Courtesy:Smt.Padma Gopal
கண்ணன் சரிதம்...ஒரு சுருக்கமாய்..)
வான்நிலா வந்ததோ,
விடியலாய் புவியிலே?
தேன்நிலா துளிர்த்ததோ,
தேவகி வயிற்றிலே?
ஆளிலா வேளையிலே,
அடைமழையின் போதிலே,
அன்னையை நீங்கியே−
ஆயர்பாடி சென்றதோ?
சீராட்டும் பாக்கியம்−
சோதைக்குத் தந்ததோ?
சிறுவாயுள் மண்வைத்து−
மறைபொருளென உரைத்ததோ?
கட்டுக்காவல் மீறியே,
அட்டகாசம் செய்ததோ?
எட்டெழுத்துட் பொருள்,
எங்கும் ஓடித்திரிந்ததோ?
பேய்ச்சிமுலை உண்டுமே−
பேரருளும் தந்ததோ?
ஆய்ச்சியரை அலைக்கழித்து−
அள்ளிவெண்ணைத் தின்றதோ?
ஆயர்பாடியுள் நுழைந்த
அவுணரை வரிசையாய்,
அடுத்தடுத்து முடித்ததோ?
அல்லலெல்லாம் தீர்த்ததோ?
நச்சுப்பாம்பின் ஆணவத்தை−
நடம்செய்து கொய்ததோ?
நிற்காத பெருமழைக்கு,
நின்றுகுடையும் பிடித்ததோ?
கோபியரின் காதலுக்கு,
கனிந்து தன்னைஈந்ததோ?
கோபரொடு கன்றுமேய்த்து,
கட்டுச்சோறும் தின்றதோ?
ஆனைசெற்று நின்றவீரம்,
அம்மானையும் செற்றதோ?
அன்னைதந்தை விலங்கறுத்து,
அதன்கடமை செய்ததோ?
ஐவரது பத்தினிக்கு,
ஆடைசுரந்து தந்ததோ?
ஆங்கவளும் சூளுறைக்க,
அதற்குதவ வந்ததோ?
பஞ்சவர்க்குத் தூதுசென்று,
போருக்குத் துணைநின்றதோ?
போர்தட்டில் நின்றுகொண்டு,
பெரும்கீதையும் சொன்னதோ?
பார்த்தனுக்குப் பக்கமிருந்துப்
பலகாரியம் செய்ததோ?
தீர்த்தனவன் தயையினிலே,
தருமம் நிலைப்பெற்றதோ?
கடமைமுடித்து, கன்னிராதை,
கரம்பிடித்துக் களித்ததோ?
கழல்பிடித்த மாந்தர்எம்மைக்
கூடிநின்று காத்ததோ?
வான்நிலா மண்ணிலே,
வைகறையாய் வந்ததோ?
ஊனிலே மேவிநாமும்−
உய்யவழியும் செய்ததோ?
No comments:
Post a Comment