Monday, August 31, 2020

Vasanth & Co Annaachi

ஒரு குடும்பம் மாதத் தவணையில் டிவி வாங்கியது. மாதா மாதம் தவணையை வசூல் செய்ய ஒருவர் செல்கிறார். திடீரென ஒருநாள் எதிர்பாராத விதமாக, அந்தக் குடும்பத்தின் தலைவர் இறந்துவிடுகிறார். குடும்பம் நிர்கதியாகிறது. அக்குடும்பம் வாங்கியிருந்த டிவிக்கான தவணையை வசூல் செய்ய வந்தவர், வாடிக்கையாளர் இறந்தது குறித்து தனது முதலாளியிடம் தகவல் தெரிவிக்கிறார். அந்த முதலாளியும் கருணையுள்ளத்துடன் ஒரு கடிதம் அனுப்புகிறார்.
எங்களது நிறுவனத்தின் வாடிக்கையாளராகிய நீங்கள் படும் துயரை நாங்கள் அறிகிறோம். தங்களின் கணவர் இறப்புக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். எங்களுக்கு நீங்கள் செலுத்த வேண்டிய பாக்கி தவணைத் தொகையை இனிமேல் தாங்கள் செலுத்த வேண்டாம். தங்களின் துயரில் நாங்கள் பங்கேற்கிறோம் என கடிதம் எழுதி அந்தக் குடும்பத்திடம் சேர்ப்பிக்கப்படுகிறது.
கடிதம் எழுதிய முதலாளி வேறு யாருமல்ல வசந்த் & கோ உரிமையாளர் திரு. வசந்தகுமார் அண்ணாச்சிதான். அண்ணாச்சியின் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால், ஒன்று தவணைத் தொகையை கறாராக வசூலித்திருப்பார்கள். அல்லது டிவியை தூக்கி வந்திருப்பார்கள்.
இன்று நீங்களும் நானும் இரங்கல் தெரிவித்துக்கொண்டிருப்பது ஒரு நல்ல வியாபாரிக்கு மட்டுமல்ல; அவருக்குள் ஒளிந்திருக்கும் நல்ல மனிதருக்கும்கூட.
சென்னை தெற்கு உஸ்மான் ரோட்டில்
ராசியில்லாத கடையாக 1978-இல் கருதப்பட்ட ஒரு கடையை வாடகைக்கு எடுத்து, தனது கையாலேயே வசந்த் & கோ என போர்டு எழுதித் தொங்கவிட்டு நிறுவனத்தை துவக்கியுள்ளார்.
இதில் ஆச்சர்யம் என்னவெனில், ஆறு மாதம் கழித்து கடைக்கு வாடகை தந்தால் போதும் என அண்ணாச்சிக்கு கடையை வாடகைக்கு விட்டுள்ளார் அதன் உரிமையாளர். அந்த காலத்தில் பிஸ்கெட், சோப்பு ஆகியவற்றை மொத்தமாக மரப்பெட்டிகளில் பேக்கிங் செய்யப்பட்டிருக்கும். அந்த மரப்பலகையில்தான் வசந்த் & கோ என தனது கைப்பட தனது நிறுவனத்தின் பெயரை எழுதியுள்ளார். ஆச்சா, இப்பொழுது கடை இருக்கிறது, போர்டு இருக்கிறது விற்பதற்கு பொருள்கள் ஏதுமில்லை.
அந்தக் காலத்தில் ஒயர் பின்னப்பட்ட மர சேர்கள், நாற்காலிகள் மிகவும் பிரபலம். அவைகளை தயாரிக்கும் தனது நண்பரிடம் இருந்து ஒரு சேரை 25 ரூபாய்க்கு விலைக்கு வாங்கி 5 ரூபாய் லாபம் வைத்து 30 ரூபாய்க்கு விற்பாராம். கடையின் வழியாக போவோர் வருவோருடன் பேசிப் பழகி அவர்களில் நம்பிக்கையானவர்களிடம் ரூ. 1 என்ற வீதத்தில் தினசரி தவணை முறையிலும் சேர்களை விற்றுள்ளார். அப்படி விற்கும்போது 30 ரூபாய்க்கு பதிலாக 31 ரூபாயாக வசூலித்துள்ளார்.
பொருள்களின் உற்பத்தியாளர்களுக்கு சேர வேண்டியத் தொகையை சொன்ன தேதியில் சரியாக கொடுத்து விடுவார். ஒருவேளை அப்படி கொடுக்க முடியாத சூழல் ஏற்படும் பட்சத்தில், அவர்களிடம் நேரில் சென்று தனது சூழலை தெரிவித்துவிட்டு, மேற்கொண்டு சில நாள்கள் அவகாசம் கேட்பாராம். இந்த அடிப்படை நேர்மையும் நாணயமும்தான் வசந்த் &கோ வின் வளர்ச்சிக்கு காரணம்.
அண்ணாச்சியிடம் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான மற்றுமொரு பாடம் இருக்கிறது.
விஜிபி நிறுவனத்தில்தான் அண்ணாச்சி ஆரம்பக்காலத்தில்
பணியாற்றினார். கடையை சுத்தமாக வைத்திருப்பது, கடிகாரம் துடைப்பது என விஜிபியில் பணியை ஆரம்பித்தவர், படிப்படியாக சேல்ஸ் மேன், மேனேஜர் என்னும் அளவுக்கு உயர்ந்தார். இடையிடையே கட்சிப் பணிகளிலும் ஈடுபட்டார். அப்பொழுது ஏற்பட்ட ஒரு பிரச்னைக்காக காவல் நிலையம் வரை செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதையறிந்த விஜிபி நிறுவனம் அண்ணாச்சியை மும்பை கிளைக்கு பணியிடமாற்றம் செய்கிறது.
மொழி தெரியாத மாநிலத்தில் பணிபுரிய மனமில்லாத காரணத்தால் மும்பைக்கு செல்லவில்லை. இதனால் விஜிபி நிறுவனத்திலிருந்து ராஜிநாமா செய்கிறார். அப்படி ராஜிநாமா செய்யும்போது விஜிபி நிறுவனம் குறித்து எந்தவொரு எதிர்மறை விமர்சனத்தையும் அண்ணாச்சி முன்வைக்கவில்லை.
அண்ணாச்சியின் இந்தக் குணத்தை இன்றைய தலைமுறையினர்
கற்றுக்கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.
பிற்காலத்தில் வணிகத்தில் அண்ணச்சி உச்சம் தொட்டபோதும், விஜிபி நிறுவன உரிமையாளரைத்தான் தனது ஒரே முதலாளி என அண்ணாச்சி குறிப்பிடுவார். விஜிபி நிறுவன உரிமையாளரும் அண்ணாச்சியை இளவல் என்றே குறிப்பிடுவார்.
அந்தக் காலத்தில் மிகவும் புகழ்பெற்ற சாலிடெர் டிவியை பட்டி தொட்டியெங்கும் பரப்பியதில் அண்ணாச்சியின் பங்கு மிகப்பெரியது. ஆனால் ஆரம்பத்தில் ஒரேயொரு சாலிடர் டிவியை அவர் சாலிடெர் ஷோரூமிலிருந்து வாங்கி தனது கடையில் வைத்து விற்ற கதையெல்லாம் பெரிய கேஸ் ஸ்டெடி அளவுக்கு செல்லும்.
விளம்பர மாடலாக நடிகர், நடிகள் கோலோச்சிக் கொண்டிருந்த அந்த காலத்திலும் சரி, மாடலிங் என ஒரு துறை கோலோச்சிக் கொண்டிருக்கும் இந்த காலத்திலும் சரி, எதன் மீதும் நம்பிக்கை கொள்ளாது, தன் மீது மட்டுமே நம்பிக்கை வைத்து தனது முகத்தையே தனது கடையின் லோகோவாக, பிராண்டாக அறிமுகப்படுத்தினார். இந்த எளிய அணுகுமுறைதான், நடுத்தர மக்களை இவரது நிறுவனத்தை நோக்கி வரச் செய்தது.
சிறுவயதில் திருவிழாக்களில் சர்பத் விற்றுள்ளார். பலூன் வியாபாரியாக இருந்துள்ளார். பின்னாளில் சென்னை வந்தபோது விஜிபியில் பணி புரிந்தார். பின்னர் சொந்தமாக நிறுவனம் தொடங்கி சேர், டேபிள், டிவியில் ஆரம்பித்து இன்று அனைத்து வீட்டு உபயோகப் பொருள்களையும் விற்கும் மாபெரும் சாம்ராஜ்யமாக வசந்த் & கோ திகழ்கிறது.
விஜிபியில் இருந்து ராஜிநாமா செய்த பின்னர் 1978-இல் வசந்த் & கோ ஆரம்பித்ததும், முதல்முதலாக சிட்பண்ட் ஆரம்பித்தார். அதில் அவருக்கு கிடைத்த வருமானம் வெறும் 22 ரூபாய் என்றால், நம்புவதற்கு சற்று கடினமாகத்தான் இருக்கும்.
இன்று நாடெங்கும் சுமார் 100-க்கும் மேற்பட்ட கிளைகளுடன் தனி சாம்ராஜ்யமாக விரிந்திருக்கும் வசந்த் & கோ வின் டர்ன் ஓவர் சுமார் 1000 கோடி ரூபாய் என்றால் ஆச்சரியமாக இருக்கும்.
வீட்டு உபயோகப் பொருள்களை நடுத்தர, ஏழை எளிய மக்களுக்கு தவணை முறையில் விநியோகித்த அண்ணாச்சி அவர்கள் இன்று நம்மிடையே இல்லை என்பது பேரிழப்பாகவும் பெரும் வருத்தமாகவும் இருக்கும்.
நாணயமான வியாபாரி, தூய்மையான அரசியல்வாதி, எளியோருக்கு உதவும் தொண்டுள்ளத்துக்கு சொந்தக்காரர், அப்பழுக்கற்ற தேசியவாதி, இலக்கிய ஆர்வலர், சிறந்த பக்திமான், எல்லாவற்றுக்கும் மேலாக நேர்மையான மனிதர். அண்ணாச்சி மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment