Courtesy:smt.Padma Gopal
(பேரழகுப் பெட்டகமே!..)
பசுபோல பரமசாது எங்கள்
பாலமுகுந்தனே!
வசுதேவர் பெயர் விளங்க
வந்த வாசுதேவனே!
அடங்கியிங்கு அன்னைமடி
அமர்ந்திருக்கும் அஞ்சனம்!
கடந்து செல்லும் யாவருமே
கையிலேந்திக் கொஞ்சணும்!
அலங்காரம் செய்துகொள்ளும்
அழகிதற்கே ஈடுண்டோ?
தலைசாய்த்து தன்னைத்தரும்
தயவிதற்கே இணையுண்டோ?
வெற்றுடம்பைத் தீண்டிவிடும்
விழைவு நம்மை உண்ணுதே!
சற்று அந்த சந்தனத்தைச்
சொந்தம் கொள்ள எண்ணுதே!
பீலியோடு பைங்கிளியும்
பெருந்தவம்தான் செய்ததோ?
நீலனுடைய நீள்குழலும்
நேர்ந்து விரதம் இருந்ததோ?
அம்மாடி, ஆசையிங்கு
அணையுடைத்துப் போகுதே!
நம்மாலே ஆகலையே,
நந்தன்மகவு ஈர்க்குதே!..
No comments:
Post a Comment