Thursday, August 27, 2020

Story of meera

Courtesy:Smt.Saroja Ramanujam

மீராகே பிரபு - part 1

ஆண்டாள் பாசுரம் எப்படி தென்னாட்டில் பிரபலமோ அந்த அளவில் வடநாட்டில் மீராபஜன்.

மீராவுக்கும் ஆண்டாளுக்கும் உள்ள ஒற்றுமை இருவருமே கண்ணனை பதியாக வரித்தனர். ஆனால் நிஜ வாழ்வில் அந்தபாக்கியம் ஆண்டாளுக்குதான் கிடைத்தது. ஏனென்றால் அவள் பூதேவியின் அவதாரம் , 'மானிடர்க்கென பேச்சுப்படில் வாழ கில்லேன் ' என்றவள் பரமனுக்கே பல்லாண்டு பாடி அவனை மருமகனாக்கிக் கொண்ட பக்தரான பெரியாழ்வாரிடம் வளர்ந்தாள்.

ஆனால் மீரா அரச குடும்பத்தில் அதுவும் பாரம்பரிய நடைமுறைகளைக் கொண்ட ராஜஸ்தானில் பிறந்ததால் அவள் ஒரு அரசனையே மனம் செய்ய வேண்டி வந்தது. ஆனாலும் எப்படி அவள் தன இலக்கை அடைந்தால் என்று பார்ப்போம்.

அவள் உடல் அரண்மனையில் இருந்தாலும் ஒரு கூண்டுப்பறவையைப் போல அவள் மனம் விடுதலையையே விரும்பியது. 
அழகுச் சிகரத்தில் இருந்து அன்பெனும் அருவி நீர் பாய்ந்து உலகை வெள்ளமென சூழும் மரகத மலையாம் அப்பச்சைமாமலை போல் மேனியானை நோக்கி பறக்க ஏங்கியது அவள் உள்ளம்.

மீரா என்று பெயர் படைத்தாலும் அவள் ஒரு ஹீரா, அதாவது வைரம் எனத் திகழ்ந்தாள். அந்த வைரம் கிரிதரகோபாலனின் மார்பில் உள்ள முத்தாரத்தின் வைரப் பதக்கமாக ஆயிற்று
. அவளுடைய கிருஷ்ண பக்தி எள்ளளவும் கோபியர்க்கு குறைந்ததல்ல. ராதையே மீராவாக தோன்றி கிருஷ்ணா பக்தியை வளர்த்தாள் என்று ஒரு கருத்தும் நிலவுகிறது.

ராதையைப் போல அவளால் பிருந்தாவனத்திற்கு செல்ல இயலவில்லை. உலகாயதமான உறவுகளுடன் காலம் கழிக்க வேண்டி இருந்தாலும் அவள் வாழ்க்கை ஒரு தவமாகவே இருந்தது.

நாம சங்கீர்த்தனம் என்னும் உயரிய பக்தி நெறியின் மூலம் பல துன்பங்கள் அனுபவித்தாலும் கடைசியில் கண்ணனை சேர்ந்தாள்.

ராஜஸ்தானின் பாலைவனங்கள்,சமவெளிகள் , காடுகள், யமுனை , கங்கை இவற்றின் கரைகள் எல்லாவிடங்களிலும் இவளுடைய பாடல்கள் எதிரொலிக்கத் தொடங்கிப் பிறகு நாடெங்கும் கேட்டோரை பக்திப் பரவசத்தில் ஆழ்த்தின. மீராவின் பக்தி பிறந்து வளர்ந்ததை விரிவாக பிறகு காண்போம்

மீரா கே ப்ரபு-2

2. சிறு வயதில் இருந்தே மீராவுக்கு கிருஷ்ணா பக்தி இருந்தது. ஒருமுறை அவள் சிறுமியாய் இருக்கையில் ரூப் கோஸ்வாமி என்ற பெரும் பக்தர் அவள் அரண்மனைக்கு வந்தார். அப்போது அவளுக்கு அவர் ஒரு கிருஷ்ணவிக்ரஹத்தை பரிசாகக் கொடுத்தார். அது முதற்கொண்டு அந்த கிருஷ்ணனை அலங்கரிப்பதிலும் அவனோடு விளையாடுவதிலும் மீரா மிக மகிழ்ச்சியடைந்தாள்
.
ஒருநாள் மீரா தன் தாயுடன் இருக்கையில் ஒரு மாப்பிள்ளை ஊர்வலத்தைப் பார்க்க நேரிட்டது.. அப்போது கண்ணன விளயாடத் தொடங்கிவிட்டான். இல்லாவிடில் மீரா தாயிடம், " எனக்கு வரப்போகிற மாப்பிள்ளை எங்கு இருக்கிறார் அம்மா ?" என்று கேட்பானேன் அவள் தாய் அவள் கையில் உள்ள விக்ரஹத்தைக் காட்டி "இவன்தான் உன் மணாளன்" என்று சொல்வானேன். அது இவள் வரிக்குமுன்பே அவன் இவளை வரித்துவிட்டான் என்பதைக் காட்டுகிறதல்லவா?

அதுமுதல் கண்ணனை அவள் மணாளனாகவே .மீரா நினைக்கத் தொடங்கிவிட்டாள். அவனுக்கு கிரிதரகோபாலன் என்று பெயரிட்டு அவனுடன் ஆடிப்பாடி ஆனந்தமாக இருந்தாள்.

அன்றைய அரசகுடும்பங்களின் வழக்கப்படி நல்ல கல்வி , சங்கீதம் எல்லாம் கற்றவளான மீரா அங்கு வருகை தந்த பக்தர்களிடம் இருந்து பக்தி இலக்கியங்கள் கதைகள் முதலியவைகளின் பரிச்சயம் ஏற்பட்டு சிறு வயதில் இருந்தே பக்தி உணர்வு கொண்டவளாய் இருந்தாள். தானாக பஜன்களை இயற்றிப் பாடவும் வல்லமை பெற்றிருந்தாள்

அவளுக்கு கண்ணனின் லீலைகளில் எல்லாம் பிடித்தது அவன் கோவர்த்கன கிரியை தூக்கியதுதான். அதனால் அவன் அவளுக்கு என்றுமே கிரிதாரிதான். அவனே மணாளன் என்ற எண்ணத்திற்குப் பிறகு அவன் மீராப்ரபு கிரிதாரி ஆகிவிட்டான். அவன் அவளுடைய வாழ்க்கையில் தன் கருணை என்ற மலையினால் அவள் கஷ்டங்கள் எல்லாம் அவளைத் தாக்காமல் காக்கப் போகிறான் என்பதை அவள் அப்போது அறியவில்லை.

பெரியாழ்வார் மாதிரி ஒரு பக்தரால் வளர்க்கப்படும் நல்வினை இல்லாமல் அரச குடும்பத்தில் பிறந்ததால் கண்ணன்தான் என் கணவன் என்று சொல்லிக்கொண்டிருந்தாலும் அவளால் அரசகுமாரிகளின் வழக்கப்படி திருமணம் என்ற பந்தத்தை மீற முடியவில்லை. மனத்திற்கு ஒவ்வாத மறுக்க முடியாத திருமணம் அவளுக்கு நடந்தாலும் , பிறகு இதுதான் தன் ஸ்வதர்மம் என்று முடிவு செய்து மனதை தேற்றிக் கொண்டாள். ஆனால் அவளை ஏற்கெனவே வரித்த கிரிதர கோபாலன் வேறு விதமாக எண்ணம் கொண்டான்.விவாகம் ஆனபிறகும் தன் கண்ணனைப பிரிய வேண்டாம் என்று பிரேம சாகரத்தில் ஆழ்ந்து கணவன் வீட்டிற்குச் சென்ற மீரா அந்த சாகரத்தில் ஒளிந்திருந்த சுறாமீன்களைப் பற்றி அறியவில்லை.

No comments:

Post a Comment