அஷ்டாக்ஷரத்தையே நான் கற்றேன்
மற்றுமோர் தெய்வ முளதென் றிருப்பாரோ
டுற்றிலேன், உற்றது முன்னடி யார்க்கடிமை
மற்றெல்லாம் பேசிலும் நின் திருவெட்டெழுத்தும்
கற்று, நான் கண்ணபுரத்துறை யம்மானே!
பெரிய திருமொழி – 8ம் பத்து ... வண்டார்...(1740)
உன்னைத் தவிர வேறு ஒரு தெய்வம் உண்டு என்று கூறுபவர்களோடு நான் கூடமாட்டேன். ஓம் நமோ நாராயணா என்ற திருமந்திரத்தின் மகிமையை நான் அறிந்திருந்தாலும், அதன் பெருமையை அறிந்த அடியார்க்கு அடிமை செய்வதே நான் அறிந்த பெரும் பொருள்.
அகங்காரமும், மமகாரமும் நீங்கி பாகவத சேஷத்வம் அனுஸந்திக்கப் பட வேண்டும் என்பது ஆழ்வாரின் திருவுள்ளம்.
திருக்கண்ணபுரத்தானையன்றி வேறு யாரையும் மனதாலும் சிந்திக்க இயலாத நிலையை ஆழ்வார் இங்கு உணர்த்துகிறார்.
ஓம்காரத்தை ஓதின் அகங்காரம் ஒழியும்.
கண்ணனை சரண் புகுந்தால் வைகுந்தம் கிட்டும்
சரணமா கும்தன தாளடைந் தார்க்கெல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
அரணமைந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரத்
தரணியாளன், தன தன்பார்க்கன் பாகுமே
திருவாய்மொழி – 10 ம் பத்து. மாலை நண்ணி..(3660)
பெருமான் தன்னைச் சரணடைந்தவர்களுக்கு மரணத் தறுவாயில் பரமபதத்தை அருள்கிறான். உலகை ஆள்பவனும் அடியார்க்கு அன்பனாயும் திகழும் அப்பெருமான் காப்பாக அமைந்துள்ள மதில்கள் சூழப்பெற்ற திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியுள்ளான்.
பிறப்பு, ஒழுக்கம் ஞானம் இவற்றில் குறைவிருப்பினும் பக்தன் தன் திருவடியைப் பற்றினால் உபாயம் உண்டு என்கிறார் ஆழ்வார்.
பக்தி யோகம் ஞான யோகத்தை விட எளிதானது.
"நின்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான் தன்னையே தான் சேரும் செல்வம் போல்." அவன் திருவடியை அடைந்தவருக்கு பரமபதத்தை அளிக்கும் உபகாரகன்
திருக்கண்ணபுரம் ( கும்பகோணம் அருகில்) கிருஷ்ணாரண்ய க்ஷேத்ரம்
பஞ்ச கிருஷ்ண க்ஷேத்ரம், ஸப்த புண்ணிய சக்ஷேத்ரம்
மூலவர் – நீலமேகப் பெருமாள். நின்ற திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம்
உத்ஸவர் – செளரிராஜப் பெருமாள்
தாயார் – கண்ணபுர நாயகி
நித்ய புஷ்கரிணி
உத்பலாவதக விமானம்
அபய ஹஸ்தத்துக்குப் பதிலாக வரத ஹஸ்தம் விளங்கிகின்றது. ப்ரயோக சக்ரம். விகடாக்ஷன் என்ற அசுரனை சக்ராயுதத்தால் நிக்ரஹம் செய்து மஹரிஷிகள் பிரார்த்தனையின் படி சக்ரப் பிரயோக அவசரமாக ஸேவை சாதித்த ஸ்தலம்.
உபய நாச்சியாருக்கு அப்பால், இடது புறம் கிரீடத்துடன் ஆண்டாளும், வலது புறம் பத்மாதிவதித் தாயார் என்ற செம்படவ அரச குமாரியும் உள்ளனர்.
ரங்க பட்டர் என்ற அர்ச்சகர் சோழ அரசனுக்கு பெருமாளுக்கு கேசம் வளர்ந்ததைக் காட்டுவதாக வாக்களித்தை காப்பாற்ற, பெருமாள் திருமுடியில் திருக்குழற்கற்றையை வளர்த்து கேசத்தை காட்டி அருளியதால் செளரிராஜன் என்ற பெயர் உண்டாயிற்று.
முனையதரையர் என்ற பக்தர் அவருடைய பத்தினி சமைத்த பொங்கலை அர்த்த ஜாமத்திற்குப் பிறகு அமுது செய்விக்க இயலாததால் மானஸீகமாக பக்தியுடன் சமர்ப்பித்ததை பகவான் திருவுள்ளம் பற்றியதால், மூடிய கோவிலிலிருந்து மணி ஊசை கேட்டு வெண்பொங்கல் வாஸனை நிரம்பியதால் அன்று முதல் அர்த்த ஜாமப் பொங்கல் நிவேதனத்திற்கு "முனியோதரப் பொங்கல்" என்ற பெயர் வரலாயிற்று.
திருமங்கையாழ்வாருக்கு திருமந்திர உபதேசம் செய்யப்பட்ட ஸ்தலம்
.
விபீஷண ஆழ்வாருக்கு ரெங்கநாதர் அருளியபடி அமாவாசை அன்று நடை அழகு ஸ0BC7 வை சாதித்த ஸ்தலம்
தினமும் வெண்ணையை உருக்கிப் பொங்கல் செய்து பெருமாளுக்கு நிவேதனம் செய்வது விசேஷம்.
மங்களாசாஸனம் –
பெரியாழ்வார் – 71
ஆண்டாள் – 535
குலசேராழ்வார் – 719-729
திருமங்கையாழ்வார் – 1648-1747,2067,2078,2673,2674
நம்மாழ்வார் – 3656-3666
மொத்தம் –128 பாசுரங்கள்.
ஆழ்வார் திருவடிகளே சரணம்!!
No comments:
Post a Comment