Tuesday, March 2, 2021

Two eyes of Vittala

தெவிட்டாத விட்டலா: J K SIVAN
விட்டலனின் இரு கண்கள்"
நாம் தேவ் ஒரு விசித்திர குழந்தை. ரெண்டு வயசிலேயே நிறைய பேசியவர். அவர் வாயில் உதித்த முதல் வார்த்தை "விட்டலா". பிறகு அவர் அந்த ஒரு வார்த்தையையே அடிக்கடி உச்சரித்துக் கொண்டிருந்தார். அம்மாவின் கையைப் பிடித்துக்கொண்டு பாண்டுரங்கனின் கோவிலுக்குச் செல்வது அவருக்குப் பிடித்த ஒரு காரியம். ஏழு வயசிலே தானே ஒரு ஜாலரா செய்து அதை ஒசைப் படுத்திக் கொண்டு ஆடிப் பாடிக் கொண்டு இருப்பார். குழந்தை பக்தர்களில் ப்ரஹலாதனைப் போன்றவர் நாமதேவர். உணவிலோ, தூக்கத்திலோ. பள்ளிக்குச் சென்று கற்பதிலோ கொஞ்சமும் விருப்பமே இல்லை. விட்டலனை என்றும் ஒரு தெய்வமாக நாம் பார்ப்பதுபோல அவர் நினைக்கவே இல்லை. தோழனாகவும் சகோதரனாகவும் தான் விட்டலன் அவருக்கு தோன்றினான்.
நாமதேவருக்கு வயதானது. வேலை செய்வதிலோ, சம்பாதிப்பதிலோ கொஞ்சம் கூட புத்தி போகவில்லை. மற்றவர்களுக்கு அவர் மேல் வீட்டில் வெறுப்பு தான் வளர்ந்தது. அவருக்கோ விடோபா மேல் விருப்பு அதிகமாக வளர்ந்து கொண்டே வந்தது. ஞானப்பைத்தியம். கல்யாணம் பண்ணினால் பைத்தியம் தீரும் என்று எதிர்பார்த்து கல்யாணமாகி ஒரு குழந்தையும் பிறந்தது.
"விட்டலா, நாளைக்கு வீட்டுக்கு வரியா? என் பிள்ளைக்கு பேர் வைக்கபோகிறார்களே, நீ இல்லாமல் என் வீட்டில் ஏதாவது விசேஷம் நடக்குமா? அவசியம் நீ வரவேண்டும்'' என்று கூப்பிட்டார்.
பண்டரிபுரத்தான் விட்டலன் வந்தானே. ஒரு பிராமணராக வந்து அந்தக் குழந்தைக்கு "நாராயணன்" என்ற பேரையும் அவனே சூட்டினானே.
குடும்பத்தில் பிடிப்பு இல்லை.வறுமை, பற்றாக்குறை தரித்திரம் எல்லாம் வாட்டியது . வறுமைக்கும் பக்திக்கும் என்றுமே நெருங்கிய உறவு.
பெற்றோர்கள் காலமானார்கள். விட்டலனே அவ்வப்போது வேறு வேறு ரூபங்களில் வந்து அந்த குடும்பத்தின் வறுமையைப் போக்கினான் என்று பல கதைகள் . நாமதேவுக்கும் விட்டலனுக்கும் இருந்த நட்பு நகமும் சதையும் போல இருந்ததால் ஒருவரின்றி மற்றவரில்லை என்றாகி விட்டது.
பல புண்ய க்ஷேத்ரங்களுக்கு யாத்ரை சென்று போகுமிடமெல்லாம் மக்களை பக்தி மார்கத்தில் ஈடுபடுத்தி வந்த சிறந்த இன்னொரு விட்டல பக்தர் ஞானேஸ்வர் ஒரு முறை பண்டரிபுரம் வந்தார். அவரும் நாம தேவரும் சமகாலத்தவர்கள். ஞானதேவ் நாமதேவரைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்தார். என்றாவது ஒரு நாள் அந்த புண்ய புருஷரை சந்திக்கவேண்டும் என்ற ஆவல் ஞானத்தேவுக்கு தணலாக கனிந்து கொண்டு இருந்ததால் பண்டரிபுரம் வந்தவர் முதலில் நாமதேவர் எங்கிருக்கிறார் என்று தேடி சந்தித்தார்.
'' நாம்தேவ் சுவாமி, நான் பாக்யசாலி, தங்களைக் கண்ணாரக் காண வெகு காலமாக துடித்துக் கொண்டிருந்தேன்.''
''விட்டலா விட்டலா'' ரொம்ப பெரிய வார்த்தைகளைச் சொல்லாதீர்கள். நான் ஒரு அறிவிலி. உங்களைப் பார்த்தால் ரொம்ப தேஜசோடு சகலமும் அறிந்த ஞானி மாதிரி மனதில் தோன்றுகிறது. நமஸ்கரிக்கிறேன் தாங்கள் யாரோ?
''இவனை ஊரார் ஞானேஸ்வர் என்பார்கள் ''
''அடடா, உலகமே புகழும் என் தெய்வம் விட்டலனின் கண் போன்ற சுவாமி ஞாநேஸ்வரா நீங்கள். உங்கள் அருமை பெருமைகளை காது குளிர நிறைய கேட்டிருக்கிறேன். பார்க்க இன்று தான் விட்டாலன் அருள் புரிந்தான். உண்மையில் சொல்லப்போனால் நான் தான் பாக்கியவான்.''
''நாம்தேவ், உங்களை முதலில் பார்த்துவிட்டு உங்கள் நாம சங்கீர்த்தனத்தை செவி குளிர கேட்க வேண்டும் என்று எனது ஆசை இன்று நிறைவேறப்போகிறது. அதோடு நான் தற்போது தீர்த்த யாத்ரை செல்கிறேன். உங்களையும் என்னோடு அழைத்துப் போகவேண்டும் என உள்ளூர விருப்பம். போகு மிடத்தில் எல்லாம் விட்டல நாம மகிமை எதிரொலிக்கட்டும். ஆயிரமாயிரம் பக்தர் கேட்டு ரசிக்கட்டும் என்று எனக்குள் ஒரு எண்ணம்.''
''இல்லை சுவாமி எனக்கு யாத்ரை செல்ல மனத்தில் எண்ணமே தோன்ற வில்லை.''
'' மகான் தாங்கள் அப்படி என் வேண்டு கோளை மறுக்கக் கூடாது. வடக்கே, கிழக்கே, மேற்கே, தெற்கே எங்கெல்லாம் சிவாலயங்கள் விஷ்ணு ஆலயங்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் சென்று தரிசனம் செய்து, புண்ய நதிகளில் நாம் இருவரும் விட்டல நாம ஸ்மரணையோடு நீராடித திரும்புவோம், வருகிறீர் களா?. நீங்கள் நிறைய யாத்ரை ஏற்கனவே சென்றிருக்கிறீர்களோ?''
"நான் எதையும் பார்த்ததில்லை. என்னவோ எனக்கு பார்க்க வேண்டும் என்ற விருப்பமே இல்லையே"
"நாம் நமது வாழ்வில் ஒருநாளாவது இது போன்ற புண்ய க்ஷேத்ரங்களுக்கு செல்லவேண்டும் புண்ய நதிகளில் ஸ்நானம் செய்யவேண்டும். இது கிடைக்காத ஒன்று. கிடைத்தபோது விடக்கூடாத ஒன்று.'
''...............................''
"என்ன ஒன்றுமே பதில் இல்லை. வருகிறீர்களா என்னோடு. எனக்கென்னமோ நீங்களும் வந்தால் நமது யாத்ரை மிக்க மகிழ்ச்சி அளிக்கும் என்று எண்ணம் "
"எனக்கு ஒரே க்ஷேத்ரம் இந்த பண்டரிபுரம் தான். ஒரே புண்ய நதி இங்கே ஓடும் சந்திரபாகா. ஒரே தெய்வம் இந்த விட்டலன். அவனைப் பிரிந்து ஒரு நாளும் என்னால் தனியாக இருக்க முடியாதே. நான் எங்கும் இதை விட்டு செல்வதாக இல்லை.''
"எனக்கென்னவோ உங்களோடு க்ஷேத்ராடனம் சென்றால் ரொம்ப சந்தோஷமாக இருக்கும். நானே விட்டலனைக் கேட்கிறேன் உங்களை என்னோடு அனுப்பச் சொல்லி ! சரியா ?'' என்றார் ஞானேஸ்வர் .
'ஆஹா, விட்டலன் சரியென்றால் எனக்கு வர சம்மதம். அவனையே கேளுங்களேன்'' - நாமதேவ்..
ஞானதேவ் சிறந்த விட்டல பக்தர். விட்டலனுக்கும் அவரை பிடிக்கும். அவர் நேராக விட்டலன் சந்நிதிக்கு சென்றார்.
"விட்டலா உன்னிடம் ஒன்று கேட்க வந்திருக்கிறேன்"
"என்ன ஞானேஸ்வர் கேட்கப்போகிறாய்?" என்றான் விட்டலன் .
"நாமதேவர் என்னோடு வர உனது அனுமதி தருவாயா?"
"என்னை சங்கடத்தில் ஆழ்த்தி விட்டாயே. உன்னோடு நாமதேவர் சென்றால் பல இடங்களில் பக்தர்கள் மகிழ்வர் என்பது கண்கூடு, வாஸ்தவம். ஆனால் இந்த விட்டலனுக்கு பண்டரிபுரத்தில் நாமதேவரை விட்டு பிரிந்திருக்க இயலாதே?' என்ன செய்வது?,
"பாண்டுரங்கா நான் க்ஷேத்ராடனம் செல்கிறேன் போகுமிடமெல்லாம் நாமதேவரும் வந்தால் மக்களுக்கு உன் நாம சங்கீர்த்தன அமிர்தம் கிடைக்குமே. நீ தான் அவர் மனதில் புகுந்து என்னோடு வர அனுமதி அளிக்க வேண்டும்."
சரி, அவ்வாறே செய்ய முயல்கிறேன்'' என்று ஞாநேஸ்வருக்கு வாக்களித்தான் விட்டலன் .
விட்டலன் கண்களில் நீரோடு நாமதேவரை கூப்பிட்டு " நாமதேவா விஷயம் கேள்விப்பட்டேன். ஞாநேஸ் வரோடு நீ க்ஷேத்ராடனம் யாத்ரை போகலாம் " என அனுமதியளித்தான்.
'' விட்டலா எனக்கு உன்னைப் பிரிந்து இருக்க முடியாதே.''
"நான் தான் உன் மனதில் எப்போதும் இருப்பேனே. நீ செல்."
" இல்லை விட்டலா. பந்தர்பூர் ஒன்றே போதுமே எனக்கு. நீ இருக்கும் இந்த இடம் தான் எனக்கு எல்லா புண்ய க்ஷேத்ரங்களும் ஆகும். "
"ஞானதேவர் உன்னோடு செல்லவேண்டும் என்கிற விருப்பத்தில் இருப்பதால் அந்த மகானோடு நீ செல். உனக்கும் அவரது நட்பு ரொம்ப பிடிக்கிறது. பிறகு நீயே என்னிடம் வந்து எவ்வளவு சந்தோஷமாக இருந்தாயு அவரோடு என்று சொல்லப்போகிறாய் பார்.''
அவர்கள் க்ஷேத்ராடனம் சென்ற அன்று விட்டலன் சோகமாக இருந்தான். ருக்மணி, "நாதா என்று மில்லாமல் உங்கள் கண்களில் ஏன் கண்ணீர்? என்று வினவினாள்
"என் பிரேம ஆப்த நண்பன் பக்தன் நாம்தேவ் இன்று என்னை விட்டு க்ஷேத்ராடனம் செய்யப் போகிறான். அவன் திரும்பி வர வெகு காலம் ஆகப்போகிறது. தினமுமே அவனோடு இருந்து பழக்கப்பட்ட எனக்கு அவனைப் பிரிந்து எவ்வாறு இருக்கப் போகிறேனோ தெரியவில்லை"
விட்டலன், போகு முன் ஞானதேவரைக்கூப்பிட்டு "உன்னை நம்பித்தான் என் நாமாவை அனுப்புகிறேன் அவருக்கு இந்த உலகமே நான் தான். வேறு ஒன்றுமே தெரியாது என்னைத் தவிர, நீ தான் ரொம்ப ஜாக்ரதையாக அவரைப் பார்த்து அழைத்துக்கொண்டு ஜாக்ரதையாக என்னிடம் திரும்பக் கொண்டு சேர்க்க வேண்டும், புரிகிறதா? "என்றான்
அவர்கள் க்ஷேத்ராடனம், அங்கு அங்கு நடந்த ஆச்சர்ய சம்பவங்கள் வினோதங்கள் பற்றியெல்லாம் எல்லாம் நிறைய இந்த தெவிட்டாத விட்டலன் கதைகளில் வந்திருக்கிறது. பல இடங்கள் சென்று பல வருஷங்கள் கழித்து திரும்பினார்கள். இணை பிரியாத நண்பர்களானார்கள். விட்டலனின் இரு கண்களானார்கள்.
பண்டரிபுரம் அவர்கள் திரும்பியபோது விட்டலனே சந்திரபாகா நதிக்கரையில் அவர்களுக்காக வழி மேல் விழி வைத்துக் காத்திருந்து சமாராதனை எல்லாம் பண்ணச் சொல்லி தானே ருக்மணியோடு சேர்ந்து அதில் சமைத்து பரிமாறினான். சாப்பிட்டான்.
நாமதேவரும் ஞானதேவரும் கடைசிவரை இணைபிராத தோழர்களாக வாழ்ந்து ஒருநாள் ஞானதேவர் ஆலந்தி யில் தான் சமாதி அடைய முடிவெடுத்தார். நாமதேவர் அவரோடு இணைபிரியாது இருந்தார்.
சுவாமி ஞானேஸ்வர் உரிய நேரத்தில் தான் விரும்பியவாறு ஜீவன் முக்தியடைந்தவுடன், நாமதேவர் ஞானேஸ்வர் சுவாமிகளின் உடன் பிறந்த சகோதரர்கள் நிவ்ரித்தி, சோபன் மற்றும் சகோதரி முக்தாபாய் ஆகியோருடன் சிலகாலம் வாழ்ந்து அவர்களும் மறைந்த பின்னர் தானும் பண்டரிபுரத்திலேயே மறைந்தார்.
விட்டலன் நாமமுள்ளவரை நாமதேவரும் ஞானேஸ்வரும் இரு இணை பிரிக்கமுடியாத விட்டல பக்தர்கலாக நினைவில் மனத்தில் வாழ்பவர்கள். ஒன்று அதீத பக்தி ஸ்வரூபம். மற்றொன்று அபரிமித ஞான காரணம். ஞானமும் பக்தியும் தான் வாழ்வில் ஒரு பக்தனுடைய சிறந்த சொத்து . அவையே நாமதேவரும் ஞானேஸ்வரும் ஆகிய இணையற்ற ரெண்டு ஸ்ரேஷ்டர்கள் ஆவர். விட்டலனின் இரு கண்கள் இந்த ரெண்டு மகான்களும் அல்லவா? .

No comments:

Post a Comment