என்ற கோடரியைப் பெற்ற காரணத்தால் இவனுக்குப் பரசுராமன் என்ற பெயர் ஏற்பட்டது. தாய் தந்தையரிடம் மிகவும் அன்பு கொண்டவன் பரசுராமன். ரேணுகாதேவியின் மற்றொரு பெயர் சீலவதி என்பதாகும். அவள் தன் கணவனைத் தவிர உலகில் வேறு தெய்வமே கிடையாது என்ற கொள்கையும் நினைப்பும் கொண்டவள். தினமும் அவள் ஆறு, குளம் போன்ற நீர் நிலைக்குச் சென்று அங்கே மண்ணைக் கையில் எடுத்துப் பிசைவாள். நான் கற்புக்கரசி என்பது உண்மையானால் நான் பிசைந்த மண் அழகியதொரு மண்குடமாக மாறட்டும்! என்பாள். அது குடமாக மாறும். பின்பு அதில் தண்ணீர் கொண்டு வருவாள். இது அவளுக்கு வாடிக்கை. இப்படிக் கொண்டு வந்த தண்ணீரைத்தான் அவள் கணவராகிய ஜமதக்னி முனிவருடைய பூஜைக்கு வழங்குவாள்.
     சூரிய குலத்திலே கேகய நாட்டை ஆண்டு வந்த கிருதவீரியன் என்பவனுக்கும் சுனந்தை என்பவளுக்கும் கார்த்தவீர்யார்ச்சுனன் என்பவன் பிறந்தான். அவன் பிறக்கும் போது கைகள் கிடையாது. அதைக் கண்டு பெற்றோர்கள் மிகவும் வருந்தினார்கள். தன் கையிலாக் குறை நீங்க கார்த்தவீர்யார்ச்சுனன் தத்தாத்திரேயரையே உபாசித்து வந்தான். தத்தாத்திரேயர் என்பவர் அத்திரி முனிவருடைய புதல்வர். அத்திரிமுனி பரந்தாமனிடம் அவரே வந்து தனக்குப் பிள்ளையாகப் பிறக்க வேண்டும் என விரும்பினார். ஆகவே ஸ்ரீஹரி அம்சமாகத் தத்தாத்திரேயர் அவதரித்தார். அவரைத் தான் அவன் வழிபட்டு வந்தான். அவரை நோக்கித் தவம் செய்த காரணத்தால் அவனுக்கு ஆயிரம் கைகள் முளைத்தன. அதுமட்டுமல்ல. அவனைக் கண்டால் பகைவர்கள் பயப்படும் தன்மையையும் இந்திரிய சக்தி, செல்வம், பொருள் மற்றும் யோகஞான சக்திகளையும் அவன் பெற்றான். இத்தகைய சீரும் சிறப்பும் பெற்றதினால் மிகுந்த செருக்குடன் இருந்தான். தத்தாத்திரேயரிடம் பெற்ற வரத்தால் அவன் காற்றைப் போல எங்கும் தடையின்றித் திரியும் வல்லமையும் பெற்றிருந்தான். அதனால் மூன்று உலகங்களிலும் சஞ்சரித்து வந்தான். ஒரு சமயம் நர்மதா நதியில் தன் பத்தினிகளுடன் நீராடச் சென்றான். தன் ஆயிரம் கைகளால் நீரை ஏரி போல் தேக்கி அதில் நீராடி மகிழ்ந்தனர். நதியின் மேற்புறமாக திக் விஜயம் செய்வதற்காக இராவணன் ஆற்றில் வெள்ளமே இல்லாத இடத்தில் தன் லிங்கத்தை வைத்து சிவபூஜை செய்தான். நீராடி முடித்ததும் கார்த்தவீரியார்ச்சுனன் தான் அணைபோல் வைத்திருந்த தன் ஆயிரம் கைகளை எடுத்ததான். அப்போது நீர் வேகமாக பிரவாகம் எடுத்து பூஜை செய்து கொண்டிருந்த ராவணனின் பொருட்களை அடித்துச் சென்றது. இதை அறிந்த ராவணன் கார்த்தவீரியனோடு சண்டைக்குப் போனான். கார்த்தவீரியனோ ராவணனை தோற்கடித்து தன் பட்டணமான மாகிஷ்மதிக்குக் கொண்டு சென்று சிறைவைத்தான். இதை அறிந்த புலஸ்தியர் கார்த்தவீரியனை மிகவும் வேண்டிக் கொண்டு ராவணனை மீட்டுச் சென்றான்.
 *ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்* 🙏🙏🙏
 *வானமாமலை  ராமானுஜ ஜீயர் திருவடிகளே சரணம்* 🙏🙏🙏
நாளையும்  ஸ்ரீபரசுராமாவதாரம்   தொடரும் ....
🙏 *சர்வம் கிருஷ்ணார்ப்பனம்* 🙏*
No comments:
Post a Comment