Friday, January 29, 2021

Travel on wheels- Periyavaa

*மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - சக்கரம் வச்ச வண்டியில் ஏறுவது இல்லை*

பண்டரிபுரத்தில் பெரியவா தங்கியிருந்த சமயம். அருகேயிருந்த சர்க்கரை ஆலையின் அதிகாரி, பெரியவாளிடம் அவரது பாதாரவிந்தங்கள் தமது ஆலையை ஒரு முறை மிதிக்க வேண்டும் என்று வேண்டி, அப்பொழுதே வருவதாக இருந்தால் தமது வண்டியிலேயே அழைத்துப்போய் வந்து விடுவதாகக் கூறினார். 

பெரியவாள் உடனே சிரித்து விட்டு, "நான் சக்கரம் வைத்த வண்டியில் ஏறுவதில்லை" என்று கூறினார். வந்த அதிகாரி மிகவும் ஆச்சர்யப்பட்டு "இந்த இருபதாம் நூற்றாண்டிலே தாங்கள் இப்படி இருக்க வேண்டுமா ? வண்டியில் வந்தால் பல மணி நேரம் மிச்சமாகுமே, அதிகமான இடங்களைக் காண வாய்ப்புக் கிடைக்குமே" என்றார்.

பெரியவாள், "நான் பதிமூன்று வயதில் பட்டத்திற்கு வந்த உடனே சக்கரம் வைத்த வண்டியில் ஏறுவதில்லை என்று சங்கற்பித்துக் கொண்டேன். ஒரு முறை நான் ஒரு ஊருக்குச் சென்று கொண்டிருந்தேன். மழையே இல்லாமல் இருந்த அந்த ஊரில் என்னவோ தெரியவில்லை, நல்ல மழை பிடித்துக் கொண்டது. போகும் வழியில் இருபுறமும் பள்ளமாகவும் நடுவே சற்று மேடாகவும் இருந்ததால், ஓடும் நீரின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் அந்நிலத்திலிருந்த ஜீவராசிகள் பலவும் மேட்டுக்கு வந்து விட்டன. அப்பொழுது சாலையில் சென்ற பல வாகனங்களால் அவற்றிற்கு அழிவு ஏற்பட்டது. அன்றே நான் சக்கரம் வைத்த வண்டியில் ஏறி ஜீவ ஹிம்சைக்குக் காரணமாகக் கூடாது என்று மீண்டும் சங்கல்பித்துக் கொண்டேன் .

இன்னொரு காரணமும் உண்டு.

வண்டியில் போவதால் பல ஊர்களைக் காண இயலாது போய் விடும். வாஹனத்தில் திடீரென்று ஓர் ஊருக்குப் போய் இறங்கினால் அங்கு உள்ளவர்களுக்குச் சிரமம். நடந்து போவதால் போகும் இடத்திலுள்ள மக்கள் அடுத்த ஊருக்கு முன்பே தெரியப்படுத்தி வசதி செய்து தருகின்றார்கள் இல்லையா ?" என்ற வினா எழுப்பிச் சுற்றி நின்றவர்களைப் பார்த்து தமது அருளைப் புன்னகையோடு குழைத்து அளித்தார்.

வாருங்கள். பாரதம் வலம் வந்த பாதமலர்களுக்கு பூஜைகள் செய்திடுவோம்!

*பெரியவா சரணம்!*

_தொகுப்பு: பெரியவா குரல்_ | https://t.me/perivakural

*An initiative of Kanchi Periva Forum - www.periva.org | www.anusham.org*

No comments:

Post a Comment