Thursday, March 4, 2021

White akshadai

Courtesy:Smt.Padma Gopal

பகுதி −4..)
மஞ்சள் கலந்த மங்களாக்ஷதையை விடவும், அதி விஷேஸமானது ஒன்று உண்டென்றால், அது "ஸ்வேதாக்ஷதை"யே.
"ஸ்வேதம்" என்பது வெண்மை நிறத்தைக் குறிக்கிறது.
மஞ்சளும், நெய்யும் சேராத வெறும் வெள்ளைப் பச்சரிசியை, சில நேரங்களில், "ஸ்வேதாக்ஷதை"யாகப் பயன்படுத்துகிறோம்..
அது எப்பொழுது?..
அனைவரும் அறிந்ததே இது!
பித்ரு கைங்கர்யங்களான தர்ப்பணங்கள், ச்ரார்த்தங்கள் இவற்றில், "ஸ்வேதாக்ஷதை"யே உபயோகம் செய்கிறோம்.
அது ஏன்?..
"அசுப" காரியம் என்பதால், மஞ்சள் சேர்ப்பதில்லை என்ற சிலரின் கூற்று, மாபெரும் தவறான செய்தியையே நமக்குத் தருகிறது.
பெரியோர்கள் வாயிலாக அறிந்த, சரியான விளக்கத்தை இங்கே பகிர்கிறேன்...
விஞ்ஞான ரீதியாகவும், வெண்மை நிறத்தில் அனைத்து நிறங்களும் ஐக்கியமாகி உள்ளன என்பது நிரூபிக்கப்பட்ட நிஜம்.
அதன்றியும், ஒவ்வொரு நிறத்திற்கும், அதுஅதற்கென்றே சில குணாதிசயங்கள் உள்ளன என்பதும் நிறுவப்பட்ட உண்மையே.
வெண்மை நிறம், தன்னகத்தே அனைத்து நிறங்களையும் கொண்டுள்ளதால், ஸ்வபாவமாகவே, அத்தனை நிறங்களின் நன்மைகளையும் அதனால் எளிதில் வெளிப்படுத்த இயலும்.
ப்ரதானமாக, வெண்மை நிறமானது, அமைதி, நிம்மதி, சமாதானம் இவற்றின் அடையாளமாக இருப்பதோடு, இவற்றைத் தருகின்ற இயல்புமுடையது.
ஆயிரம் மங்கலங்கள் வாய்க்கப் பெற்றாலும், நமது வாழ்க்கையில், "மன நிம்மதி" அல்லவா பெருஞ்செல்வம்?
இது "ஸ்வேதாக்ஷதை"யில் நிரம்பி இருக்கின்றது.
ஆம்.. மங்கலாக்ஷதை மூலம் கிடைத்தற்கரிய மனநிம்மதியும், அமைதியும், பித்ருக்கள் ஆசிர்வதிக்கின்ற "ஸ்வேதாக்ஷதை"யில் உள்ளது என்கின்றனர் விஷயமறிந்த பெரியோர்.
மகேசனால் (இறைவனால்) தரவியலாததையும், நம் முன்னோர்களால் தந்துவிட முடியுமாம்!
ஏனென்றால், இறைவனுக்கு நாம் அனைவருமே சமம்!
ஆனால், நம் முன்னோர்களுக்கு அப்படியல்ல!
இந்தப் புவி நீங்கிச் சென்றாலும், தத்தமது வம்சத்தின் மீது அவர்களது ஆசையும், பாசமும் குறைவதே இல்லையாம்!
பித்ரு (முன்னோர்கள்) கார்யங்களை, நாம் சிரத்தையோடு செய்தோமானால், அவர்கள் "ஸ்வேதாக்ஷதை" மூலமாகத் தருகின்ற ஆசிகளைப் பெற்று, நம்வாழ்வில் அமைதியையும், நிம்மதியையும் எளிதில் அடைந்து விடலாம் என்பதே நிதர்ஸனம்!
அதனால்தான், நமது திருமண வைபவங்களில், மங்கலாக்ஷதை பயன்படுத்தப்பட்டாலும், சில இடங்களில், இன்றும், பித்ருக்களின் ஆசிகளையே முக்கியமாகக் கொண்டு, "ஸ்வேதாக்ஷதை"யை உபயோகிப்பதும் பழக்கத்தில் இருக்கிறது.
அடுத்ததாக, ருத்ர (சிவ) பூஜைகளில் ஸ்வேதாக்ஷதை பயன்படுத்தப் படுத்துவதை நாம் பார்த்திருக்கிறோம்..
அதன் காரணம், இன்னமும் ஸ்வாரஸ்யமாக இருக்கிறது..
"சிவம்" என்ற சொல்லுக்கு "மங்கலம்" என்பது பொருள்.
விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில்கூட, எம்பெருமானுக்கு "சிவ" நாமம் வருகிறது என்பதை நாமறிவோம்.
அப்படிப்பட்ட, மங்கல ரூபனான இந்த சிவன், "பரம சிவன்" ஆனது எப்பொழுது?
என்று புனிதமான கங்கையை, தன் சிரசில் தாங்கினானோ, அப்பொழுதே, அவன், "பரம" சிவனாக (பரம பவித்ரனாக) ஆகிவிட்டானாம்!
என்றால், கங்கையால்தான் சிவனது பவித்ரத்தன்மை கூடியுள்ளதா என்று கேட்கலாம்..
லௌகீக வாழ்க்கையில் கூட, நமக்கென்று சில பெருமைகள் இருந்தாலும், நமது குழந்தைகளால் வருகின்ற பெருமை அல்லவோ, உள்ளபடியே நம்மை உலகத்திற்கு உணர்த்துகிறது!
அதுவே போல, இறைவனின் படைப்பு, இறைவனுக்கே பெருமை சேர்க்கிறதாம்!
அதனால், சிவபூஜையில், தனியாக, இன்னொரு "மங்கல வஸ்துவாக" மஞ்சள் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லாது போய்விட்டதாம்!
இப்படியாக, "கங்கையின் புனிதத்திற்கு ஈடில்லை" என்பதை ஏழுலகங்களுக்கும் தெரியப்படுத்தவே, "ஸ்வேதாக்ஷதை" சிவ பூஜையில்மட்டும் பயன்படுத்தப்படுகிறதாம்!
சரி, அப்படியானால், விஷ்ணு பூஜைகளில் ஏன் மங்கலாக்ஷதை?.. எனில் அவர் "மங்கல ஸ்வரூபம்" இல்லையா? என்று கேட்கப்படலாம்..
சாக்ஷாத், மஹாவிஷ்ணுவின் திருவடிகளில் உற்பத்தியானவள் அன்றோ "கங்கை!"
மங்கலத்தின் பிறப்பிடமே, அவன் திருவடிகள்தானே!..
அப்படியிருக்க, மங்கலாக்ஷதையின் அவசியம் இங்குமட்டும் என்ன?..
இறைவன் திருவடிகளில் இருந்து புறப்பட்டிருப்பவள், ஒரு பெண் என்பதால், அவள் எத்தனை புனிதமானவளாக இருந்தாலும், அவளுக்கு, "மங்கலமான" பொருளைத் தந்து, நம்மையும் மங்கலப்படுத்திக் கொள்வதாக ஐதீகமாம்!
எத்தனை நுணுக்கமான விளக்கங்கள்!
மெய் சிலிர்க்க வைக்கின்றது நமது பெரியோர்களின் ஈடுபாடும், பக்தியும்!
"அக்ஷதை" மூலமாக, நமது வாழ்க்கைக்குத் தேவையான ஸகல சௌபாக்யங்களையும் காட்டித்தந்த நம் பெரியோர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, அதன் மகிமைகளை இனி முழுமையாக உணர்ந்து பயன்படுத்துவோமாக!

No comments:

Post a Comment