சதா ஏன் காயத்ரி பற்றி சொல்லிக் கொண்டே இருக்கிறேன்?
காயத்ரி மந்திரத்தில் அப்படி என்ன இருக்கிறது?-
-காஞ்சி மஹா பெரியவா.
சாஸ்திர பிரகாரம் செய்ய வேண்டிய கார்யங்களுக்குள் எல்லாம் முக்கியமான காரியம் காயத்ரீ ஜபம் த்ரிபம் ஏவது வேதேப்ய:பாதம் பாதமதூதுஹம் (மநுஸ்மிருதி)
காயத்ரீ மூன்று வேதத்திலிருந்து ஒவ்வொரு பாதமாக எடுத்தது என்று மநுவே சொல்கிறார். வேதத்தின் மற்றதையெல்லாம் விட்டுவிட்ட நாம் இதையும் விட்டால் கதி ஏது?
ரிக், யஜுஸ், ஸாமம் என்ற மூன்று வேதங்களையும் இறுக்கிப் பிழிந்து கொடுத்த essence (ஸாரம்) காயத்ரீ மஹாமந்திரம்.
காயத்ரீ என்றால், "எவர்கள் தன்னை கானம் பண்ணுகிறார்களோ அவர்களை ரக்ஷிப்பது"என்பது அர்த்தம்.காயந்தம் த்ராயதே யஸ்மாத் காயத்ரீ (இ) த்யபிதீயதே !
கானம் பண்ணவதென்றன்றால் இங்கே பாடுவதில்லை; பிரேமயுடனும் பக்தியிடனும் உச்சரிப்பது என்று அர்த்தம். யார் தன்னை பயபக்தியுடனும் பிரேமையுடனும் ஜபம் பண்ணுகிறார்களோ அவர்களை காயத்ரீ மந்திரம் ரக்ஷிக்கும். அதனால் அந்தப்பெயர் அதற்கு வந்தது. வேதத்தில் காயத்ரீயைப் பற்றிச் சொல்லும் பொழுது, காயத்ரீம் சந்தஸாம் மாதா என்று இருக்கிறது. சந்தஸ் என்பது வேதம். வேத மந்திரங்களுக்கெல்லாம் தாயார் ஸ்தானம் காயத்ரீ என்று இங்கே வேதமே சொல்கிறது. 24 அக்ஷரம் கொண்ட காயத்ரீ மந்திரத்தில் ஒவ்வொன்றும் எட்டெழுத்துக் கொண்ட மூன்று பாதங்கள் இருக்கின்றன. அதனால் அதற்கு 'த்ரிபதா' காயத்ரீ என்றே ஒரு பெயர் இருக்கிறது.
காயத்ரீயில் ஸகல வேத மந்திர சக்தியும் அடங்கியிருக்கிறது. மற்ற எல்லா மந்திரங்களுக்கும் சக்தியைக் கொடுப்பது அதுதான். அதை ஜபிக்காவிட்டால் வேறு மந்திர ஜபத்திற்குச் சக்தி இல்லை. காயத்ரீயை ஸரியாகப் பண்ணினால்தான் மற்ற வேத மந்திரங்களிலும் ஸித்தி உண்டாகும்.
காயத்ரி மந்திரத்தை விட்டதால் வந்த கோளாறு…
ஒரு சமயம் மஹா பெரியவாளைத் தரிசிக்க தேனாம்பேட்டையில் இருந்து நாற்பதுக்கும் மேற்பட்ட அந்தணர்கள் வந்திருந்தனர். வந்தவர்கள் மகானை வணங்கிய பின் தங்களுடைய பொதுவான மனவேதனையை வெளியிட்டனர்.சென்னை தேனாம்பேட்டை பகுதியில் பொதுவாக அந்தணர்களின் நெற்றியில் விபூதி, திருமண், தோளில் பூணூல், ஆகியவற்றைக் கண்டால் சில நாஸ்திகர்கள் கேலி, கிண்டல் செய்து கலாட்டாக்களில் இறங்கி விடுவதாகவும் அதனால் அந்தப் பகுதியில் பிராம்மணர்கள் கௌரவமாக நடமாட முடியவில்லை என்றும் தெரிவித்தனர். அதைப்பற்றி விவரமாகத் தெரிந்து கொண்ட மகான் அவர்களிடம் சொன்னது ஒரே விஷயந்தான்:"நீங்கள் தினமும் காயத்ரி மந்திரத்தை ஜெபம் செய்யுங்கள். எல்லாமே பிறகு சரியாகிவிடும்" என்றார்.
மகானின் உத்தரவுக்கு மறுப்பேது ?
அதேபோல் அவர்கள் இரண்டுமாதம் தொடர்ந்து ஜெபம் செய்து முடிப்பதற்குள், அங்கிருந்த மகானிடம் நேரில் வந்து எல்லாமே சரியானதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்கள்.
அப்போது அவர் அவர்களிடம் சொன்னார்:
"நீங்கள் எல்லாம் ஸ்ரீ காயத்ரி மந்திரத்தை விட்டதால் வந்த கோளாறு" என்று சொல்லியபின் காயத்ரி மந்திரத்தின் சக்தி அளவிடமுடியாதது என்பதை அவர்களுக்கு மீண்டுமொருமுறை தெளிவாக விளக்கினார்.
No comments:
Post a Comment