என்னப்பன் எனக்காயிருளாய்
என்னைப் பெற்றவளாய்
பொன்னப்பன் மணியப்பன்
முத்தப்பனென் அப்பனுமாய்
மின்னப் பொன் மதிள் சூழ்திரு
விண்ணகர்ச் சேர்ந்தவப்பன்
தன்னொப்பா ரில்லப்பன்
தந்தனன் தன தாள் நிழலே
திருவாய் மொழி -6-3 (3257)
பொருள்:
ஒளி வீசும் மதிள் சூழ் திருவிண்ணகரம் என்ற திவ்ய தேசத்தில் எழுந்தருளியுள்ள பெருமான் எனக்கு என் அப்பனாகவும் செவிலித்தாயாகவும், பெற்ற தாயாகவும் இருக்கிறான். மேலும் அவன் பொன்னும், மணியைப் போன்றும் முத்தைப் போன்றவனுமாய் இருக்கிறான். தனக்கு சமமானவர்கள் இல்லாத அப்பன் தன்னுடைய திருவடிகளின் நிழலைத் தந்தான்.
13. திருவிண்ணகர். ( ஒப்பிலியப்பன் கோவில்) கும்பகோணம்.
மூலவர்: ஒப்பிலியப்பன், ஸ்ரீனிவாசன். வெங்கடாசலபதியைப் போன்ற அதே தோற்றத்துடன் நின்ற திருக்கோலம். 'மாம் ஏகம் சரணம் வ்ரஜ' என்ற சரமஸ்லோகப் பகுதி எம்பெருமானின் வலக்கையில் வைரங்களால் பொறிக்கப்பட்டுள்ளது. கிழக்கே திரு முக மண்டலம்.
தாயார் – பூமி தேவி. பெருமாளுக்கு வலது புறம் கீழே மண்டியிட்டு வணங்கும் திருக்கல்யாண கோலம்.
தீர்த்தம் – அஹோராத்ர புஷ்கரிணி. ஆர்த்தி புஷ்கரிணி.
விஷ்ணு விமானம். சுத்தானந்த விமானம்.
விசேஷம். திருப்பதி செல்ல இயலாதவர்கள் இங்கே பிரார்த்தனைகளை செலுத்துகிறார்கள். திருப்பதி ஸ்ரீனிவாஸருக்கு தமையனார் என்கிற ஐதீகம். இக் கோவிலில் தளிகையில் உப்பு சேர்ப்பதில்லை. ம்ருகண்டு மகரிஷியின் பத்னி விருப்பப்படி உப்பில்லாத ப்ரஸாதம் நிவேதனம்.
ஸ்ரவண நக்ஷ்த்ரம் ப்ரதி மாதம் ஸ்ரவண தீபம் எடுத்து குறி சொல்வது விசேஷம். பங்குனி மாதம் ப்ரம்ஹோத்ஸவம், ஐப்பசியில் கல்யாண உத்ஸவமும் குறிப்பிடத்தக்கவை.
மங்களாஸாஸனம்:
திருமங்கையாழ்வார் – 1448-77, 1865,2080 ,2673,2674
பேயாழ்வார் – 2342,2343
நம்மாழ்வார் – 3249-59
மொத்தம் – 47 பாசுரங்கள்.
No comments:
Post a Comment